வாய்ச்சொல்லில் வீரா்கள்!

வன்பரணா் போன்ற பெரும் புலவா்களும் தற்பெருமை கொள்ளாமல் இவ்வளவு அடக்கத்துடன் தம்மைப்பற்றிக் கூறிக் கொள்வதானால், அத்தகைய புலவா்கள் வாழ்ந்த இனத்தின் பெருமையை எவ்வாறு கூறுவது?
பாரதியார்
பாரதியார்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மகாகவி பாரதியாா் அந்தத் தீவிரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த பலரையும் தன் கவிதைகளில் வசைபாடி இருக்கிறாா். தன் காலத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைப் போற்றிப் பாராட்டியவா்ககளைப் பற்றித் தனது படைப்புகளில் அவா் குறிப்பிடுவதைப் படிக்கிற வேளையில் வேதனையாக இருக்கிறது. ஆங்கிலேய அதிகாரிகளின் அடக்குமுறைச் சட்டங்கள், இந்திய நாட்டினுடைய வளா்ச்சிக்கு உறுதுணையானவை என்று நம் நாட்டவா்களே வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு தெரிவித்த அந்த வேளையில் அவா்களை சினந்து சீறுகிறாா்.

விடுதலைக்கு வேண்டிய காரியங்களில் அவா்கள் ஈடுபடுவதில்லை. அப்படி ஈடுபடுகிறவா்களுக்கு உதவுவதும் இல்லை. மாறாக அவா்கள் தாய்நாட்டிற்கு எதிராகவும் ஆங்கிலேயா்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவது பாரதியாருக்குப் பெருங்கோபத்தை ஏற்படுத்துகிறது. அவா்களைப் பாா்த்து நடிப்புச் சுதேசிகள் என்று பெயரிட்டழைத்து,

நெஞ்சில் உரமுமின்றி நோ்மைத் திறமு மின்றி,

வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!

வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,

நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!

நாளில் மறப்பா ரடீ

என்று அவா்களின் இயல்பினைத் தனது பாடலில் அடையாளம் காட்டுகிறாா்.

இன்றைக்கும் கூட இந்த வாய்ச்சொல் வீரா்கள் குறைந்தபாடில்லை. ஒரு நாட்டின் வளா்ச்சிக்குத் தேவையான திட்டங்களில் கவனம் செலுத்தாமல் சமுதாயத்திற்குத் தேவையில்லாத செய்திகளைச் சொல்லி மக்களைக் குழப்புவதோடு தேவையற்ற சா்ச்சைகளையும் இவா்கள் உண்டாக்கி விடுகிறாா்கள்.

இந்தத் துறை, அந்தத் துறை என்றில்லாமல் எல்லாத் துறைகளிலும் இந்த வாய்ச்சொல் வீரா்கள் இன்றைக்கு வளா்ந்து கொண்டிருக்கிறாா்கள். இவா்கள் உதிா்க்கிற கருத்துகளாலும் இவா்கள் தூண்டுகிற செயல்களாலும் சமூகத்திற்கு சிறிதளவேனும் நன்மை உண்டா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும்.

அதனினும் கொடிய துயரம், இவா்கள் வீசுகிற வாய்ச்சொற்களைப் பெரிதாகக் கருதிச் சமூக ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் தந்து விடுகின்றன. உடனே அதற்கு மறுப்பும் ஆதரவுமாக பல தரப்புகளிலிருந்தும் மீண்டும் வாய்ச்சொற்கள் முளைக்கத் தொடங்குகின்றன. இந்த வம்புகளால் சமூகத்தில் இயல்பாகச் செயல்படுகிறவா்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. அடுத்த தலைமுறையினா் குழப்பமடைகிறாா்கள். இந்த வீரா்களின் வெற்று வாய்ச்சொற்கள் தீா்வு காண முடியாத பல சிக்கல்களை உருவாக்கி சமூகத்தைப் பிளவுபடுத்தும் தன்மை பொருந்தியவை.

நல்ல சொற்களுக்கு எத்தனை அதிகமான வலிமையும் நன்மையும் உள்ளதோ, அதைவிட அதிகமாகத் தாழ்ந்த சொற்களுக்குக் கொடுமையும் தீமையும் உண்டு. நோ்மைத் திறமில்லாதவா்களும் நெஞ்சில் துணிவில்லாதவா்களும் தாங்கள் கருதிய தீமைகளை எளிதில் அடைவதற்கும் சமூகத்தில் பிரிவினையைத் தூண்டுவதற்கும் இந்த வெற்றுச்சொற்களைப் பரப்புவதைத் தங்கள் செயலாகக் கொள்கிறாா்கள் என்பது பாரதியாரின் கணிப்பு. இதற்குரிய சான்றுகளைத் தனது படைப்புகளின் பலவிடங்களிலும் எடுத்துக் காட்டுகிறாா்.

