மேன்மைப்படுவாய் மனமே!

மேன்மைப்படுவாய் மனமே!

 ஐம்பதாண்டுகளுக்கு முன்னர், மதுரை பெரியார் (அன்று சென்ட்ரல்) பேருந்து நிலையத்தில் காலை ஏழு மணியளவில் ஒரு மாணவன் மிகுந்த அவசரத்துடன் தியாகராசர் கலைக் கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டு ஒரு புத்தகத்தைப் படிக்கத் தொடங்குகிறான். அன்று அவனுக்கு இறுதித்தேர்வு. பேருந்து நடத்துநர் அவனிடம் பயணச்சீட்டு வாங்குமாறு கூறுகிறார். மாணவன் பேருந்துப் பயண அனுமதி அட்டையை எடுத்துக் கொடுக்கிறான்.
 நடத்துநர், "பாஸ் நேற்றே முடிந்து விட்டதேப்பா.. கவனிக்கவில்லையா' என்று கேட்கிறார். மாணவன் பதற்றத்துடன் எழுந்து பேருந்தை விட்டு இறங்கத் தயாராகிறான். நடத்துநர் அவனை உட்காரச் சொல்லி 25 பைசா பயணச் சீட்டு ஒன்றைக் கிழித்துக் கொடுக்கிறார். "காசில்லையே' என்று மாணவன் சொன்னபோது அவர் தன்னுடைய பையில் இருந்து ஒரு 25 பைசா நாணயம் ஒன்றை எடுத்து தனது தோல் பையில் போட்டுக்கொண்டு நகர்ந்து சென்று விடுகிறார். மாணவன் அவரிடம் நன்றி சொன்னபோது அவர் தலையை அசைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்.
 அந்த மாணவன் அவனுடைய பிற்கால வாழ்க்கையில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆனது தனிக்கதை. அந்த 25 பைசாவைத் திருப்பித் தர அம்மாணவன் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த நடத்துநரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மாணவனின் பிற்கால வளர்ச்சிகளுக்கெல்லாம் அடிப்படை அந்த நடத்துநரின் மேன்மைப் பண்புதான் என்பதை விரித்துரைக்கத் தேவையில்லை.
 காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
 ஞாலத்தின் மானப் பெரிது
 என்று வள்ளுவப் பேராசான் கூறியதும் இதனையே. மேன்மைப் பண்புடைய மனிதர்களாலேதான் ஒரு சமூகம் மிளிர்கிறது.
 மகாகவி பாரதியார், "விநாயகர் நான்மணி
 மாலை'யில்,
 மேன்மைப்படுவாய் மனமே!
 கேள் விண்ணின் இடி முன் விழுந்தாலும்
 பான்மை தவறி நடுங்காதே, பயத்தால்
 ஏதும் பயனில்லை
 என்று அழுத்தமுறப் பாடுகிறார். எனவே மேன்மைப் பண்பு மனித சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்பாகும்.
 அமெரிக்காவின் "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற இதழின் துணை ஆசிரியரான சாம் வாக்கர், தான் செய்த ஓர் ஆய்வில் மேன்மைப் பண்பின் இன்றியமையாமை பற்றிச் சில கருத்துக்களைக் கூறுகிறார். ஒருவர் எந்த உடனடிப் பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவி செய்வது மிகச் சிறந்த மேன்மைப் பண்பாகும்.
 மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அந்த நடத்துநர் செய்தது சிறிய உதவிதான்: ஆனால் அதன் விளைவு மிகப்பெரிது. ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் போக்கையே அது மாற்றியமைத்தது. "பிறருக்கு உதவி செய்வதில் மகிழ்வதும், அவ்வுதவியை ஓர் இயல்பான செயல் போலச் செய்வதும் மேன்மைப் பண்பின் கூறாகும்' என்பது சாம் வாக்கரின் கருத்து.
 மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் "கண்டதும் கேட்டதும்' என்ற கட்டுரைத் தொகுப்பில் விவரிக்கும் சுவையான ஒரு நிகழ்வு பிறருக்கு உதவுவதில் பெருமிதம் காண்கிற மேன்மைப் பண்பு பற்றி அமைகிறது.
 திருமயத்திற்கு அருகிலுள்ள மிதிலைப்பட்டியில் வாழ்ந்த திருச்சிற்றம்பலக் கவிராயர் என்பவர் நீண்ட தொலைவிலுள்ள ஒரு ஊருக்குச் சென்று விட்டு இரவில் மிதிலைப்பட்டிக்குத் திரும்பி வர ஒரு மாட்டு வண்டிக்காரரிடம் வாடகை பேசுகிறார். மூன்று ரூபாய் வாடகையும் காலை உணவும் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வண்டிக்காரர் புலவரை அழைத்து வருகிறார். வண்டிக்காரருடனான உரையாடலுடன் புலவரின் பயணம் அமைகிறது.
