வாடகை மாளிகைகள்

உலகின் மிகப்பெரிய வீட்டுவசதித் திட்டமான "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நாட்டில் சில நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
வாடகை மாளிகைகள்

இந்திய மக்கள் அனைவரும் சொந்த வீட்டில் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட  உலகின் மிகப்பெரிய வீட்டுவசதித் திட்டமான "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நாட்டில் சில நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நவம்பர் 22, 2021 நிலவரப்படி, திட்டமிடப்பட்ட 114 லட்சம் வீடுகளில் 89 லட்சம் வீடுகளுக்கான (78%) பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சூழலில் 52 லட்சம் வீடுகள் (45.6%) கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை உருவாக்க இந்திய அரசு ரூ. 1,84,808 கோடி ஒதுக்கிய சூழலில், ரூ. 1,13,431 கோடியை பணிகளை மேற்கொள்வதற்காக விடுவித்துள்ளது. இதில் இதுவரை ரூ. 1,01,776 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் 2019-ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியாவின் நகர்ப்புறங்களில் 310 லட்சம் குடும்பங்கள் வாடகைக்கு வாழ்கின்றன என்றும் அவர்களில் பெரும்பாலோர் குடிசைகளில் உள்ளனர் என்றும் கூறுகிறது. கரோனா பொதுமுடக்க காலத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் நகர்ப்புற ஏழை மக்களும் தாங்கள் பணி செய்த நகரங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வழி இல்லாமல் சொந்த ஊருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் பெருநகரங்களில் மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் உருவாக்கப்படவுள்ளன. தமிழகத்தில் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒசூர் ஆகிய இடங்களில் மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன.

மத்திய வீட்டுவசதி - நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்பக் குழு 187.8 லட்சம் இந்திய குடும்பங்களுக்கு இதுபோன்ற வீடுகள் தேவை என்று மதிப்பிட்டுள்ளது. சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான "இண்டியன் கவுன்சில்' வெளியிட்ட ஆய்வு முடிவு 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி 290 லட்சம் முதல் 500 லட்சம் வரையிலான வீடுகளுக்கான தேவை உள்ளது என்று மதிப்பிட்டுள்ளது.

ஒரு நகரத்தில் சராசரி ஆண்டு குடும்ப வருமானத்திற்கும் வீட்டு விலைக்கும் (வாடகை அல்லது  சொந்தம்) இடையேயான  விலை - வருமான விகிதம் என்ற குறியீட்டு அடிப்படையில் இந்த மலிவு விலை வீடுகளின் தேவை கணக்கிடப்படுகிறது. மலிவு வாடகை வீடு திட்டத்தின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இவ்வீடுகளுக்கான  வாடகையை நிர்ணயம் செய்யும். 

வாடகை ஒப்பந்தம் கையொப்பமிடும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 8 % வாடகையை  உயர்த்திக்கொள்ளலாம். ஆயினும், ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாக 20 % மட்டுமே வாடகையை  அதிகரிக்கலாம் என்ற நிபந்தனை உள்ளாட்சி அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டில் ஆசிய வளர்ச்சி வங்கி நடத்திய ஆய்வின்படி, விலை - வருமான விகிதம் மூன்று அல்லது அதற்குக் குறைவான அளவாக இருந்தால் அந்த வீட்டின் விலை ஒரு குடும்பத்திற்கு கட்டுப்படியாகும். விலை - வருமான விகிதம் அதிகரிக்கும்போது வீடுகளின் விலை கட்டுப்படியாகாத அளவில் கூடும். 

வாடகை வீட்டு சந்தை நிலவரத்தின்படி, விலை - வருமான விகிதக் குறியீடு 2 அல்லது அதற்கு மேல் இருக்கும் போது அது குடியிருப்போருக்கு பாதகமாகவும் உரிமையாளருக்கு சாதகமாகவும் இருக்கும். ஒரு சில மலிவு வாடகை வீட்டு வளாகங்களில் இந்த விலை - வருமான விகிதக் குறியீடு அளவுகோல் 5.7-க்கும் அதிகமாக உள்ளது. இத்தகைய  வளாகங்களில் ஏழைகள் வாழ சாத்தியமே இல்லை. 

வங்கிகள், நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்களின் அடிப்படையில் 2010 முதல் இந்திய ரிசர்வ் வங்கி 13 நகரங்களில் வீடு, சொத்து விலை குறித்த கண்காணிப்பு ஆய்வை நடத்தி வருகிறது. கடந்த நான்காண்டுகளில் வீடு வாங்கும் போக்கில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 2019-இல் வெளியான இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்தியது. மார்ச் 2015-இல் 56.1 ஆக இருந்த விலை -வருமான விகிதக் குறியீடு,  மார்ச் 2019-இல் 61.5 ஆக அதிகரித்துள்ளது. 

2018ஆம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் கணக்கெடுப்பு, வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பம் செலவிடும் சராசரி வாடகை கிட்டத்தட்ட 3,324 ரூபாய் என்று கூறுகிறது. நீண்டநாள்  ஏழைகளும் புலம்பெயர் தொழிலாளர்களும் அரசின் மலிவு வாடகை வீட்டு வளாகங்களில் குடியிருப்பதை உறுதிசெய்ய இவ்வளாகங்களில் இருக்கும் வீடுகளின் வாடகை இந்திய சராசரி வாடகையை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் அமைவதால் அதிக  மக்கள்தொகை கொண்ட நகரின் பிற பகுதிகளுடன் இணைப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும். தண்ணீர், கழிவுநீர், அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை சேவைகளை  மக்கள் பெற்றிடும் வகையில் மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

முறைசாரா தொழிலாளர்களில் 85 % க்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும் 5 கி.மீ. தூரம் மட்டுமே தங்கள் பணியிடத்திற்கு செல்ல பயணிக்கின்றனர். போக்குவரத்து அமைப்பு இல்லாவிட்டால் பெரும்பாலான இடங்களில் நகரின் புறநகர் பகுதிகளில் அமையவிருக்கும் இந்த மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் அர்த்தமற்றதாகிவிடும்.

கொள்கை ஆராய்ச்சி மையம் (சென்டர் ஃபார் பாலிசி ரிஸர்ச்), உழைக்கும் மக்கள் சாசனம் (வொர்கிங் பீப்பிள்ஸ் சார்ட்டர்) ஆகிய அமைப்புகள் சமீபத்தில் நடத்திய ஆய்வு, புறநகர் பொது வீட்டுவசதி மனைகளுக்கு ஒரு குடும்பம் இடம் பெயரும்போது அக்குடும்பப் பெண்கள், தங்கள் வீட்டுக்கு அருகே கிடைக்கும் வீட்டு வேலை வாய்ப்புகளை இழப்பதுடன் தங்களின் ஆக்கபூர்வமான  நேரத்தையும் இழக்கின்றனர் என்று கூறுகிறது.

வாடகை வீடுகளுக்கான வாடகைகளை ஒழுங்குபடுத்த முறையான கண்காணிப்பு அமைப்புகளை  மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று இத்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com