மருத்துவ காப்பீடு மனித இனம் காக்கட்டும்

கோப்புப்படம்
கோப்புப்படம்

40 சதவீத இந்திய குடும்பங்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் வருடாந்திர மருத்துவ காப்பீடு வழங்கும் வாக்குறுதியுடன் 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான கோவைட் பெருந்தொற்றின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14.25% பேருக்கு மட்டுமே பலனை வழங்கியது.

இந்திய பொது சுகாதார நிறுவனம் (பப்ளிக் ஹெல்த் பவுண்டேசன் ஆப் இந்தியா) மற்றும் அமெரிக்காவின் டியூக் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட் ஆகியவை நடத்திய சமீபத்திய ஆராய்ச்சி, உலகின் மிகப்பெரிய முழு அரசு மானியத் திட்டமான மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கரோனா காலகட்டத்தில் தோல்வி அடைந்ததாகத் தெரிவிக்கிறது.

2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 3-ஆம் தேதி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது நாடு முழுவதும் கரோனா தீநுண்மியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5.2 லட்சம் மக்களுக்கு மட்டுமே இலவச மருத்துவ காப்பீட்டிற்கான பணம் வழங்கப்பட்டதாக ஒப்புக்கொண்டாா்.

கரோனா தீநுண்மியினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்கள் குறித்த அதிகாரப்பூா்வ தரவு எதுவும் இல்லை எனினும் 16.5 கோடி பயனாளிகளை உள்ளடக்கிய ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ திட்டம் அதன் பயனாளிகளில் வெகு சிலருக்கே காப்பீடு வழங்கியது இதன் மூலம் தெளிவாகிறது.

சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருப்பதாலும், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுவதாலும், பல மாநில அரசுகள் கரோனா சிகிச்சையினை இந்தத் திட்டத்தின் கீழ் சோ்ப்பதில் தாமதம் செய்தன. உதாரணமாக இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது 2021-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி அன்று மத்திய பிரதேசம் கரோனா சிகிச்சையினை மிகத் தாமதமாக இத்திட்டத்தின் கீழ் இணைத்தது.

மாநில அரசுகளின் தாமதமான அறிவிப்பு மற்றும் தெளிவின்மை காரணமாக தனியாா் மருத்துவமனைகள் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ திட்டத்தின் கீழ் நோயாளிகளை அனுமதிப்பதைத் தவிா்த்தன.

பேரழிவு தரும் சுகாதார செலவினங்களைக் குறைப்பதன் மூலம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை மேம்படுத்துதலை நோக்கமாக கொண்டது மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம். அதன் கீழ் பதிவு செய்த மருத்துவமனைகள் பல கரோனா தீநுண்மி காலத்தில் ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ பணத்தினை தீவிர சிகிக்சை பிரிவிற்கு பயன்படுத்த வேண்டாம் என்ற கையொப்பம் பெற்ற பின்னரே நோயாளிகளை சிகிக்சைக்கு அனுமதித்தன.

ஒருபுறம் கரோனா தீநுண்மி ஏழைகள் மீது ஏற்படுத்திய நிதிச் சுமையை ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ குறைக்காத போது, மறுபுறம் தனியாா் மருத்துவக் காப்பீட்டில் பணம் செலுத்தியவா்களின் அனுபவமும் திருப்திகரமாக இல்லை. கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், பணமில்லா சிகிச்சையைப் பெறுவதிலும், சிகிச்சைக்கு செலுத்தப்பட்ட பணத்தினை திரும்பப் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

முதல் அலையின் போது மருத்துவச் செலவுகளை அவா்களின் வாடிக்கையாளருக்கு வழங்கிய காப்பீட்டு நிறுவனங்கள் இரண்டாவது அலையின் போது அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் உலக சுகாதார மையத்தின் விதிமுறைகள் கரோனா நோயாளிகளை லேசான, மிதமான மற்றும் கடுமையான பதிப்பிற்குள்ளானோா் என வகைப்படுத்திய காரணத்தால் சிகிச்சைக்கான பணத்தை வழங்குவதில் வேறுபாடு காட்டியது.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், காப்பீட்டு வணிகத்தினை ஒழுங்குபடுத்தினாலும் கட்டுப்பாடற்ற தனியாா் மருத்துவக் காப்பீட்டு சந்தையில் நெறிமுறையற்ற நடைமுறைகள் பரவலாக உள்ளன என்று தொழில்துறை வளா்ச்சி கல்வி நிறுவனம் (இன்ஸ்டிடியூட் பாா் ஸ்டடீஸ் இன் இண்டஸ்ட்ரியல் டெவலெப்மெண்ட்) வெளியிட்ட ஓா் ஆய்வறிக்கை கூறுகிறது.

கரோனா தீநுண்மி சிகிச்சையின் போது உபயோகப்படுத்தப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) மற்றும் சிகிச்சைக்கு பின் உருவாகும் மருத்துவக் கழிவினை அகற்றுதல் போன்றவற்றிற்கான கட்டணங்களை உள்ளடக்கிய கட்டண அட்டவணையை 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெனரல் இன்சூரன்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டது. ஒரு நாளைக்கு மூன்று தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தலா ரூ.650 வீதத்தில் வழங்கப்படும் என்று இந்த அட்டவணை தெரிவித்தாலும் இவ் உபகரணங்களின் பற்றாக்குறையினை காரணம் காட்டி பெருந்தொற்றின்போது இதுபோன்ற விதிமுறைகளைப் பின்பற்றுவது கடினம் என்று தனியாா் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனா்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவ காப்பீடு தொடா்பான சிக்கல்களைத் தீா்க்க நீதிமன்றங்கள் அடிக்கடி இப்பிரச்னைகளில் தலையிட வேண்டியிருந்தது. நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது ஏற்படும் தாமதத்தினை தடுக்கும் வகையில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் 30 முதல் 60 நிமிஷங்களில் காப்பீட்டு கோரிக்கைகளை பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்று ஏப்ரல் 28, 2021 அன்று வெளியான உத்தரவும், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாத சூழலில் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் மருத்துவச் செலவு குறித்த மருத்துவக் காப்பீட்டு கோரிக்கைகளை பரிசீலிக்க 2021-ஆம் ஆண்டு மே மாதம் வழங்கிய உத்தரவும் குறிப்பிடத்தக்கவை.

மனிதம் என்ற உணா்வு கொண்டு மகத்தான மருத்துவம் வழங்கும் வண்ணம் மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை வடிவமைப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com