நல்ல தருணம் இது; நழுவவிடக் கூடாது!

கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், படகுகளைப் பறிமுதல் செய்வதுமான இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை ஏறக்குறைய 900-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் பலியாகியும் உள்ளனர்.
 இதேபோல இலங்கை மீனவர்களை இந்தியக் கடல்படை சுட்டுக் கொன்றதுண்டா? இலங்கைப் படகுகளைப் பறிமுதல் செய்து சென்னை, ராமேஸ்வரம் துறைமுகங்களில் வைத்துள்ளதா? இல்லை என்பது நிஜமட்டுமல்ல. இதுபோன்ற இழிவை இந்தியா எப்போதுமே செய்தது இல்லை. செய்ய முடிந்தாலும் செய்ததே இல்லை.
 இந்தியா அணுஆயுத பலமுள்ள வல்லரசு நாடு. இந்திய ராணுவத்தின் ஆயுதபலம், சீன தேசத்தையும், பாகிஸ்தானையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அளவுக்கு இருப்பதைக் காட்ட, நமது ஏவுகணைகள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் போதும். இத்தனை பலமுள்ள இந்திய தேசம், அளவில் மிகச்சிறிய, ஆயுதபலமும் இல்லாத, பொருளாதாரத்தில் கடனாளியாகி பிற நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நாட்டோடு இப்படி நடந்துகொள்வது ஆச்சர்யம்தான்.
 இந்தியாவின் எட்டு கோடி தமிழர்களும் பெருமூச்சுவிட்டாலே போதும், இலங்கையில் அது சூறாவளியாகிவிடும். இலங்கைக்கு இந்தத் துணிச்சல் அல்லது ஆணவம் வருவதற்குரிய பின்புலம் என்ன? சீன தேசம் இலங்கையின் கடல் பரப்பில் 1,000 ஹெக்டரை செயற்கையாக நிலப் பகுதியாக்கி ஒரு ராணுவத் தளத்தையே உருவாக்கி வருகிறது. அது நாளை இந்தியாவை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்படலாம்.
 இவ்வாறு, பலவீனமான இலங்கை, யாருக்காவோ இந்தியாவின் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டாமா?
 இலங்கையில் சிங்கள இனம் மட்டும்தான் உள்ளதா?
 இலங்கையின் 2 கோடியே 10 லட்சம் மக்கள்தொகையில் 16 சதவீத மக்கள் (35 லட்சம் பேர்) தமிழர்கள். அவர்கள் மத ரீதியில் ஹிந்துக்கள். 7 சதவீதம் முஸ்லிம்கள். 6 சதவீதம் கிறிஸ்தவர்கள். 70 சத மக்கள் சிங்கள பெளத்தர்கள்.
 சிங்கள இன அரசு சிறுபான்மைத் தமிழர்களை நடத்தி வரும் விதத்தை நாம் நன்கு அறிவோம். இன்னும் தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் ஒரு லட்சம் பேர் இருந்து வருவது ரகசியமல்ல. அவர்களின் நலத் திட்டங்களுக்காக தமிழக அரசு சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ. 317 கோடி ஒதுக்கியுள்ளதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து, இலங்கைத் தமிழர் கூட்டணியும், உலகத் தமிழர் கூட்டணியும் கடிதங்களை எழுதியுள்ளது நினைவுகூரத்தக்கதாகும்.
 இலங்கையின் வடக்குப் பகுதிகளில் மலையகத் தமிழர்கள் உள்ளனர். கிழக்குப் பகுதியில் யாழ் தமிழர்கள் உள்ளனர். சிங்களரைப் போலவே இலங்கையின் யாழ் தமிழர்கள் பூர்வகுடிமக்கள். அவர்கள் வந்தேறிகள் அல்லர்.
 ஒரு காலத்தில் இலங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்தது. இப்போது இல்லை. இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் தளபதிகளாகவும் இருந்தனர். இப்போது காவல்துறை உயர் பதவிகளில்கூட இல்லை. அவர்களின் வசம் தடிகள் மட்டும் தரப்பட்டுள்ளது. துப்பாக்கிகள் இல்லை.
 உலகத்தின் பல நாடுகளுக்கு, குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் சுமார் 20 ஆண்டுகளாக அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
 சிங்களப் பேரினத்தின் கொடுமையால் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் நீடிக்கின்றனர். அதன் காரணமாக தனிநாடு கேட்டுப் போராடுவதற்கான நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர். தமிழ் ஈழம் என்ற பிரிவினைக் கோரிக்கையை வைத்து 1983 முதல் 2009 வரை ஏறக்குறைய 25 ஆண்டுகளாகப் போரிட்டனர்.
 தமிழர்களை வெல்ல முடியாத இலங்கை சிங்கள அரசு, பிற நாடுகளின் ரகசிய ராணுவ உதவிகளால் தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிட்டது மட்டுமல்ல, 1 லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை அமைதிப் பிரதேசத்திற்கு ஏமாற்றி வரவழைத்துக் கொன்று குவித்துவிட்டது. வெள்ளைநிற வேன்களில் கொண்டு செல்லப்பட்ட 20 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்ற ஐ.நா.வின் மனித உரிமைக் கழகத்தின் கேள்விக்குப் பதில்லை.
 இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் மேலும் இருண்டுபோய்க் கிடக்கிறது. 2 லட்சத்து 50 ஆயிரம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாகிவிட்டது.
