மானுடத்தை மேம்படுத்தும் மக்களாட்சி!

மானுடத்தை மேம்படுத்தும் மக்களாட்சி!

 மக்களாட்சி என்பது மானுடத்தை மேம்படுத்தும் ஓர் அற்புதமான கருவி. அந்தக் கருவியை எந்த அளவுக்கு மக்கள் புரிந்து கொண்டு பயன்படுத்துகின்றார்களோ அந்த அளவுக்கு சமூகத்திற்கு அது பயன் தரும். அந்தக் கருவியை சரியாகப் பயன்படுத்த மக்களுக்கு அதற்கான சிந்தனையும் பார்வையும் திறனும் வேண்டும். அந்த சிந்தனையுடன் மக்கள் அரசியலிலும், ஆளுகையிலும், நிர்வாகத்திலும் பார்வையாளராக இல்லாமல் பங்காளர்களாக மாற பழகிக்கொள்ள வேண்டும்.
 இவை அனைத்துக்கும் ஒரு தயாரிப்பு வேண்டும். அந்தத் தயாரிப்பு என்பது மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகே நிகழும் நிகழக்கூடியது. இதைக் கூறியவர் அலெக்ஸிஸ் டி தொக்கிவில்லி என்ற பிரான்ஸ் தேசத்து சிந்தனையாளர். அவர் எழுதிய "அமெரிக்க மக்களாட்சி' நூல் மிகவும் புகழ்பெற்றது. அதில் அவர் அமெரிக்கா பற்றி கூறிய கருத்துக்கள் இன்றுவரை சரியானவை என்று உலகம் கருதுகின்றது.
 அது மட்டுமல்ல, அந்நூல் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மக்களாட்சி பற்றிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அது அவரின் படைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அந்த நூலை எழுதுவதற்கு முன்னர், பத்துமாத காலம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; இருநூறுக்கும் மேற்பட்ட ஆளுமைகளையும் சாதாரண மனிதர்களையும் சந்தித்தார்; மக்களாட்சி பற்றி அமெரிக்க மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிந்தார். இவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம்தான் "அமெரிக்க மக்களாட்சி'.
 அலெக்ஸிஸ் டி தொக்கிவில்லி ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய நூல்தான் இது. இந்த நூலின் சிறப்பு, இது அமெரிக்க மக்களாட்சி ஆரம்ப நிலையில் இருந்தபோது எழுதப்பட்டது என்பதுதான். அந்த தொடக்கநிலை மக்களாட்சி எதிர்காலத்தில் என்னவாகக்கூடும் என்பதை கணித்து எழுதியது மட்டுமல்ல, மக்களாட்சியைக் கட்டமைக்க ஆசைப்பட்டு முயல்கின்ற சமூகங்களுக்கு மக்களாட்சி முறையை எப்படி உருவாக்கினால் அது நீடித்து நிலைத்த தன்மையைப் பெறும் என்பதையும் விளக்கியுள்ளதுதான் இதன் தனிச்சிறப்பு.
 ஒரு நாட்டில் மக்களாட்சி எப்படிக் கட்டமைக்கப்படுகிறது, அது எந்த அடித்தளத்தில் நிற்கிறது, அதற்காக செய்ய வேண்டியவை யாவை என்பனவற்றை இந்தப் புத்தகத்தில் விளக்கியிருப்பதால்தான் இந்தப் புத்தகம் இன்றளவும் அனைவராலும் மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. அமெரிக்க மக்களாட்சி சிறிது காலத்திற்குக்கூட நீடித்து நிற்காது என்று அறிஞர்கள் பலர் கூறியபோது, அமெரிக்க மக்களாட்சி நிலைத்த தன்மையைப் பெற்றுவிடும் என்று அடித்துக் கூறியவர் அலெக்ஸிஸ் டி தொக்கிவில்லி.
 இந்தியா சுதந்திரம் அடைந்து மக்களாட்சியை கைக்கொண்டபோது அறிஞர்கள் பலரும், இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்கப்போவதுமில்லை, மக்களாட்சியில் செயல்படப்போவதுமில்லை என்று கூறினார்கள். ஆனால், ஏ.எல். பாஷாம் ஒருவர்தான் "வியப்பு: அதுதான் இந்தியா' என்ற தனது நூலில், இந்தியா எக்காலத்தும் பிளவுபடாது என்று கூறி அதற்கான காரணத்தையும் கூறினார்.
