எல்லார்க்கும் எழுத்தறிவு!

எல்லார்க்கும் எழுத்தறிவு!

 குழந்தைப்பருவம் தொடங்கி ஒவ்வொருவரும் தம் அனுபவத்தால் பெற்ற முதன்மையான அறிவு பட்டறிவு. பிறர் வாய்மொழி கருத்தாடல்களால் பெற்ற இரண்டாம் நிலை அறிவு கேட்டறிவு. பின்னர் கல்விக்கூடங்களில் பெற்ற அறிவு கற்றறிவு.
 எழுத்தறிவு என்பது தொடக்கத்தில் கையொப்பமிடத் தெரிந்த நிலை என்றுதான் இருந்திருக்கும். முன்னொரு காலத்தில் ஓலைகளில் ஒருசிலர் பத்திரப்படுத்தி வைத்திருந்த பழைய பாடல்கள், கதைகள் எல்லாம் எழுத்தாரம்பம் எனலாம்.
 கடந்த ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அச்சு வாகனம் எறியபின் நூல்களின் படியெடுப்பும், பிரதி வாசிப்பும் அவரவர் வீட்டுப்படித் திண்ணைகளில் இருந்து விட்டு விடுதலையாகி நவீனத் தொழில்நுட்ப மின்னணு ஊடகங்களில் பிரபஞ்ச வெளியில் விரிவடைந்து விட்டது.
 இன்று எழுத்தறிவு என்பது வெறும் அச்சிடப்பட்ட உரைகளை கிரகிக்கும் திறன் என்ற நிலை மாறி, காட்சித்தொகுப்புகள், தொழில்நுட்ப விழிப்புணர்வுக்கேற்பப் பரிணமிக்க இயலும். நூலகங்களில், இணையதளங்களில் பதிவாகும் புத்தகங்களும், பத்திரிகைகளும் உலகைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றன.
 தமிழ்மொழியைப் பொறுத்தவரை, சீகன் பால்கு என்கிற கிறித்தவப் பாதிரியார் வேண்டிக் கொண்டதன் பேரில் தமிழ்நாட்டில் முதன் முதலாக 1713-ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சகம் ஒன்று தொடங்கப்பட்டது.
 பல்வேறு சூழல்களுடன் தொடர்புடைய அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி எழுத்தின் வரிவடிவத்தை அடையாளம் காணவும், அதனை விளக்கவும், அந்தக் குறியீடுகள் உணர்த்தும் பொருளைப் புரிந்து கொள்ளவும், புதிய சிந்தனையை உருவாக்கவும், தம் கருத்துக்களைப் பிறர்க்குத் தெரிவிக்கவும் கல்வியறிவு உதவுகிறது. இது இலக்குகளை அடைய சமூகம், சமூகத்தில் பங்கேற்கும் அறிவையும் திறனையும் மேம்படுத்துகிறது.
 புள்ளிவிவர அடிப்படையில், 1820-இல் உலகில் வெறும் 12% மக்கள் மட்டுமே படிக்கவும் எழுதவும் திறன் பெற்றவர்களாக இருந்தனர். இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. 2016-இல் உலக மக்கள்தொகையில் 14 % பேர் மட்டுமே கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். அதிலும் கடந்த 65 ஆண்டுகளில், உலக எழுத்தறிவு விகிதம் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 4% வீதம் உயர்ந்து, 1960-இல் 42% ஆக இருந்தது 2015-இல் 86 % ஆக அதிகரித்துள்ளது. "யுனெஸ்கோ'வின் உலகளாவிய கல்வியறிவு மதிப்பீடு இது.
 ஆனால் (உலக அளவில் எட்டு பேரில் ஒருவருடன் ஒப்பிடும்போது) இன்னும் நான்கில் ஒரு இந்தியர் படிக்கவோ எழுதவோ முடியாமல் இருக்கிறார். இந்தியாவில் கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலம் கேரளம். கேரளத்தின் கல்வியறிவு விகிதம் 96.2 % ஆகும். பத்து சதவீத மொழிகள் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே தேங்கிக் கிடக்கின்றன. அவை எழுத்துலகில் இருந்து காலாவதி ஆகிவிடும் என்பது ஓர் எச்சரிக்கை. அடுத்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் இன்றைய மொழிகளில் நூற்றுக்குப் பத்துதான் இருக்குமாம்.
