வழிகாட்டும் லண்டன் காவல்துறை!

இந்தியாவிற்கான காவல் சட்டத்தை இயற்றிய ஆங்கிலேயரின் லண்டன் பெருநகரக் காவல்துறையை உலுக்கி, தலைகுனியச் செய்த குற்ற நிகழ்வு ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளது. 
வழிகாட்டும் லண்டன் காவல்துறை!

இந்தியாவிற்கான காவல் சட்டத்தை இயற்றிய ஆங்கிலேயரின் லண்டன் பெருநகரக் காவல்துறையை உலுக்கி, தலைகுனியச் செய்த குற்ற நிகழ்வு ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளது. 

கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு மாலை பொழுதில் தெற்கு லண்டன் சாலை ஒன்றில் விற்பனை நிர்வாகியாகப் பணியாற்றிவந்த இளம்பெண் ஒருவர் தனது வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில் அலுவல் முடித்து, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த லண்டன் பெருநகர காவல்துறையைச் சேர்ந்த ஆண் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்தார். தனது அடையாள அட்டையை அந்த பெண்ணிடம் காட்டி, பொய்யான குற்றச்செயல் ஒன்றிற்காக அவரை கைது செய்வதாகக் கூறி, அவரின் கைகளில் விலங்கு மாட்டி, அவரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு, லண்டன் புறநகர் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்தார் அந்த காவல் அதிகாரி. இறந்துபோன பெண்ணின் பிரேத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த அந்த காவல் அதிகாரி, அந்தப் பெண்ணின் கைப்பேசியையும், உடைமைகளையும் அருகிலுள்ள நீரோடையில் போட்டு, தான் செய்த குற்றச் செயலுக்கான ஆதாரங்களை மறைத்துள்ளார்.

கண்காணிப்பு கேமராவின் பதிவுகள், கைப்பேசி மூலம் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் லண்டன் பெருநகர காவல்துறை புலன்விசாரணையைத் தொடங்கியது. "பெண் காணவில்லை' எனப் பதிவான அந்த வழக்கில் துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்ட லண்டன் காவல்துறை, அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று, பாலியல் வன்முறை செய்து, கொலை செய்த காவல் அதிகாரியை கைது செய்து, சிறையில் அடைத்தது.

அந்த காவல் அதிகாரி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை, லண்டன் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர், 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், தண்டனை காலத்தில் குற்றவாளிக்கு "பரோல்' வழங்காமல், வாழ்நாள் முழுவதும் அவர் சிறையில் கழிக்க வேண்டுமென்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

குற்றம் நிகழ்ந்த ஏழு மாதத்திற்குள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் புலன் விசாரணை மேற்கொண்ட காவல்துறையின் துரித செயல்பாடுகள் குறித்து பாராட்டுகளோ, இளம்பெண்ணை இழந்து தவிக்கும் அப்பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோ பிரிட்டனில் எழவில்லை.

மாறாக, "நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையினர் பெண் சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடக் காரணம் என்ன' என்ற கேள்வியே பிரிட்டனில் எழுந்தது. 

"லண்டன் நகர சாலைகளில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பில்லை' என்று கூறி லண்டன் மேயர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். "பொதுமக்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவரும் நெருக்கடியான சூழலை லண்டன் பெருநகர காவல்துறை உணர்ந்துகொண்டதற்கான அறிகுறியைக் காணமுடியவில்லை' என பிரிட்டனில் இருந்து வெளிவரும் "தி கார்டியன்' நாளிதழ் தலையங்கம் எழுதியது. 

இந்த குற்ற நிகழ்வு நடைபெற்ற காலகட்டத்தில் லண்டன் பெருநகர காவல் ஆணையர் பொறுப்பில் இருந்த பெண் காவல் உயரதிகாரி இச்சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

2018-ஆம் ஆண்டில் லண்டன் பெருநகர காவல்துறையில் பணி நியமனம் செய்யப்பட்டபோது, இந்த குற்றவாளியின் குற்றப் பின்னணி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளாததும், காவல்துறையில் பணியிலிருந்தபோது செய்த சில குற்றச் செயல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காததும், காவல் பணியில் இரண்டாம் ஆண்டின் இறுதியில் அவரது தகுதி குறித்து ஆய்வு மேற்கொள்ளாமல், அவரைத் தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கி, முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு நியமனம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளன.

லண்டன் பெருநகர காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வின் அறிக்கை, லண்டன் செய்தி ஊடகங்களில் கடந்த நவம்பர் மாதத்தில் வெளியாகியுள்ளது.  

காவல்துறையில் பணி நியமனம் செய்யப்பட்ட சிலரின் குற்றப் பின்னணி குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதும், பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பில் இருப்பதும் சமூக செயற்பாட்டாளர்களின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. 

