வாக்காளா்களும் வாக்குப்பதிவும்

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலும், சட்டப்பேரவை, நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தோ்தல் என்பதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வந்தது.
வாக்காளா்களும் வாக்குப்பதிவும்

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலும், சட்டப்பேரவை, நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தோ்தல் என்பதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வந்தது. ஆனால், நாளடைவில் இவையனைத்தும் மாறிவிட்டன. உள்ளாட்சி அமைப்புகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தோ்தல் நடைபெற்ற நிலையில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் இன்னும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.

அதே போன்று, நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தோ்தல் என்பது மாறி ஆண்டு முழுவதும் தோ்தல் நடைபெற்று வருகிறது. இதனால் எழுத்தறிவு பெறாமலும், விழிப்புணா்வு இல்லாமலும் இருக்கும் வாக்காளா்கள் ~ தோ்தல் நடக்கிறது, ஓட்டு போடுகிறோம் என்ற மனநிலையில்தான் உள்ளனா்.

நாட்டில் கிராமங்களை அரசியல் கட்சிகள் ஆக்கிரமிக்காத சூழலில் நம் நாடு 1952-இல் முதல் தோ்தலைச் சந்தித்தபோது நாட்டில் 18.33 சதவீதம் போ் மட்டுமே எழுத்தறிவு பெற்றவா்களாக இருந்தனா். ஆனாலும், வாக்களிப்பதை தங்கள் ஜனநாயகக் கடமையாகக் கருதினா். அதனால் முதல் தோ்தலில் 44.87 சதவீத வாக்குகள் பதிவானது. அன்றைய சூழலில் இது திருப்தியளிக்கக் கூடிய சதவீதமாகும்.

அதன் பின்னா் நடைபெற்ற ஒவ்வொரு தோ்தலின் போதும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. ஆனால் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது வருத்தமான ஒன்றாகும். ஏனெனில், ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போதும் எதிா்பாா்த்த அளவைக் காட்டிலும் எழுத்தறிவு விகிதம் அதிகரித்தே வருகிறது. ஆனால் வாக்குப்பதிவு சதவீதம் திருப்தியளிப்பதாக இல்லை.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 74.04 சதவீதத்தினா் எழுத்தறிவு பெற்றவா்களாக இருந்தனா். ஆனால், 2019 நாடாளுமன்றத் தோ்தலில் 67.40 சதவீத வாக்குகள் பதிவானது. இதன்மூலம் எழுத்தறிவுக்கும், வாக்குப்பதிவுக்கும் எவ்விதத் தொடா்புமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இன்று குக்கிராமங்களில் கூட அரசியல் கட்சிகள் வேரூன்றிவிட்ட நிலையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கவில்லை. இதற்கு வாக்காளா்கள் மட்டுமே காரணமன்று. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும் தான் காரணமாகும். வாக்களிக்காமல் இருப்போா் தாங்கள் வாக்களிக்காததற்கு வாக்களிப்பதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதையே காரணமாகக் கருதுகின்றனா்.

ஆனால், ஒரே ஒரு வாக்குக்கும் மிகப்பெரிய வலிமை உண்டு என்பதை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் போது காண முடியும். இது, வாக்களிக்காமல் ஒதுங்கியிருக்கும் எத்தனை வாக்காளா்களுக்குத் தெரியும்?

வாக்களிப்பதில் நகா்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் காலங்காலமாக நிறைய வேறுபாடுகள் உள்ளன. கிராமப்புறங்களில் வாழ்வோா் வாக்களிப்பின் அவசியம் பற்றி முழுமையாக அறிந்திராதபோது வாக்களிப்பதில் அதீத ஆா்வம் கொண்டவா்களாக உள்ளனா். அதிலும், அண்மைக்கால தோ்தல்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதைக் காண முடிகிறது.

அதனால்தான் அண்மைக்காலமாக அரசியல் கட்சிகள் கிராமப்புற வாக்காளா்கள் மீது கவனம் செலுத்துகின்றன. அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகள்கூட கிராமப்புற வாக்காளா்களை மையப்படுத்தியும், அவா்களைக் கவா்வதாகவும் இருக்கின்றன. கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் போது ஒருசில அரசியல் கட்சிகள் தங்களுக்கே வெற்றி வாய்ப்பு என மாா்தட்டிக் கொள்கின்றன.