 இன்றைக்கே நம் குடும்பத்தில் படுகு, துளு, கொங்கணி போன்ற திராவிட மொழிகளுக்கு எழுத்து வரிவடிவம் இல்லை. ஒரு மொழி அழிய இன்னொரு காரணம் அந்த மொழி பேசும் இனம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழிந்து வருவதுதான். அதனால் ஒவ்வொரு மொழி பேசும் இனமும் அழியாமல் காப்பதும் எழுத்தறிவு காப்பதிலோர் முக்கியப் பணியே.
 வீட்டிலும் பொது வெளியிலும், ஊடகங்களிலும் மூத்தவர்கள் மட்டும் ஒரு மொழியை பேசி, எழுதினால் போதாது. அவர்கள், தங்கள் சந்ததியையும் தமிழ் கற்கச் செய்ய வேண்டும். தெருவோரம் கல்விக்கூடம், பிராந்திய மொழி மக்களுடன் அவரவர் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உதவும். சந்ததியர்க்கு மொழி ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.
 வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ ஒருவர் தம் தாய்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொள்ள இயலாத சூழல் எழுவது இயல்பு. அங்குள்ள தமிழ்ப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்நிய மொழி கற்க விடுகிறார்கள். தம் பிள்ளைகள் சமுதாயத்தில் மதிப்பு பெறுவதைக் காட்டிலும், அவர்களை மதிப்பெண் பெறச்செய்வதே பெற்றோர்களின் இலக்காக மாறிவிட்டது.
 எழுத்தும் அதன்வழி பெறப்படும் அறிவும் இன்று பல்லாண்டுகளுக்கு முந்தைய பாடங்களில் நிற்பது மாற வேண்டும். மகாகவி பாரதியாரும் "வேதம் புதுமை செய்' என்றுதான் வற்புறுத்தினார். இன்றைய அறிவியல், தொழில்நுட்ப யுகத்தில் தொழில்நுட்பப் பயன்பாடுகளால் மட்டுமே குடிமக்களின் பொருளாதாரம் உயரும்; மதிப்பும் மேம்படும்.
 இளைஞர்கள், பொழுதுபோக்கு ஊடகங்களில் பழுதுபட்டு விடக்கூடாது. இந்தியாவில் 2020 அக்டோபர் நிலவரப்படி, 137 கோடி மக்கள்தொகைக்கு ஏறத்தாழ 151 கோடி கைப்பேசி இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இணைய வலையில் சிக்கிய மனிதப்பூச்சிகள் வாழும் 222 நாடுகளில் உலகிலேயே இரண்டாம் இடம் இந்தியாவிற்கே.
 2016 கணக்கெடுப்பின்படி, உரிமம் பெற்ற தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் 857 என்பதால், 233 நாடுகளில் நம்நாடு 4-ஆம் இடத்தைப் பிடித்துவிட்டது. இலக்கணம் என்ற பெயரில் தமிழின் நெகிழ்வுத் தன்மையை இறுக்கிப் பிடித்தாலும் மொழி நொறுங்கிப்போகும். "கொங்குதேர் வாழ்க்கை' என்று சொன்னால் அந்நாளில் மன்னருக்கே புரிந்தது. இன்று இது என்ன என்றுதான் நம் பிள்ளைகள் கேட்கிறார்கள்.
 எழுத்தறிவு இல்லாத கேள்வியறிவும் கூட இன்றைய ஊடக விளம்பரங்களில் பாழ்பட்டு வருகின்றன. செக்கு எண்ணெய்யை எப்படி செக் பண்ணி வாங்குவாய் என்றால், நல்ல எண்ணெய்யாகச் செக் பண்ணி வாங்குவேன் என்ற பதில் தரும் அறியாமை குறித்துக் கருத்துச் சொல்லத்தேவையில்லை.
 தனது தொலைந்த நாய்க்குட்டி கிடைத்தால் போதும், தமது வழிச்சாலையில் குறுக்கே நிற்பவர், ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் நன்றி என்று கூறிச்செல்லும் நல்லவர்களால்தான் "உண்டால் அம்ம இவ்வுலகம்'.
 எழுத்தும் பேச்சும் தாண்டிப் பயன்பாட்டு நிலையில் கருத்துத்தளத்தில் எழுத்தறிவின் பங்கு முக்கியம். இன்று அதையே பொதுமக்கள், மாணவர்கள், அறிஞர்கள் ஆகிய தளங்களில் மூன்று நிலைகளில் பகுத்து உணரலாம்.
