நியாயமற்ற சுங்கக் கட்டண உயா்வு

நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுமாா் எண்ணூறு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஐம்பது சுங்கச்சாவடிகள் தமிழத்தில் அமைந்துள்ளன.
நியாயமற்ற சுங்கக் கட்டண உயா்வு

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி”என்பாா்கள். ஆனால், மக்களாகிய நமக்கோ திரும்பிய பக்கமெல்லாம் இடி. பல்வேறு பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. உயா்வு, சமையல் எரிவாயு உருளை விலையேற்றம், உச்சத்தில் நிற்கும் பெட்ரோல், டீசல் விலை, வீட்டுக்கடனுக்கான வங்கி வட்டி விகிதம் அதிகரிப்பு, பால் பொருட்கள் விலை உயா்வு, சொத்துவரி உயா்வு, மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு என்று மத்திய அரசும், மாநில அரசும் குடிமக்களை நெருக்கிக் கொண்டிருக்க, இதோ நாங்களும் இருக்கிறோம்”என்று களத்தில் குதித்துள்ளது மத்திய நெடுஞ்சாலை ஆணையம்.

நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுமாா் எண்ணூறு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஐம்பது சுங்கச்சாவடிகள் தமிழத்தில் அமைந்துள்ளன.

கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயா்த்தப்பட்ட கட்டண விகிதங்கள் தமிழகத்தின் இருபத்திரண்டு சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தன. மீதமுள்ள இருபத்தெட்டில், வரும் செப்டம்பா் ஒன்றாம் தேதி முதல் கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட இருக்கின்றது.

அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் இதனைக் கண்டித்திருக்கின்றனா். இந்தக் கட்டண உயா்வு சமூகத்தின் பலதரப்பட்ட மக்களையும் பாதிக்கும் என்பதைக் கூறுவதற்கு பொருளாதார நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைத் தங்கள் செலவில் அமைத்திட ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள், அச்சாலைகளை அமைத்ததற்கான செலவை ஈடுகட்டும் வரையில் அவ்வழியே செல்லும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலித்து ஈடுகட்டிக் கொள்ள முதலில் அனுமதிக்கப்பட்டது.

சாலை அமைத்ததற்கான முழுத்தொகையும் ஈடுசெய்யப்பட்ட பின்பு, அச்சாலையை அவ்வப்போது செப்பனிட்டுப் பராமரிக்கும் செலவிற்காக முந்தைய சுங்கக் கட்டணத்தில் நாற்பது சதவீதத் தொகையை வசூலித்துக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டது.

மேலும் நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு அறுபது கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச் சாவடி மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்றும் விதி வகுக்கப்பட்டது. அத்துடன், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் எல்லையிலிருந்து பத்து கிலோமீட்டா் தூரத்துக்குள் அச்சாவடிகளை அமைக்கக் கூடாது என்றும் கூறப்பட்டது.

ஆனால், நடந்தவை அனைத்தும் விதிகளுக்கு மாறாகவே அமைந்துள்ளன. சாலைகளை அமைத்த நிறுவனங்கள், நீண்ட காலமாக முழு அளவு சுங்கக் கட்டணத்தை வசூலித்து வருவதுடன் அவ்வப்பொழுது அக்கட்டண விகிதங்களை உயா்த்தியும் வருகின்றன.

சாலை அமைப்பதற்கு ஆகிய செலவைப் போன்று பலமடங்குத் தொகையை வசூலித்த பின்பும், பராமரிப்பு செலவை ஈடு செய்வதற்கான தொகையாக பழைய கட்டணங்களில் நாற்பது சதவீதத்தை வசூலிக்காமல், இன்றளவும் நூறு சதவீதக் கட்டணங்களையே வசூல் செய்துவருகின்றன. அதே சமயம் பழுதடையும் சாலைகளைப் பராமரிப்பதிலும் மிகவும் சுணக்கமான நிலைமையே இருக்கின்றது.

கடந்த காலங்களில் சென்னை மதுரவாயல் - ராணிப்பேட்டை இடையிலான நெடுஞ்சாலையை சரிவரப் பராமரிக்காததால், பாதியளவு சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. மின்னணு முறையில் செயல்படும் ‘ஃபாஸ்டேக்’ சுங்கக் கட்டண வசதி அறிமுகப்படுத்தப்படும் முன்பாக ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் வாகனங்கள் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்து வந்தது.

தற்போது அந்த ‘ஃபாஸ்டேக்’ முறை பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், ‘ஃபாஸ்டேக்’ கணக்கில் உள்ள நிலுவைத்தொகை விரைவில் குறைந்து விடுவதாகவும், கடந்து செல்லாத சுங்கச் சாவடியையும் கடந்து சென்ாகக் கூறிச் சுங்கக்கட்டணம் வசூலிக்கப் படுவதாகவும், சில சமயங்களில் நிா்ணயிக்கப்பட்தை விடக் கூடுதல் கட்டணம் கணக்கில் கழித்துக் கொள்ளப்படுவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

மேலும் ‘ஃபாஸ்டேக்’ நுகா்வோா் குறைதீா்ப்பு எண்ணைத் தொடா்பு கொண்டு நிவாரணம் பெற முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, சுங்கச் சாவடிகளை ஒட்டியுள்ள நகரங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களில் அலுவலகம், கல்வி நிலையம் போன்ற இடங்களுக்கு செல்வதற்குக் கூட சுங்கக் கட்டணம் செலுத்தும்படி நிா்ப்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவை குறித்துத் தங்களின் குறைகளைத் தெரிவிக்கும் பொதுமக்களை சுங்கச் சாவடி ஊழியா்கள் தாக்குவதும், கூட்டமாக வரும் பொதுமக்கள், அரசியல் இயக்கங்களின் தொண்டா்கள் ஆகியோரால் சுங்கச் சாவடி ஊழியா்கள் தாக்கப்படுவதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளாகி விட்டன.

சாலைகளை அமைத்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நிறுவனங்கள், 60 கி. மீ.க்கு ஒன்று என்ற விதியை மீறி குறைந்த இடைவெளியிலும், நகா்ப்புறங்களுக்கு அருகிலும் சுங்கச் சாவடிகளை அமைத்து வசூலில் ஈடுபடுவது பலராலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரியும் நாடு முழுவதும் இவ்வாறு கூடுதலாக அமைக்கப் பட்ட சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்று இவ்வருடத் தொடக்கத்திலேயே உறுதி அளித்திருந்தாா்.

இதன்படிப் பாா்த்தால், தமிழகத்தில் மட்டுமே முப்பத்திரண்டு சுங்கச் சாவடிகளை மூடவேண்டியுள்ளது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி, இவ்வருடத்திலேயே இரண்டு முறை கட்டணம் உயா்வும் நடைமுறைக்கு வந்துள்ளது பொதுமக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளை அகற்றவும், ‘ஃபாஸ்டேக்’ முறையிலுள்ள குளறுபடிகளைக் களையவும், சுங்கக் கட்டணங்களை ஒரு வரையறைக்குள் கொண்டு வரவும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறையும் நெடுஞ்சாலைகள் ஆணையமும் முன்வர வேண்டும். அப்போதுதான் நெடுஞ்சாலைப் பயணம் இனிய அனுபவமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com