இட ஒதுக்கீட்டை மாற்றியமைப்போம்!

இட ஒதுக்கீட்டை மாற்றியமைப்போம்!

இடஒதுக்கீடு பற்றிய ஒரு விவாதம் மீண்டும் தொடங்கியிருக்கிறது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு பற்றிய விவாதம் அவ்வப்போது தோன்றி மறைவது வாடிக்கையானதுதான். 1990-களின் தொடக்கத்தில் மண்டல் கமிஷன் அறிக்கை இந்தியாவெங்கும் ஒரு பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.
 பின்னர் வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோது, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்தபோது உயர்சாதிகளைச் சார்ந்த ஏழைகளுக்கு வேலைவாய்ப்பில் 14 % இடஒதுக்கீடு கொடுத்தார்.
 இன்றைய இடஒதுக்கீடு, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மேல் மட்டத்தாருக்கு மட்டுமே வாய்ப்புக்களை வழங்குகிறது. ஏழ்மையிலும், வறுமையிலும், அறியாமையிலும் வாடும் தலித்துகள், ஆதிவாசிகள், பிற பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் பெருமளவில் பயனடையவில்லை. உயர்சாதிகளில் ஏழைகள் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
 இன்றைய இட ஒதுக்கீடு நடைமுறை இந்திய சமூகத்தைப் பிளவுபடுத்தி, ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளச் செய்கிறது. எனவே, இன்றைய சாதிய அமைப்பையும், சாதி அடிப்படையிலான வாய்ப்பு வழங்கலையும் நாம் மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருக்கிறது.
 தந்தை செய்த தொழிலையே பிள்ளைகளும் செய்ய வேண்டும் எனப் பணிக்கும் குலதர்ம கோட்பாடு இன்று பலமிழந்துவிட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் சாதி சங்கிலியால் இன்னும் கொடூரமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றனர்.
 எனவே சாதி அடையாளத்தின் அடிப்படையில் தமக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் சிறப்புச் சலுகைகள் கேட்பது சாதி ஆதரவு நிலை ஆகாது. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித உரிமைகளும், கண்ணியமும் மறுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நினைவிற்கொண்டு சமூக நீதி கோருவது நியாயமானது. சாதிக் கொடுமைகளை நினைவிற் கொள்ளும் உரிமை சார்ந்த நிலைப்பாட்டை வெறுப்பு சார்ந்த சாதி வெறியாகப் பார்க்கக்கூடாது.
 உங்கள் சாதியை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்பது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படாது. குறிப்பாக, மேற்பிறந்தார் என்று சொல்லப்படுபவர்கள் தங்களின் கதவுகளை அறவே திறக்க மாட்டார்கள். கீழ்பிறந்தார் கூட்டத்தில் போய் நிற்பவர்கள் அவர்கள் பெறும் ஒருசில வாய்ப்புக்களைத் தட்டிப்பறிப்பதில்தான் கவனம் செலுத்துவார்கள். மொத்தத்தில், சாதியோடும் வாழ முடியாது; சாதி இல்லாமலும் வாழ முடியாது என்ற நிலையில் நாம் தவிக்கிறோம்.
 சாதியை ஒழிக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையாவது கேள்விக்குள்ளாக்க வேண்டும். நெடுங்காலமாக ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டிருந்ததற்கு கைம்மாறாக அவர்களுக்கு சமூகப் - பொருளாதார -அரசியல் வாய்ப்புகள் வழங்குவதுதான் தற்போதைய முன்னுரிமை வழங்கலுக்கு அடிப்படையாக அமைகிறது.
 ஆனால் இந்தியாவிலுள்ள இட ஒதுக்கீட்டு முறை உண்மையான பயனாளிகளைச் சென்றடையவில்லை. சிறந்த பள்ளிகளுக்குச் செல்லும் நகர்ப்புற மக்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் சென்று சேருகின்றன. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவ, பொறியியற் கல்லூரிகளில் 15 % இடங்களை கிராமப்புற இளைஞர்களுக்கென தமிழக அரசு ஒதுக்கியது. அவர்கள் படிக்கும் பள்ளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களில் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.
 கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு தினமும் வந்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தகுதி உடையவர்களல்ல என்று வரையறுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின்படி ஒரு பள்ளியில் ஒன்பது மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் ஆறு பேர் பிற்படுத்தப்பட்டவர்கள், மூன்று பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.
