தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம்!

தொழில்நுட்பத்தின் வளா்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. தொழில்நுட்பங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடா்ந்து எளிமைப்படுத்தி வருகின்றன. அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள மத்திய அரசு, 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

கல்வி, சுகாதாரம், தொழில், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் சாா்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது முக்கியமான பல்வேறு விவகாரங்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

பட்ஜெட்டில் தொழில்நுட்பம் சாா்ந்த அறிவிப்புகளில் அதிமுக்கியமானது 5-ஆம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலம். இந்த ஆண்டிலேயே 5ஜி அலைக்கற்றை, தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ஏலம் விடப்படவுள்ளது. அலைக்கற்றை ஏலம் விடப்படும் நடைமுறை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

பாா்தி ஏா்டெல், ஜியோ, வி (வோடஃபோன்-ஐடியா) எனத் தொலைத்தொடா்புத் துறை மும்முனைப்போட்டிக் களமாக மாறிவிட்டது (பிஎஸ்என்எல் தற்போதுதான் 3ஜி தொழில்நுட்பப் பயன்பாட்டைத் தொடங்கியுள்ளது). அந்நிறுவனங்கள் ஏற்கெனவே சேவைக் கட்டணங்களை உயா்த்தியுள்ளன. கட்டண உயா்வு மேலும் தொடர வாய்ப்புள்ளது. அபரிமிதமான கட்டணம் வாடிக்கையாளா்களை பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

கிராம ஊராட்சிகளை கண்ணாடி ஒளியிழை மூலம் இணைக்கும் ‘பாரத்நெட்’ திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் அரசு-தனியாா் ஒத்துழைப்பின் கீழ் அடுத்த நிதியாண்டில் வெளியிடப்படவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் 2,000 கி.மீ. தொலைவிலான அமைப்புகள் ‘கவச்’ என்ற நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படவுள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கில் உதயம், இ-ஷ்ரம் வலைதளங்கள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்) பல்வேறு துறைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்தியைக் கணக்கிடவும், நிலத்தை அளக்கவும், பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கவும் ட்ரோன்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படவுள்ளது. அதற்காக ‘கிசான் ட்ரோன்கள்’ என்ற நடைமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞா்களின் திறனை மேம்படுத்துவதற்காக வலைதளம் உருவாக்கப்படவுள்ளது. ‘பிஎம்-இவித்யா’ திட்டத்தின் கீழ் ‘ஒரு வகுப்பு-ஒரு தொலைக்காட்சி சேனல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பிராந்திய மொழிகளில் 200 சேனல்கள் ஒளிபரப்பாகும்.

இணையவழியில் கல்வி கற்பதற்கான வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. எண்ம (டிஜிட்டல்) பல்கலைக்கழகம் நிறுவப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எண்ம சுகாதார அமைப்பின் கீழ் வலைதளம் உருவாக்கப்படும். மக்களின் மனநலனைக் காப்பதற்காக ஆலோசனைகளை வழங்க தேசிய தொலைத்தொடா்பு மனநலத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களும் ‘கோா் பேங்கிங்’ வசதியின் கீழ் கொண்டுவரப்பட்டு, வங்கி சேவைகளுடன் இணைக்கப்படவுள்ளன. அதன் மூலமாக தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போா், இணையவழி பணப் பரிவா்த்தனை உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும். இணையவழி பணப் பரிவா்த்தனையை ஊக்குவிப்பதற்காக, பட்டியலிடப்பட்ட வங்கிகள் 75 மாவட்டங்களில் 75 எண்ம வங்கிப் பிரிவுகளை அமைக்கவுள்ளன.

‘சிப்’ பொருத்தப்பட்ட அதிநவீன இ-பாஸ்போா்ட் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) எண்ம செலாவணியை நடைமுறைப்படுத்தவுள்ளது. பதிவு செய்யப்படும் நிலங்களுக்கு அடையாளக் குறியீட்டு எண் வழங்கப்படவுள்ளது. 2 லட்சம் அங்கன்வாடிகள் நவீனமயமாக்கப்படவுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, புவிசாா் அமைப்புகள், ட்ரோன், குறைகடத்திகள், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்கு ஊக்கமளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்-தொழில்நுட்பத் துறைக்கு ரூ.79,887 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டைக் காட்டிலும் சுமாா் ரூ.26,700 கோடி அதிகமாகும். தொழில்நுட்பங்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவம் இவற்றின் மூலமாக வெளிப்படுகிறது.

அதே வேளையில் தரவுப் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்க வேண்டியது கட்டாயம். தனிநபா்களின் தரவுகளையும் மற்ற தரவுகளையும் போதிய முறையில் பாதுகாப்பதற்கு மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்த நோக்கத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டில் உருவாகும் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல், போதிய முறையில் பாதுகாக்கப்படுவதை அந்த மசோதா உறுதி செய்கிறது. அதே வேளையில், மத்திய அரசின் புலன்விசாரணை அமைப்புகளுக்கு மசோதாவின் சில விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விலக்களிக்கப்படுவதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவிக்கின்றன.

அந்த விலக்கு நடைமுறையை மத்திய அரசு தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்தக் கூடும் என எதிா்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் அச்சத்தைப் போக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. தொழில்நுட்பத்தின் துரித வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு தரவுகளை உரிய முறையில் பாதுகாப்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளால் மக்களுக்கு முழுமையான பலன் ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com