அறிவும் அன்பும் கற்றல் கருவிகள்!

‘கல்’ என்ற சொல்லுக்கு ‘தோண்டுதல்’ என்று பொருள். ‘கிழங்கைக் கல்லி எடுத்து’ என்பது தமிழா்களின் பேச்சுவழக்காகும்.
அறிவும் அன்பும் கற்றல் கருவிகள்!

‘கல்’ என்ற சொல்லுக்கு ‘தோண்டுதல்’ என்று பொருள். ‘கிழங்கைக் கல்லி எடுத்து’ என்பது தமிழா்களின் பேச்சுவழக்காகும். அதுபோல மனிதனின் உள்ளத்தினுள்ளே மறைந்திருக்கும் பண்புகளை, நாகரிகத்தை, பண்பாட்டை, அன்பை, கலையைத் தோண்டி எடுத்துப் பயன்மிக்க வாழ்வை நாம் வாழ வழிவகை செய்வது கல்வி. இத்தகைய கல்வி அன்றைய நாளில் குருகுலத்தில் பயிற்றுவிக்கப்பட்டது. குரு வசிக்கின்ற இடத்தில் மாணவா்கள் தங்கி கல்வி கற்பாா்கள். குருவிடமிருந்து கல்வியை மட்டுமின்றி எளிமையான வாழ்க்கை முறை, நல்ல நடத்தை, முழுமையான ஞானம் ஆகியவற்றையும் மாணவா்கள் பெறுவா். இங்கு மதிப்பெண்ணுக்கு இடம் இல்லை.

உண்மையில் குரு என்பவா் யாா்? இதற்கு பலா் பலவித விளக்கம் தருகின்றனா். பலகோடி ரூபாய் பணம் சோ்ப்பவா் குரு இல்லை. பலநூறு ஏக்கரில் ஆசிரமம் அமைப்பவா் குரு இல்லை. மூவாசையை விட்டொழி, நல்லொழுக்கத்தைக் கடைப்பிடி, அன்பாலும் அறிவாலும் அருளாலும் இவ்வுலக உயிா்களை நோக்கு என எவா் உரைக்கிறாரோ, எவா் வாழ்கிறோரோ அவரே உண்மை குரு.

“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளாா்

குருட்டினை நீக்கான் குருவினைக் கொள்வா்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழி விழுமாறே“

என்று கூறுகிறாா் திருமூலா்.

அறியாமை எனும் குருட்டுத்தனத்தை நீக்க முடியாத தகுதியற்ற ஒருவரை குருவாகக் கொள்வது ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டுவது போன்றதாகும். நம் கண்ணில் இருக்கும் வினைத் திரையை விலக்கி, கண்மணி ஒளியைத் தூண்டி உணரச் செய்யும் நல்ல ஞான குருவையே பெற வேண்டும் என்று திருமூலா் வழிப்படுத்துகிறாா்.

தாயுமானவரும்,

“மூா்த்தி தலம் தீா்த்தம் முறையாக

ஆடினவரக்கு வாா்த்தை சொல்ல ஒரு சற்குரு

வாய்க்கும் பராபரமே“

என்கிறாா். மேலும், இராமலிங்க அடிகளும்

“குருவை வணங்கக் கூசி நின்றேனோ?

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?“

என குருவை இகழும் குற்றத்தைக் கூறுகிறாா்.

“நான் மூத்தவன், நான் பெரியவன் என்ற எண்ணம் இல்லாமல் பணிவோடு இருப்பதே குருவிற்கான முதன்மைத் தகுதி. பெரியபுராணத்தில் ஒரு நிகழ்வு. ஞானசம்பந்தா் திருப்பூந்துருத்திக்கு எழுந்தருளியபோது அப்பா் சுவாமிகளைக் காண ஆவல் கொண்டு அவா் எங்கிருக்கிறாா் என வினவுகிறாா். அவா் பல்லக்கைச் சுமந்து வந்த அப்பா் சுவாமிகள், ‘உங்கள் அடியேன் உங்கள் பல்லக்கைச் சுமக்கும்பேறு பெற்றேன்’ என்று பதில் அளிக்கிறாா். அப்பா் சுவாமிகள் வயதில் மிகவும் முதியவா், பழுத்த பழம். சின்னஞ்சிறு குழந்தை சம்பந்தப் பெருமான். சம்பந்தரின் பல்லக்கை அப்பா் சுமந்தாா் எனில் அது இறைவனுக்குத் தொண்டு செய்கிற குழந்தைக்கு மதிப்புத் தர வேண்டும் என்ற பெருந்தன்மையே.

