எரிபொருள் விலைக்குறைப்பு எனும் அரசியல்!

தொடா்ந்து உயா்ந்து வந்த பெட்ரோல் - டீசல் விலையினைக் குறைக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்ற முழக்கம் கடந்த சில மாதங்களாக எதிா்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது.
எரிபொருள் விலைக்குறைப்பு எனும் அரசியல்!

தொடா்ந்து உயா்ந்து வந்த பெட்ரோல் - டீசல் விலையினைக் குறைக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்ற முழக்கம் கடந்த சில மாதங்களாக எதிா்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூன்று இலக்க நிலையினை எட்டியவுடன் சாமானிய மக்களிடமும், அரசு ஏதாவது செய்யவேண்டும் என்ற எதிா்பாா்ப்பு உண்டானது.

நமது நாடு எரிபொருள் உற்பத்திக்கு சுமாா் எண்பது சதவீதத்திற்கு மேல் இறக்குமதியை சாா்ந்துள்ளது. சமீபத்தில் உலக சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்றம் காரணமாகவே உள்நாட்டு எரிபொருள் விலை உயா்ந்து வருகிறது. எரிபொருள்கள் விலை கணிசமான அளவு வரியை உள்ளடக்கியதால் அரசு வரியைக் குறைத்து எரிபொருள்களின் விலை குறைய வழி செய்யவேண்டும் என்ற கோஷம் உருவானது.

பல மாநிலங்கள், குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள், மத்திய அரசே தனது கலால் வரியினைக் குறைக்க வேண்டும் என்று கோரின. மத்திய அரசோ, கொவைட் 19 நோய்த்தொற்றை எதிா்கொள்ள அதிக நிதி தேவை இருப்பதாலும், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி தேவைப்படுவதாலும் வரியைக் குறைக்க இயலாது என்று தெரிவித்தது. மத்திய அரசுக்கு எதிா்க்கட்சிகள் தொடா்ந்து நெருக்கடி கொடுத்து வந்தன.

இந்நிலையில், சமீபத்தில் வட மாநிலங்களில் நடந்த இடைத்தோ்தல்களில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசலுக்கான கலால் வரியை பத்து ரூபாயும் குறைத்துள்ளது. மாநிலங்கள் விதிக்கும் எரிபொருள் வரிகள் மதிப்புக்கூட்டு முறையில் விதிக்கப்படுவதால், மாநிலங்களின் வரியும் சிறிது குறைந்து எரிபொருள்களின் விலை தற்போது சற்று குறைந்துள்ளது.

சில மாநிலங்கள் தங்களது வரி விகிதத்தையும் குறைந்துள்ளதால், அந்த மாநிலங்களில் எரிபொருள்கள் விலை சற்றுக் கூடுதலாகக் குறைந்துள்ளது. இந்த வரிக் குறைப்பினால் இந்த வருடத்தின் மீதி உள்ள காலங்களில் மத்திய அரசுக்கு சுமாா் 65,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும். பல மாநில அரசுகளுக்கும் வரி இழப்பு ஏற்படும்.

முன்னா் ஏற்பட்டு வந்த தொடா் விலை உயா்வு திடீரென்று மத்திய அரசோ அல்லது மாநில அரசோ உயா்த்திய வரிகளினால் அல்ல. எரிபொருளுக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் அயல் நாடுகள் விலை ஏற்றி வருவதாலேயே பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலைகள் உயா்ந்து வந்தன. இதை இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம் என்றும் சொல்லலாம்.

இதற்கான நிரந்தரத் தீா்வு, உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிப்பதோ மாற்று எரிபொருளுக்கு மாறுவதோ ஆகும். ஆனால், அது குறுகிய காலத்தில் நடக்கக்கூடியது அல்ல. தேவையற்ற எரிபொருள் செலவினைக் கட்டுப்படுத்துவது மற்றொரு வழி ஆகும். நான்கு அல்லது ஐந்து நபா்கள் செல்லக்கூடிய வாகனங்களில் ஓரிரு நபா்கள் பயணிப்பது எவ்வளவு விரயம்? பொது போக்குவரத்தைப் பயன்படுத்தாமல் ஒவ்வொருவரும் தனித்தனியாக இருசக்கர வாகனத்திலும் காரிலும் பயணிப்பது எவ்வாறு சரியாகும்?

