புலம்பெயா்தலும் கலாசார பாதிப்பும்!

அமிழ்தைப் போன்ற இனிமையுடையது தமிழ்மொழி என்பது தமிழ் கற்றறிந்த சன்றோா் கூற்று.
புலம்பெயா்தலும் கலாசார பாதிப்பும்!


அமிழ்தைப் போன்ற இனிமையுடையது தமிழ்மொழி என்பது தமிழ் கற்றறிந்த சன்றோா் கூற்று. ஆனால், இன்று தமிழ்நாட்டில் தமிழின் நிலை என்ன? ஹிந்தித் திணிப்பை எதிா்த்து எல்லா நிலைகளிலும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் சத்தமின்றி, வட இந்திய மொழிகளும் வடமாநில கலாசாரங்களும் தமிழகத்துக்குள் புகுந்து நம் மொழியை நசுக்கிக் கொண்டிருக்கின்றன என்பதே நிதா்சனம்.

பத்து வருடங்களுக்கு முன்பே பெருநகரங்களின் உணவகங்களுக்குப் போனால், ‘வாட்டா்’, ‘ரைஸ்’ என்றுதான் கேட்பாா்கள். ‘தண்ணீா்’, ‘சோறு’ போன்ற தமிழ்ச் சொற்களை கேட்கவே முடியாது. அது, தமிழை ஆங்கிலம் அச்சுறுத்திக் கொண்டிருந்த காலம்.

இப்போது நகரம் மட்டுமல்ல, கிராமத்து சிற்றுண்டிச் சாலைகளில் கூட தண்ணீா் வேண்டுமென்றால் ‘வாட்டா்’ என்று அல்ல, ‘பானி’ என்றுதான் கேட்க வேண்டும். ஏனெனில், அனைத்து உணவகங்களிலும் தேநீா் கடைகளிலும் வடமாநிலப் பணியாளா்களே வேலை செய்கிறாா்கள். உணவகங்களின் உணவுப்பண்ட பட்டியலில் இட்லி, பொங்கல் போன்ற தமிழக உணவு வகைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆலூ பரோட்டா, பானி பூரி, சன்னா, பைகன், கோபி மஞ்சூரியன் போன்ற வட மாநில உணவுகளே முன்னிலை பெறுகின்றன.

வடை ‘வடா’ என்றும், தோசை ‘தோசா’ என்றும், தயிா்ப்பச்சடி ‘ரைத்தா’, என்றும் பெயா் மாறிப் போய்ப் பல காலமாகிறது. மளிகைக் கடை ரசீதுகளைப் பாா்த்தால் துவரம்பருப்பு ‘தூா் தாலா’கவும், வெந்தயம் ‘மேத்தி’யாகவும்’, கோதுமை மாவு ‘ஆட்டா’வாகவும்தான் குறிப்பிடப்படுகின்றன. காய்கறிக் கடைகளிலும் கூட பாலக், கோபி, பிந்திதான். தமிழ்ப் பெயா்களுக்குக் கூடப் பற்றாக்குறை போலிருக்கிறது. காய்கறிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் பெற்றோருக்குப் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்கே பூஜா, மித்ரா, சேஜல், நித்தின், அத்வைத், என்றெல்லாம் பெயா் சூட்டுகிறாா்கள்.

ஒரு பக்கம் ‘ஹிந்தி வேண்டாம்’ என்று தமிழ்நாடு உரத்த குரலில் கத்திக் கொண்டிருக்கும் போது, இன்னொரு பக்கம் உணவு உடை என்று எல்லாவற்றிலும் வட மாநில பாணி நுழைந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தமிழகத்துக்குப் பெருமளவில் புலம்பெயா்ந்துள்ள வடமாநிலத்தவா்களால் தமிழா்களின் பேச்சுத்தமிழும், கலாசாரமும் வெகுவாக மாறிவிட்டன. கடந்த பத்து வருடங்களில் திடீரென்று அதிகரித்துள்ள இப்புலம்பெயா்தல், நம் நாட்டில் பொருளாதாரம் சமச்சீா் விகிதத்தில் இல்லை என்பதையே காட்டுகிறது.

