இலங்கை வீழ்ச்சி உணர்த்தும் உண்மை!

அவசர நிலை அறிவிக்கப்பட்டதால், பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை சரியான முறையில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும். பொது சொத்துகள் பாதுகாக்கப்படும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள் தொடங்கி வரலாறு வரை இலங்கை தேசம் இடம் பெற்றிருக்கிறது. கம்பராமாயணத்தில், குபேரனின் வாசஸ்தலம் என்றும் ஐஸ்வரிய லட்சுமி குடிகொண்ட தேசம் என்றும் இலங்கை சொல்லப்பட்டிருக்கிறது.

"ஈழ நாட்டுக் குறம்' என்ற நூல், கனிபெற என்றொரு குறத்தி காதணியை வீச 
கடுவனதைக் கைபிடித்து காதலிதன் காதில் நனிஅழுத்த.. என்று கூறுகிறது.

அதாவது, மரத்தில் இருக்கும் கனியை விரும்பிய பெண், அதனை வீழச் செய்வதற்காக தன்னுடைய காதணியைக் கழற்றி எறிகிறாளாம்.

மரத்திலிருந்த ஆண்குரங்கு காதணியைப் பிடித்து, தன்னுடைய காதலி குரங்குக்கு அணிவிக்கிறதாம். இப்படி வளமான நாடு என்று இலங்கையை வர்ணிக்கிறது அந்நூல்.

அத்தகைய இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலைகுலைவால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகமே இலங்கையை பரிதாபத்தோடு பார்க்கிறது. பஞ்சம் பீடித்திருக்கும் இந்த தேசத்திலிருந்து வெளியேறினால்தான் வாழ்வென்பதே சாத்தியம் என இலங்கையின் இளைஞர்கள் தங்கள் நாட்டைத் துறந்து வெளிநாடுகளில் தஞ்சமடைய பலநாட்டுத் தூதரகங்களின் வாயிலில் வரிசையில் காத்திருக்கின்றனர். உயிரைப் பணயம் வைத்து கடல் மார்க்கமாக தமிழ்நாட்டில் படகில் வந்திறங்கியவர்கள் அங்கே நிலவும் பஞ்சத்திற்கு சாட்சியாக நிற்கின்றனர். 

அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலை, உணவுப் பொருள்களின் விலை உயர்வு என்று சென்ற ஆண்டு முதலே இலங்கையில் பிரச்னைகள் தலைதூக்கின. கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் ஒருபுறம். அதே நேரத்தில் அரசின் தவறான கொள்கை முடிவுகளால் தோன்றியிருக்கும் சிக்கல்கள் மறுபுறம். அரசு கையறு நிலையில் இருக்கிறது. 

நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவில் கடன் வாங்கியும் வருகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது.

இலங்கையில் பெரும்பாலும் மின் உற்பத்தி நிலையங்கள் டீசலை நம்பியிருப்பவை. டீசல் இறக்குமதிக்கான வசதி இன்மையால் அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. சில உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் பல மணி நேர மின்வெட்டு நீடிக்கிறது.

பெரும்பாலான இடங்களில் 13 மணி நேரம் வரை மின்வெட்டு இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருள்களான  பால் மாவு, சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தட்டுப்பாடு விலைஉயர்வுக்குக் காரணமாகியிருக்கிறது.    

ஒரு கிலோ பால் பவுடர் இரண்டாயிரம் ரூபாய், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நான்காயிரத்திற்கும் மேல், ஒரு லிட்டர் பெட்ரோல் 254 ரூபாய், டீசல் ஒரு லிட்டர் விலை 176 ரூபாய்.  அதற்கும் கூட்டம், தள்ளுமுள்ளு. 
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ராணுவப் பாதுகாப்பு. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் பணத்திற்கு அலைந்தால் மற்றவர் பொருள்கள் வாங்குவதற்கான வரிசையில் காத்திருப்பது என்று இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கை நகர்கிறது.      

இதனால் பொறுமை இழந்த மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறியதால் அதிபர் பதவி விலகக்கோரி அதிபர் மாளிகை முன் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும்  மக்களைக் கலைந்து போகச் செய்தனர்.

இந்தப் போராட்டத்தில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் காவல்துறை தரப்பில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும், காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், இலங்கையில் அவசரநிலை பிறப்பித்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபட்ச. இது குறித்த அவரின் அறிவிப்பில், "பத்து நாள் இந்த அவசரநிலை நீடிக்கும்; அதன்பின் நிலைமைக்கேற்ப முடிவு செய்யப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டங்கள் இந்த அவசரநிலையினால் செயலிழக்கும். அவசரநிலை காலங்களில் கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான உரிமை இல்லாமல் போகும்.

பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் நபர் என்று கருதும் ஒருவரை மூன்று மாத காலத்திற்கு எவ்வித விசாரணையும் இல்லாமல் சிறைபடுத்த முடியும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவார் எனக் கருதும் எந்தவொரு நபரையும் கைது செய்யும் அதிகாரம் பாதுகாப்புப் பிரிவுக்கு இந்த சட்டத்தினால் கிடைக்கும். இதனால் சுதந்திரமில்லாத சூழல் ஏற்படலாம்.

அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டிருந்த குறைபாடுகள், பொருள்களைப் பெறமுடியாத நிலையில் மக்களின் ஏமாற்றம் இவை அவர்கள் மனதில் அமைதியின்மையை ஏற்படுத்தியதால்தான் போராட்டங்கள் வெடித்தன.

அவசர நிலை அறிவிக்கப்பட்டதால், பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை சரியான முறையில் மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியும். பொது சொத்துகள் பாதுகாக்கப்படும்.

அவசர நிலையின் சாதக பாதகங்கள் ஒருபுறமிருக்க, ஒரு தேசம் இத்தகைய நெருக்கடிக்கு உள்ளாவதற்கான காரணங்களை நோக்க வேண்டியது அவசியம். உலக நாடுகளின் தலைவர்களுக்கு இலங்கை பாடம் கற்றுக் கொடுக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் பெரும்பாலும் தேயிலை உற்பத்தி, சுற்றுலா இவற்றைப் பொறுத்தே இருக்கிறது. உலகம் முழுவதும் நிலவும் கொள்ளை நோய்த்தொற்று குறித்த அச்சத்தால் சுற்றுலா சார்ந்த வருமானம் முற்றிலும் இல்லாமல் போயிருக்கிறது. 

தேயிலை உற்பத்தியும், ஏற்றுமதியும் நாட்டையே வாழ வைத்து வந்த நிலையில், நூறுசதம் இயற்கை முறை விவசாயத்தை முன்னெடுப்பதாகக் கூறி, சென்ற ஆண்டு அரசு செயற்கை உரங்களுக்குத் தடை விதித்தது. இதனால் தேயிலை உற்பத்தியும், ஏற்றுமதியும் பெருமளவில் குறைந்து விட்டன. 

முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால், படிப்படியாக செய்து வெற்றி கண்டிருக்க வேண்டிய திட்டம், நாட்டின் சரிவுக்கே காரணமாகி விட்டது.   

அரசின் தவறான முடிவுகளும், ஊழலும் நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளன. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வரிக்குறைப்பு செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த கோத்தபய ராஜபட்ச, ஆட்சிக்கு வந்ததும் அரசின் வரிகளை ஏறத்தாழ பாதி அளவுக்குக் குறைத்து விட்டார். இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பினை சரிசெய்ய அவரிடம் திட்டம் ஏதுமில்லை. வரிவருவாய் குறைந்த பின்னர், மேம்பாட்டுத் திட்டங்கள் சாத்தியமற்றுப் போய்விட்டன. 

அந்நிய செலாவணி இருப்பு குறைந்ததால் பண மதிப்பு குறைந்துள்ளதும், அதனால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வும் மோசமான நிதி நிர்வாகத்தின் சான்றுகள். அத்தியாவசியப் பொருள்களுக்கு, பிற நாடுகளை எதிர்பார்க்காமல் தங்கள் நாட்டில் அதற்கான உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாமையும் ஒரு காரணம்.  

இலங்கை மக்களின் இன்றைய நிலைக்கு ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, மக்களும் ஒருவகையில் பொறுப்பேற்க வேண்டும். ஜனநாயக நாட்டில் சிறந்த நிர்வாகத்தை வழங்கும் கட்சிகளை மக்கள் ஆதரித்து ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும். அப்படி இல்லாமல் இனவாதம் பேசும் கட்சிகளின் பக்கம் நிற்பது எந்நாளும் வளர்ச்சிக்கு வழிவகுக்காது. 

இலங்கை அரசியல் எப்போதும் இனவாதத்தையே கையில் எடுத்து செயல்படுகிறது. சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என்று தேசம் பிளவுபட்டு நிற்கிறது. ஒருவருக்கொருவர் விரோதம் பாராட்டுவது அங்கே சாதாரணமாக இருக்கிறது. ஒரு தேசத்தின் வளர்ச்சி அந்த மக்கள் ஒன்று கூடி உழைக்கும் பொழுதுதான் சாத்தியமாகும். 

அரசியல்வாதிகள், தங்களின் சுய லாபத்திற்காகவும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் இனவாத சிந்தனையை மக்கள் மனங்களில் விதைக்கிறார்கள். அரசியல்வாதிகளின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு சரியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது ஜனநாயகத்தில் குடிமக்களின் கடமை. 

ஓர் இனம் அழிய மற்றோர் இனம்  வேடிக்கை பார்க்குமானால், தனக்கும் அத்தகைய நிலை நாளை ஏற்படக்கூடும் என்ற புரிதல் இல்லாமல் போகுமானால் அந்த தேசத்தின் வீழ்ச்சியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இலங்கையின் வீழ்ச்சி கற்றுக்கொடுக்கும் பாடம் இதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com