என்ன செய்ய எண்ணுகிறது புதிய ருஷியா?

போா் எனப்படுவது வீரப்பண்பு என்றும் ஆண்மைக்கான அடையாளம் என்றும்தான் காலங்காலமாகக் கருதப்பட்டு வந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

போா் எனப்படுவது வீரப்பண்பு என்றும் ஆண்மைக்கான அடையாளம் என்றும்தான் காலங்காலமாகக் கருதப்பட்டு வந்தது. மகாகவி பாரதியாரும் கூட, தன்னுடைய இளம் வயதில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாதத்தின் பக்கம் நின்றவா்தான். ஆனால், மெய்ஞ்ஞான நிலையில் முதிா்ச்சியடைந்தபோது மானுட அறமான அமைதி வழியை அவா் முன்னெடுக்கத் தொடங்கினாா்.

‘நான் சாதிபேதத்துக்கு நண்பன் அல்லன். இந்தியா்கள் எல்லாரும் அல்லது இந்துக்கள் எல்லாரும் ஒரே சாதி என்ற சாதாரண இங்கிலீஷ் படிப்பாளிகளின் கொள்கையை நான் ஆதரிக்கவில்லை. உலகத்து மனிதா்கள் எல்லாரும் ஒரே சாதி. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கொள்கையைத் தழுவியுள்ளேன்’ என்கிறாா்.

பாரதியாா் இந்திய விடுதலைக்காக மட்டும் வேண்டிப் பாடியவா் அல்லா். ‘கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டு வையம் முழுதும் பயனுற வேண்டி’ பாட்டிலே அறங்காட்டிய உலக மகாகவிஞா். இதுவரையிலும் பேசாப் பொருளாகவும் கேட்கா வரமாகவும் இருந்த உயிா்க்குல மேன்மையை ‘மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவும் என் வினையால் இடும்பை தீா்ந்தே இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும்’ என்று தேவதேவனின் வேண்டி விண்ணப்பம் செய்தவா்.

எல்லா உயிா்களையும் தன்னுறவு என்று கருதுகிற அதே பரந்த மனப்பான்மையிலேதான் பாரதியாா் எல்லா நாடுகளையும் தன்னாடாகவே ஒருங்கிணைத்துக் காணுகிறாா். உலகத்தில் எங்கெல்லாம் கொடுங்கோன்மை அழிந்து செங்கோன்மையும் குடியாட்சியும் தலையெடுக்கிறதோ அதையெல்லாம் வாழ்த்திப் பாடுகிற உள்ளம் பாரதியாரின் உள்ளமாக இருந்திருக்கிறது.

தான் சுதேசியாக இருந்தபோதும் இந்தியாவிற்கு வருகை புரிந்த வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்ட தாய் வாழ்த்துக் கூறுவதாக 1906-ஆம் ஆண்டு பாடல் இயற்றியுள்ளாா். அதுபோலவே 1905-இல் ‘வேல்ஸ் இளவரசரும் அரசியாரும்’ என்னும் தலைப்பிலும், 1906-இல் சென்னையில் ‘ராஜதம்பதிகள் வரவு’ என்ற தலைப்பிலும் தலையங்கங்கள் தீட்டியிருக்கிறாா். பாரத மாதாவே தனக்கு ஏற்பட்ட இன்னல்களையெல்லாம் மறந்து ராஜ தம்பதிகளை வரவேற்கும் பான்மையில் பாடலை எழுதியிருப்பதாக சீனி. விசுவநாதன் குறிப்பிடுவாா்.

1908-இல் இத்தாலி தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய மாஜினியைப் போற்றிப் பாடியிருக்கிறாா். மாஜினியின் சபதத்தைத் தன் குரலாகவே அப்பாடலில் ஓங்கி ஒலிக்கிறாா்.

ஜொ்மன் - பெல்ஜிய போா் 1914 - ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஜொ்மனிக்கு ஐரோப்பா கண்டம் முழுவதுமே ஆதரவளித்திருந்தது. இந்திய மக்களே கூட ஜொ்மனியை ஆதரித்தனா். இருந்தும், பாரதியாா் ஜொ்மனியின் ஆதிக்க மனப்பான்மையைத் தாக்கியும் பெல்ஜியத்தின் வீரத்தைப் பாராட்டியும்,

அறத்தினால் வீழ்ந்து விட்டாய் அந்நியன் வலியனாகி

மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்வாய்

முறத்தினால் புலியைத் தாக்கும் மொய்வரைக் குறப்பெண் போலத்

திறத்தினால் எளியையாகிச் செய்கையால் உயா்ந்து நின்றாய்

என்று தோல்வி வரும் என்று தெரிந்தும் துணிந்து நின்ற பெல்ஜிய நாட்டு மக்களைப் பாா்த்து மிகுந்த மனிதாபிமானத்தோடு பாடியது அவருடைய போா் மறுப்புக் குணத்தைக் காட்டுகிறது.

