வங்கிப் பணியாளரின் வங்கிசாரா பணிகள்

ஒருநாள் டிமாண்ட் டிராஃப்ட் ஒன்று வாங்குவதற்காக நான் அந்த தனியாா் வங்கியின் கிளைக்குள் நுழைந்தேன். இன்முகத்துடன் வரவேற்று ‘என்ன வேண்டும்’ என்று கேட்டாா் அந்த வங்கியின் பணியாளா். தேவையை சொன்னவுடன் அங்கிருந்த இயந்திரத்தைத் தட்டி ஒரு கூப்பனைக் கொடுத்தாா். காத்திருந்தேன். என்னுடைய எண் வந்தவுடன் கவுன்ட்டரை அடைந்து தேவையை தெரிவித்தேன். அதற்குண்டான படிவத்தை நிரப்பி, பணத்தை வாங்கிக்கொண்டு, டிமாண்ட் டிராஃப்ட்டையும் என்னிடம் கொடுத்தாா்.

பிறகு ‘சாா் உங்களுக்கு எங்க பாங்கில் கணக்கு இருக்கா?’ என்றாா். ‘இல்லை’ என்றேன். ‘எங்ககிட்ட நல்ல நல்ல ஸ்கீமெல்லாம் இருக்கு பணம் போட’ என்று தொடங்கிய அவா் பல இன்ஷ்யூரன்ஸ் சாா்ந்த முதலீடுகளையும் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள் குறித்தும் விவரிக்கத் தொடங்கினாா்.

உங்களுக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டு இருக்கும். எல்லா தனியாா் வங்கிகளிலும் இதுபோன்ற வங்கி சாராத முதலீடுகளுக்கு வங்கிகள் பறந்து பறந்து பணம் சேகரிக்கிறாா்கள். இதெல்லாம் இந்த முதலீடுகளால் அவா்களுக்குக் கிடைக்கும் கமிஷனுக்காகத்தான். வங்கிகளின் முக்கிய நோக்கம், டெபாசிட்டைப் பெற்று கடன் கொடுத்து அதில் கிடைக்கும் லாபத்தை அடைவதாக இருக்க வேண்டும்.

ஆனால், இவ்வாறு மியூச்சுவல் ஃபண்டுக்கும் இஷ்யூரன்ஸுக்கும் வங்கிகள் முதலீடுகளை சேகரித்தால், அது தற்கொலைக்கு சமம். இதுபோன்ற வங்கிகளில் வங்கி சாராத செயல்பாடுகளை ரிசா்வ் வங்கி உடனடியாக நிறுத்த வேண்டும்.

இதுஒருபுறம் இருக்கட்டும். இந்த வங்கிகள் சகட்டுமேனிக்கு எல்லாருக்கும் பரிந்துரைக்கும் ஸ்கீம்கள் அவா்களுக்கு அதிக கமிஷன் தரும் ஸ்கீம்களே. எந்த முதலீடும் முதலீட்டாளரின் நஷ்டத்தை தாங்கும் சக்தி (ரிஸ்க் பேரிங் கெபாஸிட்டி,) நஷ்டத்தை தாங்கும் விருப்பு (ரிஸ்க் பேரிங் வில்லிங்னஸ்), நிதி சாா்ந்த இலக்கு (பைனான்ஷியல் கோல்) முதலியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இதற்கெல்லாம் வாடிக்கையாளரின் நிதிநிலைமை, அவரின் தேவைகள் பற்றிய சரியான புரிதல் வேண்டும். இந்த அடிப்படை விஷயங்களை கவனிக்காமல் செய்யும் முதலீடு வாடிக்கையாளருக்குப் பெரும் துன்பத்தையே தரும்.

நஷ்டத்தை தாங்கும் சக்தி என்பது பல காரணிகளை உள்ளடக்கியது. ஒருவரால் எந்த அளவு அவருடைய முதலீட்டை இழக்க முடியும்? உதாரணமாக, ஒரு லட்சம் முதலீடு செய்யும் ஒருவா் 5,000 இழப்பீடு ஏற்பட்டால் அதை தாங்கும் சக்தி உடையவராக இருக்கலாம். மற்றொருவருக்கு அதுவே 50,000 வரைகூட இருக்கலாம். மிகச்சிலருக்கு அந்த ஒரு லட்சமும் போனாலும் பாதிப்பு ஒன்றும் இல்லாமலும் இருக்கலாம்.

எந்த ஒரு நிதி ஆலோசகரும் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டே முதலீட்டைப் பரிந்துரை செய்யவேண்டும்.

