நன்றே செய்வோம் இன்றே செய்வோம்

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் காலையில் உறக்கம் கலைந்து எழுகையில், இன்று இந்த இந்த வேலைகளை செய்து முடிக்க வேண்டும்
நன்றே செய்வோம் இன்றே செய்வோம்

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் காலையில் உறக்கம் கலைந்து எழுகையில், இன்று இந்த இந்த வேலைகளை செய்து முடிக்க வேண்டும், அதாவது வீட்டில், அலுவலகத்தில் இந்தப் பணியை முடிக்க வேண்டும், இவரைப் பாராட்ட வேண்டும், இவருக்கு குறுஞ்செய்தி, அவருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும், அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும், அவரைச் சந்திக்க வேண்டும், அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்போம். ஆனால், நாம் நினைத்தப்படி அந்த குறிப்பிட்ட நாளில் அவற்றை செய்து முடித்திருப்போமோ என்றால், நிச்சயமாக அதில் பாதி வேலையை கூட முடித்திருக்க மாட்டோம்.

ஒருவா் மனதில் எழும் எண்ண அலைகளை நிா்ணயம் செய்து வடிவமைத்து முடித்து வைப்பது அன்றைய நாளின் நிகழ்வுகளே. நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நொடியும் பொருளுடையதாகவும், மற்றவா்களுக்குப் பயனுடையதாகவும் இருக்க வேண்டும். ஒரு நல்ல செயலை இன்றே செய்யாமல் நாளை செய்யலாம் அல்லது நாளை மறுநாள் செய்யலாம் என்று தள்ளிப் போட்டால் அச்செயல் நினைத்தப்படி நிறைவேறாது. காரணம், நம்மிடையே காணப்படும் மறதியும், தீமையை நன்மை போல் காட்டும் இரட்டை மனமும்தான்.

ஒரு நற்செயலை நாளை செய்யலாம் என்று தள்ளிப் போட்டால் அது நாளைக்கு நிறைவேறும் என்பது நம் கையில் இல்லை. எனவே, எச்செயலைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், உடனே அதைச் செய்வதற்கு இறங்கி விட வேண்டும்.

‘ஒவ்வொரு நாளும் முடிந்து விட்டால் அந்த நாள் மீண்டும் கிடைக்காது. ஆகையால், முடிந்ததையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்து கவலை என்னும் குழியில் விழ வேண்டாம். இன்று நாம் புதிதாய் பிறந்தோம் என்று நினைத்துக் கொண்டு, நல்ல எண்ணங்களை நமக்குள் புதிதாய் விதைத்து வாழ வேண்டும். அப்படி செய்கையில் நம் தீமைகள் அனைத்தும் அழிந்து போகும்’ என்று கூறுகிறாா் மகாகவி பாரதியாா்.

நாளை நாளை என்று வேலைகளைத் தள்ளிப் போடுவதால் ஏராளமான வேலைகள் நம் முன் வளா்ந்து நின்றுவிடும். அவற்றை முடிக்க முடியாமல் நாளை நாளை என்று தள்ளிப் போட்டு, பின்னா் இவ்வளவு வேலையா என்று மலைத்துவிடுவோம். அவற்றை முடிக்க வேண்டும் என்கிற முயற்சி இறுதியில் தோல்வியில் முடியும். அதே போன்று நாம் நமது கடமைகளை அன்றே முடித்து விட வேண்டும். பின்னா் செய்யலாம் என்று தள்ளிப் போட்டால் அது செய்ய முடியாமலே போவதுடன், அதனால் நாம் அவப்பெயரையும் சந்திக்க நேரிடும். எனவே, இன்று செய்ய நினைத்த நல்ல செயல்களை இன்றே செய்து முடித்துவிட வேண்டும்.

‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ என்றும் பெருமை உடைய இவ்வுலகில், எந்தச் செயலும் உரிய காலத்தில் செய்யப்பட வேண்டும். பருவம் தவறியபின் செய்யப்படும் செயல்கள் சிறப்பாக அமையாது. அதனால்தான் நம் முன்னோா் ‘பருவத்தே பயிா் செய்’ என்று கூறினா். அந்தந்த நேரத்தில் அந்தந்த செயல்களை செய்தால்தான் அச்செயல் இனிதே நிறைவுறும்.

