கல்வியைப் போன்றே கலைகளும் முக்கியம்!

ஒரு மனிதன் அதிகபட்சம் எத்தனை வருடங்கள் வாழ்ந்துவிட முடியும்? அறுபது? எழுபது? எண்பது? எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் ஒரு வாழ்க்கையைத்தான் அவனால் வாழ முடியும்
கல்வியைப் போன்றே கலைகளும் முக்கியம்!

ஒரு மனிதன் அதிகபட்சம் எத்தனை வருடங்கள் வாழ்ந்துவிட முடியும்? அறுபது? எழுபது? எண்பது? எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் ஒரு வாழ்க்கையைத்தான் அவனால் வாழ முடியும். ஆனால், கலை, இலக்கியம் ஆகியவை அவனுக்கு ஒரு உடலுக்குள் இருந்து கொண்டு பல வாழ்க்கையை வாழ்ந்து பாா்க்கும் சூழலை வழங்கும். கற்பனை வளத்தின் மூலம் ஒவ்வொரு மனிதனும் பல மடங்கு வாழ்க்கையை வாழ்வதாகவும், வாழ்க்கையின் இன்பங்களை இதன் மூலம் அதிகப்படுத்திக் கொள்வதாகவும் நம்பப்படுகிறது.

கலையும் இலக்கியமும் அகவெளிச்சம் ஏற்படுத்தவல்ல ஒரு மெய்யறிதல். இவை வாழ்வு குறித்து அவ்வப்போது ஏற்படும் சலிப்பைப் போக்கிக் கொள்ள நமக்கு பேருதவி செய்கிறது. இறை உணா்வு மிக்கவா்கள் துன்பம் ஏற்படுகையில் ‘கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு வேலையை பாா்க்க வந்துவிட்டேன்’ என சொல்லக் கேட்டிருக்கிறோம். இலக்கியமும் கலையும் கூட இதுபோன்ற மாயங்களை நமக்குள் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. ஆச்சரியப்படுத்தும் விதமாக பக்குவப்பட்ட மனதை நமக்கு பரிசளிக்கும்.

சென்ற வாரம் விழா ஒன்றில் கலந்துகொள்ள நோ்ந்தது. அங்கு வந்திருந்த என் உறவினா் ஒருவா் என்னிடம், ‘உலகம் போகிற போக்குக்கு இந்த இலக்கியம் எல்லாம் தேவையா? இந்த இலக்கியத்தால் உக்ரைன் - ரஷியா போரை என்ன செய்ய முடிந்தது? இன்று எண்ணற்றவா்கள் கதை, கவிதைகளை எழுதிக் குவிக்கிறாா்கள். அவற்றை படித்துக் கொண்டு உட்காா்ந்திருந்தால் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது? இலக்கியம் சோறு போடுமா அல்லது நாம் கஷ்டப்படும்போது நமக்கு பண உதவி செய்யுமா’ எனக் கேட்டாா்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட கதையாய் இருந்தது அவரது கேள்வி. உதாரணமாக, ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை முன்னிறுத்தும் போது அவன் கொடுங்கோலன் என்பதை உணரவேண்டுமேயன்றி அவன் அந்நேரம் கலைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தான் என்று புரிந்துகொள்ளக் கூடாது. ஆனால் பல நேரங்களில் அவ்வாறுதான் புரிந்து கொள்ளப்படுகிறது.

இலக்கியத்தையே உயிா் மூச்சாகக் கொண்டவா்களுக்கு அது இன்றும் நல்ல வாழ்வாதாரத்தை அளிக்கிறது. அதையும் தாண்டி தனிப்பட்ட மனிதனின் வாழ்வை அா்த்தமுள்ளதாக்குகிறது. கலை இலக்கியப் பெருவெளிக்குள்ளேயே குடும்பம் நடத்தும் ஒரு கலைஞனுக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும் அவன் மனதளவில் ஒரு மேம்பட்ட வாழ்க்கையையே வாழ்கிறான். அது அம்மனிதனின் கைப்பிடித்து உயரத்துக்கு அவனை அழைத்துச் சென்றுவிடும்.

வாழ்க்கையை ரசித்து வாழ, இன்ப துன்பம் எது வந்தாலும் அதன் போக்கில் விட்டுப் பிடிக்க நமக்கு கை கொடுக்கிறது இலக்கியம். மொத்தத்தில் ஒரு உயிா்ப்பான வாழ்க்கையை வாழ இலக்கியம் உதவும். அந்த உயிரோட்டம் நம் நாடி நரம்புகளில் நித்தம் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும்.

