களவு போகும் கலைப்பொருள்கள்

ஏல மையங்களிலும் காட்சிப் பொருள்களாக இருந்துகொண்டிருக்கும் இந்தியக் கலைப்பொருள்களை மீட்பதற்குத் தேவையான ஆவணங்கள் நம்மிடம் இல்லை. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த செப்புத் திருமேனிகள், கற்சிலைகள் குறித்த ஆவணங்களைத் தயாரிக்க, போதிய  நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லாததால், அவற்றை ஆவணப்படுத்துவதில் தொடர் சிக்கல் நிலவுகிறது. உலகத்தின் பல்வேறு அருங்காட்சியகங்களிலும், ஏல மையங்களிலும் காட்சிப் பொருள்களாக இருந்துகொண்டிருக்கும் இந்தியக் கலைப்பொருள்களை மீட்பதற்குத் தேவையான ஆவணங்கள் நம்மிடம் இல்லை. 

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 37,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில் தொன்மையான பற்பல கோயில்களுக்குச் சொந்தமான சிலைகள் மாயமாகிவிட்டதாக புகார்கள் உள்ளன. மானுடவியல் ஆவணங்களான புராதன கலைப்பொருள்களைப் பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.   

1992 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் தமிழக கோயில்களில் இருந்து 1,200 பழங்காலச் சிலைகள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் 830 சிலைகள் கற்சிலைகள் ஆகும். மற்றவை ஐம்பொன் உலோகச் சிலைகள். அதற்கு முந்தைய காலத்தில் காணாமல் போன கோயில் சிலைகள் குறித்த தரவுகள் இந்து அறநிலையத் துறையிடம் இருப்பதாகத் தெரியவில்லை. 
கோயில்களில் திருடி விற்கப்பட்ட சிலைகளுக்கு, லண்டனில் உள்ள "ஆர்ட் லாஸ் ரெஜிஸ்டர்' நிறுவனம் சான்றிதழ்களை வழங்கியிருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த இந்தியக் கலைப்பொருள்களுக்குச் சான்றிதழ்களை வழங்கியிருக்கிறது என்ற தகவல்களை நாம் கேட்டுப் பெற்றால் தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில் சிலைகளை மீட்க முடியும்.

கடந்த 20 ஆண்டுகளில், நாடு முழுவதும் 3,676 பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இருந்து 4,408 கலைப்பொருள்கள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் 1,493 கலைப்பொருள்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கலைப்பொருள்களில் 2,913 பொருள்கள், உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகளிலும், ஏல மையங்களிலும் அடைந்து கிடக்கின்றன.
1972 முதல் 2000 வரை 17 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. 2000 முதல் 2012-ஆம் ஆண்டு வரை ஒரு சிலைகூட மீட்கப்படவில்லை. 
உலக கலைப்பொருள் சந்தையில் சோழர்கால செப்புத் திருமேனிகள், நடராஜர் சிலைகளுக்கு, பெரும் வரவேற்பு உள்ளது. சிலைகள் மட்டுமல்லாமல், செப்பேடுகள், மரப்பொருள்கள், விளக்குகள், இறைவன் எழுந்தருளும் வாகனங்கள், பட்டயங்கள் போன்ற கலைப்பொருள்களும் கடத்தப்படுகின்றன. கற்சிலைகளின் விலை அதிகம் என்பதால், உடைந்துபோன கற்சிலைகளும் திருடப்படுகின்றன.

சிலைகளின் தொன்மைக்கேற்ப அவற்றின் விலை கூடுகிறது. வாஷிங்டனைச் சேர்ந்த "குளோபல் ஃபைனான்ஷியல் இன்டக்ரிட்டி' என்ற குழு, ஆண்டுக்கு ரூ. 40,000 கோடி மதிப்புள்ள புராதன கலைப்பொருள்கள் சட்ட விரோத வர்த்தகத்தில் புழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இவற்றில் இந்திய சிலைகளே அதிகம் என்று கூறுகிறது அக்குழு.

2010 முதல் 2012 வரை கோயில்களில் இருந்து 4,408 கலைப்பொருள்கள் திருடப்பட்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் 2,913 சிலைகள் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாண்டிச்சேரி நிறுவனத்திடம்தான் 1950-ஆம் ஆண்டிலிருந்து கோயில் சிலைகள், நினைவுச் சின்னங்களை ஆவணப்படுத்திய ஒளிப்படங்கள் உள்ளன. அந்த ஆவணத் தொகுப்பில் இந்திய கோயில் சிலைகள், நினைவுச் சின்னங்களின் 1,35,629 படங்கள் உள்ளன. அவற்றில் தமிழக கோயில் சிலைகள், கோயில் ஓவியங்களின் ஒளிப்படங்களின் எண்ணிக்கை மட்டுமே 86,057.

அந்நிறுவனத்திடமிருக்கும் ஆவணங்களை இந்து சமய அறநிலையத் துறையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், கோயில் சிலைகளை நாம் ஆவணப்படுத்துவதும், கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதும் எளிதாக இருக்கும். சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல், பாண்டிச்சேரி ஆவணங்களை மட்டும்தான் ஆதாரமாகக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக கோயில்களில் உள்ள 3,37,151 திருமேனிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திருமேனிகளைப் பாதுகாப்பதற்காக 12,000 கோயில்களில் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படுத்தப்பட்டுள்ள திருமேனிகளில் 8,693 உலோகத் திருமேனிகள் மட்டுமே பாதுகாப்பு அறைகளில் உள்ளன. மற்றவை குறித்த விவரங்கள் இல்லை.

போதைப்பொருள் கடத்தலுக்கு அடுத்ததாக கலைப்பொருள்கள் கடத்தல் இருப்பதாக பொருளாதார குற்றத் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது. செப்பேடுகள், உலோகத் திருமேனிகள், கற்சிலைகள் திருடப்படுவதைத் தடுக்க சட்டங்களைக் கடுமையாக்க வேண்டியது அவசியம்.
கோயிலின் தொன்மை, சிலைகளின் மதிப்பு குறித்த ஆவணங்களை வரலாற்று நிபுணர்கள் மூலம் பெற்று, அவற்றை இணையத்தில் பதிவேற்றுவது, புகைப்படங்கள், விடியோ பதிவுகளைச் சேகரிப்பது ஆகியவை மூலமாக, நம் புராதன பொக்கிஷங்களைப் பாதுகாக்கலாம்.

மேலும், செப்புத் திருமேனிகள் உள்பட அனைத்து தொன்மையான கலைப்பொருள்களின் கீழும் லேசர் அடையாளங்களைப் பதிக்க வேண்டும். அதன் மூலம் சிலைகளை எளிதாக அடையாளம் காண முடியும். 
1950 முதல், தமிழக காவல் நிலையங்கள் அனைத்திலும் பதிவான சிலைக்கடத்தல்  தொடர்பான வழக்குகள் அனைத்தையும் மறு விசாரணை செய்யும் வகையில் அதுகுறித்த விவரங்களை வெளியிட்டால், வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டு இங்கு கொண்டுவர வசதியாக இருக்கும்.

அருங்காட்சியங்களில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தெய்வச்  சிலைகளை மீட்டு, கோயில்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பத்திரமாக வைத்தால் மட்டும் போதாது. அவற்றை வழிபாட்டுக்கும் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நமது வரலாறு வெறும் காட்சிப் பொருளாக இல்லாமல், மனித வாழ்வியலோடு ஒன்றிணையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com