மக்களும் மக்களாட்சியும்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 125 இடங்களில் வென்றுள்ள திமுக, 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

திமுகவின் 125 எம்.எல்.ஏ.}க்கள் மட்டுமல்லாமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக (4), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1), தமிழக வாழ்வுரிமைக் கட்சி (1) ஆகிய கட்சிகளின் எட்டு எம்.எல்.ஏ.}க்களும் பங்கேற்று திமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினைத் தேர்ந்தெடுத்தனர்.

மே 7 அன்று காலை 9 மணியளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். புதிய அமைச்சரவை எனினும் பெரும்பான்மையானவர்கள் ஏற்கெனவே அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க பழையவர்களே இப்போதும் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு இது ஒரு பின்னடைவுதான் என்றாலும் மக்களின் தீர்ப்பை மதித்தே ஆக வேண்டும். "வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு' என்பது தமிழக பழமொழி} இது மற்ற எந்தத் துறைகளையும் விட அரசியலுக்கு மிகவும் பொருந்தும்.

அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த அருமையான வாய்ப்பாகும். அந்த வாய்பபை ஒழுங்காகப் பயன்படுத்தாமல் ஊழல் மயமாக மாற்றியது யார்? தமிழகத்தைப் பொருத்தவரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டுக்குமே இதில் பங்குண்டு. ஆனால் அவர்கள் தங்கள் தவறை உணராமல், மக்களின் மேல் பழியைப் போட்டுத் தப்பிக்கவே நினைக்கின்றனர்.

புதிய அரசு எடுத்துள்ள சில நடவடிக்கைகளை மக்கள் வரவேற்கவே செய்வர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் ஐந்து திட்டங்களைத் தொடங்குவதற்கான முக்கிய கோப்புகளில் கையொப்பம் இட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் மக்கள் படும் துன்பங்களைப் போக்கவும், வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலும் 2 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,153 கோடியே 39 லட்சம் அதாவது ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.4000 வழங்கப்படும். அதன் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் மே மாதம் முதல் வழங்கப்படும் என்கிற கோப்பில் கையொப்பமிட்டார். அதன்படி வழங்கப்பட்டும் வருகிறது.

மக்கள் நலன் கருதி ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைத்து மே 16ஆம் நாள் முதல் விற்பனை செய்ய முடிவெடுத்த கோப்பில் அடுத்த கையொப்பம். தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மகளிரும் கட்டணம் இல்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணிக்கலாம் என்பது அடுத்த கோப்பு.

மாவட்டம்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணும் வகையில் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தை செயல்படுத்தும் புதிய துறை உருவாக்கப்படுகிறது என்கிற கோப்பிலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி மருத்துவமனைக் கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் திரும்பி வழங்கும் என்கிற கோப்புகள் மற்றவை.

இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு உண்மையான, பொறுப்பான, ஊழலற்ற அதிகாரிகளின் உதவி கட்டாயம் வேண்டும். அரசுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற இயலாது என்பதை அரசு உணர்ந்து செயல்படுவது மகிழ்ச்சிக்குரியது.

மக்கள் நலத் திட்டங்கள் எல்லா ஆட்சியிலும் போடப்படுவதுதான். ஆனால் அவை மக்களிடம் முறையாகப் போய்ச் சேர்வதில்லை என்பதுதான் தோல்வியின் தொடக்கம். மக்களுக்காகப் போடப்படும் திட்டங்கள் மக்களிடம் போய்ச் சேராமைக்குக் காரணம் என்ன? இதனை ஆராய்வதற்கு எத்தனையோ விசாரணைக் குழுக்கள் போடப்பட்டும் இதுவரை உருப்படியானதீர்வு காணப்படவில்லை.

அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகளாக இருக்கும் வரை மக்களுக்காகச் செயல்படுகின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதை கட்சிகள்ஆளும் கட்சியாக மாறிய பிறகு அவை தங்கள் கட்சிக்காரர்களுக்காகவே செயல்படுகின்றன. இப்படிச் செயல்படும் நிலையில் மக்களாட்சி எங்கே இருக்கிறது? மக்களாட்சியின் தோல்வி இங்கேதான் ஆரம்பமாகிறது.

தேர்தலின்போது மக்களைத் தேடித்தேடி அலைகின்ற அரசியல் கட்சிகள், தாம் வெற்றி பெற்ற பிறகு அந்த மக்கள் தங்களைத் தேடி வந்தாலும் சந்திப்பதில்லை என்கிற நிலைதான் இருக்கிறது. இது என்ன நியாயம்? இதைக் கூறினால் கோபப்படுகிறார்கள். மக்கள் வெறுப்படைந்தால்  தங்கள் எதிர்காலமே பாதிக்கப்படும் என்பது அந்த அரசியல்வாதிகளுக்குத் தெரியாதா?