 "விஞ்ஞானம் கற்கிறார் வேலுத் தாத்தா' (1999) என்ற எனது நூல், திருவனந்தபுரம், "அறிவொளி இயக்க'த்தில் வாசித்த கட்டுரை அடிப்படையில் எழுதப்பட்டது. எட்டு வயது மாணவன் ஒருவன், தன் தாத்தாவிற்கு கதை வடிவில் அறிவியல் கருத்துகளை எடுத்துச் சொல்லுவதாக அமைந்த நூல் அது.
 கணிப்பொறி நுட்பங்கள், இன்டர்நெட், வானவியல் அற்புதம் போன்ற நவீனச் செய்திகள் மட்டுமின்றி, நம் உடலை எப்படிப் பேண வேண்டும் என்பதையும், நாம் உண்ணும் உணவு எப்படி பயனளிக்கின்றது என்பதையும் கூடத் தன் தாத்தாவிற்குப் பெயரன் கற்றுத் தருவதாக அமைகின்றது.
 இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. 2022-இல் இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 77.7 %. அதிலும் பெண் கல்வி (70.3%), ஆண்களின் கல்வி (84.7%) அறிவைக் காட்டிலும் குறைவுதான்.
 இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டினையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முக்கியத் திட்டம் ஒன்றை வகுத்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 750 மாணவிகளால் உருவாக்கப்பட்டு 75 தொழில்நுட்பப் பயணச் சுமைகளுடன் "அசாதிசாட்' என்று பெயரிடப்பட்ட சிறிய செயற்கைக்கோளை ஏவுகலனில் விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்.
 இந்த செயற்கைக்கோள் பணிக்கு ஒரு நோக்கம் உள்ளது. விண்வெளி பற்றிய அடிப்படைப் புரிதல் உள்ள (பொருளாதார ரீதியாக நலிவடைந்த) அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, ஒரு சிறிய பரிசோதனையை உருவாக்கி, "பலூன் செயற்கைக்கோள்' மூலமாகவோ அல்லது விண்பாதையில் சுற்றும் செயற்கைக்கோள் ("ஆர்பிட்டல் சாட்டிலைட்') மூலமாகவோ விண்வெளியின் விளிம்பிற்கு ஏவுவதற்கு அவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதே இதன் நோக்கம். 2022 ஆகஸ்ட் 7- ஆம் தேதி தனது முதல் பயணம் முழு வெற்றி பெறவில்லை.
 நம் நாட்டின் மகத்தான தொழில்நுட்ப சாதனைகள் பலவும் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள், இளைஞர்களின் கடும் முயற்சியால் விளைந்தவைதான். அவர்கள் பலரும் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் சாதாரண பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயின்றவர்கள் என்பது தெளிவு. உலகின் பல்வேறு பாகங்களில் பணிபுரிந்துவரும் இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட லட்சக்கணக்கான இந்தியர்களில் அனைவருமே இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களிலோ, அதற்கு நிகரான நிறுவனங்களிலோ பயின்றவர்கள் அல்லர்.
 சமீபத்திய கணிபொறி மென்பொருள் அற்புதம் எல்லாம் சாதாரண இளம் பெண்கள், இளைஞர்கள் நிகழ்த்தியதே. அவர்களால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச இயலாத நிலை இருக்கலாம். ஆனாலும் உலகப் போட்டிக்கு உயர்ந்து நிற்கப் போதிய அளவுக்கு இயக்க விதிமுறைகளைக் கற்று கணிப்பொறி இயக்குவதில் நிபுணத்துவம் பெற அவர்களால் முடியும். இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகிறது. இந்தியாவின் மனித ஆற்றல்வள மூலாதாரமே நம் தலையாய உள்ளகத் திறன் தகுதிகளில் ஒன்றாகும். இந்தியாவின் பலம் இதுவே.
 இன்று, பேச்சும் எழுத்தும் சுமந்து வரும் கருத்துகள்தான் எழுத்தறிவின் பயனைத் தீர்மானிக்கும். எழுத்தறிவின் சீதனங்களை சிந்தாமல், சிதறாமல் பாமரர்க்கும் கொண்டு செல்வோம்.
 
 இன்று (செப். 8) உலக எழுத்தறிவு நாள்.
 கட்டுரையாளர்:
 இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com