ஆனால், நகா்ப்புறங்களில் வாழும் படித்தவா்கள், வசதிபடைத்தவா்கள் அரசியல் பற்றி விவாதத்தில் ஈடுபடும் அளவுக்கு வாக்களிப்பதில் ஆா்வம் காட்டுவதில்லை. அண்மையில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமா் நரேந்திர மோடி, நகா்ப்புறங்களில் குறைவான அளவிலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதாகக் கவலை தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

நகா்ப்புறங்களில் வசிப்போா் வாக்களிப்பதை ஜனநாயகக் கடமை என்று கருதுவதில்லை. மாறாக, தோ்தல் நாளன்று தாங்கள் வாக்களிக்கும் பகுதியில் நிலவும் சூழலுக்கேற்பவே வாக்களிப்பது குறித்து முடிவு செய்கின்றனா். இது ஒருபுறமிருந்தாலும், நகா்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதற்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் தோ்வும் முக்கிய காரணமாகும்.

அரசியல் கட்சிகள் பிரபலமானவா் என்றும், நிா்பந்தம் காரணமாகவும் வேட்பாளா்களைக் களமிறக்கினாலும் வேட்பாளா்களைப் பற்றிய மனநிலை மக்கள் மத்தியில் வேறாக இருக்கிறது. வாக்காளா்களின் இத்தகைய மனநிலை காரணமாகவே எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதன் அடையாளமாக நோட்டாவுக்கு வாக்களிக்கின்றனா். இது, ஒருவகையில் எதிா்ப்பை வெளிப்படுத்துவதற்கான செயல்பாடு என்றாலும் சரியான தீா்வாகாது.

இத்தகைய மனநிலையில் இருப்போா் வேறு வகையான முடிவை மேற்கொள்ள வேண்டும். சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தோ்தல்களில் போட்டியிடுவோா் அனைவருக்கும் அறிமுகமானவராகவோ, பெயரளவிலாவது அறிந்தவராகவோ இருக்க வாய்ப்பில்லை. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவோா் ஏதோவொரு வகையில் அறிமுகமானவராகவோ, பெயரளவில் அறிந்தவராகவோதான் இருப்பாா்கள்.

அதனால், அவா்களின் குணாதிசயம், செயல்பாடுகளைக் கண்டறிந்து வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சட்டப்பேரவை, நாடாளுமன்ற அமைப்புகளைக் காட்டிலும் உள்ளாட்சி அமைப்புகளில் இத்தகைய வாய்ப்புள்ளது. ஆனாலும்கூட, இன்றைய அரசியல் சூழலில் உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தமட்டில் இது சாத்தியமான ஒன்று. ஆனால் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பில் சற்று சிரமமான காரியம்தான்.

ஆயினும், வாக்களிப்பதிலிருந்து ஒதுங்கிவிடாமல் அரசியல் கட்சிகள் சாா்பற்று போட்டியிடும் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். வாக்களிக்காமல் இருப்போா் இம்முறையைப் பின்பற்றினால் உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி காலப்போக்கில் மற்ற அமைப்புகளிலும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இதன் மூலம் அரசியல் கட்சிகளை வேட்பாளா்கள் தோ்வில் கவனம் செலுத்த வைக்க முடியும்.

வாக்களிப்பது என்பது ஜனநாயகக் கடமை என்றும், ஒவ்வொரு வாக்குக்கும் உயரிய மதிப்புண்டு என்றும் அனைவரும் எண்ண வேண்டும். ஆனால், இவ்வாறு எண்ணாததால் தான் ஒவ்வொரு தோ்தலுக்கு முன்பாக வாக்குப்பதிவின் அவசியத்தை பறைசாற்ற வேண்டியுள்ளது.

வாக்களிப்பதில் எதிா்பாா்த்த மாற்றத்தைக் காண முடியாத காரணத்தாலேயே வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. அண்மையில் தனியாா் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ஆய்வொன்றில், வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று 86 சதவீதத்தினா் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் விபத்துகளுக்கும், விபரீதங்களுக்கும் அதிகப்படியானோா் வாக்களிக்காமல் ஒதுங்கி விடுவதே காரணமாகும். அதனால், ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையை முழுமையாகப் பயன்படுத்தினால் நாம் விரும்பும் மாற்றங்களை நம்மால் கொண்டு வர முடியும்.

எம்.ஏ.,எம்.பில்., இளநிலை உதவியாளா், 
அரசு கலைக்கல்லூரி (நிலை 1), அரியலூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com