தொழில்நுட்பத் தொலைநோக்கு!

தொழில்நுட்பத் தொலைநோக்கு!

 நம்நாடு விடுதலை அடைவதற்கு ஒரு சில ஆண்டுகள் முன்னதாகவே, அன்றைய வைசிராய் குழுமத்தின் வணிகத் துறை அமைச்சரான சர். ராமசாமி முதலியாருக்கு, இந்திய அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விஞ்ஞானி எஸ்.எஸ். பட்னாகர் மத்திய ஆராய்ச்சிக் கூடங்களை ஒருங்கிணைக்க வேண்டியதன் தேவையை விளக்கி ஒரு மடல் எழுதினார்.
 இதன் பலனாக, 1940-ஆம் ஆண்டுகளில் "அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சி வாரியம்' தோன்றியது. அதுவே 1942 செப்டம்பர் 26 அன்று "அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம்' (சிஎஸ்ஐஆர்) என்று பெயர் மாற்றம் பெற்றது.
 1947 ஆகஸ்ட் 20 அன்று, அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமத்தின் முதல் மாநாட்டில், பண்டித ஜவாஹர்லால் நேரு, "பசியோடு இருக்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ யாருக்கும் சத்தியம் என்கிற சொல்லில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்களுக்குத் தேவை உணவு. வயிறு வதங்கிக் கிடப்பவரிடம் சத்தியம் என்றோ சாமி என்றோ, அதனினும் அரிய விஷயங்கள் குறித்தோ பேசுவது வெறும் கேலிக்கூத்து ஆகும். இங்கு ஒவ்வொருவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் யாவும் வழங்கப்பட வேண்டியது அவசியம்' என்று வலியுறுத்தினார்.
 இந்திய அரசும், நோபல் விஞ்ஞானி சர்.சி.வி .ராமன், ஹோமி ஜே. பாபா, விக்ரம் சாராபாய், எஸ்.எஸ். பட்னாகர், கே.எஸ். கிருஷ்ணன், பி.சி. மஹாலோனோபிஸ் போன்ற விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றியது. அறிவியல் துறைகள் மட்டுமின்றி, 1947-ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி - வளர்ச்சித் துறை தோற்றுவிக்கப்பட்டது.
 1961-ஆம் ஆண்டு தொழில்நுட்ப நிறுவன சட்டங்கள் இயற்றப்பட்டன. "தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம்' (1961), "தேசிய உலோகவியல் ஆய்வகம்', "தேசிய விமானவியல் ஆய்வகம்', "மத்தியக் கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம்', "மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்', "மத்திய கட்டுமான ஆராய்ச்சி நிறுவனம்', காஸியாபாதிலும் சென்னையிலும் இயங்கி வரும் "கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம்', "தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்' என்றெல்லாம் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் பல்வேறு அறிவியல் நிறுவனங்கள் உருவாகின.
 1942-1943-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட வறட்சியின்போதுதான் இந்தியாவில் பயிர்வளத் தொழில்நுட்பம் வாயிலாக நில, நீர் மேலாண்மை மற்றும் வேதியியல் - உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த "பசுமைப் புரட்சி' பற்றிய சித்தாந்தம் உருவானது. பாசுமதி அரிசி, புதுரக கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவற்றின் திசுமரபியல் ரீதியிலான வளர்ச்சி சார்ந்து "பசுமைப் புரட்சி'யும் விளைந்தது.
 இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் "வெண்மைப் புரட்சி'யும் நிகழ்ந்தேறியது.
 குஜராத் மாநிலத்தில் உள்ள கைரா மாவட்டத்தில் உள்ள குடியானவர்கள் 1948-ஆம் ஆண்டு ஒரு கூட்டுறவு சங்கத்தை தோற்றுவித்தனர். பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பாலை, சங்கத்திடம் வழங்கி, நல்ல வருமானமும் பெற்று வந்தனர். அதன் விளைவாக, "கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம்' உருவானது. இதுவே அன்றைய பொது மேலாளர் டாக்டர் வர்க்கீஸ் குரியன் வழிகாட்டுதலில் "அமுல்' பால் நிறுவனமாகப் பரிணமித்தது.