காவல்துறையில் ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையில் ஆள் சேர்ப்பு நடைபெறுவதால், தேர்வு செய்யப்பட்டவர்களின் குற்றப் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்படுவதில்லை என்பதும் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் லண்டன் பெருநகர காவல்துறையில் தேவையான மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நாட்டு மக்களுக்கு பிரிட்டன் உள்துறை செயலர் உறுதியளித்துள்ளார்.

1829-ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட "மெட்ரோபாலிடன் காவல் சட்ட'த்தின் அடிப்படையில் செயல்பட்டுவரும் லண்டன் பெருநகர காவல் அமைப்பு,  உலக நாடுகள் பலவற்றில் அமைக்கப்பட்டுள்ள காவல் அமைப்புகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

இருநூறு ஆண்டுகளாகத் திறம்படச் செயல்பட்டுவந்த லண்டன் பெருநகரக் காவல் அமைப்பு, தற்போது பிரிட்டன் மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, லண்டன் பெருநகர காவல் அமைப்பில் உரிய மாற்றங்கள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1861-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இந்திய காவல் சட்டத்தை அடித்தளமாகக் கொண்டு நம்நாட்டில் காவல்துறை இயங்கிவருகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர், இந்திய காவல் சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் வேலியே பயிரை மேய்வது போன்று காவல்துறையில் பணிபுரியும் ஒருசிலர் கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் நம்நாட்டில் தொடர்ந்து நிகழ்கின்றன.

நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து, பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ரோந்து காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டதும், வர்த்தகர் ஒருவரைக் கடத்திச் சென்ற குற்றச் செயலுக்காக காவல் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதும் கடந்த ஓராண்டு காலத்தில் நம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன.

13 வயதுடைய சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தத் துணைபுரிந்தது மட்டுமின்றி, அச்சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச் செயலுக்காக "போக்சோ' சட்டத்தின்படி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் சில மாதங்களுக்கு முன்பு சென்னை நகரில் நிகழ்ந்துள்ளது.

காவல்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் பெண்கள் சிலர், காவல்துறையிலுள்ள சில ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது. இம்மாதிரியான பிரச்னைகளுக்கு "விசாகா வழிகாட்டுதல்கள்' தீர்வாக அமையாத சூழலைக் காணமுடிகிறது.

பாலியல் துன்புறுத்தல், போதைப் பொருள் விற்பனைக்குத் துணை போவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் காவல்துறையினரை கைது செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு மட்டும் காவல்துறையின் கடமை முடிந்துவிடுவதில்லை. சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடக் காரணம் என்ன என்பது குறித்த ஆய்வும் இன்றைய சூழலில் அவசியமானதாகும்.

களப்பணியாற்றும் காவல்துறையினரிடம் குவிந்துள்ள அதிகாரம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்த உயரதிகாரிகளின் கண்காணிப்பும், வழிகாட்டுதலும் குறைந்து வருகின்ற நிலை நிலவுகிறது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டித்து, முறைப்படுத்துவதற்கு மாறாக, அவர்கள் செய்யும் முறைகேடுகளைப் புறந்தள்ளிவிடும் மனநிலை உயரதிகாரிகள் சிலரிடம் வெளிப்படுகிறது. 

காவல்துறையில் செல்வாக்கு மிகுந்த பணியிடங்களைப் பெறுவதில் காவல் அதிகாரிகளிடையே போட்டி நிலவுவதும், சிரமப்பட்டு வாங்கிய பதவியைத் தக்க வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதும் காவல்துறையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் பணியின்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு உயரதிகாரிகளின் கவனக்குறைவான திட்டமிடல் காரணமாக இருந்தாலும், களப்பணியாற்றும் காவல்துறையினர் மீது பழி சுமத்துகின்ற நடைமுறை காவல்துறையின் செயல்திறனை இழக்கச் செய்கிறது. 

காவல்துறையில் பல நிலைகளில் பணியில் சேர்பவர்களின் பணித்திறனை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யும் முறை சம்பிரதாயத்திற்காகச் செய்யப்படுவதால், தங்களின் பணித்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு காவல்துறையினருக்கு ஏற்படுவதில்லை.

உயரதிகாரிகளுக்குத் தெரியாமல் கையூட்டு பெற்றுவந்த நிலை மாறி, வெளிப்படையாக கையூட்டைக் கேட்டுப் பெறும் நிலையை நோக்கி காவல்துறை நகர்ந்து செல்லும் துர்பாக்கிய நிலையை சீர்படுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

கட்டுரையாளர்:
காவல்துறை உயர் அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com