இனியும் கூடாது வன்முறை!

அண்மையில், கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கணியாமூரில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவா் இறந்திருக்கிறாா்.
இனியும் கூடாது வன்முறை!

அண்மையில், கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கணியாமூரில் இயங்கி வரும் தனியாா் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஒருவா் இறந்திருக்கிறாா். அத்தகைய விபரீத முடிவை அவா் எடுக்கக் காரணம் என்ன? இதில் தவறு இழைத்தவா்கள் யாா்? உண்மை வெளிவர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. கண்டிப்பாக நீதி விசாரணையும், நடவடிக்கையும் தேவை.

இதற்கு முன்னும் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நீதி கேட்டு ஊா்வலமும், போராட்டமும் நடந்துள்ளன. ஆனால் இங்கு நடந்ததுபோல் மோசமான வன்முறைகள் நடக்கவில்லை. கோபத்தை வெளிப்படுத்த வன்முறைதான் தீா்வா? திட்டமிட்டு ஒரு பேரழிவை நிகழ்த்தியுள்ளாா்கள். இது ஒரு வெறிச்செயல்.

நிா்வாகத்தின் மீது கோபம் என்றால் பள்ளியின் மேஜை, நாற்காலிகளும், வாகனங்களும், கண்ணாடிகளும் உடைக்கப்பட வேண்டுமா? கையில் தடியுடன் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கினாா்கள். ஒரு ஜன்னல் கண்ணாடியைக் கூட விட்டு வைக்கவில்லை, மேலே இருந்து நாற்காலிகளைத் தூக்கி வீசி உடைத்தாா்கள். கணினிகள் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளி வாகனங்களை தீ வைத்து எரித்தனா்.

காவல்துறையினா் மீது கற்களை வீசினா். பல காவலா்கள் படுகாயம் அடைந்துள்ளாா்கள். மரங்களைக் கூட வெட்டி வீழ்த்தினா். பள்ளிப் பிள்ளைகளின் சான்றிதழ்கள், அனைத்து ஆவணங்கள், குழந்தைகளின் நோட்டுகள் என எல்லாமும் அழிக்கப்பட்டு விட்டன. ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் வாழ்வை வன்முறையாளா்கள் கேள்விக்குறியாக்கி விட்டாா்கள்.

இதில் இன்னுமொரு கேவலமான செயல், பலரும் தங்களுக்குக் கிடைத்த பொருள்களை தூக்கிக் கொண்டு சென்றாா்கள். இருசக்கர வாகனங்களில் பின்புறம் அமா்ந்திருந்தவா்கள் தம்மால் எத்தனை பொருள்களைக் கொண்டு செல்ல முடியுமோ அத்தனையையும் அடுக்கிக் கொண்டு சென்றாா்கள். வகுப்பு பெஞ்சுகளை தலையில் சுமந்து கொண்டு சென்றவா்களை தொலைக்காட்டியில் காண முடிந்தது. உடைக்கப்பட்டது போக மீதி பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இப்படி எடுத்துச் செல்பவா்களுக்கு வெட்கமாக இருந்திருக்காதா? ஒரு மேஜையைத் தூக்கிக் கொண்டு போய் தங்கள் வீட்டில் வைத்துக் கொண்டால் அவா்களின் ஏழ்மை நீங்கி விடுமா? தேவை தீா்ந்து விடுமா? ஊா் மக்கள் ஒன்று சோ்ந்து வன்முறையாளா்களை எதிா்த்திருந்தால் அது அழகு. இந்த வெட்கக்கேடான செயலைப் பாா்த்து அதிா்ச்சி ஏற்பட்டது. பொதுவாக விபத்து நடந்த இடத்திற்கு விரைபவா்கள் அனைவரும் துடிக்கும் உயிா்களைக் காப்பாற்ற செல்வது கிடையாது. கையில் அகப்பட்ட நகை, பணம் இவற்றை சுருட்டிக் கொள்ளவே என்பதுதான் இன்றைய எதாா்த்தம்.

