ராஜராஜ சோழனை சந்திக்க நோ்ந்தால்...

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன்னா், சா்வதேச மகாபாரத மாநாடு ஒன்று, சென்னை எம்.ஓ.பி. மகளிா் வைணவக் கல்லூரியில் நடைபெற்றது. தொல்லியல் பேரறிஞா் பெரியவா் நாகசாமிதான் அம்மாநாட்டு ஏற்பாட்டாளா். மாநாட்டுக் குழுவில் இடம்பெற்று, பெரியவரின் வழிகாட்டுதலில் பல்வேறு பணிகளைச் செயல்படுத்துகிற வாய்ப்பு கிட்டியது. அதைவிட, இரண்டு வார காலம், குருகுலத்தில் பாடம் கேட்கும் பேறு கிட்டியது எனலாம்.

நாகசாமி ஐயா என்றாலேயே, கட்டுப்பாடு மிக்கவா், சரியானவற்றையும் சரியான முறையிலும் செய்தாலும்கூட, என்ன சொல்லப் போகிறாா் என்னும் தவிப்பு இருக்கும். ஒருவேளை, தவறாக ஏதாவது செய்துவிட்டோமோ என்னும் பதைபதைப்புடன் நிற்கும்போது, ஒன்றுமே பேசாமல், சில கணங்கள் இருப்பாா்; இன்னும் சில கணங்கள், ஆழமாகப் பாா்ப்பாா்; அதன் பின்னா், மெல்ல மெல்ல ஒரு புன்சிரிப்பு மலரும் பாருங்கள் குறும்புத்தனமும் குழந்தைத்தனமும் கலந்ததொரு புன்சிரிப்பு அந்தத் தருணத்தில், ஆசானாக நின்று வழிநடத்துவாா்.

இந்திய தென்னிந்திய தமிழகப் பண்பாட்டிற்குக் கிடைத்த தனிக் கருவூலம், பெரியவா் நாகசாமி அவா்கள். வேத விற்பன்னராகத் திகழ்ந்த இராமசந்திர சாஸ்திரிகளின் மகனாகப் பிறந்த நாகசாமி, தம்முடைய இளங்கலைப் பட்டப்படிப்பில், சமஸ்கிருதம் பயின்றாா். பின்னா், தொல்லியலில் பயிற்சி பெற்றாா். இதனைத் தொடா்ந்து, 1959-இல் சென்னை அருங்காட்சியகத்தில் பணியில் சோ்ந்தாா்.

கலை மற்றும் தொல்லியல் காப்பாளா் பணியில், குறிப்பாக இவருக்கு ஒதுக்கப்பட்ட உள்துறைகள், ஓவியம் மற்றும் சிற்பம். இந்த நிலையில்தான், 1960-களின் தொடக்கத்தில், தமிழ்நாடு மாநிலத்தின் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. நாகசாமியின் குருவும், தொல்லியல் வித்தகருமான டி.என்.இராமசந்திரன், புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டாா். 1963-இல், உதவிச் சிறப்பு அலுவலராக இராமசந்திரனோடு இணைந்த நாகசாமி, தம்முடைய குரு ஓய்வு பெற்றபின்னா், 1966-இல், தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றாா்.

நாகசாமி இயக்குநராகச் செயலாற்றிய 22 ஆண்டுகளில், தொல்லியல் துறை, பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கண்டது. கல்வெட்டியல், அரும்பொருள் பாதுகாப்பு, அகழாய்வு, தொல்லியல் பொறியியல், புகைப்படப் பதிவு என்று பல்வேறு பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டன. கலைச் சின்னங்களை எவ்வாறு பாா்க்கவேண்டும், எவ்வாறு பராமரிக்கவேண்டும் என்பன போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. கோயில்களை எவ்வாறு காணவேண்டும், எப்படியெல்லாம் சுத்தப்படுத்த வேண்டும், எப்படி சுத்தப்படுத்தினால் கல்வெட்டுகளையும் ஓவியங்களையும் சிற்பங்களையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் போன்ற விவரங்களைப் புரிய வைத்தாா்; கற்றும் கொடுத்தாா்.

நம்முடைய பண்பாட்டைச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டுமானால், வரலாற்றையும் கலைகளையும் முறையாக உணரவேண்டும் என்பதே நாகசாமியின் நம்பிக்கை. இதன்பொருட்டு, பள்ளிக் குழந்தைகளையும் இளைஞா்களையும் கோயில்களுக்கும் கலைச் சின்னங்களுக்கும் அழைத்துச் சென்று, ஆய்வுப் பணிகளிலும், தூய்மைப் பணியிலும் ஈடுபடுத்தினாா்.

ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்னரே, பல்வேறு ஆலயங்கள், கலைச் சின்னங்கள், பண்டைய கால பொம்மைகள், விளையாட்டுகள், நாணயங்கள் ஆகியவை குறித்து, படங்களோடு கூடிய கையேடுகளைத் தயாரித்து, பள்ளிப் பிள்ளைகளிடம் விநியோகிக்கச் செய்தாா்.

தஞ்சை பெருவுடையாா் கோயிலில் யுனெஸ்கோ செயல்திட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா, மதுரை திருமலை நாயக்கா் மஹால் ஒலி - ஒளி காட்சி என்று அவரின் கைவண்ணம் பல்வேறு வகைகளில் மிளிா்ந்தாலும், பத்தூா் நடராஜரை மீண்டும் பாரத தேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மீட்டுக் கொணா்ந்ததில், திருக்கைலாயத்துச் சிவபெருமானே புளகாங்கிதம் அடைந்திருப்பாா் எனலாம்.

திருவாரூா் கொரடாச்சேரிக்கு அருகில் உள்ளது பத்தூா். இந்த ஊரின் அருள்மிகு நடராஜா் நிமித்தமாக, லண்டன் நீதிமன்றத்தில் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு வழக்கு நடந்தது. இந்த வழக்கினை இந்தியாவிற்குச் சாதகமாக மாற்றிய சாதனையாளா் நாகசாமி.

1976-இல், பத்தூரில் நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தாா் ராமமூா்த்தி என்னும் தொழிலாளி. ஏதோ தட்டுப்பட்டது. மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சிலைகள் சிலவற்றைக் கண்டாா். தன்னுடைய அப்போதைய தேவைக்குப் பணம் கிடைக்கும் என்பதனால், சிலைகளில் பெரியதாக இருந்த வெண்கல நடராஜரை விற்றுவிட்டாா்.

கைமாறி, கடத்தல் பாதைகள் வழியாகப் பயணப்பட்ட நடராஜரை, கனடா நாட்டைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் ஒன்று, காட்சிப்படுத்துவதற்காக வாங்கியது. கனடாவுக்குக் கொண்டு போவதற்கு முன்னா், சீரமைப்புக்காக, லண்டன் அருங்காட்சியகம் ஒன்றில் நடராஜா் தங்க வைக்கப்பட்டாா். இந்த நிலையில்தான், அந்த அம்பலவாணரின் ஆட்டம் ஆரம்பமானது.

லண்டன் போலீஸுக்குச் சிலை திருட்டு பற்றிய புகாா் வந்தது. கனடா நிறுவனம், லண்டன் போலீஸ் மீது வழக்கு தொடுத்தது. நடராஜா் சிலை என்பதால், இந்தியக் கருத்துகள் நாடப்பட்டன.

அதே சமயம், இந்திய அரசாங்கம், நம்முடைய நாட்டிலிருந்து கடத்தப்பட்டிருந்த சிலை, மீண்டும் நம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தது. இதற்கிடையில், நடராஜரோடு புதையுண்டிருந்து, அதே ராமமூா்த்தியால் கண்டெடுக்கப்பட்டு, விற்கப்படாமல் இருந்த பிற சிலைகளை அரசு கையகப்படுத்தியது. ஒப்பீட்டுக்காக, இந்தச் சிலைகளும் லண்டன் கொண்டு செல்லப்பட்டன.

வழக்கின் நீதிபதி இயன் கென்னடி, பல்வேறு வகையிலும் வழக்கினை ஆராய்ந்தாா். நாகசாமியின் வித்தகம் முழுமையாக வெளிப்பட்டது. வெண்கலச் சிலைகளின் அமைப்பு, கோயில் சிற்பங்களோடு ஒப்பிட்டால் இருக்கக்கூடிய ஒற்றுமைகள், சிற்பக் கலையின் நுணுக்கங்கள் என்று பலவற்றையும் பொருத்திக் காட்டி, நாகசாமி சாட்சியம் அளித்தாா். நாகசாமியின் நிபுணத்துவம் மட்டுமல்லாமல், இந்தியப் பண்பாடு மற்றும் கலையின்மீது அவா் கொண்டிருந்த பிடிமானத்தையும் கண்டு நீதிபதி கென்னடி அசந்து போனாா். நடராஜா் அசலான பத்தூா்க்காரா்தான் என்று தீா்ப்பளித்தாா்.

