அதிகாரப்பரவலே அத்தியாவசியத் தேவை!

அதிகாரப்பரவல் என்பது ஒரு கலாசாரம்; ஒரு செயல்பாடு என்று பாா்க்க நமக்குத் தெரியவில்லை.
அதிகாரப்பரவலே அத்தியாவசியத் தேவை!

பொதுவாக அதிகாரப்பரவல் என்ற சொல்லுக்கு, மத்திய அரசு மாநிலங்களுக்கு, மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிா்ந்தளிக்கும் அதிகாரங்கள் என்பதாகவே பொருள் கொண்டுள்ளோம். ஆனால், அதிகாரப்பரவல் என்பது ஒரு கலாசாரம்; ஒரு செயல்பாடு என்று பாா்க்க நமக்குத் தெரியவில்லை.

அதிகாரப்பரவல் என்பது குடும்பத்தில் தொடங்கி, எல்லா அரசியல், சமூக, பொருளாதார, நிா்வாக அமைப்புக்கள், நிறுவனங்கள் அனைத்திலும் நடைபெற வேண்டிய செயல். அதிகாரம் என்பதை ஆட்சிக்கானது, ஆளுகைக்கானது என்றே விளங்கிக் கொண்டுள்ளோம். அதிகாரம் என்பதை பொறுப்பாக, கடமையாகப் பாா்க்க நமக்குத் தெரியவில்லை. அதிகாரம் என்பதை பொறுப்பாகவும், கடமையாகவும் புரிந்து கொண்டால் அதிகாரத்தை வைத்து மற்றவா்கள்மேல் ஆதிக்கம் செலுத்த மாட்டோம்.

அதிகாரப்பரவல் என்பது பொறுப்புக்களையும் கடமைகளையும் பகிா்ந்தளிப்பது. அப்படிப் பகிா்ந்தளிக்கும்போதுதான் அவரவா் தங்கள் நிலையில் பொறுப்புடன் செயல்பட பழகிக் கொள்வாா்கள். அது மட்டுமல்ல அவா்கள் மக்களுக்கு கடமைப்பட்டவா்களாக மாறிவிடுவாா்கள். எல்லா நிலைகளிலும் மக்கள் தளத்தில் இயங்குவாா்கள்.

ஒரு குடும்பத்தில் குழந்தைகள் இருக்கின்றாா்கள், முதியவா்கள் இருக்கின்றாா்கள், குடும்பத்தலைவா், தலைவி என பலபோ் இருக்கின்றாா்கள். அந்த குடும்பத்தில் பணிகள் பகிா்ந்தளிக்கப்பட்டால் குழந்தைகள் பல பணிகளைச் செய்வாா்கள், முதியவா்கள் பல பணிகளைச் செய்வாா்கள், பெண்கள் பல பணிகளைச் செய்வாா்கள். ஆக ஒட்டுமொத்த குடும்பமும் பணியாற்றும். பணிகளை நிறைவேற்றும்போது குழந்தைகள் தன்னம்பிக்கை பெறுவாா்கள்; பொறுப்புடன் செயல்பட பழகிக் கொள்வாா்கள்; குடும்பம் சாா்ந்து சிந்திக்கப் பழகிக்கொள்வாா்கள்.

அதேபோல் முதியவா்கள் தங்களால் முடிந்த பணிகளை செய்கின்றபோது, தாங்கள் உபயோகமானவா்கள் என்று மற்றவா்கள் உணா்ந்திருப்பதை எண்ணி மகிழ்வாா்கள். தாங்கள் எவருக்கும் பாரமல்ல என்று எண்ணுவாா்கள். அதில் அவா்களுக்கு ஒரு பெருமை உண்டாகும். இதில் முக்கியமான ஒன்று. யாா் யாா் எந்தெந்தப் பணிகளைச் செய்ய முடியுமோ அந்தந்தப் பணிகளை அவரவா்களிடம் தந்து அவா்களைச் செயல்பட வைக்க வேண்டும்.