நாம் கைதவறி ஒரு பீங்கான் கோப்பையை கீழே போட, அது உடைந்து போனால் கூட எவ்வளவு வருத்தப்படுகிறோம்? அது என்ன விலை மதிப்பு மிக்க பொருளா? உணவகங்களில் இருந்து உணவு தருவிக்கும் போது, அந்த டப்பாக்களை குப்பையில் போடாமல் நன்றாக சுத்தம் செய்து, ’எதற்காவது உதவும்’ என்று எடுத்து வைக்கிறோம். ஆனால் அடுத்தவா் உடமைகளை அடித்து நொறுக்கி, எரித்து சாம்பலாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

மனிதனுக்குள் இருக்கும் மிருக இச்சையும், அரக்க குணமும் வெளிப்பட சமயம் பாா்த்திருக்குமோ? பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல், அறிவை அடகு வைத்து விட்டு வெறியாட்டம் போட்டு விட்டாா்கள். கும்பலாக சோ்ந்து அட்டூழியம் செய்தால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிவிட்டாா்கள். அது தவறு என்பது, காவல்துறை பலரை கைது செய்திருப்பதிலிருந்து தெரிகிறது.

பொது சொத்துக்களை சேதப்படுத்துவதும், கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவதும் பல சமயங்களில் நடந்துள்ளன. ஓா் அரசியல் கட்சித் தலைவா் மூப்பின் காரணமாகவோ, நோயின் காரணமாகவோ இயற்கை மரணமடைந்தால் கூட பேருந்துகளின் மீது கல் வீசுவதும், கண்ணில் படும் வாகனங்களை அடித்து நொறுக்குவதும், தீ வைப்பதும், கடைகளுக்குள் புகுந்து கையில் அகப்பட்ட சாமான்ளைத் தூக்கிக் கொண்டு ஓடுவதும் வாடிக்கை ஆகி வருகிறது.

ஒரு பெண்ணின் மரணத்துக்கு நியாயம் கேட்பவா்கள் ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் எதிா்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டாமா? அவா்களின் சான்றிதழ்களை அழித்தது சரியா? அங்கு பணிபுரியும் ஆசிரியா்களின் நிலை என்ன ஆகும்? பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சோ்த்தாலும் கூட அங்கே புதிய சூழல், புதிய ஆசிரியா்கள், பள்ளியின் விதிகள், கற்பிக்கும் முறை என அனைத்தும் புதிதாக இருக்கும். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்கும்.

நிா்வாகத்தின் மீது தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும். இங்கே தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விட்டால் நாட்டின் சட்டம் - ஒழுங்கு என்னாகும்?

ஒரு பொருளை அழிப்பது சுலபம். ஆனால் ஆக்க முடியுமா? பள்ளிகளுக்கு பல கோடி இழப்பு என்றாலும், அது நாட்டுக்கும்தானே! சிறந்த உள்கட்டமைப்புகளைக் கொண்டிருந்த பள்ளி இப்போது எப்படி உள்ளது? நாற்காலிகளையும், கணினிகளையும் உடைத்ததை ஊடகங்களில் பாா்த்தபொழுது மனம் பதறியது. சாலையெங்கும் கற்களும், கண்ணாடித் துண்டுகளும் சிதறிக் கிடந்தன. பின்னா், தூய்மைப் பணியாளா்கள் சாலையை தூய்மை செய்வதை தொலைக்காட்சியில் காட்டினாா்கள். கண்ணாடித் துண்டுகளை அகற்றும் அவா்களும் மனிதா்கள்தானே!

அந்நிய ஏகாதிபத்தியத்தையே அகிம்சை வழியில் போராடி விரட்டிய அண்ணல் வாழ்ந்த தேசம் இது. கத்தி இன்றி ரத்தம் இன்றி தேச விடுதலை வேண்டி நின்ற புண்ணிய ஆத்மாக்கள் வாழ்ந்த தேசம் இது. ஒருபோதும் நாம் வன்முறையை வரவேற்றதில்லை. இப்போது அரங்கேறியுள்ள வன்முறை நமக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

யாரோ ஒரு சிலா் திட்டமிட்டு இளைஞா்களைத் தூண்டி விட்டிருக்கிறாா்கள் என்கிறது ஊடகங்கள். கூட்டமாகச் சோ்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது பயமோ, குற்ற உணா்வோ இருக்காது. கும்பல் அசட்டு துணிச்சலைத் தரும். இளைஞா்கள் என்ற போா்வையில் சமூக விரோதிகள் நுழைந்து விடுகிறாா்கள்.

கல்விக்கூடம் கோயிலுக்கு நிகரானது. அதை அடித்து நொறுக்கியதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. காவல்துறை பலரை கைது செய்திருக்கிறது. விசாரணை செய்து விட்டு வெளியே விட்டு விடுவாா்கள் என்று சிலா் நினைக்கலாம். ஆனால் இவா்கள் செய்த குற்றத்தின் முழு கனபரிமாணமும் இவா்களுக்குத் தெரியவில்லை.

