வழிநடத்த வேண்டும்

வழிநடத்த வேண்டும்

 நடந்து முடிந்த இந்திய - வங்கதேச கிரிக்கெட் தொடர் பல்வேறு படிப்பினைகளை நமது இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அளித்துச் சென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபது ஒவர் உலகக் கிரிக்கெட் கோப்பைக்கான போட்டித்தொடரின் அரை இறுதியுடன் வெளியேறிய இந்திய அணி, அதைத்தொடர்ந்து நியூசிலாந்து நாட்டுக்குச் சென்றது. அங்கே, தான் விளையாடிய இருபது ஒவர் தொடரில் வெற்றி கண்ட இந்திய அணி, ஐம்பது ஓவர் ஒரு நாள் போட்டித் தொடரில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
 அதனை அடுத்து வங்கதேசத்திற்குச் சென்ற இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரில் தோற்று, ஐந்து நாள் டெஸ்ட் போட்டித்தொடரின் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது.
 நீண்ட காலமாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற இயலாத போக்கு தொடர்வதுடன், இரு நாடுகளுக்கிடையேயான போட்டிகளிலும் இந்திய அணியின் செயல்பாடு நிலையற்றதாகவே இருக்கின்றது.
 குறிப்பாகச் சொல்வதென்றால், ஒருநாள் போட்டிகள், ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றின் தரவரிசையில் நம்மை விடக் குறைந்த நிலையில் இருக்கின்ற வங்கதேச அணியை, நமது அணி எதிர்கொண்ட விதம் நமது அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துவிட்டது.
 ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா நான்காவது இடத்திலும், வங்கதேசம் ஏழாவது இடத்திலும் இருக்கின்றன. ஆயினும், நமது அணி வங்கதேசத்திடம் ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.
 அடுத்து நடந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றபோதும், அவ்வெற்றியைப் பெறுவதற்கு மிகவும் போராட வேண்டியிருந்தது என்பதே உண்மை.
 விராட் கோலி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், டெஸ்ட், ஒரு நாள், இருபது ஓவர் ஆகிய மூன்று விதமான போட்டிகளுக்கும் ரோகித் சர்மாவே தலைமை வகிப்பார் என்று கூறப்பட்டது.
 ஆனால், ரோகித் சர்மாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்போதும், முக்கியமான மூத்த வீரர்களுக்கு அவ்வப்பொழுது ஓய்வு அளிப்பது என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டபோதும் கே.எல். ராகுல், ஹர்தீக் பாண்டியா, ஷிகார் தவான் உள்ளிட்ட வீரர்களுக்குத் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது.
 மேலும் சில வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது என்ற திட்டமும் அவ்வப்போது நடைமுறைபடுத்தப்பட்டது.
 இவ்விதம் ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை கையாளப் பட்டதால் அணியின் செயல்திட்டங்களில் இலக்கில்லாதது போன்ற ஒரு தோற்றம் இருந்ததாக முன்னாள் வீரர்கள் விமரிசனம் செய்யும் நிலைமை ஏற்பட்டது. மேலும், ஒரு தொடருக்கான ஒட்டுமொத்த அணியினைத் தேர்வு செய்வதிலும், அவ்வணியிலிருந்து குறிப்பிட்ட ஒவ்வொரு போட்டிக்கான பதினொரு வீரர்களைத் தேர்வு செய்வதிலும் தெளிவற்ற நிலைமையே நீடித்து வந்தது.
 அப்படியே பதினொரு வீரர்களைக் கொண்ட இறுதி அணியினைத் தேர்வு செய்து விட்டாலும், ஆட்டத்தின் அந்தந்த நேர நிலவரத்திற்குத் தக்கபடி எந்த பேட்டரைக் களம் இறக்குவது, எந்த பந்து வீச்சாளரிடம் பந்தைக் கொடுப்பது ஆகிய அனைத்திலும் குழப்பங்கள் நீடிக்கவே செய்தன.
 இத்தகைய தெளிவற்ற தன்மை, குழப்பங்கள் ஆகியவற்றுக்கு உதாரணமாகவே வங்கதேசத்துடனான சமீபத்திய டெஸ்ட் தொடர் அமைந்து விட்டது.
 குறிப்பாக, முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் மிகக் குறைவான ரன்களுக்கு "ஆல் ஆவுட்' ஆனபோது உடனடியாக அவ்வணியையே தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையடுமாறு (ஃபாலோ ஆன்) சொல்லியிருந்தால் நமது அணியின் வெற்றி சுலபமாக இருந்திருக்கும்.
 ஆனால் அவ்வாறு செய்யாமல், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி, வங்கதேச அணிக்கு ஐந்நூற்றுப் பதின்மூன்று ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்து டிக்ளேர் செய்தது நம் அணித்தலைவரின் தற்காப்பு அணுகுமுறையையே வெளிப்படுத்தியது. அதிலும், வங்கதேச அணி முன்னூறு ரன்களைத் தாண்டிய நிலையில் நமது அணியினால் வெற்றி பெற முடியுமா என்ற ஐயம் எழுந்தது உண்மை.
 இதைப் போலவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நூற்று நாற்பத்தைந்து ரன்களே தேவை என்ற நிலையில், மூத்த வீரராகிய விராட் கோலியை அவருக்குரிய வரிசையில் களம் இறக்காமல் அக்ஸர் படேலை மட்டையடிக்க அனுப்பியதும் விமரிசனத்துக்கு உள்ளானது. தரவரிசையில் நம்மை விடக் குறைந்த நிலையில் உள்ள வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக இத்தகைய அணுகுமுறை நமது அணியின் தோல்வி பயத்தைப் பறைசாற்றுவதாக அமைந்து விட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
 நமது நாட்டுக்காக நீண்ட காலம் விளையாடி பற்பல சாதனைகளைப் புரிந்த மூத்த வீரர் ராகுல் திராவிட், தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கின்றார்.
 அடிக்கடி மாறும் அணித்தலைமை, சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு, அவ்வப்போதைய போட்டிகளுக்கான பதினொரு வீரர்களின் தேர்வு, போட்டிச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணி வீரர்களுக்கு அளிக்கப்படும் பொறுப்பு ஆகிய அனைத்தும் தலைமைப் பயிற்சியாளருடைய ஒப்புதலுடனேதான் நடைபெறுகின்றன.
 இந்நிலையில், அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரராகிய ராகுல் திராவிட், நமது இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு மேலும் தெளிவாகவும் உறுதியாகவும் வழிகாட்டி, சர்வதேச அரங்கில் நமது அணி மேன்மேலும் வெற்றிகளைக் குவிக்க உதவிட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
 ஒரு வீரராக இந்திய அணிக்குப் பற்பல வெற்றிகளைக் கொடுத்த திராவிட், அதன் தலைமைப் பயிற்சியாளராகவும் தம்முடைய மிகச்சிறந்த பங்களிப்பைத் தரவேண்டும்; தருவார் என நம்புவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com