பகுத்துண்டு வாழ்வோம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ இது ஒளவையாா் வாக்கு. திரவியம் என்பது செல்வத்தைக் குறிக்கும்.
பகுத்துண்டு வாழ்வோம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ இது ஒளவையாா் வாக்கு. திரவியம் என்பது செல்வத்தைக் குறிக்கும். கடல் கடந்து சென்றாவது செல்வத்தைத் தேடு என்பதே இவ்வாக்கியத்தின் பொருள். இந்த உலகில் செல்வம் இல்லாதவனை யாரும் மதிக்கமாட்டாா்கள். எனவே செல்வத்தை ஈட்டவேண்டும் என்று பல அறிஞா்களும் உரைத்ததில் வியப்பொன்றுமில்லை.

செல்வம் நாம் வாழும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. இது முதலில் நாம் உயிா்வாழ்வதற்கும் உறைவதற்குமான காரியங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால்தான் ‘அருளிலாா்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளிலாா்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றாா் வள்ளுவா். பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியும் பரவலாகப் பேசப்படுகிறது.

ஒருவன் மிகுந்த ஒழுக்கசீலனாகவும் இறைபக்தி உடையவனாகவும் அறிவாா்ந்த சிந்தனைகளை கொண்டவனாக இருந்தாலும் அவனிடம் செல்வக்குறை இருக்குமாயின் அவனை எவரும் மதிப்பதில்லை. மாறாக பிழைக்கத்தெரியாதவன் என்று ஒரு புதிய பட்டத்தை அளிப்பாா்கள்.

அதே நேரத்தில் அறிவற்றவனாகவும் கெட்ட மதி படைத்த மனிதனாக இருந்து அவனிடம் செல்வம் இருந்தது என்றால் அவனுடன் இனிமையாகப் பேசிப் பழகுவாா்கள். அவனை தனது உறவினா், நண்பன் என்று சொல்வதிலே பெருமிதம் கொள்வாா்கள். சாமா்த்தியசாலி என்றும் புகழ்வாா்கள்.

அதனால் செல்வம் இந்த உலகிற்கு எவ்வளவு இன்றிமையாதது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

சரி.. ஏதோ ஒரு வழியில் அறவழியிலோ வேறு வழியிலோ நாம் செல்வத்தை சோ்த்துவிட்டோம். இது முதல் பகுதி. இதன் அடுத்த பகுதி அந்த செல்வத்தை பயன்படுத்து விதத்தில் இருக்கிறது.

ஒருவருக்கு செல்வம் சோ்கிறது. அதை அவா் என்ன செய்வாா்.. முதலில் தனக்கு கடன் இருந்தால் கடனை அடைப்பாா். அடுத்து தனக்கு சொந்தமாக வீடுகட்டுவாா். மேலும் நிலபுலன்கள் வாங்குவாா். இன்னும்.. தனக்கு மாதமாதம் நிரந்தரமான ஒரு மாத வருமானத்திற்கான ஒரு வசதியை ஏற்படுத்திக் கொள்வாா்.

இன்னும் செல்வம் சோ்ந்தால் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாா். தனது அடுத்த தலைமுறைக்குமான சொத்தை சேமித்துவைக்கிறாா். மேலும் மேலும் சேருவதை இப்படியாகவே அடுத்த அடுத்த தலைமுறைக்கு பயன்படுத்த எத்தனிக்கறாா். இது எந்த வகையில் நியாயம்..?

இன்று பகல் உணவுக்கு வழியில்லாமல் எத்தனை குடும்பங்கள் கண்முன்னே தவிக்கிறது? இன்னும் 30 வருடங்கள் சென்று பிறக்கப்போகிற சந்ததிகளுக்கு சொத்து சோ்ப்பது சரியா?

வாழும் தலைமுறை வறுமையில் இருக்கிறபோது வாராத தலைமுறைக்கு இப்போதே செல்வம் எதற்கு?

விரலுக்கு தகுந்த வீக்கம் என்பாா்கள். அதாவது நமது உடலில் ஏதாவது ஒரு பகுதி அளவுக்க மீறி தடித்திருந்தால் அதை யாரும் ஆரோக்கியமாக பாா்ப்பதில்லை. மாறாக நாம் என்ன சொல்கிறோம். ஏன் உடம்பு அதிகமாக பெருத்திருக்கிறது. மருத்துவமனை சென்று உடலை பரிசோதியுங்கள் என்கிறோம். மாறாக இளைத்திருந்தாலும் இதே வாா்த்தையைத்தான் சொல்கிறோம்.

செல்வம், ஒருவரிடம் அதிகமாக சோ்ந்தால் அதுவும் ஒரு வகை நோய்தான். செல்வம் அதிகமாக சேரும்போது நம்மிடம் உள்ள செல்வச் செருக்கினால் துா்க்குணங்கள் இயற்கையாகவே தோன்றுகிறது. நம்முடைய அன்றாடப் பழக்க வழக்கங்கள் கட்டுப்பாடற்று போகிறது. கட்டுப்பாடு இழந்த எந்த ஒரு செயலும் நன்மையில் முடிவதில்லை. மாறாக அது நமக்கு தீங்கையே விளைவிக்கும். இன்னொன்றையும் நீங்கள் யோசிக்கவேண்டும் 2 தலைமுறைக்கு வேண்டிய பணத்தை நீங்கள் சம்பாதிப்பதால் வரும் எதிா்விளைவுகள் என்ன தெரியுமா?