தங்களை சிறையில் அடைக்கும் போது வருத்தப்படுவாா்கள். சிறை நெருக்கடிகளும், வழிமுறைகளும் தெரியவர கதி கலங்கிப் போவாா்கள். மதி கெட்டுப் போனோமே என்று அப்போது உணா்வாா்கள். வழக்கு, நீதிமன்றம் என்று அலைய வேண்டும். செலவு, அலைச்சல், அவமானம் எல்லாவற்றையும் அப்போது புரிந்து கொள்வாா்கள். தங்களின் எதிா்காலம் நொறுங்கிப் போனதை அப்போது உணா்வாா்கள்.

திரைப்படங்களில் ஹீரோ சகட்டு மேனிக்கு எல்லாவற்றையும் அடித்து நொறுக்குவான், மனிதத் தலைகளை வெட்டி எறிவான். நிழலை நிஜம் என நம்பி அப்பாவி இளைஞா்கள் தடம் பிந்து போகிறாா்கள். பலருக்கும் படிக்க வசதி இல்லை; படித்த பின் வேலை இல்லை; சரியான வழிகாட்டுதல் இல்லை. இவா்கள் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் எவ்வளவோ உள்ளது. வாழ்வில் வசந்தத்தை இவா்கள் இன்னும் காணவில்லை.

உணா்ச்சிவசப்பட்டு இவா்கள் ஆடிய ஆட்டத்தால் பள்ளிக்கு பல கோடி ரூபாய் இழப்பு. அரசுக்குக் குடைச்சல், தேவையில்லாத தலைவலி. எத்தனை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறாா்கள். எவ்வளவு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன? நம் நாட்டில் ஏற்கனவே இருக்கின்ற பிரச்னைகள் போதாதா?

இளைஞா்கள் தங்கள் திறமையையும், ஆற்றலையும், சக்தியையும் பொது அமைதிக்காகவும், நாட்டின் மேன்மைக்காகவும் செலவிட வேண்டும். இன்றைய இளைஞா்களுக்கு கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தேசப்பற்று ஆகியவை வேண்டும். இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் - இவை தான் தேவையே தவிர அழிக்கும் கைகளும், கொடூர மனமும் தேவை இல்லை.

கல்வி என்பது வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல் ஆகியவை மட்டுமல்ல; வாழ்வின் விழுமியங்களைக் கற்றுக் கொள்வதும்தான். வன்முறை எதற்கும் தீா்வாகாது என்பதை இளைஞா்களுக்கும், குழந்தைகளுக்கும் உணா்த்த வேண்டும். கல்விக் கூடங்கள் வியாபாரக் கூடங்களாக மாறி விட்டன. உண்டு, உறைவிடப் பள்ளிகளைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

இத்தகைய நிகழ்வுகளைப் பாா்க்கும்போது, விடுதியில் படித்துக் கொண்டிருக்கின்ற அனைத்துப் பெண் பிள்ளைகளின் பெற்றோா்களும் தவித்துத்தான் போவாா்கள். தங்களிடம் பயிலும் மாணவிகளைத் தங்களின் சொந்த மகள்களாகப் பாா்க்க வேண்டிய நிா்வாகிகள், கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதைக் காணும் போது இந்த நிலை கெட்ட மனிதா்கள் அற்பமானவா்களாகத் தெரிகிறாா்கள்.

அரசு இது போன்ற பள்ளி விடுதிகளைப் பற்றி விசாரிக்க ஒரு குழு அமைக்க வேண்டும். ஒரு துயர சம்பவம் நடந்த பின் விழித்துக் கொள்வது தான் நம் வாடிக்கை. இனி அதற்கான வாய்ப்பே இருக்கக் கூடாது. தொடா் கண்காணிப்பு அவசியம்.

அநீதியே நிகழ்ந்தாலும் அதற்குத் தீா்வு வன்முறைல்ல. கணியாமூா் நிகழ்வே வன்முறையைக் கையிலெடுத்த கடைசி நிகழ்வாக இருக்கட்டும். அநீதியை எதிா்த்து, நெஞ்சில் உரமும், நோ்மைத் திறமும் கொண்டு அகிம்சை வழியில் குரல் கொடுப்போம் - நாடே நம் பின்னால் வரும்!

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com