 இந்நிலையில் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக மாற்றியமைப்பது குறித்து நாம் சிந்திக்கலாம். முதலில், சாதிய அமைப்பு பெரும்பாலானோரை அடக்கி ஒடுக்குகிறது எனும் உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சாதி அவர்களின் கண்ணியத்தைக் களைந்து, நியாயமான சமூக - பொருளாதார - அரசியல் உரிமைகளை மறுத்து, வாய்ப்புகளைத் தடுக்கிறது.
 இரண்டாவதாக, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் சாதிய அடுக்குமுறை கலாசார, பொருளாதார, அடையாள அரசியல் அக்கிரமங்களை அரங்கேற்றி, அடுத்தவர் தோள் மீதேறி அதிகாரம் பெறும் சதிச்செயலாகவே இயங்குகிறது என்பதையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். மூன்றாவதாக, சாதி எனும் சமூகத் தீமை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வழிகளில் பணியாற்றுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
 இட ஒதுக்கீடு என்பது மிகவும் சிக்கலான சண்டை. நம்மிடையே இருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும், உதவி வேண்டுவோருக்கும் நீதி கிடைக்கும்படியாக நாம் களமாட வேண்டும். சமூக நீதிக்கான போராட்டத்தில் சாதி ஒரு முக்கிய அங்கம் எனும் உண்மையைப் புரிந்துகொள்ளும் சாதிய அணுகுமுறையை (கேஸ்ட் சென்ஸிடிவ் பொஸிஷன்) கைக்கொண்டு, ஒருவரின் பாலினம், வாழுமிடம், குடும்பத்தார் கல்வி, குடும்பத்தார் வேலைகள், குடும்ப சொத்துகள், குடும்ப வருமானம், சாதியக் கொடுமை போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய முறையை வகுத்தாக வேண்டும்.
 உள்ளூர் ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒவ்வொருவரின் தனிப்பட்ட பின்புலத்தையும் மதிப்பிட்டு, தேசிய அளவிலான ஒரு வரைவுத் திட்டத்தை உருவாக்குவதே நமது எண்ணம். இப்போது சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பலரும் கேட்டு வாங்கினாலும், இவை முறைப்படி அட்டவணைப்படுத்தப்படவோ, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவோ இல்லை.
 உயர்கல்வி, வேலை, பதவி உயர்வு போன்றவற்றை தீர்மானிக்கும்போது, ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஏழு பிரிவுகளை உள்ளடக்கும் 100 இடஒதுக்கீட்டு தகுதிப் புள்ளிகள் கொடுக்கப்படலாம். முதலாவது, சாதி (51 புள்ளிகள்): இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம், பிராந்தியம் போன்றவற்றைப் பொறுத்து அங்கே நிலவும் எதார்த்த நிலையைக் கணக்கில் கொண்டு, வேட்பாளர்களுக்கு தகுதிப் புள்ளிகள் கொடுக்கலாம்.
 உயர்சாதியினருக்கு குறைவான புள்ளிகளும், தலித் மக்களுக்கு அதிக புள்ளிகளும், பிற்படுத்தப்பட்டோருக்கு இடைநிலை புள்ளிகளும் வழங்கலாம்.
 இரண்டாவது, பாலினம் (7 புள்ளிகள்): நமது சமூகத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் சமூக, பொருளாதார பாதிப்புகளுக்குள்ளாவதால், அவர்களுக்கு சிறப்பு புள்ளிகள் கொடுத்தாக வேண்டும். தலித் பெண்கள் அதிகப் புள்ளிகளும், உயர்சாதி, பிற்படுத்தப்பட்டப் பெண்கள் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் குறைவானப் புள்ளிகளும் பெறுவார்கள்.
 மூன்றாவது, வாழ்விடம் (7 புள்ளிகள்): வேட்பாளர்களின் குடும்பம் நீண்ட நாட்களாக வாழ்ந்த வாழ்விடத்தின் அடிப்படையில், இந்தப் புள்ளிகளை வழங்கலாம். வளர்ச்சியில்லாத, ஒதுக்கப்பட்டிருந்த கிராமப்புற வேட்பாளர் 7 புள்ளிகளையும் பெறும்போது, பெருநகர வேட்பாளர் ஒரு புள்ளியும் பெறமாட்டார்.
