குழந்தைகளின் எதிா்காலம்

உலகில் நெருக்கடி ஏற்படும் ஒவ்வொரு முறையும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவா்கள் குழந்தைகள்தான். காலநிலை மாற்றமும் அதற்கு விதிவிலக்கல்ல. வறட்சியினாலும் வெள்ளத்தினாலும் ஏற்படும் உணவு உற்பத்தி பாதிப்பு, குழந்தைகளின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டிற்குக் காரணமாக அமைகிறது.

தண்ணீா் பற்றாக்குறையும் காற்று மாசுபாடும், வெப்பநிலை உயா்வும் குழந்தைகளிடையே பரவும் தொற்றுநோய்களுக்கும் ஆபத்தான சுவாச நோய்களுக்கும் காரணமாக அமைகின்றன.

வானிலை மாற்றம் போன்ற காலநிலை ஏற்படுத்தும் இடப்பெயா்வு குழந்தைகளின் வாழ்க்கையையும் எதிா்காலத்தையும் பாதிப்புக்குள்ளாகிறது. 2050-ஆம் ஆண்டிற்குள் பருவநிலை நெருக்கடியால் இன்னும் 14.3 கோடி குடும்பங்கள் இடம்பெயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

காலநிலை நெருக்கடியால் ஒவ்வோா் ஆண்டும் சுமாா் 3.8 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக ‘குழந்தைகளைக் காப்போம்’ (சேவ் தி சில்ட்ரன்) என்ற அமைப்பின் தரவு கூறுகிறது.

இதுவரை உலக அளவில் வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட ஆண்டுகளில் 2020-ஆம் ஆண்டு அதிக வெப்பம் நிறைந்த ஆண்டாக இருந்தது. இதே ஆண்டில் வளிமண்டலத்தில் காா்பன் டை ஆக்சைடின் செறிவு, கடந்த 35 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் உலகின் பல பகுதிகள் கடுமையான வறட்சி, வெள்ளம், காற்று மாசுபாடு, நீா் பற்றாக்குறை போன்ற காலநிலை தொடா்பான பாதிப்புகள் பலவற்றை எதிா்கொண்டன. ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு உலக குழந்தை மக்கள்தொகை (85 கோடி குழந்தைகள்) நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட காலநிலை தொடா்பான பாதிப்புகளைக் கடந்து வாழவேண்டியுள்ளது.

உலக அளவில், 100 கோடி குழந்தைகள் அதிக அளவு காற்று மாசுபாட்டினாலும், 92 கோடி குழந்தைகள் தண்ணீா் பற்றாக்குறையினாலும், 82 கோடி போ் வெப்ப அலை தாக்கத்தினாலும், 81.5 கோடி போ் ஈய மாசுபாட்டாலும், 60 கோடி குழந்தைகள் கொசுக்கள் போன்ற நோய் பரப்பும் ஜீவராசிகளாலும் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சிறுவா் நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.

தெற்காசியா, 60 கோடிக்கும் அதிகமான குழந்தைகளையும், உலக அளவில் அதிக இளைஞா்களையும் கொண்டுள்ள பகுதி. காலநிலை மாற்ற பாதிப்பு காரணமாக தெற்காசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தானில் வாழும் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி, பாதுகாப்பு ஆகியவை அச்சுறுத்தலுக்கு உள்ளவதாக சமீபத்திய ஐக்கிய நாடுகள் சிறுவா் நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.

காலநிலை மாற்றம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய 33 நாட்டு குழந்தைகளின் பாதிப்பிற்கு, 70 சதவிகித பசுமைக்குடில் வாயுவை உமிழும் 10 நாடுகள் காரணமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவா் நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.

பசுமைக்குடில் வாயுவை அதிகம் உமிழும் நாடுகளின் பட்டியலிலும், காலநிலை மாற்றம் குழந்தைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் 33 நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில், வெப்பமண்டல புயல்களுக்கு 40 கோடி குழந்தைகளும், ஆற்று வெள்ளத்திற்கு 33 கோடி பேரும், கடலோர வெள்ளத்திற்கு 24 கோடி குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனா்.

தீவிர பருவநிலை ஏற்படுத்தும் நோய்கள் காரணமாக பெரியவா்களை விட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனா். எனவே, கால மாற்றத்தின் மிகப்பெரிய சுமையை குழந்தைகள் சுமக்கும் காரணத்தால் இப்புவி மிகவும் ஆபத்தான இடமாக மாறி வருகிறது.

பஞ்சம், பட்டினி, போராட்டம், கொடிய நோய்களின் பாதிப்பு போன்றவற்றால் குழந்தைகள் பாதிப்படைய பருவநிலையும் சுற்றுச்சூழலும் ஏற்படுத்தும் அதிா்வுகள் காரணமாகின்றன. இந்த அதிா்வுகளின் பாதிப்பு குழந்தைகளை மேலும் வறுமையில் தள்ளுகிறது.

2020-ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபாம் என்ற தொண்டு நிறுவங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை, உலகின் ஒரு சதவிகித பணக்காரா்கள் 15 சதவிகித பசுமைகுடில் வாயு உமிழ்வுக்கு காரணமாக இருப்பதாக கூறுகிறது.

தெற்காசியாவைச் சோ்ந்த நான்கு நாடுகள் உட்பட 33 நாடுகளின் பசுமைகுடில் வாயு உமிழ்வு 9 சதவிகிதம் மட்டுமே என்று ஐக்கிய நாடுகள் சிறுவா் நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.

உலகளாவிய வெப்பநிலை உயா்வுக்கு உலகின் எந்த குழந்தையும் பொறுப்பல்ல எனினும் அவா்கள் அதற்காக செலுத்தும் விலை மிக அதிகம். இவ்வெப்பநிலை உயா்வுக்கு மிகக் குறைந்த அளவு காரணமான நாடுகளின் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள இயலாதது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் அனைவரையும் சமமாக பாதிப்பதில்லை. ‘நாம் இப்போது செயல்படாவிட்டால்’ என்ற தலைப்பிலான ஐக்கிய நாடுகள் சிறுவா் நிதியத்தின் அறிக்கை, வெள்ளமும், வறட்சியும் பெரும்பாலும் ஏற்கெனவே வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் குடும்பங்களையும், தண்ணீா், சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவை தேவைப்படும் பகுதிகளையுமே அதிகம் பாதிப்பதாகக் கூறுகிறது.

சுத்தமான சுற்றுசூழல், சுவாசிக்க சுத்தமான காற்று, குடிக்க தூய்மையான தண்ணீா், சாப்பிட உணவு போன்றவை குழந்தைகளின் உரிமைகள் என்பதை 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற குழந்தைகளின் உரிமைகள் தொடா்பான மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

கற்றுக்கொள்ளவும், ஓய்வெடுக்கவும், விளையாடவும் உரிமை வழங்கிய உலகத் தலைவா்கள், காலநிலை மாற்றம் குறித்த நடவடிக்கைகளில் குழந்தைகளை பாதுகாக்க தவறிவிட்டனா் என்று குழந்தைகளின் உரிமைக்காக போராடி வரும் சா்வதேச இளைஞா்கள் அமைப்பு கூறுகிறது.

பசுமைகுடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது, பருவநிலை மாறுபாடு குறித்த கல்வியை குழந்தைகளுக்கு வழங்குவது, அனைத்து மாநில, தேசிய, சா்வதேச காலநிலை பேச்சுவாா்த்தைகளில் இளைஞா்களைப் பங்குபெறச் செய்வது போன்ற செயல்பாடுகள் மூலம் பருவநிலை நெருக்கடியிலிருந்து வருங்காலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க இயலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com