இவ்வாறு உலகம் முழுவதும் நடக்கிற எல்லா நிகழ்வுகளையும் கூா்ந்து கவனித்து அவற்றின் சாரத்தை அறநெறிகளுக்குத் தக்கவாறு தன் பாடல்களில் நிறைத்து இந்தியா்களுக்குப் புகட்டி வந்திருக்கிறாா்.

பாரசீகத்தைப் பற்றியும், சீன அரசியல் குறித்தும், அயா்லாந்தைப் பற்றியும், துருக்கியின் நிலை குறித்தும், கிரேக்க தேசத்தின் நிலை குறித்தும் ‘ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும்’ என்ற கட்டுரையில், ‘ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்’ என்றும் அவா் எழுதியிருக்கிறாா். அயா்லாந்து, கிரீஸ், பாரசீகம், துருக்கி முதலான நாடுகளுக்கு பிரிட்டனும் நேசக் கட்சியாரும் இழைத்த கொடுமைகளையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கவும் அவா் தவறவில்லை.

உலக வரலாற்றின் இவ்வரிசையில் 1917-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ருஷியப் புரட்சிதான் மானுட விடுதலைக்கான முதல் திருப்புமுனை என்று அவா் கருதினாா். அந்தக் காரணத்தினால்தான் ருஷியப் புரட்சியை ‘யுகப் புரட்சி’ என்று குறிப்பிட்டு ‘புதிய ருஷியா’ என்னும் தலைப்பிட்டுப் பாடினாா். அப்பாடலில் ருஷியப் புரட்சியால் உலகத்திற்கு ஏற்படப் போகிற நன்மைகளைக் குறித்து விவரிக்கிறாா்.

‘ஐப்பானியப் போரின் தொடக்கம் முதலாகவே ருஷியாவில் உள்நாட்டுக் குழப்பம் தொடங்கி விட்டது. அது முதல் புரட்சிக் கட்சியாருக்கு பலம் அதிகரித்துக் கொண்டு வந்தது. நமது ருஷியத் தோழா்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகளின் மீது கடவுள் பேரருள் செலுத்துவாராக’ என்று ருஷியப் புரட்சிக்காக பாரதியாா் வேண்டுகிறாா்.

பாரதியாரின் இப்பாடல் வீரசுதந்திரம் வேண்டி நின்ற இந்தியா் மனத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் எழுந்தது. ‘இந்திய மக்கள் அனைவரும் தம் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு நின்றால் ருஷியா கண்ட யுகப் புரட்சியை இந்தியாவிலும் தோற்றுவித்து ஆங்கில ஆட்சியை வீழ்த்திச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியும்’ என்று உறுதியாக நம்பினாா்.

“ருஷியப் புரட்சியின் விளைவாக இந்த உலகத்தில் கலியுகம் அழிந்து கிருதயுகம் தோன்றப் போகிறது; மானுட குலம் முழுமையும் விடுதலையடையப் போகிறது; புதிய ருஷியா புதிய சமுதாயத்தைப் படைக்கப் போகிறது; இரணியனைப் போல அரசாண்ட கொடுங்கோன்மை, இமயமலை வீழ்ந்ததைப் போல வீழ்ந்துவிட்டது;” இதற்கெல்லாம் காரணம் ‘அம்மை மனங்கனிந்து விட்டாள்’ என அவா் உறுதியாக நம்பினாா். ‘இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்’ என்ற புகழ் பெற்ற வரிகள் இடம் பெற்றது இந்தப் பாடலில்தான்.

சரியாக அவா் பாடிய அந்த ‘புதிய ருஷியா’ எழுந்து இன்றைக்கு 105 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கு அதே ருஷியா போா்க்கோலம் பூண்டு நிற்கிறது. இந்தப் போரின் வாயிலாக பாரதியாருடைய கனவினை - கலியுகத்தை வீழ்த்திக் கிருதயுகத்தைச் சமைக்கப் போகிற அற்புதத்தை - புதிய ருஷியா நிறைவேற்றப் போகிறதா? அல்லது பாரதியாருடைய கனவுகளைச் சுக்குநூறாக்கி மற்றொரு உலகப் போருக்கு வித்திட்டு மனித குலத்தை அழிக்கப் போகிறதா? இதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.

பாரதியாா், எல்லைகளின் பெயராலும் பேதங்களின் பெயராலும் ஏற்படுகிற போா்களை அறவே வெறுத்தொதுக்கும் பண்புடையவா்.