 பால் போலவே, பால்பொருள்களையும் உற்பத்தியாளர்களே நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் 'ஆனந்த் மாதிரித் திட்டம்' உதயம் ஆனது. தற்போது அமெரிக்காவை விஞ்சும் அளவுக்கு பால் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது. நீலக்கடல் சார்ந்து மீன்வளப் பெருக்கத்தில் "நீலப் புரட்சி' ஏற்பட்டது. மீன்வளர்ப்பு பற்றிய ஆய்வுகளும் நடந்தேறின. சுதந்திர இந்தியாவில் "மத்திய கடல்வாழ் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்', "மத்திய உள்நில மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்', "ஆழ்கடல் மீன்பிடி நிலையங்கள்', "மத்திய மீன்வளக் கடல்சார் பொறியியல் - தொழில்நுட்ப நிறுவனம்', "மத்திய மீன்வள நிறுவனம்' ஆகிய அமைப்புகள் தோன்றின.
 மருத்துவ தொழில்நுட்பங்கள் பற்றி புதிதாக எதுவும் சொல்ல வேண்டுவது இல்லை. 1924-ஆம் ஆண்டு "இந்திய வேதியியல் கழகம்' தோற்றுவித்த பிரஃபுல்ல சந்திர ரே என்பவர், பத்தாண்டு கால கடுமையான உழைப்பில், "இந்திய வேதியியல் வரலாறு' என்ற மிகச் சிறந்த நூலை வெளியிட்டார். இதன் பயனாக "வங்காள வேதியல் - மருந்துகள் தொழிற்சாலை' என்ற இந்தியாவின் முதல் மருந்துத் தொழிற்சாலையை 1901-ஆம் ஆண்டு நிறுவினார்.
 நவீன உயிரி - வேதியியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிரேஷ் சந்திர குஹா. அந்நாளில் இவர் தலைமையிலான குழு, வைட்டமின்-சி தயாரிப்பில் வெற்றிகண்டனர். இன்றைக்கு கொல்கொத்தா பல்கலைக்கழகத்தில் இவரது நினைவாக, "குஹா பொறியியல் - உயிரி வேதியியல் மையம்' உருவாக்கப்பட்டுள்ளது.
 இன்று விரைவாகப் பரவி உலகத்தையே உலுக்கிப் போட்ட கரோனா என்னும் கொடிய தீநுண்மிக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை இந்தியாவில் ஹைதராபாதில் உள்ள "பாரத் பையோடெக்', புணே நகரத்தில் உள்ள "சீரம் இன்ஸ்டிடியூட்' போன்ற தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்தன.
 மரபணு தொழில்நுட்பம் இன்று "டிஎன்ஏ தடயவியல்' உத்தியாகவும் கையாளப்படுகின்றது. ஹைதராபாதில் "செல் மற்றும் மூலக்கூறியல் மையம்' இன்று குற்றவியல் துறையிலும், தற்கொலை, மரண புலன் விசாரணை போன்ற துறைகளிலும், ஒரு குழந்தையின் தாய் அல்லது தந்தை குறித்த சர்ச்சையில் உண்மை கண்டறியும் சோதனையிலும் இந்த மரபணு நுட்பம் பெருமளவில் உதவுகின்றது.
 உடல் வளர்ச்சிக்கான உணவு, சுகாதாரம் போன்ற தொழில்நுட்பங்கள் நாட்டின் அந்தந்த மாநிலங்கள் சார்ந்தவை. ஆயின், ஆற்றல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் போன்றவை மத்திய அரசின் கண்காணிப்புக்கு உரியவை. 1948 ஆகஸ்டு 10 அன்று டாக்டர் ஹோமி ஜே.பாபா தலைமையில் "அணுசக்தி ஆணையம்' (அட்டாமிக் எனர்ஜி கமிஷன்) உருவானது. இன்று அணுமின் உற்பத்தி, அணுகுண்டு வெடிப்பு, அணுக்கரு மருத்துவப் பயன்பாடு ஆகிய மூன்று நிலைகளில் அணு ஆற்றல் ஆணையம் முக்கியத்துவம் பெறுகின்றது.
 இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் மின்னணுவியல் சார்ந்து கணிப்பொறி முன்னேற்றத்தை மட்டுமே மையமாகக் கொண்டு "தகவல், திட்டமிடுதல், பகுப்பாய்வுக் குழு', "தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழுமம்', "தானியக்கத்திற்குப் பொருத்தமான ஊக்கத் திட்டம்', "தேசிய ரேடார் குழுமம்' ஆகிய மேம்பாட்டு அமைப்புகள் நம் நாட்டில் நிறுவப்பெற்றன.
