காசநோய் இல்லா இந்தியா காண்போம்!

காசநோய் இல்லா இந்தியா காண்போம்!

உலக சுகாதார நிறுவனம் 2030-ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டின் காசநோய் தினத்தின் கருப்பொருளாக "காசநோயை ஒழிக்க முதலீடு செய்யுங்கள்; உயிர்களைக் காப்பாற்றுங்கள்' என்பதை அறிவித்துள்ளது.
 மைக்கோபாக்டிரியம் எனும் பாக்டீரியா மூலமாக காசநோய் பரவுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போதும், தும்மும்போதும் காசநோய் கிருமி வெளிப்படுகிறது. காசநோயின் அறிகுறிகளாக இருமல், எடை குறைதல் , காய்ச்சல் ஆகியவை இருக்கின்றன. காசநோய் பெரும்பாலும் சளி பரிசோதனை மூலமே உறுதி செய்யப்படுகிறது. காசநோய் பெரும்பாலும் 75 % நுரையீரலை பாதிக்கிறது. நமது உடலில் நகம், தலைமுடியை தவிர அனைத்துப் பகுதிகளையும் காசநோய் தாக்கும். தினந்தோறும் காசநோயால் சராசரியாக 4,100 பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
 பிரதமர் நரேந்திர மோடி 2018-இல் "காசநோயில்லா இந்தியா 2025' (டிபி ஃபிரீ இண்டியா 2025) என்ற அறிவிப்பை வெளியிட்டார். தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோயை முற்றாக ஒழிக்க மருத்துவத்துறையினர் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள்.
 காசநோய் அனைத்து வயதினரையும் தாக்கும் தன்மை கொண்டது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 162 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர்; 37 பேர் உயிரிழக்கின்றனர். காசநோய் பெரும்பாலும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களையும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களையும், சர்க்கரை நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகளையும் எளிதில் பாதிக்கிறது.
 காசநோய் பரிசோதனையும், அதற்கான மருந்துகளும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனாலும், காசநோய் அறிகுறிகளுடன் உள்ள நபர்களை காசநோய் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் பலரும் பரிசோதனை செய்து கொள்வதில்லை. பின்னர் உடல் பலவீனமான நிலையில் மருத்துவமனையை நாடுகின்றனர். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுக்கவில்லை எனில் உடல் மெலிந்துவிடுவர். காசநோய் காற்றின் மூலமாக பரவும் என்பதால் சிகிச்சை எடுக்க தாமதமானால் காசநோயால் பாதிக்கப்பட்ட நபர் மூலமாக அவருடன் தொடர்பில் உள்ள மற்றவர்களுக்கும் காசநோய் பரவும் ஆபத்து இருக்கிறது.
 காசநோயாளிகளுக்கு புரதச்சத்து அவசியம் என்பதால், மத்திய அரசு "நிக்சன் போஜன் யோஜனா' எனும் திட்டத்தின் கீழ் காசநோயாளிகள் சிகிச்சை பெறும் காலங்களில் அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.500 செலுத்தி வருகிறது. 2019-ஆம் ஆண்டு காசநோய் கண்டறியபட்டோர் சுமார் 23 லட்சம் பேர். இதில் சிகிச்சையை பாதியில் கைவிட்டவர்கள் 81,306 பேர். காசநோய் சிகிச்சையை பாதியில் கைவிடுபவர்களால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, அவர்கள் குடும்ப உறுப்பினர்களையும் நோய் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
 காசநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, மருத்துவர்கள் காசநோய் பாதித்தோரின் வீட்டிற்கே சென்று மருந்து மாத்திரைகளை அளிக்கின்றார்கள். ஆயினும், நோயாளிகள் பாதியில் சிகிச்சையைக் கைவிடுவது எதிர்கால சமூகத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 2019-ஆம் ஆண்டு தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று 2,81,122 நபர்களை பரிசோதனை செய்ததில் 395 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் வீடுவீடாகச் சென்றாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே காசநோயை ஒழிக்க முடியும். காசநோய் ஒழிப்புத் துறையில் களப்பணியாளர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப காசநோய் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதனால் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
 கரோனோ நோய்த்தொற்றுப் பரவலின்போது பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும், வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கும் கரோனோ பரிசோதனை செய்துகொண்டு நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என்கிற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. அது போலவே காசநோய் அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் காசநோய் பரிசோதனையை கட்டாயப்படுத்தினால் காசநோயைக் கண்டறிவது எளிதாக இருக்கும். அதோடு, காசநோயை ஒழிக்கவும் முடியும். காசநோய் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு அது ஆரம்ப நிலையிலேயே தெரிவதில்லை. தாமதமாக கண்டறிந்து சிகிச்சை செய்துகொள்வதைவிட ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் நிச்சயம் காசநோயிலிருந்து மீண்டு விடலாம்.
 உலகையே அச்சுறுத்தும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்கள் அதிகமாக செய்யப்பட வேண்டும். இன்றைக்குக் கூட காசநோயின் ஆபத்து குறித்து அறியாதவர்கள் உள்ளனர். நாம் சுவைக்காக உண்ணாமல் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். மக்கள் நெருக்கமாகக் கூடும் இடங்களில் காசநோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே கூட்டம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பைத் தரும்.
 இரண்டு ஆண்டுகளாக மனித சமூகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கரோனோ தீநுண்மி தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. தடுப்பூசிகளும் , முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளுமே அதற்குக் காரணம். இதுபோன்றே காசநோயையும் விரைவில் ஒழிக்க வேண்டும். அதற்கு, காசநோய் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான், போலியோ இல்லாத இந்தியா
 உருவானதைப் போல காசநோய் இல்லாத இந்தியா உருவாகும்.
 
 இன்று (மார்ச் 24)
 காசநோய் விழிப்புணர்வு நாள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com