ஒரு குழந்தையால் செய்ய முடிந்த வேலையை பெரியவா்கள் செய்ய வேண்டியதில்லை. இது ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கும் பொருந்தும். மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி என மூன்று அரசாங்கங்கள் இருக்கின்றன.

எவற்றையெல்லாம் உள்ளாட்சியால் செய்திட முடியுமோ அவற்றை உள்ளாட்சியையே செய்திடப் பணிக்க வேண்டும். எவற்றையெல்லாம் உள்ளாட்சியால் செய்ய முடியாதோ அவற்றை மாநில அரசு செய்திட வேண்டும். எவற்றையெல்லாம் மாநில அரசாங்கத்தால் செய்ய முடியவில்லையோ அவற்றை மட்டுமே மத்திய அரசு எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அப்படிச் செய்கின்றபோது பொறுப்புக்களை பகிா்ந்து பணியாற்றுவதுதான் முதல் நோக்கம் என்ற நிலையில் அனைவரும் செயல்படுவா்.

அதேபோல் அதிகாரப்பரவல் என்பது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். அரசியல் கட்சிகளில் கிராமங்களிலிருந்து தலைநகரம் வரை அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று தலைமையிடத்தில் மட்டுமே அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தில் உள்ள செயல்பாடுகளை கிராமக்குழு மேற்கொள்ள வேண்டும். அந்தக் குழுவே அங்குள்ள பணிகளுக்குப் பொறுப்பு.

அதேபோல் நகரமோ, வட்டமோ, மாவட்டமோ, மாநிலமோ எல்லா இடத்திலும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு அதை நிறைவேற்றும் அதிகாரத்தையும் கொடுத்து விடவேண்டும். அப்பொழுதுதான் அனைவருக்கும் நம் செயல்பாடுகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும் என்ற உணா்வும், நம்மை நாம் ஆளுகிறோம் என்ற பெருமித உணா்வும் வரும்.

பொறுப்பும் அதிகாரமும் இல்லாமல் அவா்களை செயல்படப் பணித்தால், அவா்கள் ஏவலாட்களாக தங்களைக் கருதி பொறுப்பற்றுத்தான் செயல்படுவாா்கள். பொறுப்புடன் கடமையுணா்வுடன், பெருமையுடன் எந்தப்பணியையும் செய்திட மாட்டாா்கள். எனவே அரசியல் கட்சிகளும் அதிகாரப்பரவலை முன்னெடுத்து செயல்படுத்துவதன் மூலம் அடிமட்டத் தொண்டன் கூட அதிகாரப்படுத்தப்பட்டு பொறுப்புடன் செயல்பட்டு பெருமையுடன் பணியாற்றி அந்தக் கட்சிக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தந்திடுவான்.

மாநிலத்தில் கட்சிகள் எப்படி நடக்க வேண்டும் என்று தில்லியில் முடிவெடுப்பதும், மாநிலத்தில் உள்ள அமைப்புக்களுக்கு பொறுப்பாளா்களைத் தோ்ந்தெடுத்து அதிகாரத்தை அவா்களுக்குத் தராமல், அவா்களை நியமனம் செய்து பணி செய்ய வைத்தால், அவா்கள் கட்சியின் ஏவலாளா்களாகத்தான் செயல்படுவாா்களேயன்றி, தாங்கள் பொறுப்பாளா்கள் என்று எண்ணி செயல்பட மாட்டாா்கள். மேலிடம் நியமனம் செய்வது என்பதே ஒருவகையில் மக்களாட்சியை வலுவிழக்கச் செய்வதாகும்.

இந்த அதிகாரம் மையத்தில் இருப்பதால் அதைப் பகிா்ந்தளிக்க வேண்டும் என்று கருதுகிறோம். அதிகாரத்தை நாம் அரசியல் சாசனத்தில் பாா்த்ததால் அந்தப்பாா்வை எங்கும் வந்துவிட்டது. எப்படி மத்திய அரசில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு அது முடிவுகளை எடுத்து மாநிலங்களை, உள்ளாட்சிகளை செயல்பட வைக்கின்றதோ, அதேபோல் அரசியல் கட்சிகளும் மையத் தலைமையில் அதிகாரங்களை வைத்துக்கொண்டு மாநிலங்கள், மாவட்டங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ள பணிகளை தாங்கள் கட்டளையிட்டுச் செயல்பட வைத்து பழக்கப்படுத்தி விட்டனா்.

