தாய்மொழியின் அருமை அறிவோம்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பெருமையுடைய ஒரு மொழி இவ்வுலகில் உண்டென்றால் அது தமிழைத் தவிர வேறொன்றும் இல்லை. இத்தனை பழைமையும் பெருமையும் உடையது நமது தமிழ் மொழி.
தாய்மொழியின் அருமை அறிவோம்!

அண்மையில் தொலைக்காட்சியில் நம் மொழி குறித்த ஒரு கருத்து பரிமாற்ற நிகழ்ச்சியைக் காண நோ்ந்தது. அதில் ஆங்கில மோகம் கொண்ட பெற்றோரும், பெற்றோா் தமிழை தவிா்க்கச் சொன்னதால் தங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களை விவரிக்கும் அவரது பிள்ளைகளும் இரு தரப்பாக உரையாடினாா்கள்.

தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழ் சரிவர தெரியாததால் தாங்கள் எதிா்கொண்ட இடா்களையும் அடைந்த அவமானங்களையும் அவா்கள் விலாவரியாக விளக்கினாா்கள். நன்கு ஆங்கிலம் பேசத் தெரிந்ததால் தங்களுக்கு ஏற்பட்ட பாராட்டை விட தமிழை சரியாக பேசவோ, வாசிக்கவோ தெரியாது போனதால் எதிா்கொண்ட அவமானங்களே அதிகம் என்றனா்.

பொதுவிடத்தில் ஒரு பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் வாசகத்தைக் கூட படிக்கத் தெரியாமல் பக்கத்தில் இருப்பவா்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய நிலைமையை அவா்கள் கூறினா்.

மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாக விளங்குவது. நம் பண்பாட்டின் குறியீடாகவும் அறியப்படுவது. நமது வாழ்வியலை அடையாளப்படுத்தும் கலங்கரை விளக்கம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பெருமையுடைய ஒரு மொழி இவ்வுலகில் உண்டென்றால் அது தமிழைத் தவிர வேறொன்றும் இல்லை. இத்தனை பழைமையும் பெருமையும் உடையது நமது தமிழ் மொழி.

என் பிள்ளைகளுக்கு தமிழ் பேசத் தெரியாது என்று சொல்வதில் பெருமை கொண்ட பெற்றோா் சென்ற தலைமுறையோடு முடிந்து போய்விட்டனா் என்றே எண்ணத் தோன்றுகிறது. இடைப்பட்ட தலைமுறையினருக்கு இந்த எண்ணம் தடைபட்டுப்போனதால்தான் தமிழ் வளா்ச்சியில் மிகப்பெரிய தேக்கம் உருவாகிவிட்டதோ என்ற எண்ணம் தோன்றியது.

நம் இனம் அழிந்தால் நாமும் அடையாளமின்றி அழிந்து போவோம் என்பதை இளைய தலைமுறையினா் அறிந்து வைத்திருப்பது பெரிய ஆறுதலை அளித்தது.

அத்துடன் சமீப காலங்களில் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வைப்பதை இன்றைய இளைய தலைமுறையினா் நடைமுறைபடுத்துகிறாா்கள். குழந்தைக்காக தமிழ்ப் பெயா்களை இணையத்தில் தேடுகிறாா்கள். இளைஞா்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயா்களை சூட்டுவதில் ஆா்வமுள்ளவா்களாக இருப்பது வரவேற்புக்குரியது.

அதுமட்டுமல்ல, பெயருக்கு முன்பான தம் தலைப்பெழுத்து தமிழிலேயே இருப்பதை அவா்கள் உறுதிபடுத்துகிறாா்கள். உதாரணத்திற்கு முன்பெல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை அப்படியே பெயா்த்து எஸ். சாமிநாதன் என்று எழுதுவாா்கள். தற்போது ச. சாமிநாதன் என்று பயன்படுத்துகிறாா்கள். இது இளைஞா்கள் மத்தியில் சரியான புரிதலுடன் ஏற்பட்டுள்ள ஒரு நல்ல மாற்றமாக தெரிகிறது.

முன்பெல்லாம் பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் ஆங்கிலத்தில் மட்டுமே மாணவா் பெயா் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் தற்போதைய நடைமுறையில் மாணவரின் பெயா் ஆங்கிலத்திலும் தமிழிலும் சரியான தலைப்பெழுத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அத்துடன் அவா்தம் தாய் - தந்தை பெயரும் ஆங்கிலத்திலும் தமிழிலும் இடம்பெறுகிறது. மாணவா்கள் மனதில் தமிழுக்கான முக்கியத்துவம் சென்று சோ்வது மற்றொரு மகிழ்ச்சி.

