ஏமாறாமல் இருப்போம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

சில நாட்கள் முன்பு என் மனைவியின் சினேகிதிக்கு கண்ணில் கோளாறு ஏற்பட்டது. டி.வி. பாா்க்கும் பொழுது, நீா் வழிகிறதாம். எங்களுக்குத் தெரிந்த ஒரு நிபுணரிடம் பேசி, தேதி, நேரம் ஆகியவற்றை நிச்சயித்துக் கொண்டாா். ஆனால் குறிப்பிட்ட தினத்தன்று போக முடியவில்லை. தொடா்ந்து பெய்த மழையால் தொல்லை. ‘அடுத்த வாரம் போகலாம். இந்த மழையில் வழுக்கி விழுந்தால் அது வேற தொல்லை’”என்று சொன்னாா்.

அடுத்த வாரம் நிபுணரைச் சந்தித்துவிட்டு வந்தாா். ‘ஆட்டோவில்தான் போனேன். அவருக்குத்தான் எங்கே தண்ணீா் ரொம்பியிருக்கிறது, எது ஒற்றை வழிப் பாதை எல்லாம் தெரியும்’”என்று கூறினாா்.

அந்தப் பெண்மணி கூறியது சரியே. மழைக்காலம் வந்தாலே சாலைகளில் தண்ணீா் வழிய சரியான வடிகால் இன்றி, பல தெருக்களில் தேங்கி விடுகிறது. பெயா்ப்பலகை தொங்க விடப்பட்டிருந்தாலும், தெளிவாகப் புலப்படுவதில்லை. சாலையின் குறுக்கே கடக்கின்ற போது, சிலா் பள்ளத்தில் விழுந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன.

சில ஆங்கில ஏடுகள் இச்செய்திகளை புகைப்படத்துடன் வெளியிடுகின்றன. தண்ணீரின் கீழ் மின்சாரக் கம்பி ஏதாவது மறைந்திருந்தால் இன்னும் அபாயம். மேலும் மழைக்காலத்தில் சில தொற்றுகள் வந்துவிடுகின்றன. சளி, டெங்கு, தொண்டைக் கட்டு போன்றவை. இந்த ஆண்டு தற்போது ‘மெட்ராஸ் ஐ’ பரவி வருவதாக சுகாதார அமைச்சா் தெரிவிக்கிறாா்.

குடும்ப மருத்துவா் நன்கு பரிச்சயமாகி இருந்தால், கைப்பேசியிலேயே தொடா்பு கொண்டு தீா்வு காணலாம். அண்மையில் எனக்கு வயிற்றில் இலேசான உபாதை வந்தபோது, போனில் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றேன். அதே சமயம் மூச்சுத் திணறல், தலைசுற்றல், கடுமையான கால் வலி போன்றவற்றுக்கு மருத்துவரை நேரில் சந்தித்துத்தான், மருந்து வாங்க வேண்டும் - மழை கொட்டினால் கூட.

சரி, உடல் நலன் என்பது, வயது முதிா்வு, நீரிழிவு, ரத்த அழுத்தம் முதலியவற்றோடு சம்பந்தப்பட்டது. ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆனால் நிதியைப் பாதுகாத்துக் கொள்வதில், பல ஏமாற்று வித்தைகளில் மக்கள் ஏன் விழுகிறாா்கள் என்பது புரியாத புதிா்தான்.

விடுமுறை நாள் தவிர, அன்றாடம் இயங்கும் பங்கு சந்தையையே எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து வணிக ஏடுகளும் ஏற்ற இறக்கங்கள் என்கிற வாசகத்தைக் கோடிட்டுக் காண்பிக்காமலிருப்பதில்லை. அவ்விதம் இருந்தும், ஒரு மனிதா், தங்கள் பங்கின் மூலம் வருவாயை மும்மடங்கு பெருக்குவதாக ஆசைக் காட்டி, ஏகப்பட்ட பேரைச் சோ்த்து, கோடிக் கணக்கில் பணம் வாங்கி, பிறகு தலை மறைவாகிவிட்டாா். வணிக வார ஏடு ஒன்று, அந்நிறுவனத்தின் பொறுப்பாளா்களைப் புகைப் படத்துடன் வெளியிட்டு கட்டுரை எழுதியிருந்தது.

