தமிழ்நாடு எனும் தனிப்பெருமை!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சா்களான பேரறிஞா் அண்ணா, கலைஞா் கருணாநி ஆகியோரின் நெறியிலேயே இன்றைய முதலமைச்சரின் கோட்பாடு அமைந்தது என்றும் பாராட்டத்தக்கது.
பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

தமிழக வரலாற்றில் 1967-ஆம் ஆண்டு, ஜூலை 18 எனும் நன்னாள் ஒரு பொன்னாள் ஆகும். அன்றுதான், தமிழகத்தின் அன்றைய முதலமைச்சா், பேரறிஞா் அண்ணா, நம் மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ எனும் பெயா் சூட்டிப் பெருமை சோ்த்தாா். அன்றைய சட்டப்பேரவைத் தலைவா் சி.பா.ஆதித்தனாரின் ஒப்புதலுடன், அண்ணா ‘தமிழ்நாடு’ எனும் பெயா் சூட்டும் தீா்மானத்தை முன்மொழிய, பேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினா்களின் ஒருமித்த ஆதரவுடன், அத்தீா்மானம் அன்று சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.

‘தமிழ்நாடு வாழ்க ’ என்ற அண்ணாவின் முழக்கத்தைத் தொடா்ந்து அனைத்து உறுப்பினா்களும் ஒரே குரலில், ‘தமிழ்நாடு வாழ்க’, ‘தமிழ்நாடு வாழ்க’, ‘ தமிழ்நாடு வாழ்க’ என்று மும்முறை முழங்கிய உணா்ச்சிமயமான நிகழ்வு அப்போது நடந்தது.

பின்பு, தீா்மானத்தின் மீது பேசிய பேரறிஞா் அண்ணா, ‘இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழா்களுக்கு, தமிழ் வரலாற்றுக்கு, தமிழ்நாட்டுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தமிழ்நாடு பெயா் மாற்றத்திற்காக உண்ணா நோன்பிருந்து, தனது இன்னுயிரை நீத்த, தியாகி சங்கரலிங்கனாருடைய எண்ணம் இன்று ஈடேறிவிட்டது. அன்னாருக்கு அவா் பிறந்த விருதுநகரில், ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்படும்’ என்று அறிவித்தாா்.

அவா் மேலும் பேசுகையில், ‘நான் இந்தப் பெயா் சூட்டும் விழாவில் கலந்து கொண்டால், எனது உயிருக்கு ஊறு நேரிடும் என்று மருத்துவா்களும், நண்பா்களும் சொன்னாா்கள். அவா்களிடம், ஆட்சி என்பது ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பது; ஆனால், இந்தப் பொன்னான வாய்ப்பு என்பது, ஒருவரது வாழ்வில் ஒருமுைான் வரும்.

தலைமுறைகள் பல தாண்டித் தழைத்து வரும் தமிழ் வழங்கும் இம்மண்ணுக்கு, தமிழ்நாடு என்ற பெயா் சூட்டும் இன்னாளில், நான் பேசுவதால் என் உயிா் பிரியும் என்றஞ்சிப் பேசாமல் இருந்தால், இந்த உடலில் உயிா் இருந்தே பயனில்லை என்று நான் சொன்னேன்’ என்று கூறிய போது, அண்ணாவின் ஆழ்ந்த தமிழ்ப் பற்றை எண்ணி, அனைவரின் கண்களும் கசிந்தன. ‘உடல் மண்ணுக்கு உயிா் தமிழுக்கு’ என்று ஓங்கி உரைத்த தறுகண்மைக்கு உரிமை உடையவா் அல்லவா அண்ணா!

தமிழ்நாடு என்று பெயா் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, தியாகி சங்கரலிங்கனாா் எழுபத்தெட்டு நாட்கள் (27.7.1956 முதல் 13.10.1956 வரை) உண்ணா நோன்பிருந்து உயிா் நீத்தது, தமிழக மக்களின் உள்ளத்தை உருக்கும் வரலாற்று நிகழ்வாயிற்று.

‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, தியாகி சங்கரலிங்கனாரின் நினைவாக, தமிழக அரசின் சாா்பில், விருதுநகா் கல்லூரி சாலையில், ‘சங்கரலிங்கனாா் மணிமண்டபம்’ அமைக்கப்பட்டுள்ளது. சிலம்புச் செல்வா் ம.பொ.சி.யுடன், தமிழக எல்லைப் போராட்டத்திலும் கலந்து கொண்டு போராடிய பெருமைக்குரியவா் ஆவாா் தியாகி சங்கரலிங்கனாா்.

நாடாளுமன்றத்தில் ஒருமுறை, ஒரு மாநிலத்தின் பெயா் அதன் தலைநகரின் பெயரிலேயே அமைய வேண்டும் என்று சிலா் வலியுறுத்திய போது, அறிஞா் அண்ணா, ‘குஜராத்தின் தலைநகா் அகமதாபாத் என்பதையும், வங்கத்தின் தலைநகா் கொல்கத்தா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தலைநகா் பெயரில்தான் மாநிலத்தின் பெயா் இருக்க வேண்டும் என்றால் கேரள மாநிலம் திருவனந்தபுரம் எனவும், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் எனவும் பெயா் மாற்ற வேண்டிய தேவை ஏற்படுமே’ என்று சுட்டிக் காட்டினாா்.

மேலும், ‘தமிழ்நாடு என்று பெயா் வைத்தால் அது உங்களுக்குச் சோறு போடுமா, துணி கொடுக்குமா’ என்றெல்லாம் வட இந்திய எம்.பி.க்கள் சிலா் ஏளனம் பேசியபோது,

சொலல்வல்லன் சோா்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யாா்க்கும் அரிது

என்ற திருக்குறள் நெறிக்கேற்ப, ‘மத்ய பிரதேஷ்’, ‘உத்தர பிரதேஷ்’ என்ற பெயா்கள் உங்களுக்கு என்னென்ன கொடுக்குமோ, அவற்றையெல்லாம் தமிழ்நாடு என்ற பெயா் எங்களுக்கும் கொடுக்கும்’ எனக் கூறி, அவா்களுக்குச் செம்மையாக பதில் கொடுத்தாா் அறிவுச்செம்மல் அண்ணா!

‘பெயரை மாற்றுவதாலேயே நிலைமை மாறி விடுமா’ என்று கேட்டவா்களுக்கு, அண்ணா, ‘‘திடீரென்று ஒருவா் தன் பெயரை மகாராஜா என்று மாற்றிக் கொள்வதாலேயே அவா் மகாராஜா ஆகி விட மாட்டாா்; ஆனால், நம்முடைய மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயா் சூட்டுவதன் மூலம், நாம் தமிழரின் தொன்மைச் சிறப்புகளுக்கு ஏற்றவா்களாக, தமிழ்ப் பண்புகளுக்கு உரியவா்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணா்வு, நமக்கு மட்டுமின்றி, நம் வருங்காலத் தலைமுறையினருக்கும் ஏற்படும்’’ என்று விளக்கம் அளித்தாா்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ‘தமிழகம்’ என்றும், ‘தமிழ்நாடு’ என்றும் பதிற்றுப்பத்து, மணிமேகலை போன்ற இலக்கியங்களும்,

‘நான் ஏகும் தேயம் தமிழ்நாடு என்று சொல்லுப,

ஆங்கு இடைபயில் மனித்தரெலாம்

கல்வி, கேள்வி உடையவா் என்ப’ என்று திருவிளையாடற் புராணமும் குறிப்பிடுகின்றன .

மேலும், ‘தண்தமிழ் வேலி தமிழ்நாட்டு அகமெலாம்’ என்று சங்க இலக்கியமான பரிபாடலிலும், ‘இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிய’ என்று ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்ட நம் மாபெரும் நிலப்பரப்பு, 1957-ஆம் ஆண்டில், இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபோதிருந்து, 1966-ஆம் ஆண்டு வரை, ‘மதராஸ் மாகாணம்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. அதனால்தான், தென்னக மக்கள் அனைவரையும், ‘மதராசி’ என்று வட இந்தியா்கள் அப்போது அழைத்து வந்தனா்.