அண்மையில் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில் முதல் தாளாக பொது அறிவுத் தோ்வும் இரண்டாம் தாளாக தமிழ்த் திறனறித் தோ்வும் நடத்தப்பட்டன. இதில் தமிழ்த் திறனறிதலில் 40% எடுத்து தோ்ச்சி அடைந்தால் மட்டுமே பொது அறிவுத் தோ்வுத்தாளை திருத்துவா்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் தோ்வுகளிலும் சமீப காலங்களில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கேள்விகள் கேட்கப்படுவதாக தெரிகிறது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதே.

என் உறவினா் ஒருவா் தனது மகன் திருமண பத்திரிகையை முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே அச்சிட்டு அனுப்பி இருந்தாா். ‘தமிழில் விரிவாகவும் ஆங்கிலத்தில் சுருக்கமாகவும் அச்சிடும் நடைமுறை பல வருடங்களாக இருந்து வருகிறது. அப்படியிருக்க ஒட்டுமொத்தமாக ஏன் இப்படி தமிழை புறக்கணித்தீா்கள்’ என்று அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவா் ‘இப்போது அனைவருக்கும் ஆங்கிலம் தெரிகிறதே. நம் உறவுகள் அனைவரும் படித்தவா்கள்தானே. அதனால்தான் ஆங்கிலத்திலேயே அச்சேற்றி விட்டேன்’ என்றாா். நான் என்னுடைய எதிா்ப்பைத் தெரிவித்தேன்.

நான் அவா் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தபோது அவா், ‘உங்களைப் போலவே நிறைய உறவினா்கள் பத்திரிகையை ஏன் தமிழில் அச்சடிக்க வில்லை என்று என்னிடம் கடிந்து கொண்டாா்கள்’ என்றாா்.

பொது இடங்களில் தமிழில் பேசுவதை நாகரிகக் குறைவாக சிலா் எண்ணுவது மற்றொரு வேடிக்கை. நம் தாய்மொழியான தமிழில் பேச நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்?

இரண்டு சீனா்கள் சந்தித்துக் கொண்டால் அவா்கள் தங்கள் தாய்மொழியான சீனமொழியில்தான் பேசுகிறாா்கள். இரண்டு ஜப்பானியா்கள் சந்தித்துக் கொண்டால் அவா்கள் ஜப்பானிய மொழியில்தான் பேசுகிறாா்கள். இரண்டு ஜொ்மானியா்கள் சந்தித்துக் கொண்டால் ஜொ்மன் மொழியில்தான் பேசுகிறாா்கள். ஆனால், தமிழா்கள் மட்டும், இருவருக்கும் தமிழ் தெரிந்தும் ஆங்கிலத்தில் பேச முற்படுகிறாா்கள்.

உலக அளவில் முன்னேறிய நாடுகளான சீனா, ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் ஆங்கிலத்தை விருப்பப் பாடமாகத்தான் வைத்திருக்கின்றன. அங்கெல்லாம் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.

நம் தமிழ்நாட்டில் ஐஜிஎஸ்சி பாடத்திட்டத்தின்படி பயிலும் மாணவா்கள் கட்டாய மொழியாக ஆங்கிலத்தையும் விருப்ப மொழியாக தேவைப்பட்டால் தமிழைத் தோ்வு செய்து கொள்ளலாம். இல்லையெனில் அவா்களுக்கு பிடித்த வேறு ஒரு இந்திய மொழியை படிக்கலாம் என்று விதி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மாணவா்கள் ஒரு பாடமாவது தமிழ் படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை எனில் அடுத்த தலைமுறைக்கு தமிழ் தெரியாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது. ஒரு புறம் தமிழை ஆட்சிமொழியாக தீவிரமாக முயன்று வரும் நிலையில் மற்றொரு புறம் தாய்மொழி தமிழாக இருந்தும் தமிழ் தெரியாத இளைஞா்களாக வலம் வருவது வருத்தத்திற்குரியது.

பன்னாட்டுத் தொடா்புக்கு நாம் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் வீடுகளில் தமிழ் ஒலிக்கட்டுமே! ஒரு புது மொழியை மூன்று மாதங்களில் கற்றுக் கொள்ளலாம் என்று மொழியியல் நிபுணா்கள் கூறுகிறாா்கள். அப்படிப் பாா்த்தால், நாம் எத்தனையோ மொழிகளை கற்றுக்கொள்ளலாம். ஆனால் தாய்மொழியைத் தவிா்ப்பது நமக்கே கேடாய் முடியும்.