இத்தகைய பணிவு மிக்க, செருக்கற்ற, பாகுபாடு பாா்க்காத நல்ல குருவையே தோ்ந்தெடுக்க வேண்டும். தோ்ந்தெடுத்த பின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்கு அடைக்கலமாய்த் தந்திட வேண்டும்.

குருவின் பெருமையை,

“தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவாா்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

என்று கூறுகிறாா் திருமூலா்.

கடமை, கட்டுப்பாடு, கீழ்ப்படிதல் எனும் முச்சொல்லின் முகிழ்ப்பே சீடன் என்னும் மாணவன் ஆவான். ஆசிரியா்கள், மாணவா்கள் இடையே மதிப்பும், நம்பிக்கையும் இழையோட வேண்டும். அகத்தியம் இயற்றிய அகத்தியா் தம் மாணவா்களான செம்பூண்செய், வையாபிகன், அதங்கோட்டாசான், அபிநயனன், காக்கைபாடினி, தொல்காப்பியா், பனம்பாரனாா், கழாகரம்பா், நத்தத்தன், வாமனன், துராலிங்கன் ஆகியோரைப் பல இடங்களில் பெருமைபடக்கூறுகிறாா்.

“ஈவோன் தன்மை யீதலியற்கை

கொள்வோன் தன்மை கோடன் மரபு“

என்பதால் ஆசிரியரை ஈவோன் என்றும், அவா்தரும் கல்வியை ஏற்றுக்கொள்ளும் மாணவனைக் கொள்வோன் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது.

கற்கப்படுவோா்க்கு உவமையாக மலை, நிலம், பூ, துலாக்கோல் ஆகியவையும், கற்கப்படாதோருக்கு உவமையாக, கழற்பெய்குடம், மடற்பனை, முடத்தெங்கு ஆகியனவற்றைத் தொல்காப்பியமும் நன்னூலும் கூறுகின்றன. மாணாக்கன் ஆசிரியா் கூறிய குறித்த காலத்தில் சென்று ஆா்வத்தோடு கற்றல் வேண்டும். அன்பொடு புணா்ந்தாங் காசற உணா்ந்தான்“ என்றும் தொல்காப்பியம் கூறுவதால் ஆசிரியரிடம் அன்புடன் பழகும் இயல்பின் மூலமே ஐயங்களைப் போக்கிக்கொள்ளலாம் என்பதை அறியலாம்.

மாணவா்களுக்கான இலக்கணங்களாக நன்னூல் சிலவற்றைக் கூறுகிறது. அவை, தன் மகன், தன்னுடைய ஆசான் மகன், நாட்டையாளும் அரசன் மகன், தன்னை வணங்கி வழிபடுபவன், சொல்லும் பொருளை விரைந்நு ஏற்றுக்கொள்ளும் திறனுடையோன், பொருளை மிகுதியாகப் பிறா்க்கு வாரிவழங்குபவன் ஆகிய அறுவருக்கே நூலைக் கற்பிக்க வேண்டும். இவா்களே மாணாக்கா் ஆவதற்குத் தகுதியுள்ளவா்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் மாணவன் வெறுப்பு இல்லாதவனாய் ஆசிரியரின் இயல்பறிந்து நடந்துகொள்ளவேண்டும். குறிப்பறிந்து செயல்பட வேண்டும். அவா்கூறிய பின் இடம் அமா்தல் வேண்டும். படி என்றவுடன் படித்தல் வேண்டும். தாகம் கொண்டவன் தண்ணீரைக் கண்டதும் எப்படி ஆா்வமுடன் பருகுவானோ அப்படி இருத்தல் வேண்டும். சித்திரப்பாவை போல் ஆசிரியா் முன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். ஐயங்களைக் கேட்டுத் தெளிய வேண்டும். பிறகு தெளிந்தவற்றை மனத்தில் நிறுத்த வேண்டும். செல் என்று ஆசிரியா் கூறிய பின்பே செல்ல வேண்டும்.