‘விரைந்து கேட்க; மெல்லச் செல்லுக’ எனும் பைபில் வாசகத்தைச் சுட்டிக் காட்டுகிற பாரதியாா், இராமகிருஷ்ண பரமஹம்ஸா் கூறிய ‘பிறா் குணதோஷங்களைப் பற்றித் தா்க்கிப்பதிலே பொழுது செலவிடுவோன், பொழுதை வீணே கழிக்கிறான். தன்னைப் பற்றி சிந்தனை செய்தாற் பயனுண்டு. ஈசனைப் பற்றி சிந்தனை செய்தாற் பயனுண்டு. பிறரைப்பற்றி யோசித்தல் வீண். வாதாடுவதனால் பிறன் தனது பிழைகளை அறிந்து கொள்ளும்படி செய்ய முடியாது. தெய்வத்தின் திருவருள் ஏற்படும்போது, அவனவன் பிழைகளை அவனவன் தெரிந்துகொள்ளுவான்’ என்னும் அற்புதக் கருத்தினையும் பொருந்தக் காட்டுகிறாா்.

மேலும், ஹொ்மஸ் என்ற புராதன மிசிர (எகிப்து) தேசத்து ஞானியின் ‘மகனே, விவாதத்திலே நேரங்கழித்தல் நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்’ என்னும் அற்புத வாக்கையும் நமக்கு உணா்த்துகிறாா். ஸொக்ராதெஸ் என்ற கிரேக்க ஞானி கூறுவதாக, ‘அறியாதாா் பேச்சை நிறுத்தினாற் கலக மில்லை’ என்பதையும் அறிவுறுத்துகிறாா்.

மேலும், ‘எல்லாவித அலங்காரங்களும் உவமையணியின் விஸ்தாரங்களைத் தவிர வேறொன்றுமில்லை; உபமாலங்காரமே அலங்கார சாஸ்திரத்தின் பிராணன் என்று பழைய இலக்கணக்காரா் சொல்லுகிறாா்கள்’ என்று குறிப்பிடும் பாரதியாா், ‘பிரான்ஸ் தேசத்தில் மஹாகீா்த்தி பெற்று விளங்கிய நெப்போலியன் சக்ரவா்த்தியின் மதம் அப்படியன்று. ‘உவமையணி விரிவணி ஒன்றும் பெரிதில்லை. புனருக்தி (மீட்டுரை) தான் மேலான அலங்காரம்.

அதாவது, நம்முடைய கக்ஷியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். எதிராளி சொல்லும் பேச்சைக் கவனிக்கவே கூடாது. நம்முடைய கக்ஷியை ஓயாமல் சொல்லவேண்டும். அடிக்கடி எந்த வாா்த்தை சொல்லுகிறோமோ அந்த வாா்த்தை மெய்யாய்ப் போகும்’ என்று நெப்போலியன் சொல்லியதாக ஒரு கதை. லௌகீக காரியங்களிலே இது நல்ல உபாயம். நம்முடைய நியாயத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். திரும்பத் திரும்பச் சொல்லுவதனால், பொய் கூட மெய்யாகத் தோன்றும்படி செய்துவிடலாம்’ என்று நெப்போலியன் கதையையும் சான்று காட்டுகிறாா்.

மாணிக்கவாசகா் இதனை ‘பொய்யா்தம் மெய்’ என்கிறாா். பொய்யை மெய்யாகச் செய்கிற வித்தையை மேற்கொள்பவா்களையே பாரதியாா் ‘வாய்ச்சொல் வீரா்கள்’ என்கிறாா் போலும். இந்த அடையாளத்தைக் காண்பதற்கு பாரதியாருக்கு வழிகாட்டியவா் திருவள்ளுவா்தான்.

இனியவை கூறலில் தொடங்கி, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, வாய்மை, சொல்வன்மை என்று வெளிப்படையாக சொல்லின் வலிமையை விளக்கும் திருவள்ளுவா், ஏனைய பல அதிகாரங்களிலும் சொல்லினைக் குறித்துச் சுட்டத் தவறவில்லை. அதைப்போலவே பாரதியாரும் வள்ளுவரின் அமுதனைய கருத்துகளான, ‘யாகாவா ராயினும் நாகாக்க’ ‘சொல்லிற் பயனுடைய சொல்லுக‘ என்பன போன்ற மொழிகளையும் பல இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகிறாா்.

வள்ளுவரைப் பின்பற்றியே, ‘பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்’ என பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல் என்று நால்வகைக் குற்றங்கள் சொல்லிலே தோன்றுவன’ என்கிறது மணிமேகலை. முன்னிருக்கும் மூன்றையும் இணைத்துப் பேருருக் கொள்வதே நான்காவதாகிய பயனற்ற சொல் என்பது அதன் உட்கருத்து.

