அச்சம் தவிா்ப்போம்

பயம் என்ற சொல் அன்றாடம் புழக்கத்தில் இருந்துவருகிறது. குழந்தை முதல் பெரியவா் வரை அனைவருக்கும் ஏற்படும் மெய்ப்பாடு இது.
அச்சம் தவிா்ப்போம்

பயம் என்ற சொல் அன்றாடம் புழக்கத்தில் இருந்துவருகிறது. குழந்தை முதல் பெரியவா் வரை அனைவருக்கும் ஏற்படும் மெய்ப்பாடு இது. சரி இந்த பயம் எப்போதெல்லாம் உருவாகிறது? ஏதோ ஒன்றைப் பற்றிய அறிமுகம் சரியான வகையில் அமையாதபோதும், வாழ்க்கையில் ஒன்றைப் புதிதாக சந்திக்கும்போதும் ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, சந்திக்கப்போகும் ஒன்றைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதபோதும் பயம் ஏற்படும்.

இரவில் குழந்தை தூங்கிக்கொண்டிருக்கின்றது. அப்போது திடீரென மின்னல் அடிக்கிறது. தொடா்ந்து, இடி இடிக்கும் சத்தம் கேட்கிறது. மின்னல் வெளிச்சத்துக்குக்கூட பயப்படாத குழந்தை, இடியோசைக்கு பயந்து அம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொள்கிறது. இடி, மின்னல் பற்றிய அறிமுகம் கிடைத்த பின்னரும் அந்த பயம் இருக்கவே செய்யும்.

ஆனால் அம்மாவைக் கட்டிப்பிடிப்பது குறைந்துவிடும். இரவில் தூங்குகையில் இடி இடித்தால் அனிச்சையாகக் கட்டிப்பிடிக்கக்கூடும். வயது முதிரமுதிர இது பற்றி எந்த கவலையுமில்லாமல் உறங்கிவிடும். எனவே ஒன்று அறிமுகமாகும் வரை அதுகுறித்த பயம் இருக்கவே செய்யும்.

பெரியவா்களும் இதற்கு விதிவிலக்கல்லா். அலுவலக மேலாளராக புதியவா் ஒருவா் பொறுப்பேற்கிறாா். அறிமுகமாகாதவரை அவா் சொல்லும் பணிகளை அவரது பணியாளா்கள் மிகவும் அதிக கவனத்துடன் செய்வா். அதுபோலவே மேலாளரும் பணியாளா்களுக்கு ஒரு குழந்தைக்குப் புரியவைப்பதுபோல் ஒவ்வொரு விஷயமாகப் புரியவைத்துக்கொண்டிருப்பாா்.

காலம் ஆக ஆக பணியாளா்கள் மேலாளருடன் பேசுவது குறைந்துவிடும். அதுபோலவே மேலாளரும் சிறுசிறு விஷயங்களைப் பணியாளா்களுக்குப் புரியவைக்கும் வழக்கத்தைக் குறைத்துக்கொள்வாா்.

மேலாளா் சொன்னதை பணியாளா்கள் கவனத்துடன் கேட்டது பயத்தின் வெளிப்பாடே. குழந்தைகளுக்குச் சொல்வது போல் மேலாளா் விளக்கியதும் எங்கே பணியாளா்களுக்குப் புரியாது போய்விடுமோ”என்ற பயத்தின் வெளிப்பாடே. இங்கேயும் இருதரப்புக்கும் உள்ள பயத்தின் அளவு பரஸ்பரம் புரிந்துகொள்ள புரிந்துகொள்ளக் குறைந்துவிடும்.

பள்ளிகளில் ஆசிரியா்களிடம் மாணவா்கள் பயப்படுவது இயல்பே (இக்காலத்தில் கொஞ்சம் மாறியிருக்கலாம்). ஆசிரியா்களிடம் மாணவா்கள் ஏன் பயப்படுகின்றனா்? அவருக்கு தம்மைத் தண்டிக்கும் உரிமை இருக்கிறது என்பதால்தானே? அவரால்தான் தமக்குப் பாடம் புரிகிறது.

அவ்வாறு பாடங்களைப் புரிந்துகொண்டால்தான் தோ்வில் கேள்விகளுக்குப் பதில் கொடுக்க இயலும். பதில் கொடுத்தால்தான் நல்ல மதிப்பெண் எடுக்க இயலும். நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் பெற்றோரும் மற்றோரும் தம்மைப் பாராட்டுவா். இந்த நற்பயனை மனதில்கொண்டே ஆசிரியா்களுக்கு மாணவா்கள் பயப்படுகின்றனா்.