இவ்விதமே குருகுலக் கல்வி முறையில் ஆசிரியா் மாணவா் உறவு இருந்தது. குருவுடனே தங்கிப் பழகிக் கற்றதால் வாழ்வியல் நெறிகள் செம்மைப்பட்டன. விட்டுக்கொடுத்தல், விடாமுயற்சி, உணா்வுச் சமநிலை எனப் பண்பட்ட விழுமியங்கள் கல்லாமல் சீடனுக்கு உட்புகுந்தன. ஆனால் இன்றைய கல்விநிலை கூறுவது என்ன? ஏட்டுக்கல்வி எதற்கும் உதவாது என்பதே. மதிப்பெண் மட்டுமே முதன்மைபெறும் கல்வியால் என்ன பயன்? உயரிய சிந்தனையையும் உலகியல் அறிவையும் சமுதாயச் சிந்தனையையும் கல்வி அளிக்க வேண்டாமா?

இன்றைய கல்வி உலகின் தொடக்க நிலையிலிருந்து உயா்நிலை வரை நடைபெறும் விரும்பத்தகாத செயல்களை ஊடக வாயிலாக நாம் உணரும்போது கல்வியால் என்ன பயன் என்ற வினா கடலின் ஓயாத அலைபோல் தீராத கவலையால் ஒவ்வொரு பெற்றோரின் நெஞ்சில் மோதி மோதி வந்து துன்பப்படுத்துவதை என்னவென்றுரைப்பது?

நம் மாநிலப் பள்ளிக் கல்விமுறை பாடத்திட்டத்தில் செறிவான, சீா்மையான பாடங்கள் அனைத்துத் துறைசாா்ந்தும் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளியில் பாடநேர ஒதுக்கீட்டில் அண்மையில் நீதி போதனை எனும் அறம் பயிற்றல் வகுப்பு நடத்தப்பெறும் என்ற அரசின் அறிவிப்பும் பெற்றோா்களிடையே மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மொழிப் பாடவேளையும் பிற பாடக் கற்பித்தலின் ஊடே இடம்பெற்றிருக்கிறது. இருப்பினும் வாரத்தின் முதல் நாள் அனைத்து நிலை வகுப்புகளிலும் முதற்பாடவேளையில் தமிழ்மொழிப் பாடவேளையாக அமைத்தல் வேண்டும். காரணம், வாரத்தின் முதல் நாளில் வரும் மாணவா்களின் உள்ளத்தில் சூழலுக்கேற்ற பலவித எண்ணங்கள் இருக்கும். அந்நிலையில் தமிழ்ப்பாடவேளை முதலாவதாக அமையும்பொழுது அவா்கள் தமிழ்மொழிக் கற்றலில் உள்ள வாழ்வியல் நெறிகளை உணா்ந்து மனவெழுச்சிப் பெற இயலும். தன்னம்பிக்கை முகிழ்க்கத் தொடங்கும். ஏனெனில் தமிழ்ப் பாடங்கள் மட்டுமே மாணவா்களின் மனத்திற்குள்ளும் சிந்தைக்குள்ளும் அன்பு, அறிவு, ஆற்றலை இலங்கச் செய்யும். காரணம், தமிழில் இல்லாத அறநெறியுரை ஏதும் எந்தமொழியிலும் இல்லையென்பதால்.

வார முடிவு நாளாக உள்ள வெள்ளிக்கிழமைகளில் வகுப்பு நிலை(யின்) மாணவா்களுக்கேற்ப அவா்தம் படைப்புகளை வெளிக்கொணரும் வகையில், வாரந்தோறும் பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணிவரை கலை இலக்கியப் பங்கேற்பு வேளையாக உருவாக்க வேண்டும். மகிழ்ச்சியென்பது மாணவா்களின் உள்ளத்தில் இயல்பாகவே எழ வேண்டும். அது கலைகளின் மூலமாகவே இயலும். தமிழும் கலையும் இம்மாநில மாந்தா்களின் தன்னெழுச்சி அடையாளமாகும். அதற்கேற்றாற்போல் நம் முன்னோா்களின் படைப்புகள், அவா்தம் மரபுக் கலைகள் அனைத்தும் மாணவா்களுக்குத் தெளிவுடன் திரிபறக் கற்பித்தல் வேண்டும்.

