நாற்கரக் கூட்டமைப்பும் இந்தியாவும்

நாற்கரக் கூட்டமைப்பும் இந்தியாவும்

 இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக க்வாட் எனப்படும் நாற்கரக் கூட்டமைப்பின் நோக்கம் ஒரு புதிய பார்வையோடு புதுப்பிக்கப்பட்டு, அது மறுமலர்ச்சிக்கான பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, 2017 முதல் பல்வேறு காலகட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் விளைவாக, ராஜதந்திர முயற்சியாக இந்தக் கூட்டணி உருவாகியது.
 ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ராஜதந்திர ரீதியில் அமைத்த இக்கூட்டணி "நாற்கரக் கூட்டமைப்பு' என்று அழைக்கப்படுகிறது. க்வாட் எனப்படும் இவ்வமைப்பு ஆக்கபூர்வமான தொலைநோக்குப் பார்வை கொண்ட ஓர் அமைப்பாகும்.
 தற்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக க்வாட் அமைப்பு புத்தெழுச்சியுடன் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 2004-ஆம் ஆண்டு சுனாமி பேரழிவின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
 இந்த அமைப்பு எதற்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் 2007-ஆம் ஆண்டு முதல் செயலற்றதாகப் போனது. ஆனால், இது தற்போதைய காலகட்டத்திற்கு ஒரு மீட்டுருவாக்கத்திற்கும், புத்துருவாக்கத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. க்வாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு நாடுகளின் தலைவர்களில் எவரும் சீனாவின் பெயரை தங்களது கூட்டணிக்குக் குறிப்பிடவே இல்லை.
 கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் மேற்கொண்ட முயற்சிகள், காலநிலை, பருவநிலை மாற்றங்கள், புதிய தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை உலகளாவிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று க்வாட் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி வரவேற்புரை ஆற்றுகிற போது குறிப்பிட்டிருந்தார்.
 46.3 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சீனா தயாராகி வரும் நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 24 நாடுகளுக்கு 100 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகளை வழங்க இந்த க்வாட் அமைப்பு திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தகுந்த ஒன்றாகும்.
 அமெரிக்க நாடுகளின் நிதி உதவியுடன் ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி இந்தியா 100 கோடி டோஸ் தடுப்பூசிகளைத் தயாரிக்க உள்ளது. சீனாவின் பொருளாதார, வர்த்தக, ராணுவ ரீதியான சவால்களை எதிர்கொள்ள க்வாட் அமைப்பை ஒரு நல்ல முயற்சியாகவே பார்க்கலாம். அது இந்தியாவிற்குப் பெருமளவு உதவி செய்யும்.
 ஏனென்றால், நேட்டோ அமைப்பில் இல்லாமல், க்வாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரே நாடு இந்தியாதான். சீனாவுடன் தனது நீண்ட எல்லைப்பகுதியைப் பகிர்ந்து கொள்கிறது இந்தியா. ஆனாலும், அந்நாட்டோடு சுதந்திரம் அடைந்ததிலிருந்தே எல்லைப் பிரச்னை இருந்து கொண்டே இருக்கிறது. அடிக்கடி எல்லைப் பிரச்னையை சீனா எழுப்பிக் கொண்டேயிருக்கிறது.
 தலைமைப்பண்பு என்பதற்கு அடிப்படை பணிவாக இருப்பது. ஆனால், சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறுகிற வார்த்தைக்கு நேரெதிராக சீனா செயல்பட்டு வருவது அப்பட்டமான ஏமாற்று வேலையாகும். அண்டை நாடுகளுடன் சமாதானப் போக்கைக் கடைப்பிடிக்காமல், எல்லைப்பகுதிகளை அபகரித்து அண்டை நாட்டின் எல்லைகளில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிற செயலையே சீனா தொடர்ந்து செய்து வருகிறது.
 புதிய பஞ்சசீலக் கொள்கையை வகுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்த சீனா, பின்னர் இந்தியாவோடு மோதல் போக்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. சீனா, இந்தியாவோடு ராஜ்ஜிய ரீதியான நட்புறவை ஆதரிப்பது போல் இருந்தாலும்கூட, மறைமுகமாக எதிர்ப்பு நிலையிலேயே செயல்பட்டு வருகிறது.
 2017-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி டோக்காலாம் பிரச்னையை சீனா மேலும் தீவிரப்படுத்தியது. சீனாவின் வூஹான், இந்தியாவின் மகாபலிபுரம் பேச்சுவார்த்தைகளின் மூலம் நல்லுறவையும், ஒப்புதலையும் அளித்த அதே நேரத்தில், லடாக்கில் மோதல் போக்கையே சீனா கடைப்பிடித்து வருகிறது. கிட்டத்தட்ட 22,000 கிலோ மீட்டர் தொலைவு எல்லையை 14 நாடுகளுடன் சீனா பகிர்ந்து கொள்கிறது.
 இந்த 14 நாடுகளுடனுமே மோதல் போக்கையே கையாண்டு வருவது சீனாவின் கொள்கையில் கோளாறு இருப்பதையே தெளிவுபடுத்துகிறது. மியான்மர், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் கடற்கரைத் தளங்களைக் கொண்ட சீனா, அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுகிறது. இதனால், இந்தியாவுக்கு பெரும் அழுத்தத்தையும், நெருக்கடியையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
 வரலாற்று ரீதியாகவே தென்சீனக் கடலில் அனைத்து விதமான உரிமைகளையும் நிலைநாட்டி வரும் சீனா, செயற்கைத் தீவுகளையும், ராணுவத்தளங்களையும் கடலில் உருவாக்கி வருகிறது. அந்த வகையில், சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறி செயல்பட்டுள்ளது. ஆகவே, சீனாவின் இந்த மோதல் போக்கின் விளைவாக, க்வாட் போன்ற அமைப்புகள் மீண்டும் புத்தெழுச்சி பெற்றிருப்பதில் ஆச்சர்யமொன்றுமில்லை.
