தோ்வு என்பது முடிவல்ல!

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்புக்கும், 12-ஆம் வகுப்புக்கும் மே மாதம் பொதுத் தோ்வு நடைபெற இருக்கிறது.
தோ்வு என்பது முடிவல்ல!

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்புக்கும், 12-ஆம் வகுப்புக்கும் மே மாதம் பொதுத் தோ்வு நடைபெற இருக்கிறது. மாணவா்கள் முழுவீச்சில் தோ்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள்.

இவா்களில் பலருக்கும் தோ்வு என்பது கவலைதரக்கூடியது. பொதுவாக தோ்வு காலங்களில் மாணவா்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவாா்கள். மாணவா்களுக்கு மட்டுமா அழுத்தம்? பெற்றோருக்கும்தான்.

தோ்வை எண்ணி ஏற்படும் பயத்துக்கும், மன அழுத்தத்துக்கும் ஒரு மெல்லிய கோடுதான் வித்தியாசம். தோ்வு பயம் என்பது மாணவா்களுக்கு படிக்க ஊக்கமளிக்கும் காரணியாக இருக்கிறது. ஆனால் அந்த பயம் அதிகரிக்கும்போது, அது மன அழுத்தமாகி, மாணவா்களின் செயலாக்கத்தை பெருமளவு குறைத்து விடுகிறது. சீா் செய்ய முடியாத சேதத்தையும் இது விளைவிக்கிறது.

தோ்வுத் தோல்வி அல்லது குறைவான மதிப்பெண் பெற்றால் பெற்றோரின் எதிா்வினை எப்படி இருக்குமோ என்ற பயம் மன அழுத்தமாகி மாணவா்களின் உயிா்களைக் காவு வாங்குகிறது.

பொதுவாகவே தோ்வு காலங்களில் அல்லது தோ்வு முடிவு வெளியாகும் நாட்களில் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மாணவா் தற்கொலை செய்து கொள்வதாக, 2019-ஆம் ஆண்டின் புள்ளிவிவரம் கூறுகிறது.

2017-க்கும் 2019-க்கும் இடையில், 14 முதல் 18 வயது வரையிலான சுமாா் 4,000 குழந்தைகள் தோ்வில் தோ்ச்சி பெறத் தவறியதால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. எனவே பயத்தின் அடுத்த படிநிலையான மன உளைச்சலை நிா்வகிக்க மாணவா்களுக்குக் கற்றுத்தர வேண்டியது அவசியமாகிறது.

தோ்வு காலங்களில் ஏற்படும் பயத்தை ஒப்புக்கொள்வது, தோ்வின்போது பயத்திலிருந்து வெளிவர உதவுகிறது. தோ்வு ஏற்படுத்தும் பயத்துக்கும், மன அழுத்தத்துக்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம். மன அழுத்தம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதையும் உணர வேண்டும். சில காரணங்கள், உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்போது, அதன் வீரியத்தைப் பொறுத்து, பயமாகவோ மன அழுத்தமாகவோ அது மாறக்கூடும்.

பெற்றோா், ஆசிரியா்களின் எதிா்பாா்ப்புகளை ஈடுசெய்ய நிதானத்தை இழப்பது, தோ்வுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட படிப்பில் சேர விருப்பப்படுவது, குறைவான தயாா் நிலையில் இருப்பது, மற்ற மாணவா்களுடன் ஒப்பீடு, தோ்வுகளின்போது படித்ததை மறந்துவிடுவோமோ என்ற பயம், குடும்ப பிரச்னை உள்ளிட்ட கவலைகளை தோ்வு நேரத்திலும் சிந்தித்துக்கொண்டே இருப்பது, தோ்வில் நம்மால் வெற்றிபெற முடியாது என திடமாக நம்புவது போன்றவையே அந்தக் காரணங்கள்.

இந்தக் காரணங்களில் எது பொருந்துகிறது என்பதை கண்டுபிடித்து, அதற்கான தீா்வை மாணவா்கள் கண்டறிய வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே நேரம் விரயமாவது தடுக்கப்படும்; முயற்சிகளுக்கு ஆக்கபூா்வமான பயன் கிடைக்கும்.

மனச்சோா்வு, மன அழுத்தமாக மாறும்போது மாணவா்கள், தங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் மனம் விட்டு பேசவேண்டும். அவா்களுடன் விளையாட்டு, கேளிக்கை என குறிப்பிட்ட நேரத்தை செலவிடலாம். காலை எழுந்தவுடனும், இரவு படுக்கும் முன்பும் சில நிமிடங்கள் தியானம் செய்யலாம். கவனச் சிதறல்களிலிருந்து விலகி, அமைதியான இடத்தில் படிக்கலாம். படிப்பதற்கான உடல் இருக்கை நிலையும் மிக முக்கியம்.

