மக்களால் வளரும் மொழி

ஒரு மொழியின் தூய்மையும், பண்பாடும், வளர்ச்சியும் அந்த மொழி சார்ந்த நிலத்தையும், அம்மொழி பேசும் மக்களையும் பொறுத்தே அமையும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒரு மொழியின் தூய்மையும், பண்பாடும், வளர்ச்சியும் அந்த மொழி சார்ந்த நிலத்தையும், அம்மொழி பேசும் மக்களையும் பொறுத்தே அமையும். அதாவது, மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்குப் பேச்சு இன்றியமையாதது. 

காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலச்சூழலுக்கேற்ப மாற்றி, சீர்திருத்திக் கொள்ள வேண்டியது மொழியில் வளர்ச்சிக்கு அவசியமாகிறது. படிப்பறிவும், பட்டறிவும் கலந்து, அறிஞர் உலகமும், பாமர மக்கள் உலகமும் ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி பேசக்கூடிய நிலை உருவாகும்போதுதான் மொழியில் முன்னேற்றம் ஏற்பட முடியும். 

அந்த வகையில், ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அமைப்பு ஆண்டுதோறும், அந்த வருடத்தில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட, அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைக்கு "இந்த ஆண்டிற்கான வார்த்தை' என்ற அங்கீகாரத்தை வழங்கி கெüரவித்து வருகிறது. ஆக்ஸ்ஃபோர்டு அகராதி நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும்  சிறந்த வார்த்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக இணையதள வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.  

ஒரு ஆண்டிற்கான சிறந்த சொல்லை, முந்தைய 12 மாதங்களில் மக்களின் சமுதாயப் பண்பின் அடிப்படைக் கூறுகளையும், குறிப்பிட்ட சமயத்தில் ஒருவரிடம் காணப்படும் மனநிலையையும், எண்ணங்களையும் பிரதிபலிக்கும் நோக்கத்தை மையமாக வைத்துத் தேர்ந்தெடுத்து மக்களின் வழக்குச் சொல்லாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அறிவித்து வருகிறது. 2013-இல் "செல்ஃபி', 2017-இல் "யூத்குவாக்', 2018-இல் "டாக்சிக்', 2019-இல் "க்ளைமேட் சேஞ்ச்', 2021-இல் "வாக்ஸ்' ஆகிய வார்த்தைகளை மக்களின் வழக்குச் சொல்லாக அறிவித்தது.  2020-இல் எந்த வார்த்தையையும் அறிவிக்கவில்லை. 

இந்த ஆண்டு "மெட்டாவெர்ஸ்', "ஐ ஸ்டாண்ட் வித்', "கோப்லின் மோட்' ஆகிய மூன்று வார்த்தைகள் மக்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. கடந்த நவம்பர், 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை இணையதளம்வழி வாக்கெடுப்பு நடந்தது.   

இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக "கோப்லின் மோட்' என்ற வார்த்தையை ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அமைப்பு  தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. இந்த "கோப்லின் மோட்' என்ற வார்த்தை சுமார் 3,18,956 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற வார்த்தையாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அமைப்பு அறிவித்துள்ளது. 93 சதவீதம் பேர் இதனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதே சமயத்தில் "மெட்டாவெர்ஸ்' 4,484 வாக்குகளும், "ஐ ஸ்டாண்ட் வித்' என்ற வார்த்தை 8,638 வாக்குகளும் பெற்று முறையே இரண்டாமிடத்தையும், மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.   