 1984 நவம்பர் 19 அன்று நாட்டின் "கணினிக் கொள்கை' அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் கணினி மென்பொருள் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனை நம் நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களும் பாராட்டின. மேலும் "தேசிய தகவல் நுட்பங்கள் மையம்' (நேஷனல் இன்ஃபர்மேடிக்ஸ் சென்டர்) அரசுக்கும், ஏனைய முகமைகளுக்கும் தேவையான தகவல் களங்கள் உருவாக்குவதில் சிறப்புடன் செயலாற்றி வருகின்றது. விசைப்பலகையை கைகளால் தட்டாமலே வாயினால் ஆணைகள் பிறப்பித்தால் அதனை ஒலிவாங்கியால் கேட்டுச் செயல்படும் கணிப்பொறிகள் இன்று பிரபலமாக உள்ளன.
 குறைந்தது 10 இந்திய மொழிகளையேனும் குரல்வழி உச்சரிப்பைப் புரிந்து கொள்ளவும், உலகின் எந்த மொழியையும் தாய்மொழியில் மாற்றியளித்து மொழிபெயர்க்கவும் கணினி மென்பொருள்கள் தோன்றிவருகின்றன.
 1986 நவம்பர் 19 அன்று கணினித் துறையில் பயிற்சி குறித்த இரண்டாவது மென்பொருள் கொள்கை அறிவிக்கப்பட்டது. கணினி மென்பொருள் வணிகம், கணினித்துறை பயிற்சி ஆகிய தகவல் பரிமாற்ற முன் நடவடிக்கைகள் இரண்டுமே செயற்கைக்கோள் வாயிலாக நடைபெறுவதற்கு இத்தகைய மென்பொருள் கொள்கைகள் வகை செய்தன.
 "இந்தியாவைப் பொறுத்தவரை, கிராமங்களின் வேளாண்மை அபிவிருத்தியும், பாமரர்க்குக் கல்வியும் பயிற்சியும் ஊட்டவும் இத்தகைய நவீன செயற்கைக்கோள்கள் ஊடகமாக அமையும்' என்று உறுதியாக நம்பினார் டாக்டர் சாராபாய்.
 1975 ஏப்ரல் 19 அன்று சோவியத் ரஷியாவின் "காஸ்மாஸ்' ஏவுகலனால் ஏவப்பெற்ற நம் நாட்டு முதலாவது செயற்கைக்கோளான ஆரியபட்டா தொடங்கி, இன்று வரை 47 ஆண்டுகளில் 36 நாடுகளின் அயல்நாட்டு செயற்கைக்கோள்கள் உட்பட 475-க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை பூமியைச் சுற்ற விட்டுள்ளோம்.
 அதிலும், 2021 பிப்ரவரி 28 அன்று முதன்முறையாக "நியூ இந்தியன் ஸ்பேஸ் லிமிடெட்' என்னும் தனியார் அமைப்பின் கீழ் செலுத்திய "அமேசோனியா-1' செயற்கைக்கோள் பயணத்தையும் சேர்த்து 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களை நம் இந்திய விண்கலன்களால் விண்வெளிக்கு அனுப்பிச் சாதனை படைத்துள்ளோம்.
 1988-ஆம் ஆண்டு "டிஃபாக்' எனும் "தொழில்நுட்பத் தகவல் - முன்னறிவிப்பு - கணிப்புக் குழுமம்' உதயம் ஆனது. அதன் செயல் இயக்குநர் பேராசிரியர் ய.சு. ராஜன் ஆவார். 1993 செப்டம்பர் மாதத்தில் அந்த "டைஃபாக்'கின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற டாக்டர் அப்துல் கலாம், அடுத்த 25 ஆண்டுகளுக்கான "தொழில்நுட்பத் தொலைநோக்கு-2020' என்ற அறிக்கையை வெளியிட்டார்.
 அப்போது பேசிய டாக்டர் அப்துல் கலாம், "வேளாண்மையும் உணவு பதப்படுத்தலும்; கல்வியும் சுகாதாரமும்; மின்சாரம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி; தகவல் தொழில்நுட்பம்; விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்புத் துறைகள் இவை சார்ந்த நம் நாட்டின் பல்துறை திறமைகளை ஒருங்கிணைத்துப் பயன்படுத்த இந்த அறிக்கை ஒரு வாய்ப்பளிக்கிறது.
 இவற்றை நிறைவேற்ற நெஞ்சக்கனலே போதிய திறன்வளம் ஆகும். இதனால் தேசிய மேம்பாட்டுக்கு இளைய நெஞ்சங்களை நாம்மால் தூண்டிவிட முடியுமா என்றால், முடியும் என்பதே எனது பதிலாகும்' என்று கூறினார்.
 
 இன்று (மே 11)
 தேசிய தொழில்நுட்ப நாள்.
 கட்டுரையாளர்:
 இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com