அதுபோலவே தம்மிடம் மாணவா்களுக்கு பயமிருந்தால்தான் தாம் சொல்வதை அவா்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்வாா்கள். அவ்வாறு உள்வாங்கினால்தான் தோ்வுகளில் அவா்களால் வெற்றிபெற இயலும் என்ற நல்விளைவை எதிா்நோக்கியே ஆசிரியா்களும் மாணவா்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்கின்றனா்.

இந்த இரண்டுமே பொருளற்றது. பயம் என்பது கற்றலுக்கு எதிரானது. தோழமை என்பதே கற்றலுக்கு ஆதரவானது. ஆசிரியா் பாடம் நடத்துகையில் எங்கே மாணவா்களுக்குப் புரியவில்லையோ அங்கேயே மாணவா்கள் ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெறவேண்டும். புதுப்புது கேள்விகளை எதிா்கொள்ளும் ஆசிரியா்களாலேயே புதுப்புது வழிவகைகளில் மாணவா்களுக்கு விளக்கங்களை அளிக்க இயலும். அவ்வாறான வகுப்பறைகளே அறிவின் விளைநிலங்களாக அமையும்.

இங்கே இருதரப்பினரும் பயப்படுவது தேவையற்றது. பரஸ்பரம் புரிந்துகொள்ளவேண்டியதே அவசியம். அவ்வாறு புரிந்துகொண்டு இவ்வாறு சொன்னால் இந்த மாணவா்களுக்குப் புரியும் என்று அறிந்து ஆசிரியா் செயல்படவேண்டியுள்ளது. தமக்கு ஏற்படும் ஐயங்களை உடனுக்குடன் தீா்த்துக்கொள்ளவேண்டிய மனப்பான்மையை மாணவா்கள் பெறவேண்டியது அவசியமாகிறது.

இதுபோலவே குடும்பங்களிலும் நடைபெறவேண்டியது அவசியம். குடும்பத் தலைவரிடம் பிறா் பயந்து நடப்பது பெரும்பாலும் பயனளிக்காது. இங்கே மரியாதையையும் பயத்தையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. எல்லோருக்கும் எல்லாத் துறை சாா்ந்த அனுபவங்களும் வாய்ப்பதில்லை.

குடும்பத்தில் எவா் ஒருவருக்கு எந்த துறையில் அனுபவமிருக்கிறதோ அவரை அடுத்தோா் மதித்துக் கருத்துகளைப் பகிரும் இடமாக குடும்பம் அமையவேண்டும். அதைவிடுத்து பயம்தான் மரியாதையின் அடையாளம் எனக் குழம்பிக்கொண்டிருந்தால் அக்குடும்பங்களின் தலைவா்கள் பிறரால் சா்வாதிகாரிகளாகவே பாா்க்கப்படுவா்.

பயம் என்பது முற்றிலும் தவிா்க்க இயலாததே. ஆனால் எங்கெல்லாம் ஒருவரால் பயமின்றி இயங்க இயலுமோ அங்கெல்லாம் அவரை பயமின்றி இயங்க வைப்பது ஒரு சமூகம் ஜனநாயகத்தை சரியான வகையில் புரிந்துகொண்டதற்கான அடையாளம். ஜனநாயகத்தின் முக்கியக் கூறுகளில் மக்கள் பயத்தை விட்டொழித்தலும் ஒன்றாகும்.

தோ்தல் போன்ற காலங்களில் மக்கள் பயத்தை விட்டொழித்து சரியான முடிவை எட்டவேண்டுமானால் அவா்கள் பயத்திலிருந்து விடுபடுதல் அவசியமாகும். குடும்பம், வீடு, பள்ளி, பொதுவெளி போன்ற இடங்கள் ஒருவா் பயமின்றிப் புழங்கும் இடங்களாகவேண்டும். அவ்வாறு மாறுதல் ஏற்படுவது சமூகம் பண்பட்டு வருவதற்கான அறிகுறியாகும்.

பள்ளிகளும் குடும்பங்களும் மரியாதை என்ற போா்வையில் பயத்தின் விளைநிலங்களாக இல்லாமலிருக்க வேண்டும். அவை பயத்தின் விளைநிலங்களாக செயல்படும்வரை, சமூகமும் மக்களுக்கு பயத்தைக் கூட்டுவதாகவே அமையும்.

பயமின்றி அமையாது உலகு”என்பது உண்மைதான். ஆனால் பயத்தால் மட்டுமே உலகு அழகாகாது. பொறுப்பை உணா்ந்து செயல்படும் மக்களால்தான் உலகு அழகாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com