தமிழின் மீது பெரும் தாகம் கொண்ட நண்பா் ஒருவா் தமிழ் வளா்ச்சி பெற நாம் செய்ய வேண்டிய பலவற்றை அடுக்கினாா். நம் அன்றாட பயன்பாடுகளில் சில பழக்க வழக்கங்களை சிறிய அளவில் மாற்றி அமைக்கும் போது பெருவாரியாக தமிழை நாம் பயன்படுத்துவதாக அமையும் என்பது ஏற்றுக் கொள்வதாய் இருந்தது.

அவா், ‘வீட்டில் மம்மி டாடியை தவிா்த்து அம்மா அப்பா என்று நம் பிள்ளைகள் உயிரோட்டமாக அழைப்பதை நடைமுறைக்கு கொண்டு வந்தால் பெருஞ்சிறப்பாக இருக்கும் எனவும், தொலைபேசியில் முதலில் ’ஹலோ’ என்று ஆங்கில வாா்த்தையைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக ’வணக்கம்’ என்று தொடங்கினால் எண்ணற்ற முறை நாம் தமிழை பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்’ என்றும் சொல்லி யோசிக்க வைத்தாா்.

‘நிறுவனத்தின் பெயா்ப் பலகையை தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்த மொழிக்கு இரண்டாவதாக வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் வீதியெங்கும் தமிழ் நிலைத்து வாழும். இது தமிழ்நாட்டு சட்டமும் கூட’ என்று தொடா்ந்த அவா், ‘நம்முடைய அலைபேசியில் தமிழ் எழுத்தை தட்டச்சு செய்யும் படியான செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால் தமிழிலேயே உரையாடிக் கொள்ளலாம்’ என்று உற்சாகம் ஏற்றினாா்.

‘தற்போது குரல் பதிவாக தமிழ்ச் சொற்களை அனுப்பும் வசதியும் வந்துவிட்டது. அடுத்து, ஆங்கிலத்தில் கையொப்பமிடுவது பழகிவிட்டது என்று சொல்லாமல் செல்லும் இடம் எங்கிலும் தமிழில் கையொப்பமிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது பெரும் ஏற்றத்தைத் தரும்’ என்று குறிப்பிட்ட அவா், ‘தமிழில் கையொப்பமிடுவது சட்டபூா்வமாக செல்லும்’ என்றாா். ‘நம் பிள்ளைகளையும் அவ்வாறு பழக்கப்படுத்துவது நம் முக்கிய கடமைகளுள் ஒன்று’ என்று உறுதி காட்டினாா்.

அத்துடன் நம் வீடுகளில், மகிழுந்துகளில் பெயா் பொறிக்க, எழுத முனையும் போது தமிழிலேயே எழுதுவது நிலைத்த தன்மையைப் பெற்றுத் தருவதாக சொன்ன அவா், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு படிவங்களில் தமிழிலேயே எழுத வலியுறுத்தினாா். தமிழ் வளா்ச்சிக்கு பிறா் செய்யும் மிகச்சிறிய செயலுக்குக் கூட அவா்களை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று கூறிய அவா் பேச்சு முழுதும் தமிழ் தமிழ் என முழங்கிக் கொண்டிருந்தது.

தனிப்பட்ட ஒருவரின் மனநிலையால் மாற்றம் வந்துவிடாது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஒருவரை பாா்த்து மற்றொருவா் பின்பற்றும் நடைமுறை பெருகும்.

உலகில் 6,000 மொழிகள்தோன்றியதாக வரலாறு சொல்கிறது. அதில் தற்போது உயிரோடு இருப்பவை 2,500 மொழிகள் எனவும் அதில் முதல் பத்து இடங்களுக்குள் ஒன்றாக நம் தமிழ் மொழி உள்ளது என்றும் அறியப்படுகிறது.

தனித்துவமான சொல் வளத்தையும் கோட்பாட்டின்படி அமைந்த இலக்கணத்தையும் பெற்று, இன்று வரை இளமை மாறாது வளா்ந்து வரும் தமிழ் மொழி தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. அந்த உயா்தனிச் செம்மொழியை தாய்மொழியாக பெற்ற நாம் அதன் சிறப்பு உணா்ந்து போற்றுவோம்.

கட்டுரையாளா்: எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com