அன்றைய அரசியலில் சோஷலிஸ்டுகள்!

அன்றைய அரசியலில் சோஷலிஸ்டுகள்!

 கடந்த காலத்தில் சோஷலிஸ்டுகள் முக்கிய அங்கமாக அரசியல் களத்தில் இருந்தனர். நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கிட்டத்தட்ட 1975 வரை சோஷலிஸ்டுகளின் அரசியல் களம் இருந்தது. ஆச்சார்ய நரேந்திர தேவ், ஜெயபிரகாஷ் நாராயணன், ஜே.பி. கிருபளானி, அசோக் மேத்தா, சின்ஹா, சியாம் சுந்தர் தாஸ் ஆகியோரால் தொடங்கப்பட்டது பிரஜா சோஷலிஸ்ட் கட்சி (பிஎஸ்பி). இன்றைய அரசியல்வாதிகளான முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் போன்றோர் பிஎஸ்பியில் இருந்தவர்கள்தான். 1952-இல் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிக்கு, வடபுலத்தில் செல்வாக்கு இருந்ததோடு மட்டுமல்ல, தமிழகத்திலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்தக் கட்சியின் சின்னம் குடிசை.
 இந்தக் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த ராம் மனோகர் லோகியா பிரிந்து சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி (எஸ்எஸ்பி) என்ற கட்சியை உருவாக்கினார். தேர்தலில் இந்திரா காந்தியை வென்ற ராஜ்நாராயண், அனந்தராம் ஜெய்ஸ்வால் போன்ற பலர் இதில் இருந்தனர். இக்கட்சியின் சார்பிலும் தமிழகத்தில் சிலர் சட்டப்பேரவை உறுப்பினரானார்கள். இக்கட்சியின் சின்னம் ஆலமரம்.
 கடந்த 1960-இல் கிருபளானி பிஎஸ்பிலிருந்து விலகி, கட்சி அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார். 1964 -இல் அசோக் மேத்தா காங்கிரஸில் இணைந்தார். பின், ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1969 -இல் எஸ்எஸ்பியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
 பிகார் முதல்வராக இருந்த கர்பூரி தாக்குரும் சோஷலிஸ்ட்தான். அவரை போலவே பலர் பிகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த இயக்கத்தில் இருந்தனர்.
 சோஷலிஸ்டுகள், முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 10.41% வாக்குகள் பெற்று 19 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றனர். பின்னர் நடந்த தேர்தலில் 6.81% வாக்குகளைப் பெற்று 12 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றனர். 1967- இல் 3.06% வாக்குகள் பெற்று 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றனர். 1971- இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1.04 % வாக்குகளே பெற்று இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர்.
 1947-இல் ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளின் கடுமையான அரசியல் விமர்சனத்திற்கு பண்டித நேருவும் காங்கிரஸ் கட்சியும் ஆளானார்கள்.
 இந்த தாக்கத்தால்தான் ஆவடி காங்கிரஸ் கட்சி மாநாட்டில், சோஷலிஸ கொள்கை என்ற ஒன்றை பண்டித நேருவின் தலைமையில் முன்னெடுத்தனர். மேலும், கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் மீது விமர்சனங்களை வைத்துக்கொண்டே இருப்பதால் ரஷியாவோடு நட்புறவு கொண்டார். அது மட்டுமல்ல, ரஷியாவில் நடைமுறையில் இருந்த ஐந்தாண்டுத் திட்டத்தை நேரு இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தினார். இப்படி காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், கம்யூனிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும் வைத்த வாதங்கள் பெரும் விவாதத்தை அன்றைக்கு ஏற்படுத்தின.
 வடபுலத்தில் மட்டுமல்ல, கேரளத்திலும் பட்டம் தாணு பிள்ளை தலைமையில் 1954-இல் சோஷலிஸ்ட் அமைச்சரவையே அமைந்தது என்பது வரலாறு. புதிய கேரளம் அமைந்த பின்னும் 1962 - செப்டம்பர் வரை தாணு பிள்ளை ஆட்சியே தொடர்ந்தது.
 தமிழக சட்டப்பேரவையிலும் சோஷலிஸ்ட் உறுப்பினர்கள் இருந்தார்கள்.1967-இல் நடந்த பொதுத்தேர்தலில் இரண்டு சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் திமுக கூட்டணியில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்டனர். தமிழகத்தில் சோஷலிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்கள், ஏ. சுப்பிரமணியம், எம். சுரேந்திரன், பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்து (பிற்காலத்தில் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தார்), இவர்களெல்லாம் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையிலான பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள். அது மட்டுமல்ல பூதலூர் ஆறுமுகசாமி, சட்ட மேலவை உறுப்பினராக இருந்தவர். அவர் இஸ்கஸ் அமைப்பில் என்.டி. சுந்தரவடிவேலு, என்.டி.வானமாமலை ஆகியோரோடு பணியாற்றியவர்.
 அன்பு வேதாசலம், பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்த முன்னாள் தமிழக சட்ட மேலவை உறுப்பினர் மதுரை அய்யண்ணன் அம்பலம், சோலை இருசன், மதுரை ராமர், ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத்தை சேர்ந்த ராமையா போன்றவர்களெல்லாம் சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தார்கள்.
 மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து சுரேந்திரனும் பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து ஏ.ஆர். மாரிமுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவை சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து பி. வேலுச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்லடத்தில் இருந்து கே. குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 அன்றைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி வழங்கியபோது சோஷலிஸ்டுகள் சட்டப்பேரவையில் கடுமையாக வாதிட்டனர். காவிரி நீர் பிரச்னைக்காக சட்டப்பேரவையில் கடுமையாக வாதிட்டவர் ஈரோடு ஆர். நல்லசிவன். அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னத்துரையும் இருந்தார். இவர்கள் லோகியாவுடைய ஆதரவாளர்கள். பெருந்துறை பாலசுப்ரமணியம் லோகியா தலைமையிலான சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார். சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த பலர் பிற்காலத்தில் காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
 கடந்த 1967 தேர்தலின்போது அண்ணா மாபெரும் கூட்டணி அமைத்தார். மூதறிஞர் ராஜாஜியும் அந்தக் கூட்டணியில் இருந்தார். ஒரு முறை கழுதை மேல் ஏழு கட்சி கூட்டணி இருப்பதுபோல் ஒரு கார்ட்டூன் வந்தபோது ராஜாஜி, "அந்தக் கழுதை மெதுவாக நகர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைந்துவிடும், கவலைப்பட ஒன்றுமில்லை' என்று வேடிக்கையாகக் கூறினார்.
 அன்றைக்கு அண்ணா, பிஎஸ்பி என்றோ, எஸ்எஸ்பி என்றோ அழைக்காமல் சோஷலிஸ்டுகள் என்றே அழைத்தார். 1969-இல் சோஷலிஸ்ட் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில பல பிரச்னைகளை கையில் எடுத்து அறிவுபூர்வமாக விவாதித்தனர். இன்றைய இளைஞர்களுக்கு சோஷலிஸ்ட் கட்சி என்ற ஒன்று இருந்ததே தெரியாது.
 சோஷலிஸ்டுகள்1960, 1970-களில் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றினார்கள். தன்னலமற்று மிகவும் எளிமையாக அவர்கள் வாழ்ந்தார்கள். ஏ. சுப்பிரமணியம், ஹெச்எம்எஸ். ராமையா போன்ற சோஷலிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தமிழகத்தில் தொழிற்சங்கங்களை வளர்த்தார்கள் என்பதை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.
 இன்றைக்கு தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கோ எஸ்எஸ்பி, பிஎஸ்பி கட்சிகள் இருந்தன என்பது தெரியாது. இதுதான் இன்றைக்கு நிலைமை. கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கக்கூடாது, தமிழகத்துக்கு உரிமைகள் வேண்டும், மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் அரசிடம் அதிகாரம் குவிந்திருக்கின்றன என்று சோஷலிஸ்டுகள் தமிழக சட்டப்பேரவையில் பேசியது உண்டு.
 லோகியாவின் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தில் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் பேரவையில் கடுமையாக வாதாடுவார்கள். அது போலவே ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் இருந்த எஸ்எஸ்பி உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் பேச வேண்டியதை அறிவுபூர்வமாக பேசுவார்கள். அவையெல்லாம் இன்றைக்கும் சட்டப்பேரவைக் குறிப்புகளில் உள்ளன.
 இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிபோகக்கூடாது என்று சோஷலிஸ்டுகள் வாதாடினார்கள். 356 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, மத்திய அரசு விரும்பும்போதெல்லாம் மாநில அரசுகளை கலைக்கக் கூடாது என்று பேசினார்கள். காட்சிக்கு எளிமையான சட்டப்பேரவை உறுப்பினர்களாக அவர்கள் அன்றைக்கு இருந்தார்கள்.
 பிஎஸ்பி கட்சித் தலைவர்கள் பொதுவாக ஹிந்தி ஆதரவாளர்களாக இல்லை. ஆனால் லோகியா நல்ல மனிதரான போதிலும், தீவிர ஹிந்தி பற்றாளராக இருந்தார் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். தலைவர்களாக ஜெயபிரகாஷ் நாராயணன் இருந்தார், ஆச்சாரிய நரேந்திர தேவ் இருந்தார். ராம் மனோகர் லோகியா அகில இந்திய தலைவராக இருந்தார். ஆச்சார்ய நரேந்திர தேவ் தமிழ்நாட்டின் ஈரோடு அரசினர் விடுதியில்தான் மறைந்தார்.
 காமராஜருக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸிலிருந்து பிரிந்து சீர்திருத்த காங்கிரஸ் என தேர்தலில் போட்டியிட்டு 10, 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் 1950-களில் வெற்றி பெற்றனர் என்பது தெரியுமா? இதுதான் இன்று நமது அறிவு சார்ந்த புரிதல் நினைவு.
 இந்த வரலாற்றை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுவரை கொண்டு செல்லாதது யாருடைய பிழை? இன்றைக்கு உள்ள அரசியலை அறிந்தால் மட்டும் போதாது, கடந்த கால அரசியலையும் அறிந்து கொண்டால்தான் இன்றைய அரசியல் குறித்த சரியான புரிதல் வரும். அரசியலில் ஈடுபடுவோருக்கு வரலாறு தெரியவேண்டும், பொருளாதாரம் தெரியவேண்டும், உலக அரசியல் தெரிய வேண்டும், உலக நாடுகளுக்கிடையேயான உறவுகள் தெரிய வேண்டும், அகில இந்திய அரசியலில் என்ன நடந்தது என்று தெரிய வேண்டும்.
 பிஎஸ்பி, எஸ்எஸ்பி கட்சிகளின் கொள்கைகள் அருமையானவை. திராவிட இயக்கத்திற்கு எப்படி அண்ணா கொள்கைகளை வகுத்தாரோ, அதேபோல மக்களுக்கு ஏற்றவாறு, மக்கள் நல கொள்கைகளை வகுத்தவர்கள் சோஷலிஸ்டுகள்.
 
 கட்டுரையாளர்:
 அரசியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com