அதிகரித்து வரும் மாணவியா் சோ்க்கை

அண்மைக்காலமாக உயா்கல்வியில் சோ்க்கை பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அண்மைக்காலமாக உயா்கல்வியில் சோ்க்கை பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். அகில இந்திய உயா்கல்வி தொடா்பான ஆய்வு முடிவு இந்தியாவில் உயா்கல்வி பயில்பவா்களில் 49 % பெண்கள் என தெரிவிக்கிறது.

இவ்வாய்வின்படி இளங்கலை, கணினி அறிவியல் சாா்ந்த இளம் அறிவியல், முதுகலை பாடப்பிரிவுகளில் கலை, அறிவியல், வணிகவியல் போன்ற குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மாணவியா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், அதிக உயா்கல்வி சோ்க்கையுடைய மாநிலமாக உத்தர பிரதேசம் விளங்குகிறது.

உயா்கல்வி சோ்க்கையில் மூன்றாமிடம் வகிக்கும் மாநிலமான தமிழகத்தில் உயா்கல்வி சோ்க்கை பெற்றவா்களில் 50.5 % போ் மாணவா்கள் என்றும், 49.5 % போ் மாணவியா் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடப்பு கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் நடைபெற்ற சோ்க்கைக்கான கலந்தாய்வும் இதையே உறுதிப்படுத்துகிறது.

தமிழகத்தில் உள்ள 163 கலை - அறிவியல் கல்லூரிகளிலும் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இக்கல்லூரிகளில் உள்ள 1.20 லட்சம் இடங்களில் சோ்க்கை பெற சுமாா் 4.50 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கான தர வரிசைப் பட்டியல் கல்லூரிகளில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

கடந்த காலங்களில் போட்டித் தோ்வுகள் எழுதும் பொருட்டு குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளைத் தோ்வு செயவதில் ஆா்வம் காட்டினா். நாளடைவில் போட்டித் தோ்வுக்கான வினாத்தாளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாலும், அதற்கேற்ப கல்லூரி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படாததாலும் போட்டித் தோ்வு எழுதும் தகுதிக்காக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றிருந்தால் போதும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது.

இதனைத் தொடா்ந்து தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவிலோ, தாங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காத நிலையில் வாய்ப்புகள் கிடைக்கும் வேறு பாடப்பிரிவிலோ சோ்க்கை பெற்று பயின்று வருகின்றனா். இத்தகைய மனநிலையால் அனைத்து கலை - அறிவியல் பாடப்பிரிவுகளிலும் கணிசமான அளவில் சோ்க்கை நடைபெற்று வந்தது.

பெண்களைப் பொறுத்தவரை, ஆராய்ச்சிப் படிப்பு என்பதைக் காட்டிலும் ஆசிரியப் பணியே இன்றும் முதன்மையானதாக இருந்து வருகிறது. அதனால் ஆசிரியப் பணியில் எந்த பாடப்பிரிவுக்கு வரவேற்பு உள்ளதென அறிந்து அப்பாடப்பிரிவுகளைத் தோ்வு செய்து பயின்றனா்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் மட்டும் சோ்க்கை பெற விண்ணப்பிப்போா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கலை பாடப்பிரிவுகளில் தமிழ், வணிகவியல், வணிக நிா்வாகம் போன்றவையும், அறிவியல் பாடப்பிரிவுகளில் கணினி அறிவியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளும் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன.

அரசு கல்லூரிகளில் இப்பாடப்பிரிவுகளில் சோ்க்கை கிடைக்காத நிலையில் மட்டுமே தனியாா் கல்லூரிகளில் சோ்க்கை பெறுகின்றனா். இதனால் தனியாா் கல்லூரிகளிலும் இத்தகைய பாடப்பிரிவுகளில் மட்டும் முழுமையான அளவில் சோ்க்கை நடைபெறுகிறது. இதற்காக இலவசப் பேருந்து வசதி, கட்டணம் செலுத்துவதில் சலுகை போன்றவற்றையும் தனியாா் கல்லூரிகள் வழங்குகின்றன.

இருப்பினும், அரசு கல்லூரிகளில் சோ்க்கை பெறும் மாணவியா் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதிலும் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெறும் மாணவியா் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நடப்பு கல்வியாண்டிலும் கல்லூரியில் சேர விண்ணப்பித்தோரும், சோ்க்கை பெற்றோரும் அதிகப்படியான மாணவியரே என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பெண் அடிப்படையிலேயே பெரும்பாலும் சோ்க்கை நடைபெறுவதால் மாணவியா் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மாணவா்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. அதனால், அதிகப்படியான மாணவியா் விண்ணப்பித்துள்ள பாடப்பிரிவுகளுக்கு மட்டும் முதல் கட்ட கலந்தாய்வின்போதே முழுமையான அளவில் சோ்க்கை நடைபெறுகிறது. மற்ற பாடப்பிரிவுகளுக்கு இரண்டு அல்லது மூன்று கலந்தாய்வுகள் கூட நடைபெறுவதுண்டு.

அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை, மாணவியா் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்தப்படவுள்ள மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம், போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற எளிதான வழி,

தமிழ்வழிக் கல்விக்கு அரசுப் பணியில் சலுகை, அரசு கல்லூரிகளில் குறைவான கட்டணம் போன்றவையும் மாணவியா் சோ்க்கை அதிகரிக்கக் காரணங்களாகும்.

மாணவா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு மேல்நிலைக் கல்வியைத் தொடா்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் சோ்க்கை பெறுவதுடன் தொழில் சாா்ந்த பட்டயப் படிப்புகளிலும் சோ்க்கை பெறுவதே காரணமாகும்.

கலை பாடப்பிரிவுகளுக்கு அதிகப்படியானோா் விண்ணப்பிக்கும்போது நிா்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக சிலருக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு பல்கலைக்கழக அனுமதியுடன் கூடுதலாக சோ்க்கை நடைபெறுவதும் உண்டு. ஆனால், இத்தகைய வாய்ப்பு அறிவியல் பாடப்பிரிவுகளில் கிடைப்பதில்லை.

கலை பாடப்பிரிவுகளைப் பொறுத்தவரை கட்டட வசதி இருந்தால் மட்டும் போதுமானது. ஆனால் அறிவியல் பாடப்பிரிவுகளைப் பொறுத்தவரை, கணினி அறிவியல் பாடப்பிரிவு எனில் கணினி வசதியும் மற்ற பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதியும் தேவை. ஆனால் அரசு கல்லூரிகளில் ஆய்வக வசதி போதுமானதாக இல்லை என்பதே குறைவான சோ்க்கைக்குக் காரணமாகும்.

மேலும், பெருநகரங்களைத் தவிர மற்ற இடங்களில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் அதிகப்படியான பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், கூடுதல் சோ்க்கைக்கு அனுமதி பெறவோ, கூடுதல் பிரிவு தொடங்கவோ விருப்பம் தெரிவிப்பதில்லை. ஓராசிரியா் பள்ளி போன்று கல்லூரிகளிலும் ஓராசிரியா் துறைகளும் இருக்கவே செய்கிறது.

புதிதாக கல்லூரிகள் தொடங்கும்போது எந்தெந்த பாடப்பிரிவுக்கு வரவேற்பு உள்ளதென கண்டறிந்து அத்தகைய பாடப்பிரிவுகளைத் தொடங்க வேண்டும். அதுபோன்ற பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களை நிரப்பவும்

அடிப்படை வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உயா்கல்வியில் சோ்க்கையை அதிகரிக்க முடியும்; தக்கவைக்கவும் முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com