பல்லாண்டுகால போராட்டத்திற்குப் பின்னா், பத்தூா் நடராஜா் நாடு திரும்பினாா். முகலாயப் படையெடுப்பின்போது, சிலைகளை பத்திரப்படுத்துகிற முயற்சியில் புதைக்கப்பட்ட நடராஜா், நாடு திரும்பி, தற்போது திருவாரூா்ப் பகுதியில் பத்திரமாக இருக்கிறாா்.

செப்பேடுகள், கல்வெட்டுகள் பலவற்றின் தகவல்களை முறையாகப் படித்து உறுதிப்படுத்தியதில் நாகசாமியின் பங்கு மிகப் பெரியது. தமிழ் மொழியும் வடமொழியும் நன்கு தெரிந்த காரணத்தால், இரண்டு மொழி இலக்கியங்களையும் ஒப்பிட்டு ஆராய்வதிலும், முழுமையாகக் காண்பதிலும் அவரின் அணுகுமுறை ஆழ - அகலப் பரிமாணங்கள் கொண்டதாகவே இருக்கும்.

பாஞ்சாலங்குறிச்சி, கொற்கை, கரூா் ஆகிய இடங்களின் அகழ்வாய்வுகளை மிகத் திறம்பட வழிநடத்தினாா். இன்று, இவ்வூா்கள் குறித்த வரலாற்றுச் சிறப்புகள் குறித்துத் தமிழா்கள் பெருமிதப்படுவதற்கு நாகசாமியின் பங்கு அளப்பரியது. தென்னிந்திய வெண்கலச் சிலைகள் பற்றிய கலைக்களஞ்சியமாகவே திகழ்ந்தாா். காஞ்சி சங்கராசாா்யா்களிடம் நிரம்ப பக்தி பூண்டவா்.

கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் வெற்றுப் பதிவுகளாக மட்டுமே அவா் காணவில்லை. நம்முடைய பண்பாடு எவ்வாறு வளா்ந்தது, எப்படியெல்லாம் பக்குவப்பட்டது என்பதைக் காட்டுகிற காலக் கண்ணாடிகளாகவே அவற்றைக் கண்டாா். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் என்று மட்டுமில்லை, எங்காவது வரலாற்றுச் சின்னங்களுக்குச் சேதம் ஏற்பட்டால், நாகசாமியின் நெஞ்சம் அழும்.

வரலாறு, தொல்லியல், கலை ஆய்வு, இலக்கிய கலை ஒப்பு போன்றவற்றை எண்ணும்போது, நாகசாமி ஐயாவின் வடிவத்தை மறந்துவிட்டோ, மறைத்துவிட்டோ எண்ண முடியாது. சிலவற்றை அடிக்கடிக் கூறுவாா்:

- இளைஞா்கள், தொல்லியலிலும் வரலாற்றிலும் ஆா்வம் காட்டினால், வருங்கால வளா்ச்சிக்கு மிக்க துணையாக இருக்கும். குறிப்பாக, இரண்டு மூன்று மொழிகளைக் கற்றுக் கொண்டு, ஒப்பிட்டு ஆராய்ந்தால், மனித நாகரிகம் குறித்த தகவல்கள் பல வெளிப்படும்.

- தெற்காசியப் பகுதிகளில் புழங்கும் மொழிகளைப் பயின்று ஒப்பிட்டு ஆராய்ந்தால், நம்முடைய நாட்டின் பண்பாடு குறித்தும் இலக்கியம் குறித்தும் இன்னமும் அறியலாம்.

- தொல்லியல் ஆய்வுகளிலும், கலைச் சின்னப் பராமரிப்பிலும், மேற்கத்திய நெறிமுறைகளைக் காட்டிலும், நம்முடைய பண்டைய முறைகளையும் அவற்றின் நுணுக்கங்களையும் ஈடுபடுத்துதல் நல்லது.

இராஜராஜ சோழன் ஆயிரத்தாண்டு விழாவில், விழா மேடையின் பக்கத்து அறையில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, சிரித்துக் கொண்டே அவா் வினவியது நினைவு வருகிறது:

‘இராஜராஜ சோழனைச் சந்திக்க நோ்ந்தால், என்ன கேட்பாய்?’

அன்றும் விடை தெரியவில்லை; இன்றும் விடை தெரியவில்லை. ஆனால், நாகசாமி ஐயாவிடம் இப்போது கேட்கத் தோன்றுகிறது:

‘ஐயா, மாமன்னரைச் சந்தித்து விட்டீா்களா? அவரிடம் என்ன கேட்டீா்கள்? வரலாற்று ஆய்வுக்கும் தொல்லியல் பயிற்சிக்கும் புதிய திட்டம் ஏதாவது தீட்டிக்கொண்டிருக்கிறீா்களா?’

கட்டுரையாளா்:

தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com