 புலவரின் முன்னோர்கள் சேலம் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதையும் இந்தப் பகுதியின் ஜமீன்தார் வெங்காளப்ப நாயக்கர் மிதிலைப்பட்டியைத் தன் முன்னோர்களுக்குத் தானமாக வழங்கியதையும் அது முதற்கொண்டு தங்கள் பரம்பரையினர் மிதிலைப்பட்டியில் வாழ்ந்து வருவதையும் கூறுகிறார். வெங்காளப்பர் தயவினால் புலவரின் உறவினர்கள் கவலையின்றி வாழ்ந்து வருவதாகவும் கொடைவள்ளலான வெங்காளப்பர் பரம்பரையினரின் இப்போதைய நிலை பற்றி எதுவும் தெரியவில்லை என்பதையும் வருத்தமுடன் கூறுகிறார் புலவர்.
 மறுநாள் காலையில் மிதிலைப்பட்டிக்கு வந்து சேர்ந்தவுடன் வண்டிக்காரரைக் காலை உணவுண்ண அழைக்கிறார் புலவர். வண்டிக்காரர் உணவு வேண்டாம் என்று கம்பீரமாக மறுத்து விடுகிறார். ஏற்கெனவே பேசிக் கொண்டவாறு வண்டி வாடகை மூன்று ரூபாயைப் புலவர் கொடுக்க, வண்டிக்காரர் அதையும் வாங்க மறுக்கிறார். ஒருவேளை கூடுதலாகப் பணம் எதிர்பார்க்கிறாரோ என்று புலவர் ஐயமுற, வண்டிக்காரர், "தாங்கள் வண்டி வாடகை எதுவும் தர வேண்டாம்' என்று மிகக் கம்பீரமாகக் கூறுகிறார்.
 எதுவும் புரியாமல் புலவர் திகைக்க வண்டிக்காரர், "ஐயா! தாங்கள் குறிப்பிட்ட ஜமீன்தார் வெங்காளப்ப நாயக்கரின் பரம்பரையில் பிறந்தவன் நான். ஏதோ விதிவசத்தால் வண்டி ஓட்டிப் பிழைக்கும் நிலையில் இருக்கிறேன். ஒருவருக்கு தானமாகக் கொடுக்கப்பட்டதில் ஒரு சிறு பகுதியைக் கூடத் திரும்பப் பெறக்கூடாது என்று எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே உங்களிடம் வாடகையாகப் பணம் வாங்கினால் அது எனக்குப் பெருமை தராது' என்று கூறிவிட்டுப் பெருமிதத்துடன் வண்டியை ஓட்டிக் கொண்டு போய்விடுகிறார்.
 வண்டி ஓட்டிப் பிழைக்கும் எளிய நிலையில் இருந்தாலும் பெருமிதத்துடன் வாழ விரும்புவதும் மேன்மைமிகு பண்பல்லவா?
 உ.வே. சாமிநாதையர் தம்முடைய "பழையதும் புதியதும்' என்ற நூலில் "வாக்குத் தவறாமை' என்ற உயர்பண்புக்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறார். தஞ்சைப் பகுதியை ஆண்டு வந்த சரபோஜி மன்னர்களுள் ஒருவர், நரசையர் என்ற பெயருடைய இசை விற்பன்னருக்கு "சங்கராபரணம் நரசையர்' என்ற பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தார்.
 அந்தப் பாடகருக்கு ஒருமுறை நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுக் கபிஸ்தலம் என்ற ஊரிலிருந்த இராமபத்ர மூப்பனார் என்ற செல்வந்தரிடம் சென்று எண்பது பொன் கடனாகக் கேட்கிறார்; உதவியாகக் கேட்காமல் கடனாகக் கேட்கிறாரே என்று சிந்தித்த இராமபத்திர மூப்பனார் "கடன் என்றால் அதற்கு எதையாவது அடகாக வைக்க வேண்டுமே' என்று கேட்கவும், பாடகர், "விலையுயர்ந்த ஆபரணமான சங்கராபரண ராகத்தை அடகாக வைக்கிறேன்' என்று கூறிவிடுகிறார்.
