புதிய சிக்கலில் ஆந்திரம்

இலவசங்களை வழங்குதல், புதிய மாவட்டங்களை உருவாக்குதல் போன்றவை அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளை அதிகரிக்கும் செயலாக அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
புதிய சிக்கலில் ஆந்திரம்

இலவசங்களை வழங்குதல், புதிய மாவட்டங்களை உருவாக்குதல் போன்றவை அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளை அதிகரிக்கும் செயலாக அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆந்திரமும் அதற்கு விதிவிலக்கல்ல. 
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தெலங்கானா கடந்த 2014இல் 10 மாவட்டங்களுடன் தனி மாநிலமாக உருவெடுத்தது. பின்னர், 2016 அக்டோபரில் மேலும் 21 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு 31 மாவட்டங்கள் உதயமாகின. தொடர்ந்து, கடந்த 2019 பிப்ரவரி 17இல் முலுகு, நாராயண்பேட் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது 33 மாவட்டங்கள் தெலங்கானாவில் உள்ளன.
ஆந்திரத்தில் 2019 சட்டப் பேரவைத் தேர்தலின்போது வாக்குறுதியளித்தவாறு 13 புதிய மாவட்டங்களை உருவாக்க ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயரும். அதன்படி, ஆந்திரத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளும் மாவட்ட அங்கீகாரம் பெறுகின்றன. அதேவேளையில், பெரும்பாலான மாவட்டங்களை உள்ளடக்கிய, பழங்குடியின மக்கள் அதிகம் காணப்படும் அரகு மக்களவைத் தொகுதி 2 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.
மாவட்ட சீரமைப்புக்குப் பின்னர், பரப்பளவில் பெரிய மாவட்டமாக பிரகாசம் விளங்குகிறது. சிறிய மாவட்டமாக விசாகப்பட்டினம் உள்ளது. புதிய மாவட்டங்கள் அனைத்தும் தெலுங்கு வருட பிறப்பான ஏப்ரல் 2 யுகாதி தினம் முதல் நடைமுறைக்கு வரும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. மாவட்ட மறுசீரமைப்பு மீதான அறிவிக்கை வெளியான 30 நாள்களுக்குள் பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளையும், ஆட்சேபங்களையும் எழுத்துபூர்வமாக அளிக்கலாம் எனவும் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
 மாநிலத்தில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் நிர்வாக வசதியையும், சிறப்பான மேம்பாட்டையும் உறுதிசெய்வதே மாவட்ட மறுசீரமைப்பின் நோக்கமென ஆந்திர அரசு தெரிவித்தாலும், நிதி நெருக்கடி, குறைவான வருவாய், நலத்திட்டங்களுக்கான செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பல்வேறு சவால்களையும் ஆந்திர அரசு எதிர்கொள்ள நேரிடும்.
மேலும், ஆந்திர நிதிநிலை அறிக்கையில் பாதியளவு தொகை அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கும், மறுபாதி நலத்திட்டங்களுக்கும் செலவிடப்படுவதாக புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. அந்த வகையில் புதிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் கருவூலத்துக்கு கூடுதல் செலவினம் ஏற்படும். அத்துடன், மாவட்ட எல்லைகளை வரையறுக்கும் போது மேற்கொள்ளப்படும் சாலை கட்டுமானப் பணி அரசின் நிதிநிலைக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டியதாகியுள்ளது. 
இவை எல்லாவற்றுக்கும் மேலாக அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே நிலவும் ஊதிய பிரச்னை இதுவரை ஓய்ந்தபாடில்லை. மாவட்ட மறுசீரமைப்பு நடைமுறைகளைத் துரிதப்படுத்த வேண்டுமாயின், அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. 
மாவட்ட மறுசீரமைப்பு மீதான பரிந்துரைகளையும், ஆட்சேபங்களையும் பொதுமக்கள் தெரிவிக்க 30 நாள்கள்  அவகாசம் அளித்த போதிலும், ஆந்திரத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிது புதிதாக ஆர்ப்பாட்டங்கள் தலையெடுக்கின்றன. ஆகையால், கால அவகாசம் 30 நாள்களைத் தாண்டி சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
புதிதாக உதயமாகும் மாவட்டங்களுக்கு சூட்டப்படும் பெயரை அடிப்படையாக கொண்டும் சிலர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அன்னமய்யா மாவட்டத்தின் தலைநகராக ராய்சோட்டியை அறிவிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. கடவுள் பெருமாள் மீது அதீத பக்தி கொண்டவரும், பெருமாள் மீது பல கீர்த்தனைகளை எழுதியவருமான அன்னமாச்சார்யாவின் பிறப்பிடமாக அன்னமய்யா மாவட்டத்துக்கு உள்பட்ட ராஜம்பேட் அடுத்த தல்லபக்கா விளங்குவதால், அன்னமாச்சார்யாவின் பெயரில், ராஜம்பேட்டை தலைமையகமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 
இதேபோல ஒருசில பகுதிகளில் மாவட்டத்தின் பெயரை மாற்றக் கோரி போராட்டம் நடைபெறுகிறது. மேலும், மாவட்ட மறுசீரமைப்பானது மாவட்டத்துடன் தொடர்புடைய மக்களின் அடையாளத்தை பாதிக்கும் என்றும் புகார் கூறப்படுகிறது.
உதாரணமாக, கிழக்கு கோதாவரி மாவட்டத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதிகள் அடங்கிய ரம்பசோடவரம் பகுதியை அரகு மாவட்டத்துடன் இணைக்கும் தீர்மானத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய மாவட்டத்தின் தலைமையகமான படேரு, ரம்பசோடவரத்திலிருந்து 300 கிமீ தொலைவில் அமைந்திருப்பதே பொதுமக்களின் எதிர்ப்புக்கு பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. ஒருசிலர் ரம்பசோடவரத்தை தலைமையகமாக அறிவிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.
இதுதவிர, கிழக்கு கோதாவரி மாவட்டத்துக்கு உள்பட்ட சிந்தூர் நகரும், மாவட்டத் தலைமையகமான படேருவில் இருந்து 400 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதேபோல, ஓங்கோல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள், மறுசீரமைப்பு என்ற பெயரில் அருகருகே 2 மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதால், அதன் தனித்துவத்தை இழப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இதுமட்டுமன்றி, புதிய மாவட்டத்தின் தலைநகராக இந்துப்பூரை (அனந்த்நகர் மாவட்டம்) அறிவிக்க வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது.
இப்போது ஆந்திரத்தில் மாவட்டப் பிரிவினைக்கு எதிராகவும், அவற்றின் தொன்மையை நிலைநாட்டக் கோரியும் பொதுமக்கள் உணர்வுபூர்வமாக போராடத் தொடங்கியுள்ளதால், அவர்களை முதல்வர் சமரசம் செய்யும் கட்டாயத்தில் உள்ளார். 
ஏற்கெனவே ஆந்திர மாநிலம் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்தித்துவரும் இந்த வேளையில், சவால்களை எதிர்கொண்டு 13 புதிய மாவட்டங்களையும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எவ்வாறு உருவாக்கப் போகிறார் என்பதில் அடங்கியுள்ளது அவரது அரசியல் சாதுர்யம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com