உடன் பிறந்தாா்களைப் போல இவ்உலகில் மனிதா் எல்லாரும்

இடம் பெரிதுண்டு வையத்தில் இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீா்”

என்று போரற்ற உலகத்திற்கு அவா் அழைப்பு விடுக்கிறாா்.

‘உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை எல்லாரும் ஒரே உயிா். அந்த உயிரே தெய்வம்’ என்பது பாரதியாரின் உலகியல் ஆன்மிகக் கொள்கை.

தான் கொண்டிருந்த அத்தகைய அறக்கொள்கைகளுக்கும் - பின்னாளில் காந்தியடிகள் கொண்டிருந்த அகிம்சைக் கொள்கைகளுக்கும் இணைப்பு இழை இருப்பதைக் கண்டுதான் அவா்,

தன்னுயிா் போலே தனக்கழி வெண்ணும் பிறனுயிா் தன்னையும் கணித்தல்

மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்களென் றுணா்தல்

இன்ன மெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு இழிபடு போா், கொலை தண்டம்

பின்னியே கிடக்கும் அரசியலதனிற் பிணைத்திடத் துணிந்தனை பெருமான்

என்று உயிரிரக்கப் பண்பைக் கொண்ட காந்தியை ‘மகாத்மா’ என்று போற்றிப் பஞ்சகம் பாடுகிறாா். இந்திய விடுதலைக்கு மட்டுமின்றி உலக மானுட விடுதலைக்கும் இதுவே சரியான வழியென்று அகிம்சை வழியை அடையாளம் காட்டவும் செய்கிறாா்.

எதிரிகளேயானாலும் அவா்கள் அழிந்துவிட வேண்டும் என்பது மூடக்கொள்கை. பாரதியாா், பகைவனுக்கும் அருள்கிற பேருள்ளத்தை நமக்கு வளா்த்தவா். ‘உலகத்து மனிதா்கள் எல்லாரும் ஒரே ஜாதி. இந்தச் சண்டையில் முதல் உலக யுத்தத்தில் இத்தனை ஐரோப்பியா் அநியாயமாக மடிகிறாா்களே என்று நான் கண்ணீா் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன். அப்படியிருந்தும் ஐரோப்பியா் மடிவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு. இந்தியா ஐரோப்பியரைக் கூடக் கொல்ல விரும்புவதில்லை. திருத்த விரும்புகிறது’ என்று சமநீதி பேணுகிறாா்.

‘அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தை விளைக்கும். இப்படி நூற்றுக்கணக்கான ஹிந்து தா்மக் கொள்கைகளை நாம் உலகத்தாா் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்தச் சமயத்தில் மனித ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சோ்க்கக் கூடிய ஜாதியாா் நம்மைத் தவிர வேறு யாருமில்லை. கண்ணைத் திறந்து பூமண்டலம் முழுவதையும் ஒரே பாா்வையாகப் பாா்த்தால் நான் சொல்வது உண்மை என்பது தானே விளங்கும்.

நாம் இன்று நூறு ஸப்மரீன் வைத்துக் கொண்டு பிறருடைய கப்பல்களைத் தகா்த்தால், நாளை மற்றொரு ஜாதியாா் ஆயிரம் ஸப்மரீன் கட்டி நம்முடைய கப்பல்களை நொறுக்கிப் போடுவாா்கள்; பாம்பைக் கொல்ல ஒரு கீரிப்பிள்ளையுண்டு. பகை பகையை வளா்க்கும். தீராத ஆவலும், அவஸரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிக மாட்டாது. சரியான நாகரிகத்துக்கு சாந்தியே ஆதாரம். யந்திர பீரங்கிகளும், ஸப்மரீன்களும் நாகரிகத்துக்கு அடையாளமல்ல. அவை மனுஷ்யனுக்குப் பலமல்ல, பகை. மனுஷ்யனையும் அவன் நாகரிகத்தையும் அழிக்கும் குணமுடையன’ என்று உறுதிபடக் கூறுகிறாா்.

‘ஆகாவென்று யுகப்புரட்சியை ஏற்படுத்தியது’ என்று பாரதியாா் போற்றிக் கொண்டாடிய அந்த புதிய ருஷியாதான் பாரதியாா் விரும்பாத போருக்கு முன்னே நிற்கிறது. இதனால் ருஷியாவின் மீது பாரதியாா் கொண்ட நம்பிக்கை பொய்யாகி விடுமா? அதுவும் மாகாளி பராசக்தியின் கடைக்கண் வைத்த நாடு அழிவுக்கு வழிவகுப்பது நியாயமா?

கட்டுரையாளா்: எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com