 அதுபோலவேதான் அமெரிக்க மக்களாட்சி நீடிப்பதற்கான ஐந்து அடிப்படையான காரணிகளை அலெக்ஸிஸ் டி தொக்கிவில்லி முன்வைத்தார். அமெரிக்காவில் மக்களாட்சி வேண்டும் எனச் செயல்பட்டுக் கொண்டுள்ள மக்கள் அனைவரும் அந்த விழுமியங்களைப் பாதுகாக்கப் பாடுபடுகின்றனர் என்பதை அவர் எடுத்துக்காட்டி விளக்கினார். அந்த ஐந்து விழுமியங்களான, விடுதலை, சமத்துவம், தனியுரிமை, குடிப் பொதுமைச் செயல்பாடுகள், அரசின் கட்டுப்பாடற்ற வணிகம் ஆகியவை மக்களின் உயிரோடு, உணர்வோடு ஒன்றியுள்ளன என்பதை விவரித்தார். இவைதான் அமெரிக்க மக்களாட்சியின் தூண்கள் என விளக்கினார்.
 பொதுமக்கள் குடிமக்களாக நின்று மக்களாட்சியின் விழுமியங்களில் ஒன்றான சமத்துவத்தை, மக்களாட்சி வேண்டுமென்போர் மத்தியில் புகுத்தி, அதற்காக அவர்களைப் போராட வைத்ததுதான் அந்த நாட்டின் சிறப்பு என்று அவர் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல, அந்நாட்டுக் குடிமக்கள் குடிமைச் சமூக அமைப்புக்களை உருவாக்கி அவற்றின் மூலம் மக்களாட்சியை பாதுகாப்பது எப்படி என்பதை விவரித்துள்ளது பல சமூகங்களுக்கு வழிகாட்டும் செயல்பாடாகும் என்றும்பதிவு செய்துள்ளார்.
 அரசியல் என்பது படித்தவர்களுக்கானது மட்டுமல்ல கல்வியில் அடித்தளத்தில் உள்ளவர்களையும் பெருமளவில் வசீகரிக்கக்கூடியது, கவரக்கூடியது என்று அவர் தன் புத்தகத்தில் பதிவு செய்திருந்தது இன்றுவரை உலகம் முழுவதும் உண்மையாகவே இருக்கின்றது. இவற்றைத் தாண்டி ஊழலுக்கு உதவிடும் இடமாக இருப்பதும் இந்த அரசுகள்தான் என்பதையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். மக்களாட்சியில் பொதுமக்கள் குடிமக்கள் சிந்தனையோடு செயல்பட்டாவிட்டால், செல்வந்தர்கள் கூடி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் அரசைக் கொண்டு வந்து விடுவார்கள் என்று கூறிய தீர்க்கதரிசனமான கருத்து வியக்கத்தக்கது.
 மக்களாட்சியில் உருவாகும் ஒரு சட்டமோ, திட்டமோ எதுவானாலும் அது மிக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு நலன்களை விளைவிக்க வேண்டும். அரசாங்கத்தை கவனிக்க பொதுமக்கள் குடிமைச் சமூக அமைப்புக்களை உருவாக்கி செயல்படவில்லையானால் குறைந்த எண்ணிக்கை கொண்ட ஒரு குறிப்பிட்ட குழுவிடம் அதிகாரமும், பொருளும் சென்று சேர்ந்துவிடும். அது மக்களாட்சிக்கு ஆபத்தை விளைவிக்கும்.
 மக்களாட்சியில் கொண்டு வரும் திட்டம் ஒவ்வொன்றும் ஒட்டு மொத்த சமூகத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்கின்றதா அல்லது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு பயணிக்கக்கூடியதாக இருக்கின்றதா என்பதை சீர்தூக்கிப்பார்த்துக் கொண்டே வரவேண்டும். அதற்கான பார்வையை மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும். எவ்வளவு மோசமானவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் அதிகாரம் பற்றி புரிந்தவர்களாக இருந்தால் எந்த நிலையிலும் தங்களுக்கு பாதகம் வராத வகையில் பார்த்துக் கொள்வார்கள்.
