விடுதலை வேள்வியில் தமிழ் வளர்த்தவர்

நான் பேசும்போது எத்தனை வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறேன் என்று எண்ணியெண்ணி, பிறகு அதை என்னிடம் குத்திகாட்டவே வந்துள்ளார்' என்று சைவக்கடலான அடிகளே சான்றளிக்கும் வண்ணம் தமிழ்ப்பணியாற்றியவர்
அண்ணல் தங்கோ
அண்ணல் தங்கோ

திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள், மேடையில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது "அதோ அமர்ந்திருக்கிறார் அண்ணல்தங்கோ! இங்கு நான் பேசும்போது எத்தனை வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறேன் என்று எண்ணியெண்ணி, பிறகு அதை என்னிடம் குத்திகாட்டவே வந்துள்ளார்' என்று சைவக்கடலான அடிகளே சான்றளிக்கும் வண்ணம் தமிழ்ப்பணியாற்றியவர் அண்ணல் தங்கோ.

இவரின் பூர்விகம் குடியாத்தம். இவருடைய பெற்றோர் முருகப்பன்--மாணிக்கம்மாள் இணையர், தொழில் காரணமாக, இராமநாதபுர மாவட்டம், கண்டவராயன்பட்டிக்கு சென்றபோது, அங்கு 1904 ஏப்ரல் 12 அன்று பிறந்தார். பெற்றோர் அவருக்கிட்ட பெயர் சுவாமிநாதன்.

இளம் அகவையில் தந்தையை இழந்த அவருக்கு, பள்ளி செல்லும் வாய்ப்பு கிட்டாமையால், நெசவுத்தொழில் மேற்கொள்ள, சொந்த ஊரான குடியாத்தம் திரும்பினார். பெற்றோரிட்ட பெயரான சுவாமிநாதன் என்பதை அகற்றி, அண்ணல்தங்கோ என்ற தனித்தமிழ்ப்பெயராக தன் பெயரை மாற்றியமைத்துக்கொண்டார். அது மட்டுமல்ல, மற்றவர்களின் பெயர்களையும் தனித்தமிழில் மாற்றினார். 

உதாரணமாக, கிருபானந்தவாரியார் (அருளின்பக் கடலார்), காமராசர் (காரழகனார்), மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை (குழற்கோமான்), ஜீவானந்தம் (உயிரின்பன்), சி.பி. சின்ராசு (சி.பி. சிற்றரசு), தார்பிடோ சனார்த்தனம் (மன்பதைக்கன்பன்), ஆதித்தனார் (பகலவனார்), தனபாக்கியம் (பொற்செல்வி இளமுருகு),கிருஷ்ணவேணியம்மையார் (கரியகுழலியார்), கருணாநிதி (அருள்செல்வன்), போன்ற அறிஞர் பெருமக்கள் பலரின் வடமொழிப்பெயர்களைத் தமிழ்ப்படுத்தியவர் இவரே. 

வேலூர், சுப்புராய முதலி தெருவில், கனகசபை - பத்மாவதி வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தபோது, அவர்களின் மகள் காந்திமதி எனும் பெயரை நீக்கி, மணியம்மை என பெயர் மாற்றம் செய்தவர் இவரே. அரங்கண்ணல் எழுதியுள்ள "நினைவுகள்' எனும் தன் வரலாற்று நூலில், பெயர்மாற்றப் பிதா அண்ணல்தங்கோவின் அனுமதியோடு அரங்கசாமி எனும் தன் பெயரை "அரங்கண்ணல்' என மாற்றிக்கொண்டதாகப் பதிவிடுகிறார். 

மறைமலையடிகளாரின் நாட்குறிப்பு தொகுப்பு நூலான "மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்' எனும் நூலில், அடிகளாரிடம் அண்ணல்தங்கோ நெருங்கிப் பழகியிருந்ததை, அடிகளாரே பதிவிட்டுள்ளாரென்பது, பள்ளிசென்றே கல்வி கற்காத அண்ணலின் முயற்சிக்கு கிட்டிய நற்பேறாகும். 

இந்தியா வெள்ளையராதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததை எதிர்த்துப் போராட 15-ஆம் அகவையிலேயே, காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தவர். மதுரை, வக்கீல் புதுத் தெருவில் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை, வைத்தியநாத ஐயருடன் இணைந்து நடத்தி மூன்று மாத சிறை தண்டனையடைந்தவர்.

நாகபுரியில் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல வெள்ளைய அரசு தடைவிதித்ததை எதிர்த்து, தேசியக்கொடியை ஏந்தியதால் கைது செய்யப்பட்டு, நாகபுரி, பிடல், சாகர் சிறைகளில் ஓராண்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்தார்.

