இது தகுமா? இது முறையா?

குடியரசுத் தலைவர் தேர்தலில் சரியான முறையில் வாக்களிக்கக் கூட முடியாதவர்களாக இருப்பதை அறியாமை என்பதா? அலட்சியம் என்பதா? தேர்தலில் சரியாக வாக்களிக்கக் கூட இயலாதவர்கள்... 
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை



தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், அவர் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது வரையிலான சம்பவங்களில் எந்தவிதமான வியப்பும் இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். 

நம்முடைய வியப்பெல்லாம், இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்லாத வாக்குகளைப் பற்றியதே.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், பல்வேறு மாநில சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களுமாக 4,796 வாக்காளர்களைக் கொண்ட பட்டியலில் இடம் பெற்றவர்களில் 4,754 பேர் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர். இவர்களில் ஐம்பத்து மூன்று வாக்காளர்கள் செல்லாத வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகவும் கவலை அளிப்பதாகும். 

அவர்களுள் பதினைந்து வாக்காளர்கள் (இருபத்தெட்டு சதவீதத்தினர்) நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். மீதமுள்ள முப்பத்தெட்டு வாக்காளர்கள் (எழுபத்திரெண்டு சதவீதத்தினர்) பல்வேறு மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாவர். 

செல்லாத வாக்குகளைப் பொறுத்தவரை, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஐந்து, தில்லி, மேற்கு வங்கம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் நான்கு, உத்தர பிரதேசத்திலிருந்து மூன்று, அஸ்ஸாமிலிருந்து இரண்டு, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒன்று என மொத்தம் முப்பத்தெட்டு செல்லாத வாக்குகள் நாடு முழுவதிலுமுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எழுபத்தேழு செல்லாத வாக்குகள் பதிவாயின. அவற்றுள் இருபத்தொரு வாக்குகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், மீதமுள்ள ஐம்பத்தாறு வாக்குகள் சட்டப்பேரவை உறுப்பினர்களாலும் செலுத்தப்பட்டுள்ளன. அத்தேர்தலோடு ஒப்பிடுகையில் தற்போதைய தேர்தலில் பதிவான செல்லாத வாக்குகள் குறைவே என்பதை எண்ணி நாம் ஆறுதல் கொள்ள முடியாது.

மக்களவைக்கும், பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறும்போதெல்லாம், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், எப்படி வாக்களிப்பது என்பதற்கான விளம்பரங்களையும் நமது இந்தியத் தேர்தல் ஆணையம் காட்சிப்படுத்துகின்றது. 

நாடு முழுவதிலுமுள்ள தன்னார்வலர்களும் ஆங்காங்கே வாக்களிப்பதற்கான செயல்முறை விளக்கங்களை அளிக்க முன்வருகின்றனர். ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எவ்விதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்களையும் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடவே செய்கிறது. 

தமிழ்நாட்டிலும், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் இரண்டு முக்கிய அரசியல் அணிகளும் தங்களுடைய கூட்டணிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற விளக்கக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தன. அதற்குப் பிறகும் தமிழகத்திலிருந்து ஒரு செல்லாத வாக்கு விழுந்திருப்பது வியப்பளிக்கிறது.

சட்டம் இயற்றவும், சட்டத்தில் திருத்தம் செய்யவும் வல்லமையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரும், தங்களுடைய மாநிலங்களை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான வழிமுறைகளை விவாதித்து உரிய முடிவுகளை எடுக்கும் வல்லமை படைத்த சட்டப்பேரவை உறுப்பினர்களில் சிலரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் சரியான முறையில் வாக்களிக்கக் கூட முடியாதவர்களாக இருப்பதை அறியாமை என்பதா? அலட்சியம் என்பதா?
தேர்தலில் சரியாக வாக்களிக்கக் கூட இயலாதவர்கள் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கப் போகிறார்கள் என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. 

இது மட்டுமா? கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளையும் சேர்ந்த 771 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இவர்களில் செல்லாத வாக்குகளைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை பதினொன்று.

2012-ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் நமது நாட்டின் செல்வாக்குமிக்க அரசியல் கட்சிகளுள் ஒன்றின் தலைவரும், மாநில முதல்வர், மத்திய அமைச்சர் என்ற பல்வேறு நிலைகளிலான பதவிகளை வகித்தவருமான முலாயம்சிங் யாதவ், தவறுதலாக எதிர் அணி வேட்பாளருக்கு வாக்களித்து விட்டுப் பிறகு வேறொரு வாக்குச் சீட்டை வாங்கி மீண்டும் வாக்களித்திருக்கிறார். ஆனால், தேர்தல் ஆணையம், அவருடைய வாக்கினை ஏற்காமல், செல்லாத வாக்காகவே அறிவித்தது. 

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோருக்கான தேர்தல்களில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக அணி மாறி, எதிர் அணியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய பிரதிநிதிகளான நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் சிலர் செல்லாத வாக்குகளைச் செலுத்தக்கூடியவர்கள் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது.

இந்நிலையில், எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களில் செல்லாத வாக்குகளே விழாது என்ற நிலையை ஏற்படுத்த எல்லா அரசியல்கட்சிகளின் தலைமைகளும் உறுதி ஏற்க வேண்டும். தங்கள் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் இது குறித்த புத்தாக்க வகுப்புகளை நடத்தவும் அக்கட்சிகள் ஏற்பாடு செய்யவேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளுக்கே வாக்களிக்கத் தெரியவில்லை என்ற அவலநிலை மாறவேண்டும். அதற்கு முதல்படியாக, விரைவில் நடைபெற இருக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் விழும் அனைத்து வாக்குகளும் செல்லுபடியான வாக்குகளாக அமையும் என்று எதிர்பார்ப்போம் !
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com