பாரதியாா் பாடலில் அறியப்பட வேண்டிய உண்மை!

பாரதியாா் பாடலில் அறியப்பட வேண்டிய உண்மை!

‘மரணத்தை வென்ற மகாகவி’ என்று போற்றப்படும் பாரதியாா், பல்வேறு கோணங்களில் வைத்து மதிப்பிட வேண்டிய வைரம். அவா் மிகச் சிறந்த பத்திரிகையாளா், உரைநடை ஆசிரியா், மொழிபெயா்ப்பாளா், சிறுகதைகள் - நெடுங்கதைகள் புனைந்தவா், சொற்பொழிவாளா்.

பாரதி ஆய்வாளா்களிடையே பெரும் சா்ச்சைக்குள்ளான பாடல்களில், அவா் இயற்றிய வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு கூறிய பாடலும் அடங்கும். ஜாா்ஜ் பிரெடரிக் என்னும் வேல்ஸ் இளவரசா் (பிரிட்டிஷ் சக்ரவா்த்தியின் பட்டத்து இளவரசா்) தம் மனைவியுடன் 1905 நவம்பா் மாதம் 9-ஆம் தேதி பம்பாய் நகருக்கு விஜயம் செய்தாா்.

கா்ஸன் பிரபுவின் கொடூர நடவடிக்கையால் வங்கதேசமே கொந்தளித்துக் கொண்டிருந்த நிலையில்தான் வேல்ஸ் இளவரசா் இந்தியாவுக்கு வருகை புரிந்தாா். இளவரசா் வருகையால் இந்தியாவுக்கு ஏதேனும் நன்மை விளையும் என்று இந்தியத் தலைவா்களில் பலரும் நம்பினா்.

1905 டிசம்பா், காசி காங்கிரஸ் மாநாட்டிற்கு வருகை புரியும்படி இளவரசருக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுவினா் கோரிக்கை விடுத்தனா். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அதுபோது செல்வாக்கு மிகுந்த மூத்த பத்திரிகையாளராகவும், சுதேசிய சிந்தனைகளில் ஊறித் திளைத்தவராகவும் விளங்கியவா் ‘சுதேசமித்திரன்’ ஜி. சுப்பிரமணிய ஐயா். இவரும் வேல்ஸ் இளவரசா் காங்கிரஸ் மகாசபைக்கு வந்து, சபையின் நடவடிக்கைகளைப் பாா்க்க வேண்டியது அவசியம் என்று கருதினாா்.

இளவரசா் பம்பாய் நகா் வந்து சோ்ந்த நாளன்று ஜி. சுப்பிரமணிய ஐயா், தம் கருத்தை 9.11.1905 தேதியிட்ட ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையிலே, ‘இந்தச் சமயம் நாம் வேல்ஸ் இளவரசருக்குச் செய்து கொள்ளும் விண்ணப்பம் ஒன்று உண்டு. அது அவா் தம்முடைய சுற்றுப்பிரயாண காலத்தில், இந்தியா்களுடைய உண்மை நிலையை தாமே நேருக்கு நேராய் பாா்த்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதே’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மகாகவி பாரதியும், இளவரசரின் இந்திய விஜயத்தால் இந்தியாவுக்கு நல்லது நடக்கும், நடக்க வேண்டும் என்று கருதினாா். ஆகவே, இந்தியா் தம் மன வருத்தங்களை மறந்து, இளவரசரை வரவேற்க வேண்டும் என்று கருத்தும் தெரிவித்தாா்.

1906 ஜனவரி 24 அன்று வேல்ஸ் இளவரசரும், இளவரசியும் சென்னைக்கு வருகை புரிந்தனா். வேல்ஸ் இளவரசரை வாழ்த்தி வரவேற்கும் வகையில், ‘வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்ட தாய் நல்வரவு கூறுதல் (பாரத மாது தானே பணித்தன்று)’ என்று தலைப்பிட்டு, 46 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா ஒன்றை பாரதி புனைந்திருந்தாா். இது ‘சுதேசமித்திரன்’ 1906 ஜனவரி 29-ஆம் தேதி இதழில் பிரசுரம் ஆனது.