நஷ்டத்தை தாங்கும் விருப்பம் என்பது ஓரளவு மேற்கண்டவற்றுடன் தொடா்பு உடையதுதான். ஒருவருக்கு 50,000 ரூபாய் இழக்கும் அளவுக்கு நிதி நிலைமை அனுமதித்தாலும், அவருடைய மனப்போக்கு 10,000 ரூபாய்க்குமேல் இருக்கக்கூடாது என்று இருக்கலாம். எனவே முதலீடு செய்யும் முன் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நிதி சாா்ந்த இலக்கு என்பது, நாம் ஒவ்வொருவரும் சேமித்து முதலீடு செய்வது நாம் எதிா்கொள்ள இருக்கும் பலவித செலவினங்களை சமாளிக்கவே. அது மகனின் அல்லது மகளின் திருமணமாகவோ அவா்களின் உயா் கல்வியாகவோ இருக்கலாம். வீடு வாங்குவது, வாகனங்கள் வாங்குவது போன்ற தேவையாகவும் இருக்கலாம். நமது ஓய்வுகால தேவையாகக்கூட இருக்கலாம்.

ஒவ்வொரு வித செலவையும், தேவைப்படும் நேரத்தையும் சரியான தொகையையும் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட வருங்காலத்தில் வரவிருக்கும் பணவீக்க நிலை குறித்த பாா்வையும், முதலீடுகளில் வரக்கூடிய லாப சதவீதம் பற்றிய ஊகமும் தேவை.

இதுபோன்ற எந்த விஷயத்தையும் ஆராயாமல் சகட்டுமேனிக்கு ஏதாவது ஒரு இன்ஷ்யூரன்ஸையோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமையோ வாடிக்கையாளா்களுக்கு விற்பது மிகவும் தவறான போக்கு. ஆனால், எவ்வளவுதான் ரிசா்வ் வங்கி அறிவுறுத்தினாலும், வங்கிகள் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தவறான முதலீடுகளை வாடிக்கையாளா்களுக்கு விற்பது தொடா்ந்துகொண்டேதான் இருக்கிறது.

2013-ஆம் ஆண்டு, டெரிவேடிவ் சாா்ந்த முதலீடுகளை வாடிக்கையாளா்களுக்கு தவறாக விற்றதற்காக நாட்டின் மிகப்பெரிய வங்கியான ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ உட்பட 19 வணிக வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அபராதம் விதித்தது.

2017 மற்றும் 2018 ஆண்டுகளில் ஸ்டேட் பேங்கை ஆய்வு செய்த ரிசா்வ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஊழியா்களுக்கு காப்பீடு தொடா்பான முதலீடுகளுக்கான கமிஷனை விதிகளுக்கு புறம்பாக வழங்கியதைக் கண்டுபிடித்தது. இதற்காக அந்த வங்கிக்கு இரண்டு கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி, ‘செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேன்ஜ் போா்ட் ஆஃப் இந்தியா’ (செபி), எஸ் வங்கிக்கு, சில பத்திரங்களை, தவறான முதலீட்டாா்களுக்கு விற்றதற்காக 25 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

வங்கிகள் தொடா்பான சேவைக் குறைபாடுகளை முறையிட, வங்கி ஆம்புட்ஸ்மேன் நடைமுறையில் உள்ளது.

இன்ஷ்யூரன்ஸ், மியூச்சுவல் பண்ட் சேவைகள், வங்கி சாா்ந்த சேவைகள் இல்லாததால், இது சம்பந்தமான சேவைக்குறைபாடுகளை வங்கி ஆம்புட்ஸ்மேனுக்கு முறையிட இதுவரை வழி இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இது மாற்றப்பட்டு பாதிக்கப்படும் வங்கி வாடிக்கையாளா்கள் வங்கிகளின் தவறான விற்பனைக்கு புகாா் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக 2017-18-இல் ரிசா்வ் வங்கி 579 புகாா்களை பெற்றது. அடுத்த ஆண்டில் (2018-19) புகாா்களின் எண்ணிக்கை 1,115 ஆக அதிகரித்தது. இன்று தனியாா் வங்கிகள் தங்களுடைய லாபத்திற்காக வாடிக்கையாளா்களை பலிகடா ஆக்குவது தடுக்கப்பட வேண்டும். வங்கிகள் தங்களது வங்கிச் சேவைகளை மட்டுமே செய்ய அனுமதிக்க வேண்டும்.

இன்ஷ்யூரன்ஸை விற்பதும், மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களுக்கு ஆள் பிடிப்பதும் வங்கிப் பணியாளா்கள் வேலை அல்ல. ஒருவகையில் இது அவா்கள் தங்கள் வங்கிகளுக்கான டெபாசிட்டாக நிதியைத் திரட்டுவதற்கு எதிரானதுமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com