"கோப்லின் மோட்' என்றால் பொதுவாக உள்ள சமூகத்திற்கென இருக்கும் விதிகள், கட்டுப்பாடுகள், எதிர்பார்புகள் ஆகியவற்றையெல்லாம் நிராகரித்து, பொருட்படுத்தாமல் தனிநபர் அவரவருக்கு எது எது விருப்பமானதோ அதையெல்லாம் செய்தல், சுய விருப்பத்துடன் தன் நலன் சார்ந்தே சிந்தித்தல், குற்றவுணர்வு ஏதுமில்லாமல் சோம்பேறிதனமாக, பேராசையுடன் வெட்கமின்றி  நடந்து கொள்ளுதல் இவை அனைத்தும் இந்த வார்த்தையில் அடங்கியுள்ளன. அதாவது, இந்த வார்த்தை குறிப்பாக வீட்டை சுத்தப்படுத்தாமல் அலங்கோலமாக்கி, சோம்பேறித்தமான கற்பனை உலகில் இருப்பவர்களின் மனநிலையை எடுத்துக் காட்டுகிறது. 

"மெட்டாவெர்ஸ்' என்பது ஒரு விரிந்த பொருள்தரும் சொல். இதைப் பற்றி ஒரே வார்த்தையில் விளக்கிட முடியாது. நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு எண்ம உலகம் (டிஜிட்டல் வேர்ல்டு) இது. அதாவது, மெய்ந்நிகர் வடிவங்களுக்கான தளத்தை முகநூல் (மெட்டா) போன்ற நிறுவனங்கள் வழங்கினால், அதுதான் மெட்டாவெர்ஸ். மெட்டாவெர்ஸ் என்ற வார்த்தை ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் 1992-ஆம் ஆண்டு இடம் பெற்றுள்ளது. மேலும், இவ்வார்த்தை நீல் ஸ்டீஃபன்சன் எழுதிய  "ஸ்னோ கிராஷ்' எனும் நாவலிலும் இடம் பெற்றுள்ளது. 

"ஐ ஸ்டாண்ட் வித்' எனும் வார்த்தை 14-ஆம் நூற்றாண்டிலிருந்தே அறியப்பட்டாலும், 2009-ஆம் ஆண்டில்தான் பிரபலமானது. ஆனாலும், 21-ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக, தனி நபரோ, குழுவோ  ஒருவருக்குத் துணையாக நின்றி அவரை ஆதரிப்பது "ஹேஷ்டேக்' ஆனது. உக்ரைன் மீதான ரஷிய நாட்டின் படையெடுப்பைத் தொடர்ந்து மார்ச் 2022-இல் இவ்வார்த்தை மிகவும் பிரபலமானது. 

தொற்று நோய் வேகமாகப் பரவும் காலத்திலும், உலக நாடுகளிடையே போர் நடைபெறும் காலத்திலும் மக்கள் அச்சம் காரணமாக தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பார்கள்.  உதாரணமாக, கரோனா தீநுண்மி பரவிய  காலத்தில் அனேகமாக அனைவருமே தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தார்கள்.

 அவ்வாறு, மக்கள் அனைவரும் மனதளவில் சோம்பேறியாகி "கோப்லின் மோடில்' இருந்ததால், "கோப்லின் மோட்' என்ற வார்த்தை மீண்டும் இந்த ஆண்டு டிவிட்டரில்  பிரபலமான வார்த்தையாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனத்தின் மொழிகள் பிரிவின் தலைவர் காஸ்பர் கிராத்வோல் இது குறித்துக் கூறுகையில், "தங்களுடைய  அனுபவத்தில் கிடைத்த வார்த்தையானதால் "கோப்லின் மோட்' என்பதை இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்' என்று கூறினார். 

எனவே, காலங்காலமாக குறையாத பயிற்சியும், நிறைவான வழக்கும் பெற்றே மொழி பண்படுகிறது. நாட்டில் இயற்கையால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், அதனால் ஏற்படும் சூழ்நிலைகள், தொழில்நுட்ப மேம்பாடு, மக்களின் பண்பாட்டு வளர்ச்சி ஆகியவை கூட மொழியின் ஆற்றலுக்கும், சொல் வளத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும்,  முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. இதைத்தான் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அமைப்பின் மொழியியல் ஆய்வு சொல்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com