குழந்தை பிறப்பு சரிவு: கவனம் தேவை

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 20 சதவீதம் சரிந்துள்ளதாக அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. "மாதிரி பதிவு முறை 2020' ஆய்வறிக்கையில் 2008 முதல் 2010 வரையில் இந்தியாவில் சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 86.1 % ஆக இருந்தது எனவும், 2018-2020 வரையான காலகட்டத்தில் இது 68.7 % ஆக சரிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
 கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கருத்தரித்தல் என்பது இயல்பான நிகழ்வு. அப்போது குழந்தையின்மை என்பது அரிதான ஒன்றாகவே இருந்தது. அதனால் ஆண் குழந்தை மோகத்திலும் அறியாமையிலும் அதிகப்படியான குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். எழுத்தறிவு பெறாதோர் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அதிகப்படியான குழந்தைகள் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் உதவியாக இருக்கும் என்றும் கருதினர்.
 அவர்கள் ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம் அளித்தனர். அதனால் ஆண் குழந்தைக்கு முன்னதாக எத்தனை பெண் குழந்தை பிறந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் உடற்திறனும் பெற்றவர்களாக அன்றைய பெண்கள் இருந்தனர். அதுபோன்று தங்களின் பொருளாதார நிலைக்கேற்ப குழந்தைகளை வளர்த்து ஆளாக்குபவர்களாகவும் இருந்தனர்.
 ஆனால் காலப்போக்கில் எழுத்தறிவு விகிதம் அதிகரித்ததாலும் நாகரிகம் வளர்ச்சி அடைந்ததாலும் அரசின் நடவடிக்கைகளாலும் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் விழிப்புணர்வு ஏற்பட்டது. மேலும் நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த மருத்துவ வசதி கிராமங்களுக்கும் வரத் தொடங்கியது. மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறாத கிராமங்களில் கூட மருத்துவ அறிவு வளரத் தொடங்கியது.
 இதனால் நிலைமை மாறியது. முதல் குழந்தை அல்லது இரண்டாவது குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினர். இன்று கிராமங்களில் வசிக்கும் பெண்களும் கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிவது எப்படி என அறிந்து வைத்திருக்கின்றனர்.
 கருவிலிருக்கும் குழந்தை பெண்ணாக இருக்கும்பட்சத்தில் கருக்கொலை சம்பவங்களில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும் இந்நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. இப்போது அரசின் நடவடிக்கைகளால் கருக்கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆயினும் கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியைக் காரணம் காட்டி கருக்கொலை செய்யும் சம்பவங்கள் இன்றும் பரவலாக நடந்து வருகின்றன.
 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியிருந்தால் ஆறுதல் அளிக்கும் வகையில் இல்லாது, அதிர்ச்சியளிக்கும் வகையிலேயே இருந்திருக்கும். ஏனெனில், ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவும் சமூகத்தில் பல்வேறு தரப்புகளில் அதிர்வலையை ஏற்படுத்துகின்றது. இது இயல்பான ஒரு நிகழ்வு தானே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் எதிர்வரும் காலங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தக்கூடும் என்பதில் ஐயமில்லை.
 1901-ஆம் ஆண்டு ஆயிரம் ஆண்களுக்கான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 972 என்றிருந்தது. அதன் பிறகு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் ஒட்டுமொத்த அளவிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
 இத்தகு நிலையில்தான் "மாதிரி பதிவு முறை 2020' ஆய்வறிக்கை குழந்தை பிறப்பு விகிதம் சரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றோடு மற்றொரு காரணமும் முக்கியமானதாகும்.
 கணவன், மனைவி இருவரும் பணியில் இருக்கும் வேளையில் முதல் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அத்துடன் குழந்தைப் பேற்றை நிறுத்தி விடுகின்றனர். அதே வேளையில் இரு பெண் குழந்தைகள் என்றாலும் அதை ஏற்றுக் கொள்கின்றனர்.
 நகரங்களில் வசிக்கும் படித்தவர்கள், பணிபுரிபவர்கள் மத்தியில் மட்டுமே இருந்துவந்த இந்நிலை தற்போது கிராம மக்களிடையேயும் பெருகி வருகிறது. குழந்தை பிறப்பு சரிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
 கணினி சார்ந்த பணியில் இருப்போரில் அதிகப்படியானோர் குழந்தைப் பேற்றினை ஆண்டுக்கணக்கில் ஒத்திவைக்கின்றனர். பெருநகரங்களில் மெத்தப்படித்தவர்கள் மத்தியில் இது நாகரிக செயல்பாடாக மாறிவருகிறது. இதனால் அவர்கள் எளிதாகக் கருவுறும் வயதைக் கடந்து விடுகின்ளனர். மீண்டும் அவர்கள் கருவுறுவதற்குப் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இதுவும் குழந்தைப் பிறப்பு சரிவுக்கு ஒரு காரணமாகிறது.
 பெண்களிடையே கல்வியறிவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. உயர்கல்வியில் அதிகரித்து வரும் மாணவியர் சேர்க்கையே இதற்கு உதாரணமாகும். பிளஸ் 2 முடித்துவிட்டாலே திருமணம் செய்துவைத்த நிலை மாறி, குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடிக்க வேண்டும் என்ற மனநிலை பெண்களிடையே அதிகரித்து வருவதால் இளவயது திருமணம் குறைந்துள்ளது.
 வாழ்க்கை முறையில் அன்றைக்கும் இன்றைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கடந்த காலங்களில் உணவு பழக்கம், உடலுழைப்பு போன்றவற்றால் மக்கள் திடமாக இருந்தனர். அதனால் குழந்தையின்மை என்பது இல்லாமலும், அரிதானதாகவும் இருந்தது. ஆனால் காலப்போக்கில் உடலுழைப்பு குறைந்து உணவுப் பழக்கமும் மாறிவிட்டதால் குழந்தையின்மை என்பது இன்று பெரும் பிரச்னையாக மாறிவருகிறது.
 இன்று சிறுநகரங்களில் கூட கருத்தரித்தல் மையங்கள் முளைத்து வருகின்றன. குழந்தை நல மருத்துவமனைகளில் கூடுதலாக கருத்தரித்தல் மையம் தொடங்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. முன்பு நகரங்களில் மட்டுமே காணப்பட்ட கருத்தரித்தல் மைய விளம்பரங்களை இன்று கிராமங்களில் கூட காண முடிகிறது.
 குழந்தை பிறப்பு சரிவால் மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுக்குள் இருக்கும் என நாம் எண்ணலாம். ஆனால் இதனால் எதிர்காலத்தில் வேறுவிதமான பிரச்னைகள் உருவாகக்கூடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com