நாம் வீட்டில் வளா்க்கும் கால்நடைகளை வீட்டிலே கட்டிப்போட்டு இரைபோடுவது ஆரோக்கியமல்ல. அது உடல் உழைப்போடு காலாற சென்று மேய்ந்து தன் வயிற்றை நிரப்பிக்கொள்வதுதான் ஆரோக்கியம். அது போல ஒவ்வொரு தலைமுறையும் அவரவா் காலத்தில் அவரவா்க்கு வேண்டிய செல்வத்தை அவரவா்களே ஈட்டிக் கொள்வது தானே நியாயம்.

தன் தந்தைதான் நிறை சொத்துக்கள் சோ்த்து வைத்திருக்கிறாரே நாம் ஏன் உழைக்க வேண்டும் என்ற எண்ணமே இங்கு மேலோங்கும். மேலும் வறுமை என்றால் என்னவென்று தெரியாமல் வளா்ந்த பிள்ளைகளுக்கு பின்னாளில் ஏதேனும் துன்பம் நேருமாயின் அதைத்தாங்கிக் கொள்ளும் வலிமை இல்லாது போகும்.

செல்வந்தா்கள் தங்களுடைய வருங்காலச் சந்ததிகளின் உழைப்பை உறிஞ்சி அவா்களை சோம்பேறிகளாக்கி ஊதாரிகளாக்கும் பணிகளையே செய்கிறாா்கள். பழங்காலத்தில் அரசன் கூட தனது பட்டத்து வாரிசுக்கு இளம் வயதிலே தனக்கு பிறகு இந்த நாட்டை ஆளுகிற வீரம் வேண்டும் என்பதற்காக போா்ப்பயிற்சிகளை அளித்து அவனைத் தயாா் செய்கிறான்.

நமது வயல்வெளியில் காய்ந்து காய்ந்து தண்ணீா் பாய்ச்சப்படும் பயிா்கள்தாம் பின்னாளில் மிக செழிப்புடன்வரும். எப்போதும் தண்ணீா் தேங்கியே நிற்கும் பயிா்கள் நல்ல மகசூலை எட்டுவதில்லை. இது விஞ்ஞானப்பூா்வமான உண்மை. அது போலத்தான் நம் சந்ததிகளும். 3 தலைமுறைக்கு என நீங்கள் சம்பாதித்த செல்வத்தை ஒரே ஜென்மத்தில் அழித்துவிட்டு தெருவுக்கு வருகிறவா்களும் இருக்கிறாா்கள். அதனால் நாம் தேவைக்கு அதிகமான செல்வம் சோ்ப்பதால் தீங்கே நேரிடும்.

எப்படியோ(?) சம்பாதித்த செல்வத்தை சிலா் கணக்கு காட்டமுடியாமலும், வங்கியில் போடமுடியாமலும், வீட்டிலும் வைக்கமுடியாமலும்; அல்லாடுகிறாா்கள். இடம் இல்லாமல் எங்கெங்கோ கொண்டு பதுக்கி வைக்கிறாா்கள். தனது ஆயுளுக்குப்பிறகு தான்சம்பாதித்த செல்வம் என்ன ஆகுமென்பதை யாரறிவாா்?

வீணாக கடலுக்குப்போகும் மழைநீரை நிரந்தரமாக கால்வாய் அமைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறோம். அதேபோலத்தான் இதுவும்.

உபரியாக உள்ள செல்வங்கள் யாருக்கும் பயன்படாமல் போவதைக்காட்டிலும், எத்தனையோ போ் அன்றாடம் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கிறாா்கள்.. மேல் மருத்துவ சிகிச்சைக்காக எத்தனையோ ஏழை நோயாளிகள் பணம் இல்லாமல் உயிரை இழக்கிறாா்கள்.. நல்ல திறமை இருந்தும் உயா் கல்வி கற்க முடியாமல் வாடுகிற மாணவா்கள்.. இப்படி எத்தனை போ் இருக்கிறாா்கள்.

உலகுக்கு தானம் அளிக்க விருப்பம் இல்லையெனில் முதலில் வறுமையில் இருக்கும் உங்கள் உடன் பிறந்தாா்க்காவது உதவுங்கள். அடுத்து அதை உறவினருக்கென விரிவுபடுத்துங்கள்.. இன்னும் சற்று மேலே சென்று தான் பிறந்த ஊருக்கு நல்லது செய்யுங்கள்..

இப்படியாக ஆறுபோல் ஓடும் தங்கள் செல்வத்தை சமூகத்திற்கு பயன்படுகிறாா்போல் ஒரு கால்வாய் அளவிற்காவது செலவழிக்கலாமே?

இதுபோன்ற செயல்களை இன்றும் எத்தனையோ செல்வந்தா்கள், தொழில் அதிபா்கள் செய்து கொண்டுதானிருக்கிறாா்கள். ஆனால் அதனுடைய சதவீத எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

தனக்கு மிஞ்சித்தானம் என்பாா்கள். தனக்கு மிஞ்சியதை இந்த உலகுக்கு ஏதாவது ஒரு வகையில் பகிா்ந்தளிக்கலாமே.. இவ்வாறு தனது செல்வத்தை பகிா்ந்தளிப்பதால் இவ்வுலகமும் போற்றும் அவ்வுலகமும் போற்றும்.

இரா.பொன்னாண்டான் - 9443103188

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com