விடுதலையடைந்தவுடன், தேசியத் தலைவர்களான ஜம்னாலால் பஜாஜ், வல்லபபாய் படேல் இருவரும் இணைந்தளித்த விருந்தினையேற்று, தமிழகம் திரும்பியவர். நீலன் சிலை உடைப்பைத் தலைமை தாங்கி நடத்தி, நீதியரசர் பம்மல் சம்பந்தனார் தீர்ப்பின்படி, ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை கண்ணனூர் சிறையில் அனுபவித்தார். நீலன் சிலை உடைப்புப் போராட்டத்தில், அண்ணல்தங்கோ தலைமையின் கீழே, தொண்டர் படையில் காமராஜர் இருந்து போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ம.பொ.சி. எழுதியுள்ள "விடுதலைப் போரில் தமிழகம்' எனும் நூலில் அண்ணலின் பங்களிப்பை பதிவிட்டுள்ளார். உப்பெடுக்கும் அறப் போராட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மயிலாப்பூர், உதயவன ஆசிரமத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியவர். இவர் உப்பெடுக்கும் போராட்டக் குழுவின் தலைவராக இருந்தபோதுதான், அப்போதைய தொழிற்சங்கத் தலைவராயிருந்த, வி.வி.கிரியை கடற்கரையில் உப்புகாய்ச்சும் ஒரு துணைபிரிவிற்கு தலைவராக்கினார்.

"தினமணி சுடர்' இதழில் ஆக்கூர் அனந்தாச்சாரியார் எழுதிய "அரசியல் நினைவு அலைகள்' எனும் தொகுப்பில் அண்ணல்தங்கோ தம் தோழர்களான பொதுவுடமைப் போராளி ஜமதக்னி, வாலாஜாபேட்டை கல்யாணராம ஐயர் ஆகியோருடன் இணைந்து வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி சிறை தண்டனை பெற்றது பதிவாகியிருக்கிறது.  

இந்திய விடுதலைப் போராட்டத்தில், அண்ணல்தங்கோவின் பங்களிப்பு, தேசியத் தலைவர்களுக்கு இணையாக, அல்லது கூடுதலாக வைத்து ஆராயப்பட வேண்டியது. 1927-இல், சுயமரியாதை இயக்கம் முன்னெடுப்பதற்கு முன்பே, புரோகிதத்தை மறுத்து, திருக்குறளை முன்மொழிந்து சிவமணி அம்மாளை குடியாத்தத்தில் தமிழ்த் திருமணம் செய்து கொண்டார். மேலும், நூற்றுக்கணக்கான தமிழ்த் திருமணங்களை திருக்குறளை முன்னிறுத்தி  நடத்தி வைத்துள்ளார். இதனை, "தமிழர் திருமணமும் இனமானமும்' எனும் நூலில் பேராசிரியர் க. அன்பழகன் பதிவிட்டுள்ளார்.  

1934 பிப்ரவரி 18-இல் காந்தியடிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தை குடியாத்தத்தில் கூட்டினார். ஆனால் காந்தியார் ஏற்கெனவே கூட்டத்தில் பேச இசைவு தெரிவித்திருந்தாலும், அண்ணல்தங்கோ திரட்டியளித்த தீண்டாதோர் நலநிதியை மட்டும் பெற்றுக்கொண்டு, அக்கூட்டத்தில் பேசாமலேயே சென்று விட்டார். இதனால், ஏமாற்றமடைந்த அண்ணல்தங்கோ, உடனே காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வெளியேறி, "உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை' எனும் அமைப்பைத் தொடங்கினார். 

அறிஞர் க. நமச்சிவாயம் தொடங்கி வைத்த, தைப்பொங்கல் விழாவை, தம் வாழ்நாள் முழுவதும், தமிழகத்தின் பல்வேறு பகுதி அறிஞர்களான பாவாணர், பாரதிதாசன், கி.ஆ.பெ. விசுவநாதம், திருக்குறள் முனுசாமி, ஒüவை துரைசாமி, ஆதித்தனார், மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, வெள்ளைவாரணனார், சதாசிவ பண்டாரத்தார், திருக்குறள் பீடம் அழகரடிகள், இலக்குவனார் என அனைத்து அறிஞர் பெருமக்களை வேலூருக்கே வரவழைத்து பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றச் செய்தார் அண்ணல்தங்கோ. 

1972-இல் தில்லியில் அன்றைய இந்திய தலைமை அமைச்சர் இந்திரா காந்தியிடம் நேரடியாக தாமிரப் பதக்க விருதினைப் பெற்றார். "தமிழ்நிலம்' எனும் தனித்தமிழ் வார இதழினை நடத்தினார். இவரெழுதிய, "அண்ணல் முத்தம்மாள் பாடல்கள்', "சிறையில் நான் கண்ட கனவு', "அறிவுப்பா', "மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?', "நூற்றுக்கு நூறு', "வெற்றிப்படை பாட்டு' ஆகிய அனைத்து நூல்களையும் 2008- இல் அன்றைய திமுக அரசு நாட்டுடமை ஆக்கியது. 

1974 ஜனவரி 4-ஆம் நாள் வேலூரில் கிறிஸ்தவ மருத்துவமனையில் மறைந்தார். அவர் ஏற்றி வைத்த தமிழ்ஒளியை, அடுத்த தலைமுறையினருக்கும் பரப்புவதே, நாம் அவருக்கு செலுத்தும் நன்றிக் கடனாம்.

இன்று (12.4.2022) அண்ணல்தங்கோவின் 119-ஆவது பிறந்தநாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com