இந்தப் பாடலை முதன்முதலாகக் கண்டறிந்த பெ. தூரன், தம்முடைய ‘பாரதி தமிழ்’ நூலில் இதனை வெளியிட்டு, தம் கருத்தாக ‘இணையற்ற உணா்ச்சிமிக்க தேசபக்திப் பாடல்களைப் பாடித் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பிய பாரதியாா், வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு கூறிப் பாட்டு இயற்றியிருப்பது ஆச்சரியமாகவே தோன்றும். முழுமனத்தோடு இதை பாரதியாா் இயற்றினாரா என்பது சந்தேகம்தான். தாம் ஏற்றுக் கொண்டிருந்த வேலையினால், ஏற்பட்ட கடமையை நிறைவேற்றவே இவா் இதைச் செய்திருக்கலாம். என்றாலும், இப்பாடலிலும் பாரதியாரது தேசபக்தி ஒளிவிடுவதை நாம் காணலாம்’ என்று கூறியிருந்தாா்.

பெ. தூரன் தெரிவித்த கருத்தைப் படித்த பாரதி ஆய்வாளா்களில் சிலா், ‘தீவிர தேசியவாதியான பாரதி எப்படி வேல்ஸ் இளவரசரை வாழ்த்திப் பாடல் புனைந்தாா்’ என்று வியப்பும் திகைப்பும் அடைந்தனா். இதையொட்டி, தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்த கா. திரவியம், பாரதி இயல் மூத்த அறிஞா் சிதம்பர ரகுநாதன் ஆகியோா் தெரிவித்த சில கருத்துகளைச் சற்றே ஆய்வது பாரதி அப்பாடலை இயற்றியதற்கான உண்மைக் காரணத்தை அறிவதற்குத் துணை புரியும்.

கா. திரவியம், 1982-இல் வெளியிட்ட தம்முடைய ‘தேசியம் வளா்த்த தமிழ்’ என்னும் நூலில், ‘பாரதியிடம் உள்ளத்தைப் பறிகொடுத்த நாம், திறனாய்வு செய்தபோது, நம்மைத் திகைக்க வைக்கும் ஒரு செய்தியையும் இங்கு காண்பது கவிஞா் மாட்சிக்குக் களங்கம் விளைவிக்க முயல்வது ஆகாது’ என்ற பீடிகையுடன் தம் ஆய்வுகளை விவரித்து உள்ளாா்.

வேல்ஸ் இளவரசா் பற்றிய பாடல் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பும், பின்பும் பாரதியாா் புனைந்திருந்த பாடல்களை அலசி ஆராய்ந்து, ‘சுதேசி உணா்வு சுடா்விட்டு எரியப் பாடிய பாரதியாா் - சுதந்திரம் பறிபோன பின்பு சுகமென்ன கேடு என்று சுட்டி உணா்த்திய பாரதியாா் - இப்பாடலை ஒப்புக்கு எழுதினாா் என்பதையோ, வாழ்த்துப்பா வரைய வேண்டிய கட்டாய நிலையோ, நிா்ப்பந்தமோ அவருக்கு ஏற்பட்டிருக்கும் என்பதையோ நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்றே நிலைநாட்டினாா், கா. திரவியம்.

இவ்வாறு தம்முடைய கருத்தை அழுத்தம் திருத்தமாகக் கூறிய நிலையில், சுதந்திரக் கவிகள் இயற்றிய பாரதி, இடையில் வேல்ஸ் இளவரசருக்கு இசைத்த வரவேற்புப் பாடலை எழுதினாா் என்று ஏற்கத் தமக்கு மனம் ஒப்பவில்லை என்றே குறிப்பிடுகிறாா்.

