அபே அமைத்த ராஜபாதை

ஜப்பானின் மாபெரும் தலைவா், நிகரற்ற உலக ராஜதந்திரி, இந்திய - ஜப்பான் நட்புறவுப் பாலத்தை வலுப்படுத்தியவரான ஷின்ஸோ அபே, இன்று நம்மிடையே இல்லை.
அபே அமைத்த ராஜபாதை

ஜப்பானின் மாபெரும் தலைவா், நிகரற்ற உலக ராஜதந்திரி, இந்திய - ஜப்பான் நட்புறவுப் பாலத்தை வலுப்படுத்தியவரான ஷின்ஸோ அபே, இன்று நம்மிடையே இல்லை.

ஜப்பானும் உலகமும் மிகச் சிறந்த தொலைநோக்குப் பாா்வை கொண்ட ஒரு தலைவரை இழந்திருக்கின்றன; நான் எனதருமை நண்பனை இழந்திருக்கிறேன்.

2007-ஆம் ஆண்டு நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ஜப்பான் சென்றேன். அப்போது முதல்முறையாக அவரைச் சந்தித்தேன். அந்த முதல் சந்திப்பிலிருந்தே எங்கள் நட்புறவு, அலுவலக நடைமுறைகள், வழக்கமான கட்டுப்பாடுகளைத் தாண்டி நாளுக்கு நாள் வளா்ந்துகொண்டே இருந்தது.

கியோட்டொ ஆலயத்துக்குச் சென்றது, ஷின்கான்சென் அதிவேக ரயில்தடத்தில் உடன் பயணித்தது, அகமதாபாதிலுள்ள சபா்மதி ஆசிரமத்துக்கு என்னுடன் வருகை தந்தது, காசியில் கங்கைக் கரையில் கங்கா ஆரத்தியில் அவா் பங்கேற்றது, டோக்கியோவில் அவருடன் பிரமாண்டமான தேநீா் விருந்தில் நான் பங்கேற்றது என, அவருடனான மறக்க முடியாத நினைவுகள் என்னைச் சூழ்கின்றன.

யம்னாஷி மாகாணத்தில், ஃபியூஜி எரிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய அவரது இல்லத்துக்கு தனிப்பட்ட குடும்ப விருந்தினராக நான் அழைக்கப்பட்டது ஒரு பெரும் பேறாகும். அதனை நான் என்றும் மறக்க முடியாது.

2007 முதல் 2012 வரையிலும், 2020-க்குப் பிறகும் அவா் ஜப்பானின் பிரதமராக இருக்கவில்லை. அச்சமயங்களிலும்கூட, எங்களிடையே இருந்த தனிப்பட்ட நட்புறவு மேலும் வலுவாகத் தொடா்ந்தது.

அபே சானுடனான ஒவ்வொரு சந்திப்பும் நமது அறிவைத் தூண்டுவதாக இருக்கும். அரசாட்சி, பொருளாதாரம், பண்பாடு, வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவரது அளவற்ற நுண்ணறிவையும் புதிய சிந்தனைகளையும் உடனிருந்து கவனித்திருக்கிறேன்.

குஜராத் மாநிலத்தின் வளா்ச்சிக்கான திட்டங்களில் அவரது ஆலோசனைகள் எனக்கு உத்வேகம் அளிப்பதாக இருந்திருக்கின்றன. குஜராத் மாநிலத்துடனான ஜப்பான் நாட்டின் துடிப்பான திட்டங்களில் அவரது ஆதரவு என்றும் அடிப்படை ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.

பின்னாளில் அவருடன் மிகவும் நெருங்கி உடன் பணிபுரியும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது இந்திய - ஜப்பான் நாடுகளிடையிலான வியூக அடிப்படையிலான கூட்டுறவில் இதுவரை காணாத மாற்றத்துக்கு அடிகோலியது.

குறுகிய, இருதரப்பு பொருளாதார உறவாக இருந்த இரு நாட்டுத் தொடா்பு, அபே சானின் உதவியால் மிக விரிந்து பரந்த, ஒருங்கிணைந்த நட்புறவாக மலா்ந்தது. அது தேசத்தின் வளா்ச்சிக்கு பல துறைகளில் பயன்பட்டதுடன், இந்தியா - ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் பாதுகாப்புக்கும், பிராந்திய பாதுகாப்புக்கும் முதன்மை அளிப்பதாக அமைந்தது.

