நோய்த்தொற்றும் குழந்தை நலனும்

நோய்த்தொற்றும் குழந்தை நலனும்

குழந்தைகள் குடும்பத்தின் முக்கிய அங்கம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர்களின் உடல், மனம், மற்றும் சமூகம் சார்ந்த வளர்ச்சி குடும்பத்தைச் சார்ந்தது. சிதைந்த குடும்பச் சூழ்நிலையில் வளரும் குழந்தை சிறந்த மனதிடத்துடன் இருக்க முடியாது.
 இந்தியாவில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சுமார் 37 கோடி பேர் இருக்கின்றனர். பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் இவர்களது மனவளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருப்பதாக இந்தியக் குழந்தை மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
 பெருந்தொற்றுக் காலத்தில் குடும்பத்தின் அன்றாட செயல்பாடுகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. பல பெற்றோர் வேலை இழந்துள்ளனர்; சிலருக்கு ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது; வீட்டிலிருந்து பல பெற்றோர் அலுவலகப் பணியைச் செய்கிறார்கள்.
 தாய் அலுவலகப் பணி செய்வதும், தந்தை வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்வதும், இரண்டு பெற்றோர்களும் வீட்டிலேயே இருப்பதும் குழந்தைகளுக்கு ஒரு புதிய சூழலாக இருக்கிறது.
 மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகள் வீட்டிலேயே இருக்கின்றனர். நண்பர்களுடன் கூடி விளையாடி மகிழ்வது, பள்ளியில் கல்வி தவிர மற்ற செயல்பாடுகள், குழந்தைகளின் தினசரி செயல்களுக்கு ஒரு ஒழுங்கு, சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் ஆகியவை மாறி இருப்பது, இணையம் மூலம் நடக்கும் வகுப்புகள் போன்றவற்றை அவர்களால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனதில் வெறுப்பு ஏற்படுகிறது.
 சில நாட்கள் விடுமுறை என்றால் மகிழும் குழந்தைகளாலும் அதை ஆவலுடன் எதிர்பார்க்கும் பெற்றோர்களாலும் இந்த மிக நீண்ட விடுமுறையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களுடைய எதிர்காலமும் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி பெற்றோர்களின் மனதை அழுத்துகிறது. அவர்களுக்கும் கோபம், மனச்சிதைவு, எரிச்சல் ஆகியவை ஏற்படுகின்றன.
 இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகள் உட்பட பலரிடம் மனநல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும், மனநல ஆலோசகர்கள், மனநல மருத்துவர்களிடம் பலர் சிகிச்சைக்கு வருவதாகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 இது இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு. மக்களின் மனோதிடம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், மனநல பாதிப்பு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 தாய் அல்லது தந்தையுடன் (தனிப்பெற்றோரிடம்) வளரும் குழந்தைகள், முன்களப் பணியாளர்களின் குழந்தைகள் கூடுதல் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுவதைக் கூட குழந்தைகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 தற்போது குழந்தைகள், வளரிளம் பருவத்தினரிடையே பல மாறுதல்கள் தெரிகின்றன. கவனச் சிதறல், யாரிடமாவது ஒட்டிக்கொண்டே இருப்பது போன்றவை அதிகமாகக் காணப்படுகின்றன. இவை குழந்தைகளின் படிப்பையும், மற்றவர்களுடன் பழகும் தன்மையையும் பாதிக்கின்றன. பெருந்தொற்றைப் பற்றி கேள்வி கேட்க குழந்தைகள் பயப்படுகிறார்கள்.
 வீடுகளில் சண்டையிடுதல், குழந்தைகளை அடிப்பது போன்றவை நோய்த்தொற்றுக் காலத்தில் பத்து மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அரங்கேறுகின்றன. ஏற்கெனவே மனநல பாதிப்பு உள்ள சிறார்களுக்கு இவை மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இவை தொடர்ந்தால் பிற்காலத்தில் பெரிய அளவு மனநல பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாகக் கூடும்.
 கருவுற்ற தாய்க்குக் கவலையும் மன அழுத்தமும் இருந்தால் அது சிசுவையும் பாதிக்கும். இந்த பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகள் தாயிடம் ஒட்டிக்கொள்கிறார்கள். பெருந்தொற்றால் அவர்களைப் பிரிய நேரிடும் என்ற பயம் அதிகம் இருக்கிறதாம். 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் நோய்ப் பரவல், நோயின் பாதிப்புகள் பற்றிப் பெற்றோரிடம் கேள்விகளைக் கேட்கிறார்கள்.
 எல்லா வயது குழந்தைகளும் ஒருவித பயத்துடன் சாப்பிடப் பிடிக்காமல், தூக்கமின்மை, தனிமை, பதற்றம், பசி குறைவு ஆகியவற்றுடன் இருக்கிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள்.
 பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடி இருந்ததால் தங்களது திறமைகளை வெளிப்படுத்தப் போதிய ஊக்கமின்றிக் குழந்தைகள் முடங்கிப் போய் இருக்கின்றனர். வெளி விளையாட்டுகள் இல்லாமல் இருப்பதும் அவர்களின் மனநலத்தை பாதிக்கிறது.
 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதால் கற்கும் திறன் பாதிக்கப்பட்டு அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்று பெற்றோர்களுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை நீண்ட நாட்கள் கடைப்பிடிப்பதையும் குழந்தைகள் விரும்புவதில்லை.
 மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு மனநல பாதிப்புகள் அதிகம் என்கிறது புள்ளி விவரம். பெண் குழந்தைகளுக்கு இணையவழிக் கல்வி மறுக்கப்படுவதும் பள்ளி இடைநிற்றலும் அதிகரித்திருக்கின்றன.
 ஊரடங்கிற்கு பயந்து நிறைய தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் வாங்கி சேமிக்கும் பழக்கமும் அதிகரித்துள்ளதாம். வீட்டில் அதிக நேரம் இருக்கும்போது சமூக ஊடகங்களில் கூடுதல் நேரம் செலவழிக்கிறார்கள். இணைய வழிக் கல்விக்காக அலைபேசிகளைப் பயன்படுத்தவேண்டியிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகிறது.
 பொது மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள் ஆகியோர் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவ வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தால் தயக்கமின்றி உடனடியாக மனநல மருத்துவரிடம் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும்.
 அரசு மருத்துவமனைகளிலும் பெருந்தொற்று தொடர்பான மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. தொற்று பாதித்த குடும்பத்துக் குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைத்து குழந்தைகளும் மனநல பாதிப்புக்கு ஆளாகலாம். எனவே, கவனம் தேவை.
 தற்போது பள்ளிகளும் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆசிரியர்களும் சிறார்களின் மனநலத்தை உற்று நோக்கி உதவி செய்யலாம். உடல் நலம் மட்டுமின்றி குழந்தைகளின் மனநலமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com