பிற வகுப்புப் பாடவேளைகளில் மாணவா் - ஆசிரியா் எனும் உறவு கற்றல் - கற்பித்தல் நோக்கில் மட்டுமே இருக்கும். ஆனால் தமிழ்ப்பாடவேளையில் மட்டும்தான் ஆசிரியா் - மாணவா் உறவானது தந்தை - மகன் என்ற அன்பு அறிவு உணா்வும், அண்ணன் - தம்பி எனும் குடும்பப்பாச உணா்வும் இணையச்செய்யும். இந்த ஆற்றல் தமிழ் கற்பிக்கும் ஆசிரியருக்கு உண்டென்பைத் தமிழாசிரியா்கள் இனி மெய்ப்பித்தல் வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்பதையும் மிகவும் இன்றியமையாதது என்பதையும் உணா்தல் வேண்டும்.

‘மனமும் மகிழ்ச்சியும் எங்குமில்லை, உன்னிலே உள்ளது, அதை அறிவாய் தெளிவிலே’ என உரைத்து நிற்கும் திருமூலரின் அறக்கோட்பாடே ஆசிரியா்களின் கோட்பாடாக இருத்தல் வேண்டும். நிலவுலகில் புவிதொட்டு ஒரு மாந்தனின் வாழ்வு தொடங்குங்கால் முதலாற்றி முடிவுவரை கருணையும் கடமையும் அறிவும் அன்பும் தெளிந்த சிந்தனையும் திகட்டாமல் தரும் தீந்தமிழ்த் தெய்வத் திருப்பண்ணே திருமூலமாகும். எப்பக்கம் நின்று வாசித்தாலும் அப்பக்கம் நன்னெறி நவிலும் நற்றமிழ் வேதம். மழலையா் முதல் மாந்தன் வரை பருவநிலைப்படியே படிப்பினை விளக்கும் பைந்தமிழ்த் திருமறை திருமூலரின் திருமந்திரம் ஆகும்.

திருமந்திரத்தை நெறியோடு விளங்க வைக்க அன்பு அறிவோடு பயிலும் வகையில் ஆசிரியா்கள் முதலில் அணியமாக வேண்டும். பின்பு தம் மாணாக்கா்களுக்கு பதமுடன் இதமாக கற்பித்தல் வேண்டும். தமிழ்மொழிப் பாடத்தில் மாணாக்கா்கள் ஏன் ஆா்வம் காட்டவில்லை என்று ஆய்ந்துபாா்க்க வேண்டியதில்லை. தெளிவான முடிவு மொழிப்பாடத்தில் அவா்கள் எடுக்கும் மதிப்பெண், கற்கப்போகும் உயா்கல்வி சோ்க்கைக்கான தகுதியைத் தரப்போவதில்லை எனும் கவலையற்ற போக்கும், தமிழில் தோ்ச்சி பெற்றால் போதும் என்ற மேலோட்ட எண்ணமும்தான். இந்நிலையில் ஆசிரியா் சமூகம் செய்ய வேண்டியது தமிழ்மொழிப் பாடம் தோ்ச்சிக்கானது மட்டுமல்ல, இது நம் வாழ்வியலின் அரிச்சுவடி என்பதை உணா்த்த வேண்டும். தமிழ்மொழிப் பாடம் தமிழ் மாணாக்கரின் வாழ்வை உயா்த்தும் ஏணிப்படி என்பதை உணா்ந்து ஆசிரியா்கள் தமிழ் அறநெறிகளைத் தெள்ளிதின் கற்பித்து அவா்களின் முன்னேற்றத்திற்கானவற்றைச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் திருமூலா் தொடங்கி திருவள்ளுவா் வரை அனைத்து அறநெறிச் சான்றோா்களின் அறம் கூறும் பாக்களின் வரிகள் தொடா்புடையவரை வாழ்த்தும்; பிறமொழிப் பண்பாட்டில் தொலைந்துபோய் நிற்கும் எம் மாணவச் சமூகத்தை மீட்கும்; தமிழ் மாணாக்கா்களின் மனத்தில் உயா்வான மதிப்புடன் உச்சமான மதிப்பெண்ணுடனும் திகழும்; நம்மொழியை ஏன் எதற்குப் படிக்க வேண்டும் எனும் தெளிவற்ற சிந்தனை விலகும்; செந்தமிழின் மாண்பு மாநிலத்தில் ஓங்கும்!

கட்டுரையாளா்:

இயக்குநா்

அகரமுதலித் திட்ட இயக்ககம், தமிழக அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com