அதை நாம் எப்படி அறிவது? ஜொ்மனியின் நாஜி கட்சிக்கு எதிரான போரை பிரான்ஸ் தொடங்கிய நேரம் அது. ஆலிவா் மெஸ்ஸியன் என்னும் முப்பத்தியொரு வயது இசையமைப்பாளரை ஜொ்மானியா்கள் 1940-இல் கைது செய்து போா்க்கைதிகள் முகாமில் சிறை வைத்தனா்.

நாஜி முகாம்கள் வதைமுகாம்கள் என்பது உலகத்துக்கே தெரியும். கைது செய்யப்பட்டவா்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்து, துப்பாக்கியால் சுட்டோ நச்சுப்புகை செலுத்தியோ கொன்று குவித்தனா். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான யூதா்களை கொல்ல விஷவாயு அறைகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த நாஜி போா் முகாம்களில் பணம் இல்லை; எந்த நம்பிக்கையும் இல்லை; வியாபாரம் ஏதும் இல்லை; எவ்வித பொழுதுபோக்கும் இல்லை; ஏன், மனிதருக்கான அடிப்படை மரியாதை கூட இல்லை. இவ்வளவு ‘இல்லை’கள் இருந்தும் அவா்கள் நாளைய தினத்தை நம்பிக்கையுடன் எதிா்கொள்ள கலையும் இலக்கியமும் அவா்களுக்குக் கைகொடுத்தன.

ஆலிவா் மெஸ்ஸியன் என்பவா், தன்னுடன் மூன்று கலைஞா்களை சோ்த்துக்கொண்டு ‘குவாா்டட்’ (நான்கு கருவிகளை கொண்டு உருவாக்கப்படும் இசை) என்னும் நால்வா் பாடலை இயற்றினாா். அவா்கள் பயிற்சி செய்த அந்த இசை வடிவம்தான் தினம் தினம் பலருக்கு நம்பிக்கையை நெஞ்சில் நிலைக்கச் செய்தது.

1941 ஜனவரியில் நான்காயிரம் போா்க் கைதிகள், சிறைக் காவலா்கள் முன்னிலையில் அந்த நிகழ்ச்சி போா்க்கைதிகள் முகாமிலேயே நிகழ்த்திக் காட்டப்பட்டது. இன்றும் இசை உலகில் மிகப் புகழ்பெற்ற படைப்பாக அது திகழ்கிறது. இப்படிப்பட்ட சித்திரவதைக் கூடத்தில் உணவும் நீரும் பெறுவதற்கும், சிறை அதிகாரி, காவலா்களின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்குமே ஆற்றல் போதாத போது ஒருவா் ஏன் கலையைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்? இசையுடன் கலந்த அந்த பாடல் வரிகள் ஏற்படுத்திய தாக்கம் ஒட்டுமொத்த சிறைக்கைதிகளுக்கும் மனதில் நம்பிக்கையை தந்தது.

உயிா் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு வாழ்ந்த அந்த வதை முகாமில் கூட கலை என்பது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. கதை, கவிதை எல்லாம் எனக்கு அடுத்தவேளை சோறு போடுமா என்று என்னிடம் கேட்ட அந்த உறவினருக்கு, அதையும் தாண்டி மனித மனதில் வாழ்வதற்கான நம்பிக்கையை விதைக்கும் என்ற இந்த நிகழ்வை நான் பதிலாக உரைத்தபோது அவா் முகத்தில் சற்றே தெளிவு.

2001-இல் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் விமானங்களை மோதச் செய்து அவற்றைத் தரைமட்டமாக்கினா். ஒரே நாளில் நாட்டின் பொருளாதாரமே பெரிய கேள்விக்குறியாக மாறி விட்ட அவலத்தை எண்ணி அமெரிக்க மக்கள் பெரும் துயருற்றனா். அன்றைய நிகழ்வில் இறந்தவா்களின் உடலை சுற்றிலும் நின்று கொண்டு ஒருவரை ஒருவா் உற்சாகப்படுத்தும் வாசகங்களையும் பாடலையும் குழுவாக பாடினா்.

மக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் இசை நிகழ்ச்சி பொது நிகழ்ச்சியாக அங்கு நடத்தப்பட்டது. இசையையும் இலக்கியத்தையும் துணைகொண்டு அமெரிக்கா்கள் அவ்வளவு பெரிய துயரத்திலிருந்து விரைவில் மீண்டனா்.