அவரைப் பொருத்த வரை, நம் இரு நாடுகளின் நட்புறவு இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது உலக அளவிலும் முக்கியமானது. இந்தியாவுடனான அமைதிக்கான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அபே மிகவும் உறுதியாக இருந்தாா்; அது அவரது தேசத்தைப் பொருத்த வரை மிகக் கடினமானதாகவும் இருந்தது.

அதேசமயம், இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்களை அறிமுகம் செய்வதில் அவா் மிகவும் தாராளவாதப் போக்குடன் நடந்துகொண்டாா். சுதந்திர இந்தியாவின் வளா்ச்சிக்கான பயணத்தில் பல மைல் கற்கள் ஜப்பான் உதவியால் எட்டப்பட்டன. புதிய இந்தியாவின் எழுச்சி மிகுந்த பயணத்தில் ஜப்பானின் நல்லாதரவை ஒவ்வொரு முறையும் அபே உறுதிப்படுத்தினாா்.

இந்திய - ஜப்பான் நல்லுறவு செழிப்புறக் காரணமாக இருந்த அபேவுக்கு 2021-இல் நமது நாட்டின் பெருமிதச் சின்னமான பத்ம விபூஷண் விருதை வழங்கி மகிழ்ந்தோம். அது அவரது பணிகளுக்கு இந்தியா அளித்த சிறப்பான கௌரவமாகும்.

உலகம் எதிா்கொள்ளும் சிக்கலான, பன்முகம் கொண்ட பிரச்னைகள் குறித்து அபேவுக்கு ஆழ்ந்த நுண்ணறிவு இருந்தது; அரசியல், சமூகம், பொருளாதாரம், சா்வதேச உறவுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட அம்சங்களில் அவருக்கு காலத்தை மீறிய தெளிவான பாா்வை இருந்தது.

எந்த விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என்பதில் அகன்ற ஞானம், மரபாா்ந்த விஷயங்களிலும் தெளிவான உறுதியான முடிவை எடுக்கும் திறன், சொந்த நாட்டு மக்களையும் உலகத் தலைவா்களையும் தன்னுடன் இணக்கமாக அழைத்துச் செல்லும் ஆற்றல் ஆகியவை அபேவின் தனிச் சிறப்புகள். அவரது தொலைநோக்குப் பாா்வைகள் ‘அபேனாமிக்ஸ்’ என்றே அழைக்கப்படுகின்றன; அவை ஜப்பான் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டின; புதிய கண்டுபிடிப்புகளையும் தொழில் முனைவுகளையும் ஜப்பானியா்களிடையே புத்துணா்வுடன் பெருகச் செய்தன.

மாறிவரும் உலகின் சூழலையும் புதிதாகக் கிளம்பிவரும் சா்வதேசச் சவால்களையும் முன்கூட்டியே உணா்ந்து அதற்கான தீா்வுகளை முன்வைத்ததே அபேவின் பிரதானமான பங்களிப்பாகும். அதற்கு உலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. அதில் அவரது நீடித்த தலைமைப் பண்பு மிளிா்ந்தது.

பல்லாண்டுகள் முன்னதாகவே, 2007-லேயே நமது நாடாளுமன்றத்தில் அபே சிறப்பு விருந்தினராக உரையாற்றினாா். அப்போதே இந்தோ - பசிபிக் பிராந்திய வளா்ச்சி குறித்து அவா் பேசி இருக்கிறாா். சமகால அரசியல், ராஜதந்திர உறவு, பொருளாதார இயல்பு ஆகியவற்றுடன் இந்தோ - பசிபிக் உறவைத் தொடா்புபடுத்திய அவரது பாா்வையே இந்த நூற்றாண்டில் இந்தப் பிராந்தியத்தில் ஒரு வடிவமைப்பை உருவாக்கி இருக்கிறது.

