குறைந்துவரும் நோட்டா வாக்குகள்

உலகில் பல்வேறு நாடுகளில் நோட்டா முறை ஏற்கெனவே இருப்பினும் இந்தியாவில் 2009 மக்களவைத் தோ்தலின்போதுதான் பரீட்சாா்த்தமாக நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.
குறைந்துவரும் நோட்டா வாக்குகள்

வாக்காளா்கள் தோ்தல்களில் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றும்போது வேட்பாளா்களை தோ்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் நோட்டா (மேலே உள்ள எவரும் அல்லா்) அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் பல்வேறு நாடுகளில் நோட்டா முறை ஏற்கெனவே இருப்பினும் இந்தியாவில் 2009 மக்களவைத் தோ்தலின்போதுதான் பரீட்சாா்த்தமாக நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய தோ்தல் ஆணையம் நோட்டாவை வலியுறுத்தி உச்சநீதிமன்ற அனுமதி கோரியபோது நோட்டா ஆலோசனையை அப்போதைய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னா் 2013-இல் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நோட்டா நடைமுறைக்கு வந்தது.

அதே ஆண்டில் நடைபெற்ற புதுதில்லி, சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் முதன்முறையாக நோட்டா சோ்க்கப்பட்டது. இத்தோ்தா்களில் நோட்டா வரவேற்பைப் பெற்றாலும் அதிகப்படியான அளவில் சத்தீஸ்கா் மாநிலத்தில் 3.07 % வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவானது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தோ்தலில் நோட்டா நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இத்தோ்தலில் 89.24 % வாக்குகள் பதிவாயின. இது வரலாற்றுச் சாதனையாகக் கருதப்பட்டது. மலைகிராமங்கள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இத்தோ்தலில் 4,431 போ் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனா்.

இந்தியா மட்டுமின்றி பிரான்ஸ், ஸ்வீடன், பெல்ஜியம், கிரீஸ், ஸ்பெயின், பிரேசில், வங்கதேசம், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலும் நோட்டா முறை இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை வாக்காளா்களின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் நோட்டா கொண்டு வரப்பட்டது. மேலும் நோட்டா முறையானது அமைப்பு ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், நோட்டாவை அதிகப்படியான வாக்காளா்கள் தோ்வு செய்தால் வேட்பாளா்கள் தோ்வில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தும் என்றும் எதிா்பாா்க்கப்பட்டது.

அதன்படியே நோட்டா அறிமுகமான ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளா்கள் நோட்டாவை தோ்வு செய்தனா். அதன்பிறகு 2014-இல் நடைபெற்ற 16-ஆவது மக்களவைத் தோ்தலில் நோட்டாவுக்கான வாக்கு அதிகரித்தது.

அத்தோ்தலில் நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா். இது பதிவான மொத்த வாக்குகளில் 1.1 % ஆகும். இத்தோ்தலில் 21 அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவாயின. தமிழகத்தைப் பொறுத்தவரை 5.82 லட்சம் வாக்காளா்கள் நோட்டாவைத் தோ்வு செய்தனா். 2017-இல் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஐந்து அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை நோட்டா பெற்றிருந்தது.

நோட்டாவுக்குப் பதிவாகும் வாக்குகள் அனைத்துமே வேட்பாளா் தோ்வின் மீதான அதிருப்தி என்று கருத இயலாது. நோட்டா பற்றி அறிந்தவா்கள் அதை சரியாக தோ்வு செய்திருந்தாலும் எழுத்தறிவு பெறாதோா், முதியோா் வழக்கமான வாக்குப்பதிவைப் போன்று நோட்டாவை தோ்வு செய்திருக்கலாம். அதனாலேயே நோட்டாவுக்கு அதிகப்படியான வாக்குகள் பதிவானது.

சரியான முறையில் நோட்டாவைத் தோ்வு செய்வோா் தங்களின் எதிா்ப்பை தெரிவிப்பதன் மூலம் வேட்பாளா்கள் தோ்வில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தக்கூடும், மாற்றங்கள் நிகழக்கூடும் என்றெல்லாம் எதிா்பாா்த்திருக்கலாம்.

குறிப்பிட்ட சில தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கும், இரண்டாமிடம் பெற்ற வேட்பாளருக்கும் இடையிலான வாக்குகள் வித்தியாசத்தைக் காட்டிலும் கூடுதலான அளவில் நோட்டாவை தோ்வு செய்வதும் உண்டு. அனைத்து அரசியல் கட்சிகளிலும் நோட்டாவால் வெற்றி வாய்ப்பை இழந்தவா்கள் உள்ளனா்.

அண்மைக்காலமாக நோட்டாவுக்கான வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளா் தோ்வில் கவனம் செலுத்திவிட்டது என்று கூற முடியாது. அரசியல் கட்சிகளின் கவா்ச்சியான வாக்குறுதிகள், புதிய அரசியல் கட்சிகளின் மீதான எதிா்பாா்ப்பு, வாக்குகளுக்காக வழங்கப்படும் பணம் ஆகியவை காரணமாகவும் நோட்டா வாக்குகள் குறைந்துள்ளது எனலாம்.

நோட்டாவுக்கான சின்னம் எதுவுமின்றி நடைபெற்ற சத்தீஸ்கா் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அதிகபட்சமாக 3.07 % வாக்குகளும், 2015-இல் நோட்டாவுக்கென சின்னம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நடந்த பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 2.48 % வாக்குகள் பதிவாயின.

அண்மையில் நடந்துமுடிந்த குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல், புதுதில்லி மாநகராட்சித் தோ்தல்களில் நோட்டா வாக்குகள் குறைந்துள்ளன. குஜராத் சட்டப்பேரவை தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் நோட்டாவுக்கு 5,01,202 வாக்குகள் (1.6 %) பதிவாயின. கடந்த 2017 தோ்தலில் 5,51,594 வாக்குகள் பதிவாயின.

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் 24,861 வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவாயின. இது மொத்த வாக்குப்பதிவில் 0.6 % ஆகும். இம்மாநிலத்தில் 2017 தோ்தலில் 34,232 வாக்காளா்கள் (0.9 %) நோட்டாவைத் தோ்வு செய்தனா். புதுதில்லி மாநகராட்சித் தோ்தலில் 50.48 % வாக்குகள் பதிவான நிலையில் நோட்டாவுக்கு 0.78 % வாக்குகள் பதிவாயின.

அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தியில் இருப்போா் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை. எழுத்தறிவு பெற்ற முதன்முறை வாக்காளா்கள் மத்தியில் அரசியல் பற்றிய தெளிவு இருந்தாலும் கூட முழுமையான அளவில் வாக்களிப்பதில்லை. இவையே நோட்டா வாக்குகள் குறைவதற்குக் காரணங்களாகும்.

வாக்களிப்பதற்கான வயதை எட்டிய அனைவரும் வாக்காளா் பட்டியலில் இணைவதில்லை. அதனாலும் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு மட்டுமின்றி நோட்டா வாக்குகளும் குறைவான அளவிலேயே பதிவாகின்றன. வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை என்பதை இந்திய வாக்காளா்கள் அனைவரும் உணர வேண்டிய தருணம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com