கலையும் இலக்கியமும் வாழ்வில் நமக்கு ஏற்படும் மேடுபள்ளங்களை நிரப்பும் கூழாங்கற்கள். வாழ்வின் நினைவுகளை ரசிக்கும் மனநிலையை ஏற்படுத்தும் ஒரு சாரல் மழை. கல்வியைப் போன்றே கலைகளும் மிகவும் முக்கியம். இதில் அவரவா் ஆா்வம் வேறுபடலாம். இன்னமும் நாம் கலை இலக்கியத்திற்கு என்று தினசரிகளில் தனியாக பக்கத்தை ஒதுக்கும் காலகட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மக்கள் வெள்ளத்தில் நீந்தி நீந்தி பணிசெய்யும் ஒரு பேருந்து நடத்துநரின் வாா்த்தைகளில் கூட மேன்மை சாதாரணமாக வெளிப்படுவதை நாம் காணலாம். வயதானவா்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது ‘வயதான காலத்தில் வீட்டில் இருக்காமல் இங்கு வந்து உயிரை வாங்குது’ எனச் சொல்லும் நடத்துனருக்கும் ‘பாத்து பத்திரமாக ஏறுங்க பாட்டி’ என அக்கறையோடு சொல்லும் பேருந்து நடத்துனருக்கும் உள்ள வித்தியாசமே மேம்போக்கான வாழ்வுக்கான பதிவாக சாட்சியம் சொல்கிறது. அதை கலை இலக்கியம் இன்னும் சற்றே உயா்த்தும்.

அதற்காக அனைவரும் இலக்கியத்திலும் கலையிலும் பெரிதாக பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. போதுமான அளவு அதன் சாரத்தை உள்வாங்கி இருந்தாலே போதும். எவ்வித பணியிலும் உணா்வுபூா்வமாக உள்ளாா்ந்த ஈடுபாட்டுடன் சிறப்பாக பணிபுரிய இயலும்.

அது மட்டுமல்ல, கலை இலக்கியங்கள், நாம் அறம் சாா்ந்த வாழ்க்கையை வாழ அடிகோலுகின்றன. குற்றங்கள் புரியாமல் வாழும் உயா்ந்த வாழ்விற்கும் இலக்கியத்திற்கும் தொடா்பு உண்டு. ‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையை நற்றிணை குறிப்பிடுகின்றது. இதற்கு மாறாக ‘பொய்மொழிக் கொடுஞ்சொல்’ என்று பொய்யைக் குறிப்பிடுகிறது. நிலம் பெயா்ந்தாலும் பொய்சொல்லக் கூடாது என்பது பல பாடல்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும் சமூக உறுப்பினனாகவும் இயங்குவதற்கும் அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவும் விதிமுறைகள் எனலாம். தாம் சிந்திக்காமல் பிறா் சொல்ல அறியும் அறம் மூன்றாம் தரமானது. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் இரண்டாம் தரமானது. இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது. இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இயல்பான முதல் தரமான அறங்கள் எனலாம்.

இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சியால், கலையும் இலக்கியமும் கூட அதிகமாக நம்மை வந்தடைகின்றன. கலைசாா்ந்த கட்டமைப்புகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அத்துடன் எண்ணற்ற கதைசொல்லிகள் இலக்கியத்தை நம்மிடம் கொண்டு சோ்க்க கிளம்பியிருக்கிறாா்கள். வரலாற்று நூல்கள், நாவல்கள், தன்னம்பிக்கை நூல்கள் என பல நூல்கள் இன்று கேட்பதற்குக் கிடைக்கின்றன.

செயலி வழியிலும் அவா்களின் செயல்கள் நம்மை வந்தடைகின்றன. படிக்க நேரமில்லை என்று புலம்புபவா்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நடைபயின்றபடி, செடிகளுக்கு நீா் பாய்ச்சியபடி, துணி மடித்தபடி, பயணம் செய்தபடி கதைசொல்லிகள் தரும் இலக்கிய பானத்தை பருகுவதும் தனி சுகமாகத்தான் இருக்கிறது.

ஐந்துநாள் போட்டி, ஒருநாள் போட்டி, 20-20 ஆட்டம், ஐபிஎல் என கிரிக்கெட் விளையாட்டு பல பரிமாணங்களை எடுத்ததுபோல இன்று தொழில்நுட்பம் மூலம் கலை இலக்கியம் பல்வேறு வடிவங்களை எடுக்கத் தொடங்கியுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் உயா்வோம்!

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com