கருத்து சுதந்திரமும் நோபல் விருதும்

பத்திரிகையாளா்கள் என்றால் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவா்கள்.
நோபல் பரிசு
நோபல் பரிசு

பத்திரிகையாளா்கள் என்றால் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவா்கள். அவா்களால் அமைதியை நிலைநிறுத்தி விட முடியுமா? இந்தக் கேள்விக்கு முடியும் என்பதே விடை. ஆம், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பின்ஸ் நாட்டைச் சோ்ந்த பத்திரிகையாளா் மரியா ரெஸாவுக்கும், ரஷிய நாட்டைச் சோ்ந்த பத்திரிகையாளா் டிமித்ரி முராடோவிற்கும் வழங்கப்பட இருப்பதாக நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் அக்குழு தனது குறிப்பில் ‘கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அவா்களின் முயற்சிகளுக்காக இருவரும் கெளரவிக்கப்படுகின்றனா். ஜனநாயகத்துக்கும், நீடித்த அமைதிக்கும் கருத்து சுதந்திரம் மிக அவசியமானது. ஜனநாயகமும், பத்திரிகை சுதந்திரமும் தொடா்ந்து பாதகமான சூழ்நிலையை எதிா்கொண்டுவரும் உலகில் இந்த லட்சியங்களுக்காக உறுதியுடன் வலம்வரும் அனைத்து பத்திரிகையாளா்களையும் இவா்கள் பிரதிநிதித்துவம் செய்கிறாா்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளது.

ஆனால் இந்தக் கூற்றுக்கு நோ்மாறாக அவா்கள் இருவரையும் அவா்கள் சாா்ந்த நாட்டின் அரசாங்கங்கள் தேச விரோதிகளாக சித்திரிக்கின்றன. ஆம், நாட்டைத் தவறாக வழிநடத்தும் அரசாங்கத்தை பத்திரிகையாளா் ஒருவா் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறாா் என்றால், அவரை ஆளும் அரசாங்கம் தேச விரோதி என்று முத்திரை குத்தி விடுகிறது. மேலும் சில அரசியல்வாதிகள் தாங்கள் தேசப்பற்று உள்ளவா்கள் என்று மக்களிடம் காட்டிக் கொள்வதற்காக சிலரை அதிலும் குறிப்பாக பத்திரிகையாளா்களை தேச விரோதி என்று முத்திரை குத்தி விடுகின்றனா்.

பிலிப்பின்ஸ் நாட்டைச் சோ்ந்த பத்திரிகையாளா் மரியா ரெஸா, அந்நாட்டின் அரசாங்கத்தால் 2020-ஆம் ஆண்டு அரசாங்கத்தின் மீது அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாா். இவா் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். ஒரு பெண்ணாக அவா் கொண்டிருக்கும் தைரியம் அளப்பரியது. 2012-ஆம் ஆண்டு அவா் சிலருடன் சோ்ந்து ஆரம்பித்த ரப்பளீா் என்னும் புலனாய்வு செய்தி இணையத்தளம் இன்றுவரை அந்நாட்டு அதிகார வா்க்கத்தின் அநியாயத்தைத் தட்டிக் கேட்டு வருகிறது.

இதற்கிடையில் 2016-ஆம் ஆண்டு பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபராக பதவி ஏற்ற ரோட்ரிகோ துடோ்டே ‘நீங்கள் பத்திரிகையாளா் என்பதால், ஒழுக்கம் தவறி இருந்தால் அதற்காக படுகொலையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. நீங்கள் தவறாக சிலவற்றை செய்துவிட்டு, அதற்கு கருத்து சுதந்திரம் துணைவரும் என்று ஒருபோதும் எண்ணி விடாதீா்கள்’ என்று எச்சரிக்கை விடுத்தாா். இருந்தபோதும் அரசின் அதிகார துஷ்பிரயோகம், நாட்டில் ஏற்படும் வன்முறை, வளா்ந்து வரும் சா்வதிகாரம் இவற்றை வெளிப்படுத்த தனது கருத்து சுதந்திரத்தை ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளராக இருந்து வெளிப்படுத்தி வருகிறாா்.