உண்மையில் அதிகாரம் மக்களிடத்தில்தான் உள்ளது. இடைக்காலமாக நாம் பிரதிநிதிகள் என்று யாரைத் தேர்ந்தெடுக்கிறோமோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இல்லாமல் சுயேச்சையாக நாடாளுமன்றத்திற்கு அதிகாரமும் இல்லை. அது இருக்கவும் இயலாது என்று மகாத்மா காந்தி ஜனநாயகத்தை வரையறுத்துக் கூறினார்.

இந்தத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் களத்தில் போராடின. மிகுந்த பொருட்செலவில் "தேர்தல் வியூகம்' என்ற புதிய உத்தியைப் பயன்படுத்தின. இது மக்களைக் கவர்வதற்குக் குறுக்கு வழியை போட்டுக் கொடுத்தது. இதனால் வெற்றி பெற்று விட்டதாக ஊடகங்கள் கூறியதில் உண்மை இல்லை. இது எதிர்காலத்தில் மக்களாட்சி முறையையே ஒழித்துவிடும்.

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற மக்கள் தலைவர்கள் காலத்தில் இப்படிப்பட்ட குறுக்கு வழிகள் கிடையாது. அவர்கள் மக்களோடு நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் மக்களை நம்பினர். மக்களும் அவர்கள் நம்பிக்கையைக் காப்பாற்றினர்.

தேர்தல் அடிப்படை செலவுக்கே பணம் இல்லாதவர்கள் அக்கால அரசியல்வாதிகள். அவர்கள், பட்டினி கிடந்து பரப்புரை செய்தனர். 

அவர்களுக்கு மக்களே பணமும் கொடுத்து வாக்குகளையும் வாரி வழங்கினர் என்பது இப்போது கேட்கும்போது வியப்பாக இருக்கலாம். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் இந்தக் காலத்தில் இது வியப்பிலும் வியப்புதான்.

இந்தக் காலத்தில் பணம் இல்லாதவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அரசியல் கட்சியின் சார்பில் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட இயலாது. கோடீஸ்வரர்களே கட்சிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுகின்றனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 19 பேரும், பாஜகவில் 15 பேரும், அதிமுகவில் 164 பேரும், திமுகவில் 155 பேரும், பாமகவில் 14 பேரும், தேமுதிகவில் 19 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவரும் (ஒரு கோடிக்கு மேற்பட்ட சொத்து கொண்டவர்) இந்தத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

இவற்றைத்தவிர, ஒட்டுமொத்த 466 பேர் மீது குற்றவழக்குகள் இருந்தன. இதில் 207 பேர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும், 7 பேர் மீது கொலை வழக்கும், 39 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 8 பேர் மீது பெண்ணை மானபங்கப்படுத்தும் வகைகயில் தாக்கிய வழக்கும், ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளன.

ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்ட 3,998 வேட்பாளர்களில் 3,559 பேரின் விவரங்களை ஆய்வு செய்து இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பற்றி அரசியல் கட்சியினர் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அது மட்டுமல்ல, அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளும் 20 விழுக்காடு முதல் 76 விழுக்காடு வரை குற்றப்பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அளித்தன. 3,559 வேட்பாளர்களின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிராமாண பத்திரத்தை ஆய்வு செய்ததில் 466 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும், 207 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அரசியல் கட்சிகள் கவலைப்படவில்லை என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், ஏனோ வாக்காளர்களும் கவலைப்பட வில்லை. ஜனநாயகத்தின் நான்கு முக்கிய தூண்கள் என்று கூறப்படுபவையும் கவலைப்படவில்லை. தேர்தலை நடத்தும் வானளாவிய அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையமும் கவலைப்படவில்லை. கண்டு கொள்ளவில்லை.

ஒவ்வொரு தேர்தலும் இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளுடனேயே முடிவடைகிறது. இதிலிருந்து ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டாமா? அதுதான் இல்லை. வெற்றி பெற்றவர்கள் வெற்றிக் களிப்பில் எல்லாவற்றையும் மறந்து விடுகின்றனர். தோல்வியடைந்தவர்கள் அடுத்தத் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுகின்றனர்.

"மக்களும், ஆட்சியும் விலகி நிற்கும் வரை எந்த நாடும் முன்னேறுவது இல்லை' என்பது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வார்த்தைகள். நமது மக்களாட்சி நின்று நிலைக்க வேண்டுமானால் மக்களையும், ஆட்சியையும் பிரிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். 

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com