 "நேட்டோவின் ஆசி பெற்ற அவதாரமே க்வாட்' என்று சீனா விமர்சித்துள்ளது. பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உள்ளிட்ட அமைப்புகளில் எதிர்மறையான சக்தியாக இந்தியா மாறியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
 க்வாட் அமைப்பின் அடித்தளமாக உருவெடுத்து, ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பாக அந்த அமைப்பை இந்தியா மாற்றி வருவதின் மூலம், சீனாவுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது என்று கூறலாம். அதனால் நாம் இந்திய அரசை பாராட்ட வேண்டும்.
 ஆகவேதான், "ஆசிய நாடுகளுக்குள் இருக்கும் நல்லிணக்கத்தைக் கெடுப்பதற்கு அமெரிக்கா செய்யும் சதியே க்வாட் கூட்டமைப்பு' என்று சீனா கடும் விமர்சனம் செய்திருக்கிறது. தனக்கு ஆதரவாக இருக்கும் பல நாடுகளை க்வாட் கூட்டணியில் சேர்த்து விடக்கூடாது என்று சீனா எச்சரித்திருப்பதன் மூலம் அது ஒருவித பதற்றத்துக்கு ஆட்பட்டுவிட்டதை உணரமுடிகிறது.
 அமெரிக்க ஆட்சி மாற்றத்தால் பாகிஸ்தான் அதிகம் பதற்றம் அடைந்திருக்கிறது. ஏனென்றால், பாகிஸ்தான் எப்போதுமே அமெரிக்காவின் செல்லப்பிள்ளை. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செய்கின்ற சித்து விளையாட்டுகளை அமெரிக்கா வேடிக்கை பார்த்து வருவது பல ஆண்டுகளாக நடந்து வருவதுதான். ஆனால், இந்திய அரசின் ராஜதந்திர முயற்சியால் இந்தியாவை அமெரிக்கா அழைத்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
 உலக நாடுகளில் 42 சதவீத ஏற்றுமதியும், 38 சதவீத இறக்குமதியும் இந்தியக் கடல்சார் கப்பல் போக்குவரத்து வழியாக நிகழ்கின்றன. இவற்றில் கடல் பிரதேசத்தில் சீனாவின் பங்கு அதிகம் இருப்பது ஆபத்து என்பதை அமெரிக்கா உணர்ந்திருக்கிறது. ஆகவேதான், இந்த க்வாட் கூட்டணியில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டுகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ராணுவக் கூட்டணி இருக்கிறது.
 அந்தக் கூட்டணியில் இந்தியா இணைய முடியாது. அமெரிக்காவின் சார்பு நாடாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பவில்லை. சீனா மற்றும் ரஷியாவுடன் ஏற்கெனவே ஷாங்காய் கூட்டமைப்பு மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா இருந்து வருகிறது. ஆக, க்வாட் கூட்டணி வலுவானால் இந்த உறவுகள் பாதிக்கப்படலாம்.
 அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சீனாவில் இருந்து மிகத்தொலைவில் இருக்கின்றன. ஆனால், சீனாவின் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடாக இந்தியா இருக்கிறது. இதனை நாம் மிக முக்கியமானதாகப் பார்க்க வேண்டும். இந்த கரோனா தீநுண்மி காலகட்டத்தில் சீனாவால் இந்த நான்கு நாடுகளுமே பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்தன.
 இந்தியாவுக்கு சீனாவால் எல்லைப் பிரச்னை, ஜப்பானுக்கு சீனக் கடல் எல்லையில் பிரச்னை, கரோனாவால் உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டது அமெரிக்கா. சீனாவின் ஆய்வுக்கூடத்தில் இருந்து தீநுண்மி பரப்பப்பட்டதாக குற்றம் சாட்டியது அமெரிக்கா. அதைப்போலத்தான் ஆஸ்திரேலியாவும்.
 ஆகவே, இந்த நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதிகளில் சீனா கட்டுப்பாடுகள் விதித்தது. ஆக, பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் இணைந்து க்வாட் கூட்டணியை உயிர்ப்பித்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடலில் மலபார் கடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
 அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படைகள் இதில் இணைகின்றன. ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவும் இதில் இணைந்து விட்டது. ஆகவே, அந்தத் தருணத்திலேயே க்வாட் கூட்டணிக்கான வித்து விழுந்து விட்டது என்றே கருத வேண்டும்.
 ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கும் முயற்சியாக நெடுஞ்சாலையையும், ரயில்பாதையையும் இணைத்து வருகிறது சீனா. இன்னொரு பக்கம் பல நாடுகளில் துறைமுகங்களையும் கட்டி வருகிறது.
 இப்படி உலகின் அசைக்கமுடியாத வல்லரசாக தன்னை நிரூபிக்க முயலும் சீனாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கப்போவது இந்த க்வாட் கூட்டமைப்புதான். கடந்த சில நாட்களாக எல்லையில் சீனா தனது ராணுவத்தைப் பலப்படுத்தி வருகிறது.
 இந்த க்வாட் கூட்டமைப்பால் சீனாவின் கோபம் இந்தியாவின் மீது திரும்பியிருக்கிறது. சீனாவின் எதிரிகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதன் மூலம், இந்தியா தனது புதிய பாதையை கண்டடைந்திருக்கிறது.
 அதே சமயம், அதன் பலன் எவ்வாறாக இருக்கும் என்பதை சர்வதேச நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. க்வாட் எனும் நாற்கரக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு மழையாக இருக்குமா, மழைக்கான குடையாக இருக்குமா என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் அமைச்சர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com