 எந்த ஆட்சியும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் நன்மை செய்வதில்லை, மாறாக அதிக மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை செய்ய முயற்சி செய்யும். மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே அரசு மக்கள் மீது கரிசனம் கொண்டு செயல்படும் என்பதை கோடிட்டு காட்டிவிட்டார், தன் புத்தகத்தில் அலெக்ஸிஸ் டி தொக்கிவில்லி. ஒரு நாட்டில் மக்களுக்கு நாட்டுப்பற்று என்பது மிக முக்கியமானது. அமெரிக்க மக்களின் நாட்டுப்பற்றில் தனிச் சிறப்பு உள்ளது என்பதையும் அவர் விளக்கத் தவறவில்லை. பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்கள், தங்கள் கலாசாரத்தை விட்டுவிட்டு அமெரிக்க மண்ணுக்கான கலாசாரத்தைக் கட்டியெழுப்பினார்கள் என்று குறிப்பிடுகிறார் அவர்.
 பொதுச்சிந்தனை நம் நலனுக்கு மேல் பெரிதானது, அதில்தான் நம் நலனும் அடங்கியுள்ளது என்பது புரிந்து நாட்டின் மேம்பாட்டுச் சிந்தனையை மக்களிடம் வளர்த்துச் செயல்பட்டது ஒரு தனிச்சிறப்பு. இதிலும்கூட நாட்டின் மேல் பற்றுக் கொண்ட மக்கள் தங்களின் தலைவர்கள்மேல் பற்றுக் கொள்ளவில்லை என்பது மகத்தான சிறப்பு. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நாடு மக்களுக்கு உரிமைகளாகத் தந்தவற்றை மக்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதை விளக்கும்போது, 'எல்லா உரிமைகளும், மக்களுக்கான பொறுப்புக்கள் அதை முறையாக பயன்படுத்தும் தன்மையை வளர்த்துச் செயல்பட்டது என்பதுதான் அமெரிக்க மக்களாட்சியின் தனிச்சிறப்பு' என்று குறிப்பிடுகிறார்.
 நாட்டு மக்களுக்கு ஒரு சிந்தனை நிலவுகின்றது, அது மகத்தான விளைவினை உருவாக்கும் என்று விவரித்தார். அதாவது மக்களுக்கு ஒரு மனோபாவம் இருக்கிறது. அது நாடு வளம் பெறுவதை தாங்கள் வளம் பெறுவதாக எண்ணி மகிழ்வது. அந்த எண்ணம் மக்களாட்சிக்கு வலுச் சேர்ப்பதாகும். ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கு உதவாத மூட நம்பிக்கையை தகர்ப்பது, பழைய மத, கலாசார பழமைவாதங்களை முடக்குவது, புதுமைகளைப் புகுத்துவது, அறிவியலை கடைப்பிடிக்கச் செய்வது அத்தனையும் அரசுக்கு சவாலான பணிகள். ஆனால் அமெரிக்காவில் அவை மிக எளிதில் நடந்தேறின.
 அந்த நாட்டில் குடிமக்களின் பொறுப்புக்களும், உரிமைகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயல்பட்டதால்தான் செயல்தன்மை மிக்க மக்களாட்சியை கட்டமைக்க முடிநத்து என்று விளக்கியுள்ளார். ஒரு மனிதன் பெரிய மனிதனாவதற்கு உயர்ந்த வாழ்க்கை விழுமியங்களைப் பின்பற்ற வேண்டும். அதேபோல் எந்த ஒரு நாடும் உயர்ந்த லட்சியங்களை நோக்கிச் செயல்படாமல் உயர முடியாது என்பதை அமெரிக்க மக்களாட்சி காட்டுகிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
 ஆகையால்தான் அந்த நாட்டின் ஒவ்வொரு உரிமையும் ஒழுக்கத்தின் கூறாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. சட்டத்தை மதிக்கும் மனோபாவத்தை மக்கள் மத்தியில் வளர்த்து வருவதும், தனிமனிதர்கள் சட்டத்தினை மீறாமல் பார்த்துக் கொள்வதும் அமெரிக்க மக்களாட்சியை வலுவாக்குகிறது என்று விளக்கினார். இவை அனைத்தும் அமெரிக்க மக்களாட்சி ஆரம்ப நிலையில் இருந்தபோது, அதை ஆய்வு செய்து எழுதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவை.
 மக்களாட்சிக்கான அடிப்படைக் கூறுகளை ஆய்வு செய்தபோது இதன் பின்னணியில் நின்று இயக்கியவர் யார் என்பதையும் கவனித்து எழுதத் தவறவில்லை. அமெரிக்காவில் படித்த கிறித்துவ இளைஞர்கள்தான் இந்தக் கட்டமைப்பை உறுதி செய்ய பின்புலமாக நின்று இயக்கியுள்ளனர். இவற்றை வைத்துக்கொண்டு இந்திய மக்களாட்சியை ஆராய்ந்து பார்த்தால் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடமுடியும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com