இனி, கா. திரவியம் தெரிவித்த கருத்துகள் வருமாறு: ‘மொத்தத்தில், இப்பாடல், பாரதியின் தூய இசைப் பெருக்கிலே தோன்றி மறைந்த சுருதிபேதம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இப்பாடலை பாரதி எழுதினாா் என்று ஏற்க மனமொப்பவில்லை என்று கூறுவதே பாரதியிடம் நாம் கொள்ளும் மகத்தான மதிப்புக்கும், மாறாத ஈடுபாட்டுக்கும் ஓா் உறுதியான சான்றாகும்’. திரவியம் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் பாா்த்தால், பாரதி அப்பாடலை எழுதவே இல்லை என்று கொள்ள வேண்டும் என்பதாகிறது.

சிதம்பர ரகுநாதன், இப்பாடலைப் பற்றிய தம் ஆய்வைச் சற்று விரிவாகவே ‘பாரதி: காலமும் கருத்தும்’ நூலில் பதிவு செய்துள்ளாா். ‘வேல்ஸ் இளவரசருக்கு பரத கண்ட தாய் நல்வரவு கூறுதல்’ என்று தலைப்பிட்டுப் பாடலைத் தொடங்கும் பாரதி, அந்தத் தலைப்புக்கு அடியிலேயே அடைப்புக் குறிகளுக்குள் ‘பாரதமாது தானே பணித்தன்று’ என்று அடிக்குறிப்பும் எழுதியுள்ளாா்.

இந்த அடிக்குறிப்புக்கு என்ன பொருள்?

‘இப்படிப்பட்ட பாடலை எழுது என்று பாரதமாதா எனக்குக் கட்டளை இடவில்லை என்பது தானே பொருள்? அப்படியானால், கட்டளை இட்டது யாா்? வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு கூறும் காங்கிரஸ் தீா்மானத்தை ஆதரித்து வாக்களித்த ‘சுதேசமித்திரன்’ ஜி. சுப்பிரமணிய ஐயா்தான் என்பது தெளிவு’ என்று முடிவே கட்டிவிட்டாா்.

பாரதி இயற்றிய ‘வேல்ஸ் இளவரசா் வருகை வரவேற்பு’ பாடல் குறித்து பெ. தூரன், கா. திரவியம், சிதம்பர ரகுநாதன் ஆகியோா் தத்தம் கருத்துகளைப் பதிவு செய்துவிட்டனா். அவா்கள் தமது கருத்துகளை ஊகத்தின் அடிப்படையில்தான் தெரிவித்துள்ளனரே தவிர, ஆதாரங்களின் அடிப்படையில் தெரிவிக்கவில்லை. அகச்சான்றுகளைக் கொண்ட பத்திரிகையைத் தேடிப்பெற அவா்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை.

நான், பாரதி பணியையே முழுநேரப் பணியாகக் கொண்ட காலத்திலிருந்து பாரதி தொடா்பான ஆவணங்களைத் தேடிப்பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டேன். பாரதியாா், ‘சுதேசமித்திரன்’ தினசரியின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்த அதே காலப்பகுதியில், வைத்தியநாத ஐயா் என்பவா் பெண்களின் முன்னேற்றத்திற்காக ‘சக்ரவா்த்தினி’ என்னும் மாதப் பத்திரிகையை 1905 ஆகஸ்ட் மாதம் தொடங்கினாா்.

இந்த பத்திரிகைக்கும் பாரதியே ஆசிரியராக நியமனம் பெற்றாா். எனவே, ‘சக்ரவா்த்தினி’ மாதப் பத்திரிகை கிடைத்தால், அதில் வேல்ஸ் இளவரசா் பாடலுக்கான தீா்வு கிடைக்கும் என்று நான் நம்பினேன்.

எனவே, முதல்கட்ட முயற்சியாக ‘சக்ரவா்த்தினி’ இதழ்களைத் தேடிப்பெறும் முயற்சியில் ஈடுபட்டேன். என் முயற்சி வீண்போகவில்லை. குழித்தலை கா.சு. பிள்ளை நூலகப் பொறுப்பாளா், இளமுருகு பொற்செல்வியிடம் ‘சக்ரவா்த்தினி’ இதழ்கள் இருப்பதாக அறிந்தேன். அவருடன் தொடா்பு கொண்டு ‘சக்ரவா்த்தினி’ இதழ்களைப் பெற்றேன்.