 நான்காவது, குடும்பத்தினர் கல்வி (7 புள்ளிகள்): வேட்பாளரின் அம்மா, அப்பா, அவர்களின் பெற்றோர் நான்கு பெரும் பெற்றிருக்கும் கல்வித் தகுதியின் அடிப்படையில் இப்புள்ளிகளைத் தீர்மானிக்கலாம். மேற்குறிப்பிட்ட ஆறு பேரில் யாருமே பள்ளிக்கூடத்திற்குப் போகவில்லை என்றால், அந்த வேட்பாளர் 7 புள்ளிகளையும் பெறுவார். அனைவருமே பட்டப்படிப்பு பயின்றிருந்தால் அந்த வேட்பாளர் ஒரு புள்ளியும் பெறமாட்டார்.
 ஐந்தாவது, குடும்பத்தினர் வேலை (7 புள்ளிகள்): வேட்பாளரின் அம்மா, அப்பா, அவர்களின் பெற்றோர் பார்த்த வேலைகளின் அடிப்படையில் இப்புள்ளிகளைத் தீர்மானிக்கலாம். இவர்கள் யாருமே அரசு வேலை பெற்றிருக்கவில்லை என்றால், அந்த வேட்பாளருக்கு 7 புள்ளிகள். அனைவருமே நிரந்தரமான, நல்ல சம்பளத்தோடு கூடிய வேலைகளில் இருந்தார்கள் என்றால், அந்த வேட்பாளருக்கு ஒரு புள்ளியும் கிடையாது.
 ஆறாவது, குடும்ப சொத்துகள் (7 புள்ளிகள்): வேட்பாளரின் குடும்பத்தாருடைய அசையும், அசையா சொத்துகளைக் கணக்கெடுத்து, இந்த புள்ளிகளை வழங்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக சொத்து வைத்திருப்போருக்கு ஒரு புள்ளியும் கொடுக்காமல், எதுவுமில்லாதவருக்கு அனைத்துப் புள்ளிகளையும் வழங்கலாம். இடைநிலைகளில் இருப்போரின் தகுதியை உள்ளூர் நிலைமைக்கேற்ப முடிவு செய்யலாம்.
 ஏழாவது, குடும்ப வருமானம் (7 புள்ளிகள்): வேட்பாளரின் குடும்பத்தாருடைய வேலைகள், சொத்துகள், பிற வழிகளில் இருந்தெல்லாம் வரும் ஆண்டு வருமானத்தைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் இந்த புள்ளிகளைத் தீர்மானிக்கலாம். அளவுக்கதிகமான வருமானம் உள்ளோருக்கு ஒரு புள்ளியும் கிடையாது. ஏதுமற்றோருக்கு எல்லா புள்ளிகளையும் கொடுக்கலாம்.
 எட்டாவது, அதிர்ச்சிகள் அங்கஹீனங்கள் (7 புள்ளிகள்): சாதி மோதல்கள் சார்ந்த வன்முறை, கொலை, பாலியல் வன்கொடுமை, தீவைப்பு போன்ற அக்கிரமங்களில் நேரடி பாதிப்படைந்தவர்களுக்கு இந்தப் புள்ளிகளை முழுமையாக வழங்கலாம்.
 இம்மாதிரியான ஓர் இட ஒதுக்கீட்டு முறை ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், உயர்சாதி ஏழைகள் போன்றோருக்கு சம வாய்ப்பு களையும், சமூக நீதியையும் வழங்கும். அடக்குமுறையிலும், தேக்கநிலையிலும் துவண்டு கிடக்கும் சமூகங்களுக்கும், தனிநபர்களுக்கும் கல்வி, வேலை, பதவி உயர்வு போன்றவற்றில் நீதி கிடைப்பது என்பது, அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் தொலைநோக்கு கொண்ட சமதளத்தில் நிறுவப்பட வேண்டும்.
 இப்படிப்பட்ட ஒரு பரந்துபட்ட, நுண்மையான அணுகுமுறைதான் சமூக, பொருளாதார வேறுபாடுகளைக் களைந்து, மனித கண்ணியம், விடுதலை தோய்ந்த சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உதவும்.
 
 கட்டுரையாளர்:
 ஒருங்கிணைப்பாளர்,
 பச்சைத் தமிழகம் கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com