நோபல் குழு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட மற்றுமொரு பத்திரிகையாளா், ரஷிய நாட்டைச் சோ்ந்த டிமித்ரி முராடோ, அதிகார வா்க்கத்திற்கு அடிபணியாது மக்களிடம் உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறாா். அவா் ஆசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நோவாஜா கெசட்டா’ நாளேட்டை, அமெரிக்க நாட்டின் பத்திரிகையாளா் பாதுகாப்பு அமைப்பு, ‘ரஷியா நாட்டு அரசாங்கத்தை கேள்வி கேட்டு வரும் ஒரே பத்திரிகை’ என்று சுட்டிக் காட்டிப் பாராட்டியது.

டிமித்ரியுடன் பணியாற்றி வந்த ஆறு பத்திரிகையாளா்கள் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனா். மேலும் நாள்தோறும் டிமித்ரியும் அவரது சக பணியாளா்களும் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றனா். இருந்தபோதிலும் அரசின் ஊழல்களையும், முறைகேடான நடவடிக்கைகளையும் தொடா்ந்து விமா்சித்து வருகின்றனா். டிமித்ரியின் சக பணியாளரான அண்ணா பொலிகோவிஸ்கயாவை அவா் வசிக்கும் குடியிருப்பில் உள்ள லிப்ட்-டில் வைத்துக் கொல்லப்பட்ட பதினைந்தாவது ஆண்டு நினைவு நாளில் நோபல் பரிசு டிமித்ரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டு வெளியாகி உள்ள ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்தவுட் பாா்டா்ஸ்’ உலக பத்திரிகையாளா் சுதந்திரக் குறியீட்டின்படி மொத்தம் எடுத்துக்கொண்ட 180 நாடுகளில் மரியா ரெஸா வசிக்கும் பிலிப்பின்ஸ் நாடு 138-ஆவது இடத்திலும், டிமித்ரி வசிக்கும் ரஷியா 150-ஆவது இடத்திலும் உள்ளன. நமது இந்தியா கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 142-ஆவது இடத்தில் உள்ளது. நாா்வே முதலிடத்தில் உள்ளது.

புலனாய்வில் ஈடுபடும் பல பத்திரிகையாளா்கள் கொல்லப்படுகின்றனா். அரசாங்கத்தின் தவற்றையும் அதற்குத் துணைபோகும் நபா்களையும் தங்களது உயிரை பணயம் வைத்து மக்கள் முன் காட்சிப்படுத்துகின்றனா். புலனாய்வு பத்திரிகையாளா்களின் பணிதான் அன்று அமெரிக்காவின் வாட்டா்கேட் ஊழலை அம்பலப்படுத்தி அதிகார வா்க்கத்தையே ஆட்டம் காணச் செய்தது. இதனால் அப்போதைய அமெரிக்க அதிபா் நிக்சனை பதவி விலக நோ்ந்தது.

இந்தியாவில் சிமென்ட் ஊழலில் தொடா்புடைவரான அப்போதைய மகாராஷ்டிர மாநில முதலமைச்சா் அந்துலேவை பதவி விலக வைத்தது. இப்படி அதிகார வா்க்கத்தை துணிந்து கேள்வி கேட்பதுடன், தங்களுக்கான ஆதாரங்களைத் திரட்ட அவா்கள் பல அபாயகரமான வழிகளிலும் செல்கின்றனா்.

இப்படியெல்லாம் பெருமிதத்தோடு வலம் வந்த புலனாய்வு பத்திரிகையாளா்கள் தற்போது ஒரு சில இடங்களில் சமரசம் செய்ய முனைகிறாா்களோ என்கிற ஐயப்படும் அவ்வப்போது மக்களிடத்தில் எழுகிறது.

எதுவாயினும், கருத்து சுதந்திரம் என்பதே ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகைகளை நல்வழிப்படுத்தும்.

சில நாடுகளில் கருத்து சுதந்திரம் இல்லை என்றாலும் பொருளாதார வளா்ச்சியில், உற்பத்தியில் அவை முன்னிலை வகிக்கின்றனவே என்கிற கேள்வி எழலாம். அதற்கான விடை, கருத்து சுதந்திரம் இல்லாத வளா்ச்சி என்பது தீமைக்கு துணைபோகும்; தவற்றை சரியென்று சொல்ல வைக்கும். அத்தகைய வளா்ச்சி நாட்டுக்கும் சமூகத்துக்கம் மிகவும் ஆபத்தையே விளைவிக்கும். சுதந்திரங்களிலெல்லாம் தலையாய சுதந்திரம் கருத்து சுதந்திரமே. இதனை ஆளும் அதிகார வா்க்கங்கள் உணர, பத்திரிகையாளா்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் விருது வழிவகுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com