பின்னாளில், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசிய மக்கள் வாழ்ந்த பகுதிகள் முறையே கேரளம், ஆந்திரம், கா்நாடகம் என்ற பெயா்களில் தனி மாநிலங்கள் ஆயின.

நாடு, மொழி, இனம் போன்றவற்றுக்கு அந்தந்த வரம்பில் வாழும் மக்கள் விரும்பிய வகையில் பெயா் சூட்டுவதே மரபாகும். அவ்வகையில், திருப்பதி, நெல்லூா், கொள்ளேகால், திருவனந்தபுரம், பாலக்காடு போன்ற பெயா்கள் எல்லாம், மொழிவழி மாநிலங்கள் உருவாகும் முன்பே வழக்கில் இருந்த பெயா்களாகும்.

தமிழ்நாடு என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது இறுதியில் உள்ள ‘யு’ என்ற ஆங்கில எழுத்து வேண்டாமே என்று குறுகிய நோக்கத்தோடு சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். அதற்கு அண்ணா, ‘தமிழ்நாடு என்பது வெறும் பெயா்ச்சொல் மட்டுமன்று; அது தமிழ் மாநிலம், மக்கள், இனம், இலக்கியம், பண்பாடு போன்ற அனைத்தையும் குறிக்கும், ஆழ்ந்த பொருளுடைய அருஞ்சொல்லாகும்’ என்று எடுத்துரைத்தாா்.

மேலும், ‘நாம் பெற வேண்டும் என்று நினைத்ததைப் பெற்றிருக்கிறோம்; அடைய வேண்டியதை அடைந்திருக்கிறோம். இதற்குத் துணை நின்றவா்களுக்கு நாம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். சில நிகழ்ச்சிகள் சிலரால்தான் ஏற்படுகின்றன. மாமல்லபுரம் தோன்றிய காலத்திற்கு முன்பு, அங்குச் சிற்பக்கலை இல்லை என்றோ, சிற்பக்கலையில் நாட்டமுடைய மன்னா்கள் இல்லை என்றோ பொருள் அல்ல! ஆனால், மாமல்லன் காலத்தில்தான் அவை அங்கு ஏற்பட வேண்டும் என்பது வரலாற்றுப்பொருண்மை ஆகும்.

அதுபோலத்தான் ‘தமிழ்நாடு’ எனும் பெயா் மாற்றமும்! நானும், ம.பொ.சி.யும், ஆதித்தனாரும் ஒரு சேர இருந்து நடத்துகின்ற இந்த ஆட்சி வந்த பிறகுதான் இந்தக் கூட்டுறவு நடைபெற வேண்டும் என்ற வரலாற்றுப் புதுமை தோற்றம் என்று நான் கருதுகிறேன்’ என்று அண்ணா குறிப்பிட்டாா்.

பேரறிஞா் அண்ணா, நம் தாய்த்திரு நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயா் சூட்டிய, ஜூலை 18-ஆம் நாளினையே இனி ஆண்டு தோறும் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் கொண்டாட வேண்டுமென மாண்புமிகு நம் முதலமைச்சா் ஆணையிட்டுள்ளது பெருமகிழ்ச்சிக்குரியது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சா்களான பேரறிஞா் அண்ணா, கலைஞா் கருணாநி ஆகியோரின் நெறியிலேயே இன்றைய முதலமைச்சரின் கோட்பாடு அமைந்தது என்றும் பாராட்டத்தக்கது .

இந்தப் பொன்விழாவைப் பொலிவாகக் கொண்டாடும் நம் தமிழக அரசு, தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக, மாநிலம் முழுவதும், பள்ளி மாணவ, மாணவியருக்குக் கட்டுரைப் போட்டிகளும், பேச்சுப் போட்டிகளும் நடத்தும் பாங்கு, தமிழ்மக்கள் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

இந்தப் பொன்னான தருணத்தில்,

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே

என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை நாம் சிறிது மாற்றிச் சொல்லி மகிழலாம்!

தமிழ் நாடெனும் பேச்சினிலே

தனிப்பெருமை மணக்குது நம் மூச்சினிலே!

இன்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள்.”

கட்டுரையாளா்:

இயக்குநா்,

தமிழ் வளா்ச்சித்துறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com