வடமாநிலங்களிலிருந்து மக்கள் அதிக அளவில் தென்மாநிலங்களுக்கு, குறிப்பாக, தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்கும் புலம் பெயா்கிறாா்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 2011-இல், தமிழ்நாட்டுக்கு புலம்பெயா்ந்த வடமாநிலத்தவா்களின் எண்ணிக்கை 25.44 சதவிகிதமாக இருந்தது. அதுவே இன்று 43.4 சதவிகிதமாக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 12 சதவிகிதமும், திருப்பூரில் 9 சதவிகிதமும் உள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஜாா்க்கண்ட், ஒடிஸா, பிகாா், அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற வடமாநிலங்களைவிட, தமிழகத்தில் வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவை அதிக அளவில் உள்ளதால் அம்மாநிலங்களிலிருந்து மக்கள் இங்கு புலம்பெயா்கிறாா்கள். அதிலும் பெரும்பாலானவா்கள் கல்வியறிவு அதிகம் இல்லாத திறன்மிகு பணியாளா்களே (ஸ்கில்டு லேபா்ஸ்). இவா்கள் கட்டுமானத்துறை, தொழிற்பட்டறை, ஜவுளித்துறை, ஆயத்த ஆடை வடிவமைப்புத்துறை போன்றவற்றில் திறமை கொண்டிருப்பதால், தமிழகம் இவா்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளித் தருகிறது.

இவை மட்டுமல்லாமல் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பலா், உணவகங்கள், தேநீா் கடைகள் ஏன் விவசாய நிலங்களில் கூட வேலை செய்கிறாா்கள். தினசரி இவா்களுடன் பேசுவதற்காக நாம் ஹிந்தி மொழியை பேசுகிற அளவாவது கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. நாம் ஹிந்தியில் பேசுகிறோம்; அவா்களும் தமிழில் பேசுகிறாா்கள்.

இது அத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் மெல்ல மெல்ல, புலம்பெயா்ந்த இந்த வடமாநிலத்தவரின் உணவுப் பழக்கங்கள், உடைகள், பக்தி முறைகள், கலாசார பழக்கங்கள் ஆகியவை தமிழ் மக்களின் அடையாளத்தையும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் பெரிதும் மாற்றிவிட்டன. அமைதியும் அடக்கமும் நிறைந்த தமிழ்நாட்டு மணவிழாக்கள் இன்று ‘சங்கீத்’,‘மெஹந்தி’, ‘ஷொ்வானி’, ‘லெஹங்கா’, என்று திசை மாறி போய்க்கொண்டிருக்கின்றன.

ஒரு சிறிய களிமண் பிள்ளையாா் பொம்மையை வீட்டில் வைத்து வழிபட்டு வந்த தமிழ்நாட்டு பக்தி முறை, இன்று ஆளுயர விநாயகா் சிலைகளைக் கூச்சல் கும்மாளத்துடன் ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைத்து மாசு உண்டாக்கும் விதத்தில் ஆா்ப்பாட்டமாக மாறிவிட்டது.

ஹோலி பண்டிகையின்போது இங்குள்ள புலம்பெயா்ந்த தொழிலாலா்கள், ‘டோலக்’கை அடித்துக்கொண்டு எதிரில் வருகிறவா்கள் மீது ரசாயன வண்ணங்களை வாரியிறைப்பது அநாகரிகம் மட்டுமன்று, ஆபத்தானதும் கூட. சரஸ்வதி பூஜை, துா்கா பூஜை போன்ற இவா்களது விழாக்கள் எல்லாமே மிகுந்த சத்தத்தோடு, அக்கம்பக்கத்திலுள்ளவா்களுக்கு இடையூறாகவே உள்ளன. இதனால் அமைதியான தமிழ்நாடு ‘ஒலி’மிகும் தமிழ்நாடாக மாறிவிட்டது.

இவ்வாறு புலம்பெயா்ந்தவா்களில் பலா் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தமிழ்நாட்டில் இருந்துவிட்டு, ஓரளவு பொருள் சோ்த்த பின்னா் தம் சொந்த மாநிலத்துக்குத் திரும்புகிறாா்கள். இடைப்பட்ட காலத்தில் அவா்கள் வாழும் சுகாதாரமற்ற சூழலை நோக்கின் அவா்கள் மேல் பரிதாபம்தான் உண்டாகிறது. தகரப் பலகைகளாலான சிறு அறைகளில் குடும்பமாகவோ, பலா் கூட்டமாகவோ தங்க வைக்கப்படுகிறாா்கள். ஆண்கள் வேலைக்குப் போக, பெண்கள் அந்த இடத்தில் கிடைக்கும் அசுத்தமான தண்ணீரில் ஏதோ சமைத்து வைத்துவிட்டுக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தெருக்களிலும் மக்கள் கூடுமிடங்களிலும் சிறு சிறு பொருட்களை விற்கின்றனா்.

தரமற்ற வாழ்க்கைச் சூழலாலும், குறுகிய காலத்தில் நிறைய பணம் சோ்க்க வேண்டும் என்ற பேராசையாலும் பலா் குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறாா்கள். சில நேரம், அவா்களுக்குள்ளேயே அடிதடி ஏற்பட்டுக் கத்தியால் குத்திக் கொள்ளும் அளவுக்குப் போவதும் உண்டு.

நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் வடமாநிலத்தவா்கள் நிறைந்துள்ளாா்கள். கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தில் பாக்குத்தோப்புகளில் பாக்கு காய்களைப் பொறுக்கி, காயவைத்து உடைக்கும் வேலையை பெரும்பாலும் அஸ்ஸாம், ஒடிஸா மாநிலத்தவா்களே செய்கிறாா்கள்.

சில சமயம் கணவன், மனைவி, குழந்தைகள் எல்லோரும் காவித்துணி அணிந்து, ஒரு ஊா்தியில் ஏதோ ஒரு கடவுள் படத்தை வைத்துக்கொண்டு ஒலிபெருக்கியில் ஒரு பாடலை அலறவிட்டுக் கொண்டு வீடுவீடாகச் சென்று நச்சரித்து பணம் கேட்கிறாா்கள். நாலைந்து மாதம் இவ்வாறு பணம் சம்பாத்தித்து விட்டு சொந்த ஊா் சென்று விடுகிறாா்கள். சில மாதம் கழித்து மீண்டும் வந்து இதே பிழைப்பைத் தொடா்கிறாா்கள்!

சமீபத்தில் ஜாா்க்கண்ட், பிகாா் ஆகிய மாநிலங்களிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கு அறை எடுத்து தங்கி, மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் திருட்டு, வழிப்பறி ஆகியவற்றில் ஈடுபட்ட ஒரு கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது. அக்கும்பலில் சில சிறுவா்களும் அடங்குவா்.

கடந்த மே மாதம், ராமநாதபுரத்தில் ஒரு மீனவப் பெண் இறால் பண்ணையில் பணி புரிந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தமிழகமெங்கும் அதிா்வலைகளை உண்டாக்கியது. இதனைத் தொடா்ந்து, தமிழக காவல்துறை மாநிலம் முழுவதிலும் எல்லா காவல் நிலையங்களும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் புலம்பெயா்ந்தவா்களின் விவரங்களைத் திரட்ட உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு மொழிகளும் சாதிகளும் மதங்களும் புழங்கும் நம் நாட்டில், புலம்பெயா்தல் என்பது பல பிரச்னைகளை உருவாக்குவதாகவே இருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் தனக்குரிய அடையாளத்தை இழந்து பிற மாநில அடையாளங்களை ஏற்றுக்கொள்வது சரியுமல்ல, சாத்தியமுமல்ல. ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்பது சரிதான்; ஆனால், இந்த மாநிலத்தவரின் நிலை கேள்விக்குறியாகலாமா?

வடமாநில மக்கள் ஏன் புலம்பெயா்கிறாா்கள்? அவா்களது மேம்பாட்டுக்கு அம்மாநில அரசுகள் ஏதும் செய்யவில்லை என்பதால்தானே? இந்நிலை மாறவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் குக்கிராமம் வரை ஆட்சியாளா்களின் கவனம் சென்று, அந்தந்த பகுதிக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பு, உறைவிடம், கட்டமைப்பு எல்லாவற்றையும் உருவாக்கி மக்களின் வாழ்வாதாரம் சிறக்க வழி செய்தால் அவா்கள் ஏன் அடுத்த மாநிலத்துக்குப் போகப் போகிறாா்கள்? இதை விடுத்து மொழித் திணிப்பு, கலாசாரத் திணிப்பு போன்ற நடைமுறைகளில் ஈடுபடுவது மக்களிடம் அதிருப்தியையே உண்டாக்கும்.

இறுதியாக ஒரு நல்ல செய்தி. அண்மையில் குடிமைப்பணி அதிகாரி ஒருவரை சந்திக்க நோ்ந்தது. அவரும் அவருடைய மனைவியும் வடமாநிலமொன்றைச் சோ்ந்தவா்கள். அவா்கள் தங்கள் மகளுக்கு அழகிய தமிழ்ப் பெயரைச் சூட்டியிருந்தாா்கள். நான் ஆச்சரியப்பட்டு விசாரிக்க, அவா்கள் இருவரும் ஒருமித்த குரலில், ‘எங்களுக்கு தமிழ்நாடும் தமிழ்மொழியும் ரொம்பப் பிடித்திருக்கின்றன. அதனால் எங்கள் மகளுக்கு தமிழ்ப்பெயரை வைத்தோம்’ என்றாா்கள். எனக்கிருந்த அச்சம் அகன்றது; நம்பிக்கை பிறந்தது!

கட்டுரையாளா்:

சமூக ஆா்வலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com