 எண்பது பொன்னைக் கடனாகப் பெற்றுக் கொண்ட பின்னர் சங்கராபரணம் நரசையர் தன்னுடைய இசைக் கச்சேரிகளில் அந்த ராகத்தைப் பாடுவதை விட்டு விட்டார். அத்தகைய ஒரு சூழலில், கும்பகோணத்தைச் சேர்ந்த செல்வந்தரும் அன்றைய அரசில் மிகுந்த செல்வாக்கு உடையவருமாக இருந்த "வாலஸ் அப்புராயர்' என்பவரின் இல்லத் திருமண விழாவில் நரசையரின் இசைக் கச்சேரி நடைபெறுகிறது. அங்கிருந்தவர்கள் சங்கராபரண ராகத்தில் ஒரு பாடல் பாடுமாறு கேட்க, நரசையர் கடன் பெற்ற விவரத்தைக் கூறிச் சங்கராபரணம் பாட மறுத்து விடுகிறார்.
 இசையை அடகு வைத்த செய்தியை அறிந்த அப்புராயர் உடனே ஒரு பணியாளரிடம் எண்பது பொன்னையும் அதற்குரிய வட்டிக்கான பொன்னையும் கொடுத்து இராமபத்திர மூப்பனாரிடமிருந்து கடன் பத்திரத்தைத் திரும்ப வாங்கிக் கொண்டு வருமாறு அனுப்புகிறார்.
 பணியாளர் திரும்பி வரும்போது இராமபத்திர மூப்பனாரும் கடன் பத்திரத்துடன் வருகிறார்.
 வந்தவர், "நரசையர் என்னிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கிக்கொள்ள உரிமை உடையவர்தான். ஆனாலும் அவர் முதலிலேயே கடனாக வேண்டும் என்று கேட்டதால் எனக்குச் சிறிது வருத்தம் ஏற்பட்டது. அதனால் அடகாக ஏதாவது வேண்டுமே என்று கேட்டேன். அவர் தனது ராகத்தை அடகாக வைத்ததால் நானும் விளையாட்டாகச் சம்மதித்தேன்.
 ஆனால் நரசையர் வாக்குத் தவறாதவர். அதன் பிறகு அவர் எங்குமே சங்கராபரணம் பாடவில்லை என்பதை அறிந்து அவரது நேர்மை குறித்து ஆச்சரியப்பட்டேன். இப்போது என் பரிசாகக் கடனை ரத்து செய்வதுடன் அதற்குரிய வட்டியையும் நான் தருகிறேன்' என்று கூறி, கடன் பத்திரத்தையும் மேலும் சிறிது பொன் மற்றும் அப்புராயர் கொடுத்தனுப்பிய பொன் என அனைத்தையும் சேர்த்து நரசையருக்கு வழங்கினார்.
 கடன் வாங்கியவர் வட்டி கொடுப்பது உலக வழக்கு; கடன் கொடுத்தவரே வட்டியையும் கொடுப்பது விந்தை என்று எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர். இதில் "வாக்குத் தவறாமை' என்ற மேன்மைப் பண்பை உ.வே.சா. காட்டுகிறார்.
 பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகழ் பெற்ற புலவர்மணியாகத் திகழ்ந்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கைச் சம்பவம் ஒன்று பொறுமை என்னும் உயர் பண்பின் மேன்மையைக் காட்டுகிறது. மகாவித்துவான் பாடியருளிய திருநாகைக் காரோணப் புராணப் பாடல்கள் படித்துப் புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருந்ததால் மாணவர்கள் பலர் அவரிடமே ஐயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வது வழக்கமாக இருந்தது.
 அவருடைய மாணவர்களுள் தலையாயவராகத் திகழ்ந்தவரும் கும்பகோணம் கல்லூரியில் பணிபுரிந்து வந்தவருமான தியாகராச செட்டியார், மகாவித்துவானிடம் நேருக்கு நேராக "அனைவருக்கும் புரியும்படியான பாடல்களை நீங்கள் பாடவேண்டும்; இப்படி புரிந்து கொள்ள முடியாத அளவிற்குக் கடினமாகப் பாடினால் ஒவ்வொரு முறையும் உங்களிடம் வந்து கேட்டுக்கொண்டிருக்க முடியுமா' என்று உரத்த குரலில் பேசிய போதும், அவருடைய ஆசிரியரான மகாவித்துவான் சிறிது கூட கோபம் கொள்ளவில்லை என்ற செய்தியை உ.வே.சா. தமது "மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்' என்ற நூலில் பதிவு செய்கிறார். இவையெல்லாம் மேன்மைமிகு பண்புடைய மனிதர்களின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் சான்றுகள்.
 தன்முனைப்பு, தானென்ற அகந்தை இல்லாத மனிதர்களிடமே இத்தகைய மேன்மைமிகு பண்புகள் இருக்கும். இப்பண்புகளே இவ்வுலகத்தை வாழ வைப்பவை!
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் துணைவேந்தர்,
 தமிழ்ப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com