 இந்தியாவின் ஓர் அங்கமாகத்தான் தமிழகம் உள்ளது. 1991-இல் தமிழகத்தின் பாக் ஜலசந்தியின் 9 தீவுகளில் ஒன்றான கச்சத் தீவு 1974-இல் இலங்கைக்கு அரசியல் பேரமாகத் தரப்பட்டது. அதனால் தமிழக மீனவர்கள் அந்தத் தீவின் மீதிருந்த சகல உரிமைகளையும் இழந்துவிட்டனர்.
 கச்சத் தீவில்தான் ராமேஸ்வர மீனவர்கள் தங்களின் மீன்பிடி வலைகளை உலர்த்துவார்கள். இப்போது உள்ளே நுழைய முடியாது. அவ்வளவு ஏன்? கச்சத் தீவில் ஆண்டுதோறும் நடக்கும் அந்தோணியார் தேவாலயத் திருவிழாவுக்குக்கூட தமிழ்நாட்டுக் கிறிஸ்தவ மீனவர்களுக்கு அனுமதி தர இலங்கை தாமதிக்கிறது.
 கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என மத்திய அரசு 2013-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசும் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. 8.7.2014-இல் பிரதமர் மோடிக்கு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுபற்றி ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.
 1991-இல் தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்க வேண்டுமென்று தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.
 இந்த நிலையிலும், இலங்கைக்கு ரூ. 6,700 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளதை இலங்கை அரசு நன்றியோடு நினைவுகூரத் தவறிவிட்டது.
 இலங்கையில் 13-ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த அழுத்தம் தர வேண்டுமென யாழ்ப்பாண மாகாண எம்.பி.-க்கள் பிரதமருக்குக் கோரிக்கையும் விடுத்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தன், நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் இலங்கை இந்திய தூதரகத்தின் மூலமாக பிரதமருக்கு அக்கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
 கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான தீவு. 1956 வரை நிலஅளவை ஆவணங்களில் கச்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட எந்தத் தடையும் இல்லை. அதற்கு உதாரணமாக உலக அரசியல் அரங்கில் தற்போது நமக்கு உதவிகரமாக உருவாகியுள்ள சம்பவங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 சோவியத் யூனியன் 1917-இல் உருவானபோது, அதில் 30 ஐரோப்பிய நாடுகள் இணைந்தன. பின்னர் 1991-இல் சோவியத் யூனியனிலிருந்து எல்லா நாடுகளும் பிரிந்துவிட்டன. அவ்வாறு இணைந்து பின்னர் பிரிந்த நாடுதான் உக்ரைன் நாடு.
 அதில் கிழக்குப் பகுதியிலுள்ள கிரிமியா என்ற தீவில் வாழ்கிற மக்கள் இனத்தால் ரஷியர்கள். அத்தீவு உக்ரைன் ஆட்சியில் இருந்தாலும், அங்கு 10 சத மக்களே உக்ரைனியர்கள். 90 சத மக்கள் ரஷியர்கள்.
 அம்மக்கள் ரஷியாவோடு இணைந்துகொள்ள விரும்புகிறார்களா அல்லது உக்ரைனுடன் இருக்க விரும்புகிறார்களா என ரஷியா அங்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. ரஷியாவுடன் இணைவதற்கு 97 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். 2014-இல் ரஷியா கிரிமியாவை இணைத்துக் கொண்டது. அதன்பின்னர் ரஷிய முதலீடுகள் கிரிமியாவுக்குக் கிடைத்து அது வளமாகி வருகிறது. கிரிமியாவை ரஷியா தனது இன உணர்வோடுதான் இணைத்துக் கொண்டுவிட்டது.
 கிரிமியா இல்லாத உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நீடிக்கிறது. காரணம், ரஷியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அணியில் உக்ரைன் சேரலாம் என்று ரஷியா சந்தேகப்படுகிறது. அச்சுறுத்தி அதைத் தடுக்கவே இந்தப் போர் என்கிறது ரஷியா.
 இந்த சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, இலங்கையின் தமிழ் ஈழத்தை உருவாக்க அங்கு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும். அதற்கு முன்பாக கச்சத்தீவை அதிரடியாகவே மீட்கவும் அறிவிப்பு செய்ய வேண்டும். உக்ரைன் நாடு கிரிமியாவை இனி மீட்டெடுக்க முடியாது. காரணம், அங்குள்ளவர்கள் இனவழியில் ரஷியர்கள்.
 31.1.2021-இல் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் சம்பந்தமான பிரச்சினையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களிக்க கலந்துகொண்ட 10 நாடுகளில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். கிரிமியா ரஷியர்களைப் போல இலங்கை தமிழ் மக்கள் உள்ளனர்.
 அவர்களின் தனிநாடு கோரிக்கைக்கு முன்பாக, இலங்கையின் சம உரிமையுள்ளவர்களாக வாழ 13-ஆவது சட்டத் திருத்தத்தை செய்ய இந்தியா வலியுறுத்த வேண்டும். அதற்கு பாரத அரசு தமது பலத்தையும் காட்டலாம். இது சம்பந்தமாக சென்ற ஆண்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தித் திரும்பியுள்ளார். எவ்வகையிலும் இது ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டது அல்ல. ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான சுதந்திரக் கோரிக்கைக்கான ஆதரவு மட்டுமே ஆகும்.
 1971-இல் வங்க தேச விடுதலைக்கு இந்திராகாந்தி உதவியதுபோல, தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுவது பற்றி பாரத பிரதமர் மோடி சிந்திக்க வேண்டிய நல்ல தருணம் இது. இதை நழுவ விடக் கூடாது.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com