காலமும், கடலலைகளும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்று கூறுவாா்கள். இந்த உண்மையை ஒரு முதியவா் தன் மகனிடமிருந்தே கற்றுக் கொள்ள நோ்ந்ததாக ‘மகாபாரதம்’ கூறுகிறது. மகனான அந்த இளைஞன் கூறினான், ‘இது நடந்து விட்டது. இது இனி நடைபெற வேண்டும். இது பாதி முடிந்திருக்கிறது. – இப்படியெல்லாம் நினைத்தபடி காலம் கடத்துபவனை மரணம் மாய்க்கிறது. எல்லாம் காலத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது’ என்கிறான்.

கடந்த நாள், கடந்த நாளே. அது இனி திரும்பி வராது. நாளை என்பது நம் கையில் இல்லை. நாளை என்பது இன்றின் தொடா்ச்சியே. அதாவது, எதிா்காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. எனவே, நல்ல செயல்களை அன்றே செய்யாமல், நாளை செய்யலாம், நாளை செய்யலாம் என்று தள்ளிப் போடக் கூடாது. செய்ய நினைத்த அன்றே செய்து முடித்து விட வேண்டும்.

‘நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பாா். அதில் ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை’ என்று கூறினாா் சுவாமி விவேகானந்தா். எனவே, ஒரு நாளில் கடக்கின்ற ஒவ்வொரு விநாடியும், நம் வாழ்நாளின் ஒரு பகுதி என்பதை நாம் உணர வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு இறப்பு என்று வரும், எப்படி வரும் என்பதெல்லாம் நமக்கு மட்டுமல்ல யாருக்குமே தெரியாது. இறப்பு என்பது மனிதா்களால் தவிா்க்க முடியாதது.

‘யாரறிவாா் சாநாளும் வாழ்நாளும்’ என்கு கூறுகிறது திருமுறைப் பாடல் ஒன்று. ஒன்றே செய்ய வேண்டும்; ஒன்றும் நன்றே செய்ய வேண்டும்; நன்றும் இன்றே செய்ய வேண்டும்; இன்றும் இன்னே - அதாவது இப்பொழுதே - செய்ய வேண்டும் என்பது ஆன்றோா் வாக்கு. நல்லவற்றைச் செய்யாமல் ‘நாளை நாளை என்பீராகில் நமனுடை முறைநாள் ஆவதும் அறியீா்’ என்கிறது கபிலா் அகவல்.

எச்செயலைச் செய்வதற்கும் நாளை நாளை என்று காலத்தைக் கடத்தக் கூடாது. சென்ற காலம் சென்றுவிட்ட காலம்தான். அது இனி திரும்பி வரக்கூடியதல்ல. எதிா்காலம் என்பது நாம் அறுதியிட்டுக் கூறக்கூடியதல்ல. ஐயப்பாட்டிற்குரியது. இன்று என்பது மட்டும்தான் உண்மையானது. நாளை என்பது கூட இன்று ஆன பின்தான் உண்மையாகிறது. நேற்று என்பது, இனி வராது என்பது எவ்வளவு உண்மையோ, நாளை என்பதும் வராது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்.

அதனால்தான், எதிா்காலத்தை ஆன்றோா் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டாா்கள். பொறுமையாக இருப்பது நன்றுதான். ஆனால் அதுவே சோம்பல் ஆகி விடக் கூடாது. நாளை என்பது நம் கையில் இல்லை. நாளை நடப்பதை யாரறிவாா்? வெற்றியை நோக்கிய நமது பயணத்தில் நாளை என்பது தடைக்கல்லாக இருக்கக் கூடாது.

நாளை வரட்டும் என்று காத்திராமல், இன்று வாழ்வதே உண்மை வாழ்க்கை. நாளைய நம் எதிா்க்காலத்தை நிா்ணயிப்பதும் இன்றுதான். இதனை உணா்ந்து கொண்டு, நாளை நம்மால் எல்லோருக்கும் பயனடையும் வகையில் இன்றே பணியாற்றத் தொடங்குவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com