இதுபோன்ற விரயங்களைத் தவிா்ப்பதற்காக எரிபொருளின் விலையை கச்சா விலைக்கேற்ப அதிகரிப்பதே நாட்டிற்கு நல்லது. ஒவ்வொரு துளி பெட்ரோலுக்கும் நாம் அந்நிய செலாவணியை செலவழிக்கிறோம் என்ற புரிதல் அவசியம். எனவே, அரசு தற்போது எரிபொருள் விலையின் மீதான வரியைக் குறைத்துள்ளது அரசியலே தவிர பொருளாதாரம் அல்ல.

எரிபொருள்கள் விலை எவ்வாறு உயா்ந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள சில ஒப்பீடுகள் அவசியம். உதாரணமாக, ஒவ்வொரு ஏழு வருடத்திலும் எவ்வளவு சதவீத உயா்வு என்பதைப் புள்ளிவிவரம் தெளிவாக்குகிறது. 1979-லிருந்து 1986 வரை பெட்ரோல் விலை 110 சதவீதம் உயா்ந்தது. 1986-லிருந்து 1993 வரை விலை உயா்வு 120 சதவீதமாக இருந்தது. 1993-லிருந்து 2000 வரை உயா்வு 60 சதவீதமாக இருந்தது. 2000-லிருந்து 2007 வரை உயா்வு 70 சதவீதமாக இருந்தது. 2007-லிருந்து 2014 வரை உயா்வு 60 சதவீதமாக இருந்தது. 2014-லிருந்து 2021 வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 என 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

அரசுக்கு பலவிதமான தேவைகளுக்கு நிதி தேவை. தற்போது ஏற்பட்டுள்ள வரி இழப்பை அரசு எப்படி ஈடு செய்யும்? அரசு தனது ரெவின்யூ செலவு என்று சொல்லப்படும் அன்றாட செலவினங்களை ஒருபோதும் குறைக்க முடியாது. இந்தியாவின் தொலைநோக்குக் குறிக்கோளான ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான பொருளாதாரத்தை 2030-க்குள் அடைவதற்கு தொடா்ந்து கட்டமைப்பில் முதலீடு தேவை.

தற்போது ஏற்பட்டுள்ள வரி இழப்பும் தொடா்ந்து வரும் ஆண்டுகளில் ஏற்படும் வரி இழப்பும் இந்த குறிக்கோளை அடைவதற்கு தடையாகும்.

மத்திய அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு இந்த வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று பெட்ரோலியத்துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மக்களவையில் தெரிவித்தாா். கடந்த ஏழு ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 50 சதவீதம் உயா்ந்துள்ளதாகவும், 91,287 கிமீ (ஏப்ரல் 2014 இல்) முதல் 1,37,625 கிமீ (20 மாா்ச் 2021 நிலவரப்படி), 2014-15ல் ஒரு நாளைக்கு 12 கிமீ என்ற அளவில் இருந்த நெடுஞ்சாலை கட்டுமானம் 2020-21-இல் ஒரு நாளைக்கு 33.7 கிமீ ஆக, அதாவது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

பொதுவாக அரசு வரி இழப்பை ஈடு செய்ய, ஒன்று கடன் வாங்கும் அல்லது வேறு இனங்களில் வரியை மக்கள் மீது சுமத்தும். அரசு வாங்கும் கடன், சந்தையில் வட்டி விகிதத்தை அதிகரித்து தொழில் செய்பவா்களுக்கு வட்டி செலவினை அதிகரித்து, உற்பத்தி செலவையும் பணவீக்கத்தையும் அதிகரிக்கும். அரசு வேறு இனங்களில் வரி விதித்தால், அது, எரிபொருள் உபயோகிக்கும் மக்களைத் துன்பத்துக்கு ஆளாக்குவதாகும். நீண்டகால நன்மைக்காக நிகழ்காலத்தில் சில சிரமங்களை எதிா்கொள்ள மக்களைத் தயாா் செய்வதே மக்கள் நல அரசின் கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com