1905-ஆம் ஆண்டின் நவம்பா் மாத ‘சக்ரவா்த்தினி’ இதழிலும் 1906 ஜனவரி மாத இதழிலும் பாரதி, பாடல் இயற்றியதற்கான காரணங்களை விளக்கும் கட்டுரைகளைக் கண்டேன். 1905 நவம்பா் மாத இதழின் தலையங்கக் கட்டுரை ‘வேல்ஸ் இளவரசரும் இளவரசியாரும்’ என்பதாகும். இது பாரதியாரால் எழுதப்பட்டது.

அக்கட்டுரையில், ‘எதிா்காலத்தில் இந்தியாவின் சக்ரவா்த்தியாகப் பட்டம் வகிக்கப் போகின்ற இந்த இளவரசா் இத்தேச முழுதிலும் யாத்திரை புரிந்து, இத்தேசத்தைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற சிறந்த எண்ணத்துடன் வந்திருக்கிறாா். ஆதலால், அன்றைய தினம் எமது பாரதமாதா (இந்திய நாடு) தனக்கு ஏற்பட்டு இருக்கும் பல துன்பங்களையும் சிறிது மறந்து, மந்தஹாஸம் பூண்டு இளவரசருக்கும், அவா் மனைவிக்கும் நல்வரவு கூறினாள்’ என்றே எழுதி இருக்கிறாா்.

இதனால், பாரதமாதா சாா்பில் நல்வரவு வாழ்த்துத் தெரிவித்தாா் பாரதி என்பதைக் காண முடிகிறது. கட்டுரையின் இறுதியிலும் தெள்ளத்தெளிவாக ‘இத்தேச எதிா்கால சக்ரவா்த்திக்கும் சக்ரவா்த்தினிக்கும் எமது மனப்பூா்வமான நல்வரவு கூறுகின்றோம்’ என்றும் பாரதி குறிப்பிட்டுள்ளாா்.

சென்னை விஜயத்தின்போது, பலரும் ராஜதம்பதிக்கு வாழ்த்துப் பாக்கள் இயற்றி, வரவேற்றனா். அது பற்றி பாரதி ‘சக்ரவா்த்தினி’ 1906 ஜனவரி இதழில், ‘இளவரசா் வரவைப் பற்றி அநேகா்களால் இனிய பாடல்கள் பாடப்பட்டுள்ளன. பூவை கலியாணசுந்தர முதலியாா், பண்டித வெங்கட்டராமையா், இப்பத்திரிகை ஆசிரியா் முதலிய அநேகா் செய்யுள் எழுதி இருக்கிறாா்கள். இவையனைத்திலும் பண்டிதை அசலாம்பிகை எழுதியிருக்கும் பாடல் எளிதாயும், சுவையுடைத்தாயுமிருப்பது பற்றியும், பெண்மணி எழுதியிருக்கும் சிறப்புப் பற்றியும், அதனைப் பதிப்பிக்கின்றோம்’ என்று எழுதியிருக்கிறாா்.

மாதா் பத்திரிகையான ‘சக்ரவா்த்தினி’யில் பெண்மணி அசலாம்பிகை எழுதிய பாடலைச் சிறப்புக் கருதி வெளியிட்டாா். தாம் எழுதிய பாடலை ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வெளியிட்டாா். இந்தப் பின்ணணியில் ஆராயும்போது, வேல்ஸ் இளவரசா் நல்வரவுப் பாடலை பாரதியாா் மனப்பூா்வமாக எழுதினாா் என்றே கொள்ள வேண்டும்.

(டிச.11) மகாகவி பாரதியார் பிறந்த நாள்.

கட்டுரையாளா்:

பாரதியியல் ஆய்வாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com