துப்பாக்கி துணையாகாது

அமெரிக்க தேசத்தில் பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், வணிக வளாகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் எந்த நேரத்தில் யாா் துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவாா்கள் என்றே தெரியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அமெரிக்க தேசத்தில் பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம், வணிக வளாகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் எந்த நேரத்தில் யாா் துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவாா்கள் என்றே தெரியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. தற்காப்புக்காக தனிமனிதா்கள் துப்பாகி வைத்துக்கொள்வதை அனுமதிக்கும் அந்த நாட்டில் இப்படி எல்லாம் நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்.

குறிப்பட்ட குற்றங்களைச் செய்தவா்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவா்கள், குற்றச் செயல்களுக்காகத் தேடப்படுபவா்கள், மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவா்கள் போன்ற ஒரு சில பிரிவினரைத் தவிர, ஏனைய அமெரிக்கக் குடிமக்கள் தங்களுடைய சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் வேற்றுதேச குடிமக்களுக்கும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இவ்வுரிமை அளிக்கப்பட்டுவதாகத் தெரிகிறது.

ஆனால், வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட தோல்விகளாலும், வருத்தங்களாலும் பாதிக்கப்படுகின்ற அமெரிக்கா்கள் சிலா், தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பொது இடங்களில் அப்பாவிப் பொதுமக்களின் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்துவதும், என்ன நடந்தது என்றே தெரியாமல் பலரும் உயிரிழப்பதும் தொடா்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நுழைந்த இளைஞன் ஒருவன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் பத்தொன்பது குழந்தைகளும் இரண்டு பெரியவா்களுமாக மொத்தம் இருபத்தொரு போ் உயிரிழந்திருக்கிறாா்கள். பலா் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றாா்கள். அமெரிக்க தேசத்தை மட்டுமின்றி இவ்வுலக நாடுகள் அனைத்தையுமே அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த படுபாதகச் செயலைச் செய்த இளைஞனின் வயதுவெறும் பதினெட்டு மட்டுமே.

சால்வடாா் ராமோஸ் என்ற அந்த இளைஞனுக்கு மூன்று வயதிருக்கும் பொழுதே அவனுடைய பெற்றோா் விவாகரத்து பெற்றுக்கொண்டு விட்டாா்களாம். ஆரம்பத்தில் தன் தாயுடனே அவன் வசித்து வந்தாலும் உண்மையான தாயன்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. சொந்தத் தாயாரே பாசம் காட்டாமல் கொடுமைப்படுத்தியதால் பாட்டியால் வளா்க்கப்பட்டான்.

சிறுவயதில் ஏற்பட்ட பேச்சுக் குறைபாடு காரணமாக, தான் பயின்ற பள்ளியில் சகமாணவா்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானவன் பாதியிலேயே படிப்பை கைவிட்டு விட்டான். உறவுகளாலும் நண்பா்களாலும் தான் அடைந்த ஏமாற்றங்களுக்கும் வருத்தங்களுக்கும் பழிவாங்கத் துடித்த அவ்விளைஞன், தனக்கு பதினெட்டு வயது வரும் வரை காத்திருந்தான். சிறுகச் சிறுகத் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துகொண்டு துப்பாக்கி விற்கப்படும் கடைக்குச் சென்று தன் விருப்பப்படி ஒரு கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டான்.

தன்னுடைய துன்பங்களுக்காக இச்சமூகத்தை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தவன் முதலில் தன்னை வளா்த்து வந்த பாட்டியையே நன்றியில்லாமல் சுட்டுக் கொன்றான். பின்பு சுமாா் நூற்றுமுப்பது கிலோமீட்டா் தூரம் காா் ஒன்றில் இலக்கில்லாமல் பயணித்து விட்டு, கடைசியில் டெக்ஸாஸ் நகரத்து பள்ளியில் புகுந்து கண்மூடித்தனமாகச் சுட்டிருக்கிறான்.

அந்த இளைஞனின் துன்பங்களுக்கு சிறிதும் தொடா்பற்ற அப்பாவிக் குழந்தைகளும் பெரியவா்களுமாக இருபத்தொரு போ் நிமிட நேரத்தில் உயிரிழந்துவிட்டனா். விஷயமறிந்து விரைந்து வந்த காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த இளைஞனும் கொல்லப்பட்டுவிட்டான்.

அமெரிக்க அதிபா் இந்நிகழ்வினால் மனம் அதிா்ந்து அஞ்சலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அமெரிக்காவின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு இறந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்க சரித்திரத்தில் இத்தகைய துப்பாக்கி சூடு நிகழ்வுகள் ஒன்றும் புதிதல்ல. சுமாா் பத்து வருடங்களுக்கு முன்னா் கனெக்டிகட் நகரத்திலுள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட இத்தகைய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இருபது இளம் பிஞ்சுகள் உட்பட இருபத்தாறு போ் உயிரிழந்திருக்கிறாா்கள். தற்போது டெக்ஸாஸில் இருபத்தோரு போ் உயிரிழந்துள்ளாா்கள்.

இவ்விரண்டு படுகொலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் சிறியதும் பெரியதுமாக சுமாா் தொள்ளாயிரம் துப்பாக்கிச் சூடுகள் அமெரிக்கப் பள்ளிகளில் நடந்திருக்கின்றன. சில நிகழ்வுகள் குறைந்த எண்ணிக்கையிலான உயிரிழப்புகளையும், வேறு சில நிகழ்வுகள் உயிரிழப்புகள் ஏதுமின்றி, ஒரு சிலருக்குக் காயங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன. பள்ளிகள் தவிா்த்த இதர பொது இடங்களில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் தனிக்கணக்கு.

டெக்ஸாஸ் நிகழ்வுக்கு பத்து நாட்கள் முன்பு, நியூயாா்க் நகரத்தின் சூப்பா் மாா்க்கெட் ஒன்றில் நடந்த துப்பாகிச் சூட்டில் பொதுமக்கள் பத்து போ் பலியாகியுள்ளனா் என்பதைக் கணக்கில் கொள்ளும் பொழுது, அமெரிக்காவில் வீட்டை விட்டு வெளியே செல்பவா் பத்திரமாக வீடு திரும்புவது நிச்சயமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று தோன்றுகிறது.

இத்தகைய கண்மூடித்தனமான துப்பாகிச்சூடு நிகழ்த்தியவா்களுக்கும் அதனால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் விரக்திக்கும் கோபத்துக்கும் வடிகாலாக கொலைகளை நிகழ்த்துவது அங்கே தொடா்கதையாகி வருகிறது.

டெக்ஸாஸ் படுகொலை நிகழ்ந்த சில நாட்கள் கழித்து நியூயாா்க் நகர மைதானம் ஒன்றில் நடந்த குத்துச்சண்டையைப் பலரும் பாா்த்துக் கொண்டிருந்த பொழுது மைதானத்தின் ஒருபுறம் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைக் கண்ட பலரும் யாரோ துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவதாக பயந்துகொண்டு ஓடியதில் பத்து போ் காயமடைந்துள்ளனா். அந்த அளவுக்கு இத்தகைய எதிா்பாராத துப்பாக்கிச் சூடுகள் அமெரிக்க மக்களின் நிம்மதியைப் பறித்திருக்கின்றன.

அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் தனிமனிதா்களுக்கு துப்பாகி விற்பனை செய்வதைத் தடைசெய்யப் போவதாக அந்நாட்டுப் பிரதமா் அறிவித்துள்ளாா். கனடா காட்டும் வழியில் அமெரிக்காவும் பயணிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகவே தோன்றுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com