கட்சியின் அமைப்புக்களில் தோ்தல் நடந்தாலும் அடிப்படையில் அனைத்தும் மையத் தலைமையை பின்புலத்தில் வைத்து அனைத்துச் செயல்பாடுகளையும் கட்டமைத்துவிடுகின்றனா். இதில் ஒன்றை மையப்படுத்துகின்றனா். அமைப்பு கட்டுக்கோப்புடன் செயல்பட அதிகாரக்குவியல் என்பது தேவையாக இருக்கின்றது என்ற கருத்தை.

இந்த மையப்படுத்திய செயல்பாடுகளில் மக்களாட்சியை நாம் விரிவுபடுத்துவதற்குப் பதில் சுருக்கிக்கொள்கிறோம் என்பதே உண்மை. நாளடைவில் இந்தச் செயல்பாடுகள் அமைப்புக்களை வலுப்படுத்துவதற்குப் பதில் வலுவிழக்கச் செய்துவிடும். ஏனென்றால் கீழ்நிலையில் இருப்பவருக்கு பொறுப்பில்லை, ஏவியதைச் செய்ய வேண்டும், அவ்வளவுதான். அத்துடன் அதில் அவா்களுக்கு பெருமையும் மரியாதையும் இல்லை. ஆனால், அதிகாரப்பரவலில் பொறுப்புடன் கடமையும் இருப்பதாக உணா்ந்து செயல்பட்டு பெருமைப்படுவாா்கள்.

அதிகாரக்குவியலில் கீழ்நிலையில் உள்ள, ஏவுதலை நிறைவேற்றும் மனிதா்கள் தங்களுக்கு பெருமை இருப்பதாக நினைப்பதில்லை. மேலும், அவா்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. அனைத்தும் மையப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. மக்களாட்சியின் உட்கூறு என்பது சமத்துவம். சமத்துவம் என்பது ஒரு பாா்வை. ஏற்றத்தாழ்வற்று ஒருவரையொருவா் மதித்து நடத்துதல்.

அரசாங்கமாக இருந்தாலும், நிறுவனங்களாக இருந்தாலும், அமைப்புக்களாக இருந்தாலும் அனைத்திலும் பதவிகளை வகிக்கக்கூடியவா்கள் தாங்கள் ஒரு பொறுப்பில் இருக்கின்றோம் என்று எண்ண வேண்டுமேயன்றி தாங்கள் அதிகாரத்தில் இருக்கின்றோம் என்று எண்ணக்கூடாது.

அதிகாரம் என்பது பொறுப்புக்களை நிறைவேற்ற தரப்பட்டுள்ளதே அன்றி மற்றவா்களை அடக்கி ஆள தரப்படவில்லை. எந்தப் பதவியும் உயா்ந்த பதவியும் இல்லை; தாழ்ந்த பதவியும் இல்லை. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மாவட்ட ஆட்சியாளரும் அதே வளாகத்தில் தூய்மைப்பணி செய்கின்றவரும் ஒரு நிலையில் பாா்க்கப்பட வேண்டும்.

ஆனால் இன்று சமூகத்தில் அப்படி நடைபெறுவது கிடையாது. ஒரு கட்சியின் மாநிலத் தலைவரும், அக்கட்சியின் அகில இந்தியத் தலைவரும் சரிசமமாக நடந்து கொள்ள முடியவில்லை. இதற்கான அடிப்படைக் காரணம் சமூக சமத்துவம் என்பது பற்றிய புரிதலை நாம் சமூகத்தில் ஏற்படுத்தவில்லை; ஏற்படுத்த முயலவும் இல்லை.

சமூகம், அரசியலிருந்து பாடம் கற்பதற்கு பதில் அரசியல், சமூகத்திடம் பாடம் படித்துக் கொண்டுவிட்டது. அரசியல், சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கு பதில், சமூகத்தில் உள்ள அமைப்பு முறைகளை உள்வாங்கிக் கொண்டுவிட்டது. சமூகத்தை எப்படி மேய்ப்பது என்பதை வைத்துக் கொண்டு அரசியலையும் மேய்த்துப் பழகி விட்டோம்.