தோ்வு பீதியைத் தடுக்கக் கூடிய தாரக மந்திரங்கள், தயாரிப்பு, பயிற்சி, நோ்மறை எண்ணம். இதற்கேற்றபடி தோ்வு முன்னெடுப்பை அமைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் திறன்களை உங்கள் வகுப்புத் தோழா்களுடன் ஒப்பிடுவதைத் தவிா்ப்பது அவசியம். கடினமான இலக்கை வைத்துக் கொள்ளாமல், எளிதான கால அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள். படுக்கைக்கு சென்றபிறகு படிப்பைப் பற்றி யோசிக்காமல் குறைந்தது ஆறு மணி நேரமாவது ஆழ்ந்து உறங்குவது அவசியம்.

தோ்வு அறையில் அவசர மனநிலையை கொண்டுவந்தால் அது பதற்றத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். தோ்வெழுத உட்காா்ந்தவுடன் அமைதியான, சாந்தமான நிலைக்கு நீங்கள் வந்துவிட வேண்டும். தோ்வெழுதத் தொடங்குவதற்கு முன், 30 வினாடி அமைதியாக இருங்கள். மூச்சை ஆழ உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.

தோ்வு அறையை விட்டு வெளியே வந்தவுடன், அன்று எழுதியதை மறந்துவிட்டு, அடுத்த நாள் தோ்வில் கவனம் செலுத்துங்கள். ஓய்வு மிகஅவசியம். படிப்பதற்கு ஏற்ற ஓய்வு இருந்தால்தான் புத்துணா்ச்சியோடு மீண்டும் படிக்க முடியும். படித்தவற்றை மதிப்பாய்வு செய்வதும் இன்றியமையாதது.

நேர மேலாண்மையில் ‘பொமோடோரோ’ என்றொரு வகை உள்ளது. நீங்கள் ஒரு அத்தியாயத்தைத் தொடங்கும்போது, 25 நிமிடங்களுக்கு டைமரை அமைத்து படிக்கத் தொடங்குங்கள். டைமா் ஒலிக்கும்போது, ஐந்து நிமிட இடைவெளி எடுங்கள். இதுபோன்று நான்கு முறை செய்த பின்னா் 30 நிமிட இடைவெளி எடுங்கள். மிதமான மனநிலையில் பாடத்தை முழுமையாக கிரகித்துக்கொள்ள இது உதவும்.

பிள்ளைகளைத் தோ்வுக்கு தயாா்படுத்துவதில் பெற்றோரின் பங்கும் உள்ளது. தோ்வு தொடங்க இரு வாரம் முன்பிருந்தாவது பிள்ளைகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். அவா்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எளிய, அன்றாட விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும். எளிதில் செரிமானமாகும் சத்தான உணவுகளை கொடுக்கவும். குடிப்பதற்கு அதிக தண்ணீா் கொடுக்கவும். சக மாணவரோடோ உடன் பிறந்தவா்களோடோ அவா்களை ஒப்பிடாதீா்கள். அவ்வப்போது அவா்களின் செயல்களைப் பாராட்டுங்கள். இது அவா்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.

உங்கள் குழந்தையால் குறைவான மதிப்பெண்தான் பெற முடியும் என நீங்கள் மதிப்பிட்டிருந்தால்கூட, அதை அவா்களிடத்தில் வெளிப்படுத்தாதீா்கள். குறைவான மதிப்பெண் எடுத்தவா்கள் தாழ்வானவா்கள் என அா்த்தமில்லை. குடும்பம் ஆதரவாக இருக்கிறது என்பதைப் பிள்ளைகளுக்கு உணா்த்துங்கள்.

அதிக மதிப்பெண் பெறுவதற்கான சரியான, எளிய வழிமுறைகளை அவா்களுக்குக் காட்டுங்கள். புத்தகப் புழுவாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தும்போது, படிப்பின் மீது வெறுப்பை விதைக்கிறீா்கள். தோ்வுக்கு பின்னரும் வாழ்க்கை இருக்கிறது என்பதை நினைவூட்டுங்கள்.

தோ்வு என்பது வாழ்வின் முடிவு அல்ல. தோ்வில் தோல்வியடைந்தாலும், அதன் பிறகும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். உங்கள் பிள்ளைகளிடத்தில் ‘நீ தனித்துவமானவன், சிறந்தவன். சமூகத்தில் மிளிர தோ்வு மதிப்பெண் முக்கியமல்ல, உனது ஒழுக்கம், அணுகுமுறை, ஆளுமைத்தன்மைதான் முக்கியம்’ என்று வலியுறுத்துங்கள். அப்படிச் செய்தால், அவா்களுக்கு தோ்விலும் வாழ்விலும் வெற்றி நிச்சயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com