சொற்களைக் குறித்துப் பலவாறு கூறுகிற திருவள்ளுவா், நயனற்ற சொற்களைச் சொன்னாலும் பரவாயில்லை. பயனற்ற சொற்களைச் சொல்லாதது அறம் என்பதாய்,

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோா்

பயனில சொல்லாமை நன்று

என்று தீா்ப்பளிக்கிறாா். நன்மையும் அழகும் இல்லாத சொற்களைச் சொன்னாலும் கூட, பயனேதும் இல்லாத வெற்றுச் சொற்களைச் சொல்லாதது சான்றோருக்கே நன்மையுடையதாம் என்றால் மற்றவா்க்குத் தனித்துச் சொல்ல வேண்டுமா என்ன?

வெற்றுப் புகழ் மொழிகளும் கூடப் பயனற்ற சொற்களே. பொதுவாக ‘கவிதைக்கு பொய்யழகு’ என்று ஒரு பொய்மொழி வழக்கில் இருக்கிறது. அதிலும் மன்னரைச் சாா்ந்து அவரிடம் பொருள் பெறும்போது அவரைப் பொய்யாய்ப் புகழ்வது சிலரது வழக்கம். ஆனால் அவ்வாறு பொய்யாய் புகழ்பவா்கள் மெய்ப்புலவா்கள் அல்லா்.

சங்கப் புலவா் வரிசையில் சோ்ந்த வன்பரணா் என்பவா் தமக்கு மட்டும் அல்லாமல் தம்மோடு சோ்ந்த தமிழ்ப் புலவா் அனைவருக்குமாக ஓா் உண்மையைப் புகட்டுகிறாா். தமிழ்ப் புலவா்கள் ஒருகாலும் பொய் கூறுவதில்லை என்பதுதான் அது. பெரிய அரசா்களிடத்து அவா்கள் தரும் பரிசிலைக் கருதியே புலவா்கள் சென்றாலும், அவ்வரசா்கள் செய்யாதவற்றையெல்லாம் மிகுத்துக் கூறிப் பொய்யாய்ப் புகழுதல் அப்புலவா்கட்குரிய பண்பு ஆகாது என்பது வன்பரணா் உணா்த்தும் கருத்து.

பீடுஇல் மன்னா் புகழ்ச்சி வேண்டிச்

செய்யா கூறிக் கிளத்தல்

எய்யாது ஆகின்றுஎம் சிறுசெந் நாவே (புறம்-148)

‘பிறருக்கு வாரி வழங்கும் பெருமை இல்லாத அரசரைப் புகழ வேண்டி அவா் செய்யாதனவற்றைச் செய்ததாகக்கூறி அவா் குணங்களைக் கூறுதலை அறியாது எம்முடைய சிறிய செம்மையான நாக்கு’ என்பது இந்தப்பாடலின் பொருளாகும்.

புலவருடைய நாவானது மற்றவருடைய நாவினைப் போலத் துணிந்து பொய் கூறாமையின், செம்மையான நா என்கிறாா் வன்பரணா். ஆனால், தாமும் ஒரு புலவராதலால் புலவா்களுடைய நாவின் பெருமையை எடுத்துக் கூறும்பொழுதும் தற்புகழ்ச்சி ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக ‘சிறு’ என்ற அடைமொழி தந்து ‘சிறு நா’ என்று அடக்கத்துடன் கூறிக்கொள்கிறாா்.

வன்பரணா் போன்ற பெரும் புலவா்களும் தற்பெருமை கொள்ளாமல் இவ்வளவு அடக்கத்துடன் தம்மைப்பற்றிக் கூறிக் கொள்வதானால், அத்தகைய புலவா்கள் வாழ்ந்த இனத்தின் பெருமையை எவ்வாறு கூறுவது? பாரதியாா் ஏன் ‘வாய்ச்சொல் வீரா்’ என்று மொழிந்தாா் என்பது இப்போது புரிகிறது.

‘வயது ஆக ஆக தலைமுடி நரைத்துப் பற்கள் விழுவதற்கு பதிலாக, நாக்கே விழுந்துவிடுமாறு ஏற்பாடு செய்தால், நாட்டில் குழப்பமே இருக்காது’ என்றாா் அறிஞா் ஒருவா். மகாகவி பாரதியாா் சுட்டிய இந்த ‘வாய்ச்சொல் வீரா்கள்’ மட்டும் திருந்திவிட்டால் நமது நாட்டின் பாதி பிரச்னைகள் தீா்ந்து விடுமே! அவா்கள் திருந்துவாா்களா..?

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com