நூறுநாள் வேலைத்திட்டம்: ஒரு பார்வை!

"நூறுநாள் வேலை திட்டம்' என அறியப்படும் "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்' தொடங்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
நூறுநாள் வேலைத்திட்டம்: ஒரு பார்வை!
நூறுநாள் வேலைத்திட்டம்: ஒரு பார்வை!

"நூறுநாள் வேலை திட்டம்' என அறியப்படும் "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்' தொடங்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இரண்டு முக்கியமான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முதலாவது, கிராமப்புறங்களில் குறைந்தபட்ச வேலை  உறுதி செய்யப்படுவது. இரண்டாவது, கிராமப்புறங்களில் குறைந்தபட்சமாக சில அடிப்படை வசதிகளை உருவாக்குவது.

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டொன்றுக்கு நூறு நாட்கள் வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்துதல், பெண்களுக்கு வேலைவாய்ப்பு தந்து அவர்களை தங்கள் சொந்த காலில் நிற்க வைப்பது, கிராமப்புற மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தி, அதன்  மூலம்  பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்றெல்லாம் விரிவாகத் திட்டமிடப்பட்டது.

முதல் கட்டமாக, 200 மாவட்டங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட இத்திட்டம் பின்னர் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் அரசாங்கம் பெரும் வெற்றி கண்டிருக்கிறது என்று விளம்பரம் செய்யப்படுகிறது. 

அரசின் இணையதளங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை  நபர்களுக்கு எத்தனை நாட்கள்,  எந்தெந்த வேலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற தகவல் பதிவிடப்பட்டுள்ளது. நபர்களின் பெயர்கள், பதிவு எண்கள் உள்ளிட்ட  தகவல்கள் நம்மை மலைக்க வைக்கின்றன. ஆனால், கள நிலவரம் வேறு மாதிரி உள்ளது. 

நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டங்கள் பலவும், அவற்றை சரிவர கண்காணிக்காததாலும், செயல்படுத்தாததாலும் பாழ்பட்டு விடுகின்றன. அது போல,   சில திட்டங்கள் எந்த அளவுக்கு நல்ல பலன்களைத் தருகின்றனவோ அதே அளவுக்கு எதிரான பலன்களையும் தருகின்றன. இதற்கு இந்த திட்டம் ஒரு உதாரணமாகும். 

மிக மிக பின்தங்கிய, சாலை வசதியோ பிற அடிப்படை வசதிகளோ அற்ற ,  விவசாயத்துக்கான நீர் ஆதாரம் இல்லாத கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது அது அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் பயனை அளிக்கும் என்பது சரியே.

மாறாக, அடிப்படை வசதிகள் பெருமளவு நிறைவு செய்யப்பட்ட கிராமங்களிலும், நல்ல நீர்ப்பாசன வசதி உள்ள கிராமங்களிலும், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் அதிகம் பேர் தேவைப்படும் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது,  அது இரண்டு விதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

முதலாவதாக, இத்திட்டத்தில் செலவிடப்படும் நிதி அத்தியாவசிய பணிகளுக்கு செலவிடப்படுவதில்லை. அதனால், வேலையும் சரிவர நடப்பதில்லை. இரண்டாவதாக, இந்த வேலையில் உத்தரவாதமாக பணம் கிடைப்பதால், மக்கள் விவசாய வேலைகளுக்கு செல்வதைத் தவிர்க்கின்றனர். ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய வேலைகள் பாதிக்கப்படுகின்றன. பல கிராமங்களில், நூறுநாள் வேலை திட்டம், விவசாய வேலைகளுக்கு ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை. 

தமிழ்நாட்டில், கிராமப்புற மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து தருவதுடன், உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. மேலும், தாய்-சேய் நலத் திட்டங்கள், பேறு காலத்தில்  பெண்கள் நலம் சார்ந்த திட்டங்கள், பெண்களின் படிப்புக்கான இலவச கல்வித் திட்டம், இலவச சத்துணவுத் திட்டம், பெண்களுக்கு திருமண நிதி உதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதோடு, முதியோருக்கு மாத பென்ஷன் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

பல கிராமங்களில் குளம், கால்வாய் தூர்வாருதல், சாலை சீரமைப்புப் பணி, மரம் நடுதல், மாட்டுக் கொட்டகை கட்டுவது போன்ற எந்த பணியும் நடைபெறவில்லை என்பதுதான் கள நிலவரம். ஆனால், சுமார் 7,500 மனித நாட்கள், குறிப்பிட்ட  6 மாதங்களில் மட்டும் செலவிடப்படுவதாக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, வியப்பளிக்கும் தகவலாகும். 

பல்வேறு கிராமங்களில், கள நிலவரம் இவ்வாறுதான் உள்ளது என்பதை, சிஏஜி எனப்படுகின்ற கணக்குத் தணிக்கைக் குழு அளித்திருக்கும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது (தணிக்கைக் குழு அறிக்கை-2018).

தணிக்கைக் குழு, இத்திட்டத்தினை பல்வேறு கோணங்களிலும் ஆய்ந்து தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. குறிப்பாக, திட்டமிடுதல், நிதி ஆதாரங்களைக் கணக்கிடுதல், பணம் பட்டுவாடா செய்தல் போன்றவற்றில் கிராம பஞ்சாயத்துகளின் பங்களிப்பு சிறிதும் இல்லை என்பதை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.மேலும் பல்வேறு விதிமீறல்களையும் சுட்டிக்காட்டுகின்றது. பல இடங்களில் பணிகள்  நடைபெறவில்லை என்பதோடு, அவற்றை கண்காணிப்பதற்கான அமைப்பு எதுவும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.  

மத்திய அரசாங்கத்தின் திட்டமாகக் கருதப்பட்டாலும், இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்துவது மாநில அரசுகளின் கைகளில்தான் உள்ளது. அந்த வகையில், இத்திட்டத்தை, கேரள மாநிலம், சிறப்பாக, முன்மாதிரியாக செயல்படுத்துகிறது. இதனையும் தணிக்கைக் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

கேரளத்தில், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் தனது தேவைகளின் அடிப்படையில் திட்டங்களை தீட்டுகிறது. ஒரு ஆண்டுக்கான முழு திட்டங்கள், அந்தத் திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகள், கண்காணிப்பு குழுக்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்கிறது. மேலும், பெண்கள் சுய உதவி குழுக்கள், இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிட பணிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்  பெண்களை இத்திட்டங்களில் பங்கெடுக்கச் செய்கிறது. 

கேரளத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு இந்த நூறுநாள் வேலைத் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்பின்னணியில், இத்திட்டம் குறித்து திறந்த மனதுடன் விவாதம் பல தளங்களில் நடத்தப்பட வேண்டும். பல தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டு, அரசு நிதி பயனுள்ள வகையில் செலவிடப்படுவது உறுதிபடுத்தப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com