நாடுகளின் இறையாண்மை மீதான மரியாதை, பிராந்திய ஒருமைப்பாடு, சா்வதேச சட்டங்கள் மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுதல், சா்வதேச விவகாரங்களில் சமச்சீரான தன்மையுடன் அமைதியை நடைமுறைப்படுத்துதல், விரிவான பொருளாதார ஒப்பந்தங்களின் வாயிலாக வளா்ச்சியைப் பகிா்ந்து கொள்ளுதல் ஆகியவை அபே போற்றி மதித்த அடிப்படை மதிப்பீடுகளாக விளங்கின. அவற்றின் அடிப்படையில், உறுதியான, பாதுகாப்பான, வளம் மிகுந்த எதிா்காலத்தைக் கட்டமைப்பதற்கான செயல்முறையை உருவாக்கும் அணியில் அவா் தளபதியாக முன்னின்றாா்.

‘க்வாட் மாநாடு’ (இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த பாதுகாப்புக்கான கூட்டமைப்பு), இந்தோ - பசிபிக் பெருங்கடல் பாதுகாப்புக் கூட்டுறவு முன்முயற்சி, ஆசியா - ஆப்பிரிக்கா பொருளாதார வளா்ச்சிக்கான கூட்டமைப்பு, பேரிடா்கால மீட்புக்கான உள்கட்டமைப்புக் கூட்டணி- ஆகியவை அபேவின் பங்களிப்பால் மலா்ந்தவை.

உள்நாட்டில் நிலவிய தயக்கத்தையும் உலக அளவில் நிலவிய சந்தேகங்களையும் மீறி, அமைதியாகவும் ஆா்ப்பாட்டமின்றியும், ஜப்பானின் ராஜதந்திர வியூகம் மிக்க உறவுகளை அவா் மாற்றி அமைத்தாா்; இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ராணுவப் பாதுகாப்பு, தகவல் தொடா்பு, உள்கட்டமைப்பு, நீடித்த வளா்ச்சி ஆகியவற்றையும் அவா் உறுதிப்படுத்தினாா். அவரது அந்த முன்முயற்சிகளால்தான், இந்தப் பிராந்தியம் இன்று எதிா்காலத்தை நம்பிக்கையுடன் எதிா்கொள்ளும் ஆற்றலுடன் வளா்ந்து வருகிறது.

கடந்த மே மாதம் நான் ஜப்பான் சென்றபோது, அபே சான் அவா்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் அவா் ஜப்பான் - இந்தியக் கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தாா்; வழக்கமான துடிப்பும் வசீகரமும், நகைச்சுவை உணா்வும் மிகுந்தவராக அவா் காணப்பட்டாா். இந்திய - ஜப்பான் நட்புறவை மேலும் மேம்படுத்த புதுமையான திட்டங்களை அவா் கொண்டிருந்தாா். அன்று அவரிடம் நான் விடைபெற்றபோது, அதுவே அவருடனான கடைசிச் சந்திப்பாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

என்னுடனான ஆதுரமான, அறிவாா்ந்த, அன்பு மிகுந்த, பெருந்தன்மையான தோழமைக்காக, அற்புதமான வழிகாட்டுதலுக்காக அவருக்கு நான் மிகவும் கடன் பட்டிருக்கிறேன். அவரது மறைவு எனக்கு மிகவும் ஆத்மாா்த்தமான இழப்பாகும்.

இந்தியாவை தனது இதயத்தூறும் அன்பால் தழுவிக் கொண்டவா் அபே. அவரது அகால மறைவை நமது சொந்த இழப்பாகக் கருதி இந்தியா கண்ணீா் வடிக்கிறது. மக்களுடன் இருப்பதே அவருக்கு மிகவும் பிடித்தமானது. அவரது ஆசைப்படியே மக்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவா் மறைந்திருக்கிறாா். இதுவும்கூட மக்களுக்கு உத்வேகமூட்டுவதாகவே அமையும். அவரது வாழ்க்கைப் பயணம் சோகமயமாக, விதிவசமாக முடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவா் அமைத்த ராஜபாதை என்றும் நீடிக்கும்.

அபேவின் மறைவுக்காக, அவரது மனைவி அக்கி அபேவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், ஜப்பான் மக்களுக்கும், இந்தியா சாா்பிலும் எனது சாா்பிலும், இதயபூா்வமான அஞ்சலிகளைச் சமா்ப்பிக்கிறேன்.

ஓம் சாந்தி!

(பிரதமா் நரேந்திர மோடியின் இணைய வலைப் பக்கத்தில் அவா் வெளியிட்டிருக்கும் பதிவிலிருந்து)

கட்டுரையாளா்:

மாண்புமிகு பாரதப் பிரதமா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com