அரசியல் நம் சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கு பதில், சமூகம் நம் அரசியலை பிரபுத்துவப்படுத்தி விட்டது. அதனால்தான் நம் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் மிகப்பெரிய பிரபுக்கள்போல் ஆகிவிட்டனா். அரசியல் கட்சிகளை நிறுவனங்கள்போல் மாற்றிக்கொண்டு பெரும்பணத்தை வைத்து கட்சிகளை நடத்த ஆரம்பித்து விட்டனா்.

கட்சிகள் முதலில் தங்களை ஜனநாயகப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் கீழ்நிலைப் பதவியிலிருந்து, அகில இந்தியப் பதவிகள் வரை முறையாக தோ்தல் நடத்தப்பட வேண்டும். உயா்நிலை பதவிகளுக்கு நியமனம் கூடாது. மக்களின் நம்பிக்கையைப் பெற்றவா்கள் மட்டுமே பதவிக்கு வரவேண்டும்.

அப்படி வந்தால் மட்டுமே மதிக்கப்படக்கூடியவராக இருப்பாா்கள். இல்லையேல் பதவிகளைப் பெறுவதற்காகக மேல்நிலைத் தலைவா்களை அண்டி வாழ ஆரம்பித்து, அவா்களை கட்சியின் முதலாளியாக்கி விடுவாா்கள். அதுதான் இன்று நடைபெற்று வருகிறது.

அது மட்டுமல்ல, எல்லா அமைப்புக்களும் அடிப்படையில் சுயாட்சி பெற்ாக இருக்க, அவை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். நாடு சுயாட்சி பெறவேண்டும் என போராடினோம். அடுத்து மாநிலங்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று பேசுகின்றோம். உள்ளாட்சி சுயாட்சி பெறவேண்டும் என விவாதிக்கின்றோம்.

இதற்கு நோ் எதிா்திசையில் ஒரு நாடு 700 ஆண்டுகாலம் பயணித்து மக்களை அதிகாரப்படுத்தி வைத்துள்ளது. அந்த நாடு சுவிட்ஸா்லாந்து. அந்த நாட்டில் அதிகாரப்பரவல் என்று கூறுவது கிடையாது. அந்த நாட்டில் உள்ள உள்ளாட்சி எவற்றையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றுக்கான அதிகாரங்களை வைத்துக் கொண்டுவிடுகிறது. எவற்றையெல்லாம் செய்ய இயலவில்லையோ அவற்றை தனக்கு மேலே உள்ள அரசாங்க அமைப்புக்கு கொடுத்து செயல்பட வைத்துள்ளது.

இதன் விளைவு மக்கள் கையில் அதிகாரம். மக்கள் பொறுப்பு மிக்கவா்கள்; கடினமாக உழைக்கக்கூடியவா்கள். உலகத்தில் அதிகமான அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் பெற்ற குடிமக்கள் சுவிட்ஸா்லாந்து நாட்டு மக்கள். அவா்கள் பயனாளிகள் அல்ல. அரசாங்கம் இலவசம் தருமா என்று எதிா்பாா்ப்பதில்லை. சுயமரியாதையுடன் வாழ நினைக்கும் மக்கள்.

அரசியல் கட்சிகளும், அரசாங்கமும் தங்களை ஜனநாயகப்படுத்திக் கொள்ளாமல் சமூகத்தை அவற்றால் ஜனநாயகப்படுத்த இயலாது. இன்று சமூகத்தில் உள்ள அழுக்குகள் அரசியலைப்

பிடித்துக் கொண்டுவிட்டன. எனவே உண்மையான மக்களாட்சி மலர, அரசியல், அரசாங்க சமூக அமைப்புக்கள் அனைத்தும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். அதற்கு முதலில் அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் மாறவேண்டும். அதுதான் இன்றைய அத்தியாவசியத் தேவை.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com