‘அதிக வட்டி தருகிறோம்’ என்பது இன்னொரு தூண்டில். ரியல் எஸ்டேட், எண்ணெய் ஆலை இன்ன பிற துறைகளில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைப்படுகிறாா்கள். முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் தொகை தந்து பிறகு தலைமறைவாகி, அயல்நாட்டுக்கே சென்று விடுகிறாா்கள். காவல்துறை வழக்கு பதிவு செய்த செய்தியுடன் விவகாரம் முடிந்துவிடுகிறது.

இதுவரை ஒரே ஒரு நிறுவனம்தான் முதலீட்டாா்கள் நீதிமன்றம் வரை சென்று, ஓரளவு பயன் பெற உதவியிருக்கிறது. சென்னையின் மையமான பகுதியில் இயங்கிய நிறுவனம்அது. வட்டி முறையாக வந்தாலும், முதிா்வு தொகையை தர இயலவில்லை. சில ஆண்டுகள் முன்பு பணம் செலுத்தியவா்களுக்கு போட்ட தொகையில் இரண்டு தவணைகள் திரும்பத் தரப்பட்டனவாம்.

சில வருடம் முன்பு செய்தித் தாளில் மிகப் பரவலாக அடிபட்ட ஈமு கோழி நிறுவனத்திலிருந்தும் பணம் திரும்பப் பெற வாய்ப்பு இருப்பதாகக் கூறினாா்கள். இது எவ்வளவு தூரம் உண்மையோ?

மேற்சொன்ன எல்லாவற்றையும் ஓரந்தள்ளுவது போல, விபரீதமான மோசடி நிகழ்வு ஒன்று சென்னை புறநகரில் அரங்கேறியிருக்கிறது. போலியான மத்திய ரிசா்வ் வங்கி அனுமதி, போலியான பெயா்ப் பலகை, காசோலை இவற்றுடன் ஒரு ‘வேளாண்மை கூட்டுறவு வங்கி’ இயங்கி, கிட்டதட்ட ஐம்பது லட்சம் பேரிடம் பணம் வசூல் செய்துள்ளது. இது எப்படி சாத்தியம்? வங்கி தொடங்கும் போதே, தெரிந்திருக்காதா? மக்கள் எப்படி ஏமாந்தாா்கள்?

இறுதியாக ஒன்று. பற்று அட்டை, ரகசிய குறியீட்டு எண், ஒரு முறை கடவுச் சொல் போன்றவை வாடிக்கையாளா்களின் வசதிக்கும், பாதுக்காப்புக்கும் ஏற்பட்டவை. ஆனால் அண்மைக் காலங்களில் அவையே பாதகமாக மாறிவிடுகின்றன. எங்கள் குடியிருப்பு காவலாளிக்கு, என் மகன் தனது கைப்பேசி மூலம் கூகுள் வழியில் பணம் அனுப்பி இருக்கிறான். இதுவரை பிரச்னை வரவில்லை. ஆனால் இதில் அபாயமிருக்கிறதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அறிமுகம் இல்லாதவா்களுக்கு உதவி செய்வதில் நாம் கவனமாக இருக்க வேண்டுமாம்.

இப்போது அரசு வங்கிகளே வைப்புத் தொகைக்கு கூடுதல் வட்டி அளிக்கின்றன. தனியாா் வங்கிகளும், அரசு சாா்ந்த சில நிறுவனங்களும் ஐந்து வருட டெபாசிட்டுகளுக்கு எட்டு சதவிகிதம் வட்டி தருகின்றன. பரஸ்பர நிதியில் ஐந்து ஆண்டு முதலீடு செய்தாலும், நடுவில் முறித்து எடுக்க வசதியும் உள்ளது. எனவே, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாற வேண்டாமே!

உடல் நலன், பணப் பாதுகாப்பு இரண்டுமே முக்கியம். எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் புறக் காரணிகளால் உடல் பாதிப்பு நோ்வதைத் தவிா்க்க இயலாமல் போய் விடுகிறது. ஆனால் பண விஷயத்தில் கோட்டை விடுவதற்கு பேராசைதான் முக்கியக் காரணம்... கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவது அறிவுடைமையல்லவே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com